இஸ்ரேலில் இந்திய ஐ.டி. ஊழியர்கள், மாணவர்கள் நிலை என்ன? தமிழ்ப்பட நடிகை என்ன ஆனார்?

இஸ்ரேல் vs ஹமாஸ்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஹரிந்தர் மிஸ்ரா
    • பதவி, பிபிசிக்காக, டெல் அவிவில் இருந்து

பாலத்தீன ஆயுதக் குழுவான ஹமாஸ் சனிக்கிழமை அதிகாலை காசாவில் இருந்து தெற்கு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

இப்பகுதி இந்தியர்களும் இந்திய வம்சாவளி மக்களும் அதிக அளவில் வசிக்கும் பகுதியாகும்.

அப்பகுதியில் வெளியான செய்தி அறிக்கைகளில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிலர் கடத்தப்பட்டதாகவும், அதில் சிலர் இறந்துவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளன.

இஸ்ரேலில் அவசர நிலை நிலவுவதால், இந்திய சமூகத்தினர் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முயற்சிக்கின்றனர்.

ஆனால், அங்கிருக்கும் இந்திய மக்களிடையே எந்தப் பீதியும் இல்லை. அவர்கள் இந்தியத் தூதரகத்துடன் தொடர்பில் இருந்தபடி, நிலைமையைப் பற்றி கேட்டுத் தெரிந்துகொள்கின்றனர்.

இஸ்ரேலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 95,000 யூதர்களும், 18,000 இந்திய குடிமக்களும் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் இந்தத் தாக்குதலில் அதிகம் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் வாழ்கின்றனர்.

ஹமாஸ் குழு நடத்திய தாக்குதலில், இஸ்ரேலில் 600க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கின்றனர். 2,000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மோதலில் இதுவரை இரு தரப்பிலும் 970க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேல் vs ஹமாஸ்

பட மூலாதாரம், HARINDER MISHRA

துக்கத்தில் ஆழ்ந்த இந்திய வம்சாவளியினர்

இஸ்ரேலின் தெற்குப் பகுதிகளில் பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே சண்டை நடந்து வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதற்கு பதிலடியாக காசா மீது ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் சுமார் 300 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

இஸ்ரேலில் வசிக்கும் இந்தியக் குடிமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுமாறும் இந்தியா அறிவுறுத்தியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை சில உள்ளூர் ஊடகங்களில் வெளிவந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இஸ்ரேலியப் பெண்கள் கடத்தப்பட்டு இறந்தது குறித்த செய்தி இந்திய வம்சாவளிச் சமூகத்தில் துக்கமான சூழலை ஏற்படுத்தியது.

ஹமாஸ், இஸ்ரேல், பாலத்தீன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இஸ்ரேலின் தெற்குப் பகுதிகளில் பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே சண்டை நடந்து வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது

இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்கள்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த யூதர்கள் நான்கு சமூகங்களைச் சேர்ந்தவர்கள். பெனே இஸ்ரேல் மகாராஷ்டிராவைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வந்த யூதர்கள்.

கொச்சினி பிரிவினர் கேரளாவிலிருந்தும், பாக்தாதி பிரிவினர் கொல்கத்தாவிலிருந்தும் சென்றவர்கள்.

நான்காவது பிரிவினர் மணிப்பூர் மற்றும் மிசோரமிலிருந்தும் வந்த பெனே மெனாஷே பிரிவினர் ஆவர்.

இவர்களைத் தவிர, இஸ்ரேலில் சுமார் 18,000 இந்திய குடிமக்கள் வேலை செய்கிறார்கள் அல்லது கல்வி பயில்கிறார்கள்.

வேலை செய்பவர்களில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் வயதான மக்களைக் கவனித்துக் கொள்ளும் பராமரிப்புப் பணிகளில் உள்ளனர். இஸ்ரேலில் இந்தியாவைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் உள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இஸ்ரேலில் உள்ள வெளிநாட்டு மாணவர்களில் அதிகமானோர் இந்திய மாணவர்களே. சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த மாணவர்கள் இஸ்ரேலில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் உள்ளனர்.

இஸ்ரேல் தொழில்நுட்பத்தின் மையமாகவும் இருப்பதால், இந்தியாவைச் சேர்ந்த பல தகவல் தொழில்நுட்ப நிபுணர்களும் அங்கு பணியாற்றி வருகின்றனர். டி.சி.எஸ் போன்ற இந்தியாவின் சில பெரிய நிறுவனங்களும் இஸ்ரேலில் உள்ளன.

ஹமாஸ், இஸ்ரேல், பாலத்தீன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேலில் உள்ள மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்

இந்திய ஐ.டி. ஊழியர்கள், மாணவர்கள் நிலை என்ன?

சனிக்கிழமை நடந்த ஹமாஸ் குழுவின் தாக்குதலில் அதிகம் பாதிக்கப்பட்ட இஸ்ரேலின் தெற்குப் பகுதிகளில் பெனே இஸ்ரேல் சமூகத்தைச் சேர்ந்த ஏராளமான இந்தியர்கள் வசிக்கின்றனர்.

அஷ்டோத், அஷ்கெலோன், ஆஃப்கிம், பீர்ஷெபா, டிமோனா, கிரியாட் காட் போன்ற பகுதிகளில் அவர்கள் அதிக அளவில் உள்ளனர். இங்குதான் அதிகப்படியான ராக்கெட் தாக்குதல் நடந்தது.

இந்தச் சமூகத்தைச் சேர்ந்த ரிக்கி ஷாய், உள்ளூர் நகராட்சியில் அஷ்கெலோன் நகரத்தின் பிரதிநிதியாக உள்ளார்.

ரிக்கி ஷாய் தனது குடும்பத்தினருடன் கிட்டத்தட்ட ஒரு நாள் முழுவதும் பாதுகாப்பான அறையில் கழித்ததாக கூறினார்.

அவரைப் பொருத்தவரை, அவரது நகரத்தில் அதிகமான எண்ணிக்கையில் மக்கள் இறந்திருக்கின்றனர். மேலும் சிலர் கடத்தப்பட்டுள்ளனர். இந்த நகரம் எப்போதும் காசாவில் இருந்து நடக்கும் ராக்கெட் தாக்குதல்களுக்கு இலக்காகி வருகிறது. சனிக்கிழமை இதேபோன்ற சம்பவம் தான் நடந்தது.

ரிக்கி, நகரத்தின் அழிவால் மிகவும் வேதனையடைந்ததாகக் கூறினார். அங்குள்ள மக்கள் இந்தச் சண்டை முடிந்தால் போதும் என்று உணர்வதாகக் கூறுகிறார்.

இஸ்ரேலில் வசிக்கும் இந்திய வம்சாவளிப் பாடகியான லியோரா இட்சாக் பாலிவுட் படங்களிலும் பாடியுள்ளார். இந்தியப் பிரதமர் மோதியின் இஸ்ரேல் பயணத்தின் போது, இந்தியா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளின் தேசிய கீதங்களைப் பாடினார்.

அவர் கூறுகையில், “பொதுமக்கள், ராணுவ வீரர்கள் மற்றும் சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் குறிவைக்கப்பட்ட விதம் வன்முறையில் ஈடுபட்டவர்களின் உண்மையான முகத்தை வெளிப்படுத்தியுள்ளது. இறுதியில், வன்முறையால் ஏற்படும் அனைத்துப் பிரச்னைகளையும் சுமக்க வேண்டியவர்கள் சாமானியர்களே,” என்கிறார்.

ஹமாஸ், இஸ்ரேல், பாலத்தீன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சனிக்கிழமை நடந்த ஹமாஸ் குழுவின் தாக்குதலில் அதிகம் பாதிக்கப்பட்ட இஸ்ரேலின் தெற்குப் பகுதிகளில் பெனே இஸ்ரேல் சமூகத்தைச் சேர்ந்த ஏராளமான இந்தியர்கள் வசிக்கின்றனர்

இந்திய சுற்றுலாப் பயணிகளின் நிலை என்ன?

டெல் அவிவ் நகரத்தில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியப் பிரதிநிதி அலுவலகம் சனிக்கிழமையன்று இந்தியக் குடிமக்களை 'எச்சரிக்கையாக இருக்குமாறும்' தங்கள் 'அலுவலகத்தை நேரடியாகத் தொடர்புகொள்ளுமாறும்' ஆலோசனை வழங்கியுள்ளன.

இந்தியத் தூதரக வட்டாரங்களின்படி, "இதுவரை, சில இந்தியச் சுற்றுலாப் பயணிகள் இஸ்ரேலிலிருந்து தங்களை வெளியேற்றும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்."

ஏர் இந்தியா நிறுவனம் டெல் அவிவ் செல்லும் விமானங்களை காலவரையின்றி ரத்து செய்துள்ளது. டெல்லியில் இருந்து டெல் அவிவ் நகருக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் ஏர் இந்தியா விமானங்களை இயக்குகிறது.

இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களுக்கு இது சிக்கலாக இருக்கலாம்.

இருப்பினும், பெரும்பாலான இந்திய மக்களிடையே பீதி இல்லை. பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றினால் பெரிய பிரச்சனை இல்லை என்று அவர்கள் நம்புகின்றனர்.

இஸ்ரேலின் தெற்குப் பகுதிகளைத் தவிர, மற்ற இடங்கள் பெரிய தாக்குதல்களில் இருந்து ஓரளவிற்கு காப்பாற்றப்பட்டுள்ளன. ராக்கெட் தாக்குதல் நடக்கும்போது, மக்கள் பாதுகாப்பான வீடுகளுக்கு சென்றால், ஆபத்து குறையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹீப்ரு பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி செய்யும் இந்திய மாணவியான பிந்து, தான் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றியதால் பாதுகாப்பாக உணர்ந்ததாகக் கூறினார். அனைத்து இந்திய மாணவர்களும் ஒருவருக்கொருவர் தொடர்பில் இருப்பதாகவும், தொடர்ந்து நிலைமையை ஆய்வு செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

ஹமாஸ், இஸ்ரேல், பாலத்தீன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமின் வீதிகள் காலியாக உள்ளன

‘பயந்து போயிருக்கிறோம், ஆனால் திரும்பும் எண்ணம் இல்லை’

இஸ்ரேலை விட்டு வெளியேறுவது குறித்த கேள்விக்கு, பல இந்திய மாணவர்கள், நிலைமை கட்டுக்குள் வருவதைப் பார்ப்பதாகவும் ‘தேவையற்ற பீதி அடைய வேண்டாம்’ என்றும் கூறுகின்றனர்.

ஆனால், இந்தியாவில் இருந்து இஸ்ரேலுக்கு வேலை செய்யச் சென்ற ஏராளமான பராமரிப்பு பணியாளர்கள் கவலையில் உள்ளனர். ஆனால் அவர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற இன்னும் முடிவு செய்யவில்லை.

அவர்கள் இந்தியத் தூதரகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், இஸ்ரேல் ராணுவத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றி வருவதாகவும் கூறுகின்றனர்.

பெரும்பாலான ராக்கெட்டுகள் அஷ்கெலோன் நகரின் மீது ஏவப்பட்டன. அங்கு வசிக்கும் தெலங்கானாவைச் சேர்ந்த எல்லே பிரசாத், மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், சைரன் அடிக்கும் போது, சீக்கிரம் பாதுகாப்பான இடங்களை அடைய வேண்டும் என்றும் கூறுகிறார்.

வயதானவர்களைப் பராமரிக்கும் பணியில் இருக்கும் மற்றொரு இந்திய வம்சத்தவரான விவேக், அவர்கள் மிகவும் பயந்து போயிருப்பதாகவும், எங்கும் செல்ல முடியாமல் இருப்பதாகவும், ஆனால் அவர்கள் அங்கேயே இருக்க முடிவு செய்திருபதாகவும் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை காலை, இஸ்ரேலிய குடிமக்கள் முந்தைய நாளின் அதிர்ச்சியிலிருந்து மீள முயற்சிப்பதைக் காண முடிந்தது.

அங்குள்ள கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன, அவசர சேவைகளைத் தவிர, மற்ற அலுவலகங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதித்துள்ளன.

ஹமாஸ், இஸ்ரேல், பாலத்தீன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நுஷ்ரத் பருச்சா, 2016-ஆம் ஆண்டு வெளிவந்த ‘வாலிபராஜா’ எனும் தமிழ்ப்படம் உட்பட பல இந்திப்படங்களில் நடித்துள்ளார்

இஸ்ரேலில் தமிழ்ப்பட நடிகை என்ன ஆனார்?

இஸ்ரேலின் ஹைஃபி திரைப்பட விழாவில் பங்கேற்கச் சென்றிருந்த திரைப்பட நடிகை நுஷ்ரத் பருச்சா இப்போது பாதுகாப்பாக உள்ளார்.

இஸ்ரேலில் நடந்து வரும் மோதலில் நுஷ்ரத் சிக்கியுள்ளதாகவும், அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் ஞாயிற்றுக்கிழமை காலை ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

ஆனால் மும்பையைச் சேர்ந்த பிபிசியின் இணை பத்திரிக்கையாளர் சுப்ரியா சோக்லேவின் கூற்றுப்படி, அவர் மாலைக்குள் தனது வீட்டிற்கு வந்துவிட்டார்.

முன்னதாக, நுஷ்ரத் பருச்சாவின் மேலாளர் சஞ்சிதா திரிவேதி, "இந்தியத் தூதரகத்தின் உதவியுடன், நுஸ்ரத்துடன் தொடர்பு கொண்டோம். அவர் இந்தியாவுக்கு பத்திரமாக அழைத்து வரப்படுவார்,” என்று கூறியிருந்தார்.

நுஷ்ரத், 2016-ஆம் ஆண்டு வெளிவந்த ‘வாலிபராஜா’ எனும் தமிழ்ப்படம் உட்பட பல இந்திப்படங்களில் நடித்துள்ளார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)