இந்திய டெஸ்ட் அணியின் சரிவுக்கு என்ன காரணம்? கம்பீர் மீது எழும் கேள்விகள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், அயாஸ் மேமன்
- பதவி, விளையாட்டு பத்திரிகையாளர்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை எதிர்பாராத வகையில் 0-2 என இழந்திருப்பது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்திருக்கிறது.
எதிர்பார்ப்புகளையெல்லாம் விஞ்சிய தென்னாப்பிரிக்க அணி, இந்த வாரம் இந்திய அணிக்கு ரன் அடிப்படையில் மிகப் பெரிய டெஸ்ட் தோல்வியைப் பரிசளித்தது. இது 25 ஆண்டுகளில் இந்திய மண்ணில் தென்னாப்பிரிக்கா பெற்ற முதல் டெஸ்ட் தொடர் வெற்றி. தொடர்ந்து 12 ஆண்டுகள் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடர்களைத் தோற்காமல் இருந்த இந்திய அணி, கடைசி 12 மாதங்களில் இரண்டாவது தொடரை இழந்திருக்கிறது.
பல வீரர்களின் எதிர்காலமும், தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் எதிர்காலமும் இப்போது கேள்விக்குறியாகியிருக்கிறது.
புதிய கேப்டனின் தலைமையில் இங்கிலாந்தில் இளம் இந்திய அணியினர் வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டம், ஒரேநேரத்தில் நடந்த ரவிச்சந்திரன் அஷ்வின், ரோஹித் ஷர்மா, விராட் கோலி போன்ற மூத்த வீரர்களின் ஓய்வுக்குப் பிறகான மாற்றம் மென்மையாக நடைபெறுகிறது என்பதைக் காட்டியது.
உள்ளூர் சீசனின் தொடக்கத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராகப் பெற்ற 2-0 என்ற எளிதான வெற்றி அந்த எண்ணத்தை மேலும் வலுப்படுத்தியது. ஆனால் தென் ஆப்ரிக்க அணியின் வருகை அந்த எண்ணத்துக்கு பலத்த அடி கொடுத்தது.
முதல் டெஸ்ட் தொடக்கத்திலேயே கேப்டன் சுப்மன் கில் காயமடைந்து, விளையாட முடியாத நிலை ஏற்பட்டது இந்திய அணிக்கு துரதிருஷ்டம். ஆனால் அதுவே தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான இரு டெஸ்ட்களிலும் வெளிப்பட்ட மிக மோசமான செயல்பாட்டுக்கான விளக்கமாகவும் மன்னிப்பாகவும் அமையாது.
சில பெரிய நற்பெயர்கள் இப்போது அடிபட்டிருக்கின்றன. நீண்ட டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை எதிர்பார்த்திருந்த வீரர்கள், 'ஆட்ட நுணுக்க ரீதியாகவோ' உளவியல் ரீதியாகவோ இன்னும் அதற்குத் தயாராக இல்லை என்பது அம்பலப்பட்டிருக்கிறது.

பட மூலாதாரம், AFP via Getty Images
கடந்த ஓராண்டில் சொந்த மண்ணில் இந்தியா சந்தித்திருக்கும் இரண்டாவது 'வைட்வாஷ்' இது. 2024-ல் யாரும் எதிர்பாராத வகையில் நியூசிலாந்திடம் 0-3 என தோல்வியடைந்தது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (டபிள்யூ.டி.சி) இறுதிப் போட்டி வாய்ப்பை இந்தியா இழக்கக் காரணமாக அமைந்தது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சமீபத்திய தோல்வி, இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் (2025-27) இறுதிப் போட்டிக்கான வாய்ப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன் டபிள்யூ.டி.சி புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த இந்திய அணி, தற்போது ஐந்தாவது இடத்துக்குப் பின்தங்கியிருக்கிறது. இன்னும் 9 டெஸ்ட் போட்டிகள் மீதமிருந்தாலும், அதில் ஐந்து போட்டிகள் ஆஸ்திரேலியாவுக்கு எதிரானவை. பொதுவாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவே விளையாடினாலும் சொந்த மண்ணில் ஆடுவது சாதகமாக இருக்கும். ஆனால், நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்தத் தோல்விகள் அந்த ஆறுதலைக் கொடுக்கவில்லை.
டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் தடுமாற்றம் வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டுள்ளது. இருந்தாலும், சமீபத்திய இந்த மோசமான செயல்பாட்டுக்கான காரணம் என்ன என்பதுதான் பெரும் குழப்பமாக இருக்கிறது.
இந்த நூற்றாண்டின் தொடக்கம் முதல், சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் இந்தியா அசைக்க முடியாத சக்தியாகக் கருதப்பட்டது. சூடான, ஈரப்பதமான சூழ்நிலை, சுழலுக்கு சாதகமான ஆடுகளங்கள் இந்திய பேட்டர்கள் மற்றும் பௌலர்களுக்கு ஏற்றதாக இருந்தது. இந்திய அணி எந்த எதிரணியையும் விட்டுவைக்கவில்லை. 2012-13 சீசனில் இங்கிலாந்துக்கு எதிராக அடைந்த தோல்வி ஒரு சிறு சரிவாகவே பார்க்கப்பட்டது.
ஆனால், இப்போது இந்தியாவை அதன் சொந்த மண்ணில் சந்திப்பது எளிதான விஷயமாக மாறிவிட்டது.
2024-ல் நியூசிலாந்துக்கு எதிராகவும், தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகவும் இந்தியா தனது பொறியிலேயே சிக்கியது. இந்திய அணியின் பலத்துக்கு ஏற்ப தயாரிக்கப்பட்ட ஆடுகளங்கள் அதற்குப் பின்னடைவை ஏற்படுத்தின. முக்கியமான நேரங்களில் அந்த ஆடுகளத்தின் தன்மையை இந்தியாவின் பேட்டர்கள் மற்றும் பௌலர்களை விட எதிரணி வீரர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.
என்ன தவறு நடந்தது?
வெளிநாட்டு ஆடுகளங்களுக்கு தயாராகும் வகையில், சுழலுக்கு ஒத்துழைக்கும் உள்ளூர் ஆடுகளங்கள் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக மாற்றப்பட்டதை சிலர் இந்திய டெஸ்ட் அணியின் தடுமாற்றத்துக்குக் காரணமாகச் சொல்கிறார்கள்.
இந்திய பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) பங்கேற்கும் அனுபவத்தால் வெளிநாட்டு வீரர்களுக்கு இந்திய சூழல் அளித்த மர்மமும் சிரமமும் இப்போது மறைந்து விட்டன என்றும் சிலர் கூறுகிறார்கள்.
இவை இரண்டிலுமே ஓரளவு உண்மை இருந்தாலும், உள்ளூரில் இந்தியாவின் செயல்பாடு இந்த அளவுக்கு வீழ்ச்சியடைந்திருப்பதை அது முழுமையாக விளக்குவதாக இல்லை.

பட மூலாதாரம், AFP via Getty Images
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்தத் தோல்விக்குப் பிறகு வல்லுநர்களும் வீரர்களும் பல சிக்கல்களை சுட்டிக்காட்டியுள்ளனர். எதிரணியை குறைத்து மதிப்பிடுவது, சரிவர தயாராகாதது, அணித் தேர்வில் தவறுகள், அதீத நம்பிக்கை, பிளேயிங் லெவனில் தொடர்ந்த மாற்றங்கள், டெஸ்ட் கிரிக்கெட்டை விட ஒருநாள், டி20 போட்டிகளைப் பிரதானப்படுத்தியது என பலவும் அதில் அடங்கும்.
இது அணியின் செயல்பாட்டிலும் பிரதிபலித்தது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற வீரர்கள் தங்கள் அலட்சியத்திற்கு விக்கெட்டை பறிகொடுத்தனர். அணியில் தங்கள் இடத்தை உறுதிப்படுத்திக் கொள்ள நினைத்த சாய் சுதர்சன், நிதிஷ் குமார் ரெட்டி, துருவ் ஜுரெல் போன்ற வீரர்களின் ஆட்ட நுட்பத்திலும் மனோபாவத்திலும் குறைகள் தென்பட்டன. அவர்களும் தங்களின் அலட்சிய அணுகுமுறையால் விக்கெட்டுகளை இழந்தனர்.
ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரித் பும்ரா, குல்தீப் யாதவ், சிராஜ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் மட்டுமே தங்கள் திறமைக்கும் பெயருக்கும் ஏற்ற செயல்பாட்டைக் கொடுத்தனர். ஆனால், அதுவும் வெற்றிக்குப் போதுமானதாக இல்லை.
இந்த தோல்வியைப் பற்றிய பகுப்பாய்வு வீரர்களை மட்டும் குறிவைக்கவில்லை. கலக்கமடைந்த ரசிகர்களாலும் முன்னாள் வீரர்களாலும் தேர்வாளர்களும், உதவிப் பணியாளர்களும் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகினர். இந்த விமர்சனங்களின் மையத்தில் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இருக்கிறார்.
தொடர் முடிந்த பின் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு கடினமான மனப்பக்குவம் கொண்ட வீரர்கள் தேவைப்படுகிறார்கள் என்று கூறினார் கம்பீர். ஆனால் இந்த கருத்துகளால், முடிவுகளை பெற்றுத்தருவதில் அவருடைய சொந்த குறைபாடுகள் இருப்பதை மறைக்க முடியாது.

பட மூலாதாரம், AFP via Getty Images
கம்பீருடைய சில முடிவுகள் கேள்விக்குள்ளாகியுள்ளன. கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் மூன்று இடது கை ஸ்பின்னர்கள் உள்பட மொத்தம் 4 ஸ்பின்னர்களைக் களமிறக்கியது, 'வைட் பால் ஃபார்மட்டில்' செய்வதுபோல் 'ஸ்பெஷலிஸ்ட்' வீரர்களுக்குப் பதிலாக அதிக ஆல்ரவுண்டர்களைக் களமிறக்கியது, நம்பர் 3 இடத்தில் வாஷிங்டன் நன்றாக ஆடியிருந்தும் அடுத்த போட்டியில் அவரை நம்பர் 8 இடத்துக்கு மாற்றியது என அந்தப் பட்டியல் நீள்கிறது.
இந்த தொடரின் முடிவு குறிப்பாக கம்பீருக்குப் பாதகமாக உள்ளது.
அவரது பயிற்சியின் கீழ் சொந்த மண்ணில் ஆடிய கடைசி ஏழு டெஸ்ட் போட்டிகளில், இந்தியா ஐந்தில் தோல்வியடைந்துள்ளது. அதனால், அவரது திட்டம், வீரர்கள் மீதான மதிப்பீடு, அணி தேர்வு, ஆட்ட அணுகுமுறை, திறமை மற்றும் மனோபாவம் இரண்டையும் வளர்ப்பதில் அவருடைய ஒட்டுமொத்த பங்கு போன்ற விஷயங்களில் அவர் மீது வல்லுநர்களுக்கு சந்தேகம் ஏற்படுகிறது.
இந்திய கிரிக்கெட் வாரியம் கம்பீரின் எதிர்காலம் பற்றி என்ன முடிவு எடுக்கிறது, டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்கள் திறனை நிரூபிக்க முடியாத பல வீரர்கள் தொடர்பாக தேர்வாளர்கள் என்ன தீர்மானிக்கிறார்கள் என்பது காத்திருந்து பார்க்க வேண்டிய விஷயம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












