You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாகிஸ்தான் காதலரை மணம் முடிப்பதற்காக மதம் மாற நெருக்கடியா? திருமணம் எப்போது? எப்படி?
- எழுதியவர், பாயல் புயன்
- பதவி, பிபிசி செய்தியாளர்
ஃபேஸ்புக்கில் அறிமுகமாகி காதலராக மாறிய பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரை சந்திக்க கைபர் பக்துங்க்வா சென்ற இந்தியப் பெண் அஞ்சு, தனது காதலர் நஸ்ருல்லாவை திருமணம் செய்து கொள்வதற்காக இஸ்லாம் மதத்துக்கு மாறப் போவதில்லை என்று கூறியுள்ளார்.
கைபர் பக்துங்க்வாவில் உள்ள தீர்பாலாவை அடைந்த அஞ்சு, திருமணத்திற்காக இஸ்லாமுக்கு மாறுவதற்கு தன் மீது எந்த நெருக்குதலும் இல்லை என்று பிபிசி உடனான சிறப்பு உரையாடலின்போது கூறினார். திருமணத்திற்காக மதம் மாறுவதில் தனக்கு விருப்பமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
நஸ்ருல்லாவுடன் அவருக்கு இருக்கும் நட்பு, அவர் பாகிஸ்தானுக்கு வந்தது, நிச்சயதார்த்தம் மற்றும் திருமண திட்டங்கள் குறித்து அஞ்சுவிடம் பிபிசி கேட்டது. இந்தக் கேள்விகளுக்கு அவர் அச்சம் ஏதுமின்றி பதிலளித்தார்.
- 2020ல் இருந்தே நான் நஸ்ருல்லாவுடன் பேசுவேன். ஃபேஸ்புக் மூலம் தொடர்பு கொண்டோம். நஸ்ருல்லாவை சந்திப்பதற்காகவே நான் பாகிஸ்தான் வந்துள்ளேன். இங்கு வந்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இங்குள்ள மக்கள் மிகவும் நல்லவர்கள்.
- இங்கு வருவதற்கு முன் நான் என் கணவரிடம் இதுபற்றி சொல்லவில்லை. நான் சொல்லியிருந்தால் ஒருவேளை அவர் மறுத்திருப்பார். பாகிஸ்தானுக்குள் நுழைய முடியுமா இல்லையா என்பது கூட எனக்குத் தெரியாது. ஆனால் பாகிஸ்தானை அடைந்ததும் நான் இங்கே இருக்கிறேன் என்று அவரிடம் சொல்லிவிட்டேன். குழந்தைகளிடம் தொடர்ந்து பேசி வருகிறேன்.
- நிச்சயதார்த்தம் மற்றும் திருமணம் பற்றி என் கணவரிடம் சொல்லவில்லை. நான் அவரிடம் அதிகம் பேசுவதில்லை. நான் திரும்பி வந்தாலும் என் குழந்தைகளுக்காகத்தான் வருவேன் என்று அவரிடம் சொல்லிவிட்டேன். எனக்கு ஒரு மாத விசா உள்ளது. இன்னும் சில நாட்களில் இந்தியா வந்துவிடுவேன்.
- எல்லாவற்றையும் யோசித்த பிறகுதான் நிச்சயதார்த்தம் செய்வது பற்றி முடிவு செய்வேன். எல்லாம் நல்லபடியாக இருந்தால் திரும்பி வருவதற்கு ஒரு நாள் முன்பு நிச்சயதார்த்தம் செய்து கொள்வேன். நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு நான் இந்தியா வந்து அடுத்த செயல்முறையை முடிப்பேன்.
- நஸ்ருல்லாவுடன் எனது உறவு இதுவரை மிகவும் நன்றாக உள்ளது. அவருடைய குடும்ப உறுப்பினர்களும் நல்லவர்கள். இங்கு மக்கள் அன்புடன் பேசுகிறார்கள். இங்கு என் மீது எந்த அழுத்தமும் இல்லை. எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது இவர்களுக்கும் தெரியும்.
அஞ்சுவின் கணவர் என்ன சொல்கிறார்?
நஸ்ருல்லாவை சந்திப்பதற்காக அஞ்சு அவருடைய நகரத்தை அடைந்தபோது அவருக்கு அங்கு அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவரைப் பார்க்க ஏராளமானோர் வருகின்றனர்.
”அஞ்சு ஜூலை 21 ஆம் தேதி ஜெய்ப்பூருக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டுச்சென்றார். அன்றிலிருந்து நாங்கள் வாட்ஸ்அப்பில் பேசிவருகிறோம்,” என்று அஞ்சுவின் கணவர் அரவிந்த், பிபிசி இந்தியின் இணை செய்தியாளர் மோஹர் சிங் மீனாவிடம் தெரிவித்தார்.
“ஜூலை 23 ஆம் தேதி மாலை என் மகனின் உடல்நிலை சரியில்லாமல் போனபோது எப்போது வீட்டிற்கு திரும்புவாய் என்று அஞ்சுவிடம் கேட்டேன். தான் பாகிஸ்தானில் இருப்பதாகவும், விரைவில் வருவேன் என்றும் அப்போது அஞ்சு கூறினார்.”
"அஞ்சு பாகிஸ்தான் செல்வது பற்றி யாருக்குமே எதுவுமே தெரியாது. ஜெய்ப்பூர் செல்வதாகவே அஞ்சு கூறினார். அஞ்சுவிடம் ஏற்கனவே பாஸ்போர்ட் உள்ளது. அதுபற்றி எனக்குத்தெரியும்" என்றார் அரவிந்த்.
தனக்கு 40 வயது என்றும் அஞ்சுவுக்கு சுமார் 35 வயது என்றும் அரவிந்த் பிபிசியிடம் தெரிவித்தார். இருவரும் உத்திர பிரதேசத்தை சேர்ந்தவர்கள். ஆனால் கடந்த பல ஆண்டுகளாக அவர்கள் பிவாடியில் வசித்து வருகின்றனர்.
அஞ்சுவுக்கும் தனக்கும் 2007ம் ஆண்டு திருமணம் நடந்ததாக அரவிந்தின் கணவர் தெரிவித்தார். இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். மூத்த மகளுக்கு 15 வயது, மகன் இளையவன். இருவரும் பள்ளிக்குச் செல்கிறார்கள்.
தான் பன்னிரெண்டாவது வரை படித்துள்ளதாகவும், அஞ்சு பத்தாம் வகுப்பு முடித்திருப்பதாகவும் அரவிந்த் குறிப்பிட்டார்.
அஞ்சு பிவாடியில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்வதாகவும், அருகில் உள்ள வேறு ஒரு நிறுவனத்தில் தான் பணிபுரிவதாகவும் அரவிந்த் கூறினார்.
’எங்கள் எண்ணம் நேர்மையானது’- நஸ்ருல்லா
அஞ்சு தன்னுடன் நிச்சயதார்த்தம் செய்துகொள்ள வந்திருப்பதாக ஞாயிற்றுக்கிழமையன்று பிபிசி உருதுவிடம் பேசிய நஸ்ருல்லா கூறினார்.
“நானும் அஞ்சுவும் இன்னும் சில நாட்களில் முறைப்படி நிச்சயதார்த்தம் செய்து கொள்வோம், பத்து பன்னிரெண்டு நாட்களுக்குப் பிறகு அவர் இந்தியாவுக்குத் திரும்பிச் செல்வார்,” என்று அவர் தெரிவித்தார்.
“அதன் பிறகு திருமணத்திற்காக அவர் மீண்டும் பாகிஸ்தான் வருவார். இது எங்கள் இருவருடைய தனிப்பட்ட வாழ்க்கை. இதில் யாரும் தலையிடுவதை நாங்கள் விரும்பவில்லை. ஊடகங்களில் இருந்து விலகி இருக்கவும் நாங்கள் முயற்சி செய்து வருகிறோம்” என்றார் அவர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஃபேஸ்புக் மூலம் இந்தியாவைச் சேர்ந்த அஞ்சுவுடன் தனக்கு அறிமுகம் ஏற்பட்டதாக நஸ்ருல்லா பிபிசியிடம் தெரிவித்தார்.
"முதலில் நட்பாகத் தொடங்கிய இந்த உறவு பின்னர் காதலாக மாறியது. அதன் பிறகு நாங்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ முடிவு செய்தோம்," என்று அவர் தெரிவித்தார்.
தனது உறவினர்கள் இந்த முடிவில் தனக்கு ஆதரவாக இருப்பதாக நஸ்ருல்லா தெரிவிக்கிறார்.
“அஞ்சு பாகிஸ்தானுக்கு வரவேண்டும் என்று நாங்கள் இருவரும் சேர்ந்து முடிவு செய்தோம். இங்கு வந்து என் உறவினர்களை அவர் சந்திப்பார். பின்னர் பாகிஸ்தானில் திருமண நிச்சயம் செய்துகொள்வதாகவும், அதன்பிறகு சில காலம் கழித்து திருமணம் செய்துகொள்வது என்றும் முடிவு செய்தோம்,” என்கிறார் நஸ்ருல்லா.
“எங்கள் எண்ணம் நேர்மையானது. எனவே நாங்கள் மனம் தளரவில்லை” என்றார் அவர்.
விசா பெறுவதில் போராட்டம்
ஒருபுறம் அஞ்சு டெல்லியில் பாகிஸ்தான் தூதரகத்திற்கு தொடர்ந்து சென்று வந்தார். மறுபுறம் நஸ்ருல்லா பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் வெளியுறவு அமைச்சகம் மற்றும் வேறு அலுவலகங்களையும் தொடர்ந்து தொடர்புகொண்டார்.
“அஞ்சு அங்கு அதிகாரிகளுக்கு தொடர்ந்து புரியவைத்துக் கொண்டிருந்தார். அதே நேரம் விசா பெறுவது அஞ்சுவின் உரிமை, நாங்கள் சந்திக்க விரும்புகிறோம், எனவே எங்களை சந்திக்க அனுமதியுங்கள் என்று நான் இங்கு அதிகாரிகளிடம் மன்றாடிக்கொண்டிருந்தேன்.” என்று நஸ்ருல்லா கூறினார்.
இறுதியில் இருவரின் முயற்சிக்கும் பலன் கிடைத்தது. ஆனால் அதற்கு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. அஞ்சுவுக்கு பாகிஸ்தான் விசா கிடைத்துவிட்டது. பின்னர் தீர்பாலா செல்வதற்கும் அனுமதி அளிக்கப்பட்டது.
’பக்துங்க்வாவின் விருந்தினர் அஞ்சு'
பாகிஸ்தானுக்கும், பின்னர் தீர்பாலா செல்வதற்கும் எல்லாவிதமான சட்டபூர்வ நடவடிக்கைகளும் பின்பற்றப்பட்டதாக நஸ்ருல்லா கூறுகிறார்.
“இந்த விசா பெறுவதற்கு நானும், அஞ்சுவும் ஆயிரக்கணக்கான ரூபாயை செலவழித்துள்ளோம். ஒரு முறை விசா கிடைத்துவிட்டதால் வருங்காலத்தில் எந்தப் பிரச்சனையும் இருக்காது என்று நம்புகிறோம்,” என்று அவர் குறிப்பிட்டார்.
கைபர் பக்துங்க்வாவில் இந்தியப் பெண் ஒருவர் வந்திருப்பது குறித்து அந்தப் பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆனால் அவரை வரவேற்கும் ஏற்பாடுகளுக்கு வானிலையும் தற்போதைய சூழ்நிலையும் தடையாக உள்ளது.
"அஞ்சு வெள்ளிக்கிழமை காலை இங்கு வந்தார். அப்போது கனமழை பெய்து கொண்டிருந்தது," என்று நஸ்ருல்லா வசிக்கும் பகுதியைச்சேர்ந்த அரசியல் மற்றும் சமூகப் பிரமுகரான ஃபரிதுல்லா, பிபிசியிடம் கூறினார்.
"அஞ்சுவுக்காக இந்தப்பகுதி மக்கள் ஆவலுடன் காத்திருந்தனர். சனிக்கிழமை பிரமாண்டமான வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தலாம் என்று நினைத்தோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஒருவர் உயிரிழந்தார். அதனால் நிகழ்ச்சி தடைப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியை பின்னர் நடத்துவோம்." என்றார் அவர்.
"அஞ்சு எங்கள் விருந்தாளி, மருமகளும் கூட. அவர் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் இங்கே தங்கலாம். அவருக்கு எந்தப் பிரச்சனையும் கஷ்டமும் இருக்காது. அவருக்கு எந்தப் பிரச்சனையும் வராமல் நாங்கள் பார்த்துக்கொள்வோம். எல்லா வசதிகளும் கிடைக்கச்செய்வோம்," என்றார் ஃபரிதுல்லா.
"எங்கள் பகுதியில் மகிழ்ச்சி சூழல் நிலவுகிறது. எங்கள் வீட்டுப்பெண்கள் தொடர்ந்து அஞ்சுவை சந்தித்து அன்பளிப்புகளை வழங்குகிறார்கள். எதற்கும் கவலைப்பட வேண்டாம் என்று உறுதியளித்து வருகிறார்கள்," என்று அவர் மேலும் கூறினார்.
பாகிஸ்தான் போலீஸ் சொல்வது என்ன?
பாகிஸ்தான் வந்துள்ள அஞ்சுவின் விசா ஆவணங்கள் போலீஸால் ஆய்வு செய்யப்பட்டதாகவும், அவை சரியாக உள்ளன என்றும் தீர்பாலா மாவட்ட காவல்துறை அலுவலர் முகமது முஷ்டாக் தெரிவித்தார். அஞ்சுவிடம் ஒரு மாத விசா உள்ளதாகவும், இந்த நேரத்தில் தீர்பாலாவில் தங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
ஞாயிறன்று மாலை அஞ்சுவும், நஸ்ருல்லாவும் உள்ளூர் காவல்நிலையத்திற்கு அதிகாரபூர்வ விசாரணைக்காக அழைக்கப்பட்டனர் என்றும் அவர் தெரிவித்தார்.
“இந்த சட்டபூர்வ உரையாடல் எல்லா வெளிநாட்டவர்களிடமும் செய்யப்படுகிறது. அவர்களிடம் பேசி நேர்காணல் செய்தபிறகு அவர்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்படுகிறார்கள்,” என்றார் அவர்.
”போலீஸ் அஞ்சுவுக்கு முழு பாதுகாப்பு அளிக்கும். கூடவே அவரது தனியுரிமையும் முழுவதுமாக கவனித்துக் கொள்ளப்படும்,”என்று அவர் குறிப்பிட்டார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்