மோதிக்கு எதிராக வேட்புமனு தாக்கல் செய்ய விடாமல் தடுக்கப்பட்டதாக தமிழக விவசாயிகள் குற்றச்சாட்டு

வாரணாசி
படக்குறிப்பு, "விவசாயிகளின் எதிர்ப்பை காண்பிப்பதற்காகவே தமிழ்நாட்டின் 111 விவசாயிகள் மோதிக்கு எதிராக வாரணாசியில் போட்டியிட முடிவு செய்தோம்”, என்றார் அய்யாக்கண்ணு.
    • எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
    • பதவி, பிபிசி தமிழ்

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோதிக்கு எதிராக வேட்புமனு தாக்கல் செய்ய விடாமல் தாங்கள் தடுக்கப்பட்டதாக தமிழ்நாட்டை சேர்ந்த விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்ட 120 விவசாயிகளும் கூறுவது என்ன? அங்கே என்ன நடந்தது?

பிரதமர் மோதி வேட்புமனு தாக்கல்

இந்தியாவின் 7 கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில், பிரதமர் மோதி களம் காணும் வாரணாசி உள்பட 57 தொகுதிகளுக்கு கடைசிக் கட்டமாக ஜூன் 1-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

அதற்கான வேட்பு மனு தாக்கல் மே-7 ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை நடைபெற்றது. கடந்த இரு தேர்தல்களிலும் வாரணாசி தொகுதியில் இருந்து பிரதமர் நரேந்திர மோதி நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மூன்றாவது முறையாக வாரணாசியில் போட்டியிட மே 14-ம் தேதி செவ்வாய்க்கிழமை பாஜகவின் கூட்டணி கட்சி தலைவர்கள், பிற மாநில முதல்வர்களுடன் ஊர்வலமாகச் சென்று அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

வாரணாசி, மோதி

பட மூலாதாரம், X@NARENDRAMODI

தமிழ்நாடு விவசாயிகள் வாரணாசியில் போட்டியிட முடிவு செய்தது ஏன்?

இது குறித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பி. அய்யாக்கண்ணு பிபிசி தமிழிடம் பேசுகையில்,

“விளைபொருட்களுக்கு இரட்டிப்பு விலை, நதிநீர் இணைப்பு, விவசாயக் கடன் தள்ளுபடி என பல திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளித்து பிரதமர் நரேந்திர மோதி தேர்தலில் வெற்றி பெற்றார். ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் அவர் விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை. இதனையடுத்து விவசாயிகளின் எதிர்ப்பை காண்பிக்கவே தமிழ்நாட்டின் 111 விவசாயிகள் மோதிக்கு எதிராக வாரணாசியில் போட்டியிட முடிவு செய்தோம்”, என்றார்.

வாரணாசி

விவசாயிகள் ரயில் முன்பதிவில் சிக்கலா?

வாரணாசிக்குச் சென்று மே 13ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய தீர்மானித்து, கன்னியாகுமரி - பனாரஸ் ரயிலில் 120 பேருக்கு திருச்சியிலிருந்து முன்பதிவு செய்ததாக விவசாயிகள் கூறுகின்றனர்.

"முன்பதிவில் 39 பேருக்கு மட்டுமே எஸ்-1 கோச்சில் இருக்கை உறுதியானது. மற்ற விவசாயிகளுக்கு முன்பதிவு டிக்கெட் கிடைக்கவில்லை. எனவே அவர்கள் முன்பதிவில்லா பெட்டியில் செல்லலாம் என்று முடிவு செய்தோம். மே 10 ஆம் தேதி காலை திருச்சி ரயில் நிலையத்திற்கு சென்று காத்திருந்த போது 2 மணி நேரம் தாமதமாக வந்த ரயிலில் எங்களுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிந்த எஸ்-1 பெட்டியே இணைக்கப்படவில்லை.

அதுகுறித்து ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டதற்கு, தொழில்நுட்பக் கோளாறால் அந்த ரயில் பெட்டி சேர்க்கப்படவில்லை என்றும் தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் அந்த குறிப்பிட்ட பெட்டியை இணைத்து இருக்கை வழங்குவோம் என்றும் உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்தே நாங்கள் ரயிலில் ஏறி பயணம் செய்தோம்" என்று விவசாயிகள் கூறினர்.

வாரணாசி
படக்குறிப்பு, செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் 120 விவசாயிகள் கைது

தஞ்சாவூர், விழுப்புரம் என அடுத்தடுத்த ரயில் நிலையங்களில் இருக்கையை உறுதி செய்வதாகக் கூறிய ரயில்வே அதிகாரிகள் அதனை செய்யவில்லை என்று குற்றம்சாட்டி, திருச்சி முதல் அடுத்து வந்த ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் அபாயச் சங்கிலியை இழுத்து சுமார் ஒரு மணி நேரம் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து, செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் வைத்து 120 விவசாயிகளையும் போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.

இது குறித்து செங்கல்பட்டு ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் மோகன் பிபிசி தமிழிடம் பேசுகையில்,

"அய்யாக்கண்ணு மற்றும் உடனிருந்த விவசாயிகள் இருக்கை வழங்கவில்லை என்று கூறி செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் போராட்டம் செய்ததால் பயணிகளுக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் (IPC 151) மற்றும் ரயிலின் அபாய சங்கிலியை காரணம் இன்றி இழுப்பது, ரயில்வே சட்டம் 141 (Railway Act 141) என இரண்டு பிரிவுகளின் கீழ் அனைவரும் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். பின்னர், மாலையில் திருச்சிக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்", என கூறினார்.

டிக்கெட் முன்பதிவு - ரயில்வே அதிகாரி விளக்கம்

“விவசாயிகளில் ஒருவருக்குக் கூட முன்பதிவில் டிக்கெட் உறுதியாகவில்லை. அவர்கள் குறிப்பிடும் 39 பேருடைய பெயர்களும் காத்திருப்போர் பட்டியலில்தான் இருந்தன. ரயிலில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக எஸ்1 பெட்டி இணைக்கப்படவில்லை. அதில் முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு வேறு பெட்டிகளில் இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டது." என பிபிசி தமிழிடம் பேசிய, பெயரை வெளியிட விரும்பாத ரயில்வே அதிகாரி ஒருவர் கூறினார்.

ரயில்வே அதிகாரியின் விளக்கத்தை அடுத்து, விவசாயிகள் ரயில் நிலையத்திற்கே நேரடியாக சென்று முன்பதிவு செய்ததாக கூறியிருந்ததால், அந்த டிக்கெட் நகல்களை பிபிசி சார்பில் கேட்டோம். இந்த கட்டுரை பிரசுரமாகும் வரை விவசாயிகள் தரப்பில் அந்த நகல்கள் தரப்படவில்லை. அவர்கள் தந்தவுடன் இந்த கட்டுரையில் அந்த நகல்கள் சேர்க்கப்படும்.

பிரதமருக்கு எதிராக பிரசாரம் செய்ய விவசாயிகள் முடிவு

“111 விவசாயிகளுக்கும் முன்மொழிவதற்கான ஆட்களை அங்கு இருக்கக்கூடிய விவசாய சங்கங்களிடம் பேசி தயார் செய்து வைத்திருந்தோம். ஆனால், ரயில்வே மற்றும் போலீஸ் அதிகாரிகளைக் கொண்டு நாங்கள் வாரணாசி சென்று வேட்பு மனு தாக்கல் செய்வதை தடுத்திருக்கின்றனர்”, என்று அய்யாக்கண்ணு குற்றம்சாட்டுகிறார்.

"கடந்த 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது 111 விவசாயிகள் பிரதமர் மோதிக்கு எதிராக போட்டியிட முடிவு செய்து இருந்தோம். அந்த நேரம் அமித்ஷா நேரில் சந்தித்து பேசும் போது எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார். அதனால் போட்டியிடுவதை கைவிட்டோம். ஆனால் மோதி அரசு விவசாயிகளுக்கு எதையும் செய்யவில்லை.

இந்த முறை விவசாயிகள் வேட்பு மனு தாக்கல் செய்ய முடி்யாத சூழலை ஏற்படுத்திவிட்டனர். ஆனால் கொல்கத்தா வழியாக வாரணாசி சென்று கடைசி ஒரு வாரம் பிரதமர் மோதிக்கு எதிராக அங்கிருக்க கூடிய விவசாய சங்கங்களுடன் இணைந்து பிரசாரம் மேற்கொள்ள தமிழ்நாடு விவசாயிகள் முடிவு செய்து இருக்கிறோம்”, என்றார் அவர்.

வாரணாசி
படக்குறிப்பு, 2017 டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட படம்

அய்யாக்கண்ணு தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி

இந்த நிலையில், வாரணாசி தொகுதியின் வேட்பு மனு தாக்கல் செய்யும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் அய்யாக்கண்ணு ரிட் மனு தாக்கல் செய்திருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் விக்ரம் நாத், சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு, "வாரணாசியில் ஏன் போட்டியிட விரும்புகிறீர்கள்? தமிழகத்தில் ஏன் போட்டியிடவில்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்த அய்யாக்கண்ணுவுக்கு வாரணாசியில் என்ன வேலை? அங்கு யார் உங்களுக்கு வாக்களிப்பார்கள்? சமூக சேவகர் என்றால் தமிழ்நாட்டில் போட்டியிடுங்கள். விளம்பரத்துக்காக இதுபோன்று மனு தாக்கல் செய்யாதீர்கள்" அய்யாக்கண்ணு தரப்பிற்கு அறிவுறுத்தியது.

அப்போது அய்யாக்கண்ணு தரப்பு வழக்கறிஞர், "விளம்பர நோக்கத்திற்காக வழக்கு தொடரவில்லை. விவசாயிகளுக்காகவே போராடி வருகிறோம். இணையதளம் வாயிலாக வேட்பு மனு தாக்கல் செய்ய வசதி செய்யப்படவில்லை" என்று வாதிட்டார். எனினும், அய்யாக்கண்ணு தாக்கல் செய்த ரிட் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நகைச்சுவை நடிகர் குற்றச்சாட்டு

நகைச்சுவை நடிகர் மற்றும் பிரபல யூ டியூபரான ஷ்யாம் ரங்கீலா பிரதமர் மோதியை போல மிமிக்ரி செய்து பிரபலமடைந்தவர். இவரை சமூக ஊடகங்களில் லட்சக்கணக்கானோர் பின்தொடர்கின்றனர்.

பிரதமர் மோதியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் போட்டியிட தீர்மானித்த இவர், வேட்பு மனு படிவத்தை பெறுவதிலேயே சிக்கல் இருந்ததாக கூறியுள்ளார்.

“வேட்பு மனு படிவத்தை பெறுவதற்கே 10 முன்மொழிபவர்களின் ஆதார் அட்டை நகல் மற்றும் செல்போன் எண்களை சமர்ப்பிக்க வேண்டுமா? தேர்தல் ஆணையம் இந்த நடைமுறையைதான் நாடு முழுவதும் பின்பற்றுகிறதா?”, என்று அவர் தனது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பின்னர் பூர்த்தி செய்த வேட்பு மனு படிவத்தை பெற அதிகாரிகள் முன்வரவில்லை என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார். பிரதமர் வரும் நாளன்று வேட்பு மனு தாக்கல் செய்யும் அலுவலகத்திற்கு சென்ற போது, உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாக குறை கூறியுள்ளார். மோதி வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு சென்ற பின்னர் மாலையில் ஷ்யாம் ரங்கீலா தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

வாரணாசி

பட மூலாதாரம், SHYAM RANGEELA / X

படக்குறிப்பு, ஷ்யாம் ரங்கீலா, நகைச்சுவை நடிகர் மற்றும் யூடியூபர்

25 வயது பூர்த்தியடைந்த இந்திய குடிமகன் நாட்டின் எந்தவொரு தொகுதியிலும் போட்டியிடலாம். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தேசிய அல்லது மாநில கட்சியைச் சார்ந்தவராக இருந்தால் அவர் வேட்பு மனு தாக்கல் செய்யும் போது குறைந்தபட்சம் ஒருவர் முன்மொழிந்தால் போதும்.

அங்கீகரிக்கப்படாத அல்லது சுயேச்சை வேட்பாளராக இருந்தால் 10 பேர் அவரது வேட்பு மனுவை முன்மொழிய வேண்டும். தேர்தல் ஆணைய விதிப்படி, முன்மொழியும் நபர்கள் அந்த குறிப்பிட்ட சட்டமன்ற அல்லது நாடாளுமன்றத் தொகுதிக்குள் வசிக்கும் வாக்காளராக இருக்க வேண்டும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)