You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வீரப்பன்: கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? ராஜ்குமாரை விடுவிக்க காவிரி நீர் கேட்க காரணம் யார்?
அக்டோபர் 18, 2004, இரவு 10 மணி. தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி நோக்கி வந்த ஆம்புலன்ஸ் பாடி அருகே வந்து நின்றது. வாகனத்தில் இருந்த இறங்கிய ஓட்டுநர், “கேங்(gang) உள்ள இருக்காங்கோ” எனக் கூறியபடி மரத்திற்குப் பின்னால் ஓடி மறைந்தார்.
ஓரிரு நிமிடங்களில், “சரண்டராகிடுங்க, உங்களை சுத்தி போலீஸ் இருக்கு” என மெகாஃபோனில் எச்சரித்தார் தமிழ்நாடு அதிரடிப்படையின் உளவுப்பிரிவு எஸ்பியாக இருந்த செந்தாமரைக்கண்ணன்.
ஒரு நிமிட நிசப்தத்திற்குப் பிறகு, அந்த ஆம்புலன்ஸின் பின்புறம் இருந்து ஏகே-47 துப்பாக்கியின் குண்டுகள் சத்தம் கேட்க, அந்த ஆம்புலன்ஸ் வேனை நாலாபுறமும் இருந்து துப்பாக்கிக் குண்டுகள் துளைத்தன. இதில், அந்த ஆம்புலன்ஸே சல்லடையைப் போலானது.
இப்படித்தான் சந்தனமரக்கடத்தல் வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்டதாக தான் எழுதியுள்ள ‘சேசிங் தி பிரிகேன்ட்’ (Chasing the Brigand) புத்தகத்தில் கூறியுள்ளார் அப்போதைய சிறப்பு அதிரடிப்படையின் தலைவர் விஜயகுமார் ஐபிஎஸ்.
இந்த ஆப்பரேஷனுக்கு குக்கூன்(Cocoon) என தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படையினர் பெயர் வைத்திருந்தனர்.
இந்த ஆபரேஷனில் சந்தனமரக் கடத்தல் வீரப்பன், அவருடைய கூட்டாளிகளான சேத்துக்குளி கோவிந்தன், சந்திரே கெளடா, சேதுமணி ஆகியோர் கொல்லப்பட்டனர். இப்படித்தான் வீரப்பனின் கடைசி நிமிடங்கள் கழிந்தன என்கிறார் விஜயகுமார்.
வீரப்பனை அருகில் இருந்து சுட்டது ஏன்?
வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்டு 19 ஆண்டுகள் ஆனாலும், இன்று வரையிலும் அவர் இறப்பு குறித்து தொடர்ந்து சந்தேகங்களை எழுப்புகின்றனர். பிபிசியிடம் பேசிய வீரப்பனின் மனைவி முத்துலெட்சுமி, அவர் எப்படி இறந்தார் எனத் தெரியவில்லை, ஆனால், நிச்சயமாக காவல்துறையினர் சுட்டுப் பிடிக்கவில்லை எனக் கூறினார்.
அதேபோல, 1995 முதல் 1997 வரை வீரப்பனுடன் வனத்தில் இருந்த அன்புராஜூம், அவர் இறப்பு குறித்து காவல்துறையினர் கூறுவதை நம்ப மறுத்துவிட்டார்.
ஆனால், ஆப்பரேஷன் குக்கூனில்தான் வீரப்பன் சுட்டக்கொல்லப்பட்டார் எனக் கூறுகிறார் இந்த ஆப்பரேஷனில் தலைமை வகித்தவர்களில் ஒருவரான ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி செந்தாமரைக்கண்ணன்.
“அவர்களின் சந்தேகம் நியாயமானதே. ஏனென்றால், அந்த வாகனத்தில் இருந்தவர்களிலேயே வீரப்பனுக்குத்தான் துப்பாக்கிக் குண்டு காயம் குறைவு. அதற்கு இரண்டு காரணம் உள்ளது,” என்கிறார் அவர்.
“ஒன்று, அவர்கள் வருவதற்கு முன்னதாகவே ஆம்புலன்சில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மூலமாக வீரப்பன் எந்தப் பக்கம் அமர்ந்துள்ளார் எனத் தெரிந்துகொண்டு, நாங்கள் அந்தப் பக்கம் ஆட்களை அமர்த்தியிருந்தோம். அதனால், வாகனம் நின்றவுடன், துப்பாக்கிச்சூடு தொடங்கிய சில நொடிகளிலேயே வீரப்பனின் தலையில் துப்பாக்கிக் குண்டு துளைத்து அவர், சரிந்தார்,” என்கிறார்.
இரண்டாவதாக வீரப்பன் மீது துப்பாக்கிக்குண்டுகள் பட்டுவிடக்கூடாது என்பதற்காக சேத்துக்குளி கோவிந்தன் வீரப்பனை அரண்போல பாதுகாத்ததாகக் கூறுகிறார் செந்தாமரைக்கண்ணன்.
“அதனால், வீரப்பன் மீது பெரிதாக துப்பாக்கிக் குண்டுகளே படவில்லை. அதேவேளையில், சேத்துக்குளி கோவிந்தன் மீதுதான் அதிகமான குண்டுக் காயங்கள் இருந்தன,” என்கிறார் செந்தாமரைக்கண்ணன்.
இதை உறுதிப்படுத்தியுள்ள விஜய்குமார் ஐபிஎஸ், ஆம்புலன்சில் இருந்து முதலில் ஏகே 47 துப்பாக்கியால் சுட்டது சேத்துக்குளி கோவிந்தன்தான் என ஆபரேஷன் முடிந்ததும் உறுதி செய்ததாகத் தனது நூலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆப்பரேஷனில் தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படையினரால் 338 குண்டுகள் ஆம்புலன்ஸை நாேக்கிச் சுடப்பட்டதாகவும், அதில் ஏழு குண்டுகள் சேத்துக்குளி கோவிந்தன் உடலில் காணப்பட்டதாகவும், இரண்டு குண்டுகள் வீரப்பனின் உடலைத் துளைத்து மறுபக்கம் வெளியேறியதாகவும், ஒரு குண்டு மட்டுமே வீரப்பன் உடலில் இருந்ததாகவும் காவல்துறையினர் கூறினர்.
யார் இந்த சந்தன கடத்தல் வீரப்பன்?
கூசு.முனிசாமி மற்றும் புலித்தாயம்மாள் தம்பதிக்கு இரண்டாவதாகப் பிறந்தவர் வீரப்பன். தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் உள்ள கோபிநத்தம் கிராமத்தில் பிறந்த இவர், தனது 17 வயதில் முதல் முறையாக யானை வேட்டையாடியதாகக் காவல்துறையினர் கூறுகின்றனர்.
வீரப்பனை தேடி வந்த தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படையினருக்கு அவரின் உண்மையான வயதும் பிறந்த தேதியும் தெரிந்துகொள்ளவே பல ஆண்டுகள் ஆனதாகச் சிறப்பு அதிரடிப்படையில் இருந்த காவலர்கள் கூறுகிறார்கள். இறுதியாக, வீரப்பனை சந்தித்துவிட்டு திரும்பியவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட அவரது ஜாதகத்தை வைத்துத்தான் அவர் ஜனவரி 18, 1952இல் பிறந்தவர் என்பதைத் தெரிந்துகொண்டதாகத் தனது நூலில் பதிவு செய்துள்ளார் விஜய்குமார் ஐபிஎஸ்.
வீரப்பனுக்கு ஆரம்பம் முதல் இறுதி நாட்கள் வரை எந்தவித அரசியல் நோக்கமும் இல்லை எனப் பகிர்கிறார் அவருடன் இருந்த அன்புராஜ்.
“அவருக்கு ஆரம்பம் முதல் இறுதி வரை எந்த அரசியல் நோக்கமும் இல்லை, புரிதலும் இல்லை. வீரப்பனை வீரப்பனாகப் பார்க்காததே இங்கு பிரச்னை. கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தலின்போது அவர் முன்வைத்த அனைத்துக் கோரிக்கைகளும் தமிழ்நாடு விடுதலைப்படையினர் வைத்த கோரிக்கைகளே,” என விவரிக்கிறார் அன்புராஜ்.
இந்தியாவில் மாநிலங்கள் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்ட பின்னர், வனத்திற்கு அருகில் இருந்த மக்களை அரசு கண்டுகொள்ளாமல் விட்டதன் விளைவாக உருவானவர்தான் வீரப்பன் என்கிறார் அன்புராஜ்.
“அவர் விவசாயக் குடியாகத்தான் இருந்தார். ஆரம்பத்தில் அவர்கள் தங்கள் பாதுகாப்பிற்காக ஆயுதங்களை வைத்துக்கொள்வது இயல்பாக இருந்தது. ஆனால், 1960களுக்குப் பிறகு அவர்களுக்கு வாழ்வாதாரம் இல்லாததால், அவர்கள் வேட்டைக்குடிகளாக மாறினர்.
அதில், அவர்களுக்கு அரசாங்கத்தைச் சேர்ந்த வனத்துறையுடன் ஏற்பட்ட முரண் காரணமாகத்தான் அவர் தொடர்ந்து யானை வேட்டை உள்ளிட்ட செயல்களில் ஈடுபட ஆரம்பித்தார். ஆனால், அவர் செய்த எதையும் நான் நியாயப்படுத்தவும் இல்லை; அதேநேரத்தில், அதற்கு அவர் மட்டுமே காரணமும் இல்லை,” என்கிறார் அவர்.
சுட்டுக் கொல்லப்பட வேண்டியவரா வீரப்பன்?
வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தவர்களில் ஒருவரான பெரியய்யா ஐபிஎஸ், வீரப்பன் மிருகத்தனமாக எதையும் சிந்திக்கமால் முடிவெடுக்கும் நிலைக்குச் சென்றிருந்ததாகப் பகிர்கிறார்.
“அவர் தனது கூட்டாளிகளையே நம்ப மாட்டார். அவர்களின் கூட்டாளிகளுடன் வனத்தில் இருந்தாலும், அவரும் சேத்துக்குளி கோவிந்தனும் மற்றவர்களைக் கண்காணிக்கும் வகையில் தனியாகத்தான் இருப்பார்கள். அதனால், அவர்களை நம்பி நாம் எந்தக் காரியத்திலம் இறங்க முடியாது,” என்கிறார் பெரியய்யா.
காவல்துறையைச் சேர்ந்த யாராக இருந்தாலும், ஒரு குற்றவாளியை உயிருடன் பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து, உச்சபட்ச தண்டனை வாங்கித் தருவதைத்தான் பெருமையாகக் கருதுவார்கள் எனக் கூறிய பெரியய்யா, வீரப்பனைப் போன்ற ஆட்கள் அதற்கான வாய்ப்பையே காவல்துறைக்குத் தருவதில்லை என்றார்.
“அவர் நல்லவரைப் போன்ற போலி பிம்பத்தில் திகழ்கிறார். அவரது நம்பிக்கையின்மையால்தான் 123 பேரைக் கொலை செய்துள்ளார். அதில், பாதிக்கும் மேற்பட்டவர்கள் பொது மக்கள். அவரிடம் நீங்கள் என்ன நேர்மையை எதிர்பார்க்க முடியும்? சுற்றி வளைத்தபின், காவல்துறையினரை நோக்கி சுட்டதால்தான், அவரை அதிரடிப்படையினர் சுட்டுள்ளனர்,” என்றார் பெரியய்யா.
‘வீரப்பன் எதிற்கும் வருத்தப்பட மாட்டார்’
பெரியய்யா கூறியதை ஆமோதிக்கும் வகையில், இதுவரை தான் செய்த எந்தக் கொலைக்கும் வீரப்பன் வருத்தப்பட்டதோ அல்லது தவறு என எண்ணியதோ இல்லை என்கிறார் அன்புராஜ்.
“அவர் கொலை செய்வதற்கு முன் பல முறை யோசிப்பார். ஆனால், கொலை செய்த பிறகு அதற்காக ஒருமுறைகூட அவர் வருந்தியது இல்லை,” என்றார் அன்புராஜ்.
வீரப்பன் செய்த கொலைகளிலேயே டி.எஃப்.ஓ ஸ்ரீநிவாசன் கொலைதான் மிகவும் கொடூரமானதாகக் கருதப்படுகிறது. “அந்தக் கொலையையும் அவர் சரி என்றே நம்பினார். அவருடன் காட்டில் இருக்கும்போது நானும் அதைச் சரி என்றே நம்பினேன்.
ஆனால், காட்டில் இருந்து வெளியே வந்த பிறகுதான் டி.எஃப்.ஓ குறித்துத் தெரிந்தது. அவர் உண்மையிலேயே வனத்தின் நலனுக்காகவும் வீரப்பனின் நன்மைக்காகவும்தான் சரணடையச் சொல்கியிருக்கிறார்,” என்றார் அன்புராஜ்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)