தமிழ்நாடு அரசின் 'உண்மை சரிபார்ப்புக் குழு' எவ்வாறு செயல்படும்? அதன் அதிகாரம் என்ன?

ஐயன் கார்த்திகேயன்

பட மூலாதாரம், Twitter/IyanKarthikeyan

    • எழுதியவர், பாலசுப்ரமணியம் காளிமுத்து
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்ட அமலாக்கத்துறையின் கீழ் உண்மை சரிபார்ப்புக் குழு ஒன்றை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. இந்தக் குழுவானது அனைத்து ஊடக தளங்களிலும் தமிழ்நாடு அரசு, அமைச்சகங்கள் மற்றும் துறைகள் தொடர்பாக வெளிவரக்கூடிய தவறான மற்றும் போலிச் செய்திகளை கண்டறியும் என இதுகுறித்து வெளியான அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உண்மை சரிபார்ப்புக் குழுவின் திட்ட இயக்குநராக 'YOUTURN' யூட்யூப் சேனலின் முன்னாள் ஆசிரியர் ஐயன் கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் ஐயன் கார்த்திகேயனின் அரசியல் சார்பு குறித்தும் இந்த உண்மை அறியும் குழுவின் அதிகாரங்கள் குறித்தும் நிறைய கேள்விகளும் சர்ச்சைகளும் தற்போது எழுந்துள்ளன.

யார் இந்த ஐயன் கார்த்திகேயன்?

2017 மார்ச் மாதம் தொடங்கப்பட்ட யூடர்ன் யூட்யூப் சேனல் பிரத்யேகமாக செய்திகளின் உண்மைத்தன்மையை கண்டறியும் நோக்கத்தோடு செயல்படுவதாக அந்த சேனலின் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த யூட்யூப் சேனலின் ஆசிரியராக இருந்த பிரபல யூட்யூபரான ஐயன் கார்த்திகேயன் யூடர்ன் யூட்யூப் சேனலின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக X சமூக வலைதளத்தில் ஐயன் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். மேலும், “என்னால் முடிந்த அளவில் புரளிக்கு எதிரான வேலையை செய்துள்ளேன். கடைசி வரை எந்த கட்சி / அரசியல்வாதியிடமும் ஒரு ரூபாய் கூட பெற்றதில்லை என்ற பெருமிதத்துடன் யூடர்னில் எனது பணியை நிறைவு செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், உண்மை கண்டறிவதற்கான Googleன் பாடத்திட்ட வடிவமைப்பு குழுவிலும் ஐயன் கார்த்திகேயன் இடம்பெற்றிருந்தார்.

உண்மை சரிபார்ப்புக் குழுவின் திட்ட இயக்குநராக தான் நியமிக்கப்பட்டுள்ளதாக ஐயன் கார்த்திகேயன் தனது X சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், “தமிழ்நாடு சிறப்புத் திட்ட அமலாக்கத்துறையின் கிழ் வரும் உண்மை சரிபார்ப்புக் குழுவின் திட்ட இயக்குநராக நான் நியமிக்கப்பட்டுள்ளேன். இந்த வாய்ப்பை வழங்கியதற்காக மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மாண்புமிகு சிறப்புத் திட்ட அமலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார். மேலும் வெறுப்புக்கு எதிராக சண்டையிடுவது அனைவருடைய வேலை" எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில்தான் ஐயன் கார்த்திகேயனின் நியமனம் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

ஐயன் கார்த்திகேயன்

பட மூலாதாரம், Twitter/IyanKarthikeyan

படக்குறிப்பு, ஐயன் கார்த்திகேயனின் நியமனம் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது

ஐயன் கார்த்திகேயன் நியமனம் விமர்சிக்கப்படுவது ஏன்?

திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள ஐயன் கார்த்திகேயன் திமுகவிற்கு ஆதரவானவர் என்றும் அவரை அரசே உண்மை சரிபார்ப்புக் குழுவிற்கு திட்ட இயக்குநராக நியமித்திருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் எதிர்க்கட்சியினரும் அரசியல் விமர்சகர்கள் சிலரும் விமர்சித்துள்ளனர்.

இது குறித்து அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன் பிபிசி தமிழிடம் பேசுகையில், “ஐயன் கார்த்திகேயன் திமுகவின் வெளிப்படையான ஆதரவாளர். எனவே, திமுகவிற்கு ஆதரவான ஒரு தனி நபரை உண்மை சரிபார்ப்புக் குழுவிற்கு திட்ட இயக்குநராக தமிழ்நாடு அரசு நியமித்திருப்பது கண்டிக்கத்தக்கது. முதலில், அரசே எப்படி அதன் மீதான செய்திகளை சரி பார்க்க முடியும்? எந்த சார்பும் இல்லாத ஒரு சுதந்திரமான அமைப்பு மட்டுமே செய்யக்கூடிய வேலையை தமிழ்நாடு அரசே செய்கிறது. இது எப்படி நியாயமான முறையில் நடக்கும்?” என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

“ஐயன் கார்த்திகேயன் திமுகவிற்கு அனுதாபி என்பதால் மட்டுமே நான் இதை கூறவில்லை. இதை எந்தக் கட்சி செய்தாலும் அது தவறுதான். கர்நாடகாவில் காங்கிரஸ் அரசும் இதே மாதிரியான வேலையில் ஈடுபட்டது.” என அவர் கூறினார்.

இந்த உண்மை அறியும் குழுவின் திட்ட இயக்குநர் பதவிக்கு வெளிப்படையாக விண்ணப்பங்கள் கோரப்பட்டதா அல்லது நேர்காணல் செய்யப்பட்டதா என்பது குறித்து தனக்கு தெரியவில்லை என்றும் சுமந்த் சி ராமன் கூறினார்.

ஐயன் கார்த்திகேயன்

பட மூலாதாரம், Twitter/SumanthCRaman

படக்குறிப்பு, “ஐயன் கார்த்திகேயன் திமுகவின் வெளிப்படையான ஆதரவாளர்”

அரசு சார்பில் இன்னும் வெளியிடப்படாத நியமன ஆணை

அரசாணையில், இந்த உண்மை சரிபார்ப்புக் குழுவின் திட்ட இயக்குநருக்கான கல்வித் தகுதியாக பொறியியல் துறையில் இளங்கலை அல்லது ஊடகத்துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் எனவும் உண்மயை சரிபார்ப்பதில் குறைந்தது 5 ஆண்டு அனுபவம் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐயன் கார்த்திகேயனுக்காவே இந்தத் தகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் தனது X வலைதளத்தில் குற்றச்சாட்டு வைத்திருந்தார். அதற்கு பதிலளித்துள்ள ஐயன் கார்த்திகேயன், தன்னிடம் முதுகலை பட்டம் இல்லை என்றும் பொறியியல் அல்லது ஊடகத்துறையில் பட்டம் இருக்கவேண்டும் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் தனக்கு 5 வருடங்களுக்கு மேலாக உண்மைக் கண்டறிவதில் அனுபவமும் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஐயன் கார்த்திகேயன் திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் அரசு சார்பில் வெளியிடப்படாத நிலையில் ஐயன் கார்த்திகேயனுக்கு திட்ட இயக்குநர் பணிக்காக மாதம் 3 லட்சம் ரூபாய் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில், இந்தக் குழு சிறப்புத்திட்ட அமலாக்கத்துறையின் கீழ் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சிறப்புத்திட்ட அமலாக்கத் துறையின் துணைச் செயலாளர் செல்வி பிபிசி தமிழுடன் பேசுகையில், “எங்களுக்கு இந்தக் குழு குறித்து முழு விவரம் தெரியாது. சம்பந்தப்பட்ட அரசாணை இன்னும் எங்கள் துறைக்கு வரவில்லை” எனத் தெரிவித்தார்.

ஐயன் கார்த்திகேயன்

பட மூலாதாரம், Twitter

படக்குறிப்பு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை வெளியிட்டுள்ள அரசாணை

தமிழ்நாடு அரசின் இந்த முன்னெடுப்பு விமர்சிக்கப்படுவது ஏன்?

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் இந்த உண்மை சரிபார்ப்புக் குழுவில் 80 பேர் இருப்பார்கள். இந்தக் குழுவின் Central Task Force சென்னையில் இருக்கும். அரசு, அமைச்சகங்கள் மற்றும் அதன் துறைகள் சார்ந்து ‘அனைத்து தளங்களிலும்’ வெளியாகக் கூடிய எந்தத் தகவல்களாக இருந்தாலும் அதன் உண்மைத்தன்மையை இந்தக் குழு சரிபார்க்கும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த உண்மை சரிபார்ப்புக் குழு தாமாக முன்வந்து தகவல்களை சரிபார்க்கும் எனவும் தகவல்கள் சார்ந்து பெறப்படும் புகார்களை விசாரிக்கும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, இந்தக் குழுவிற்கான வருடாந்திர செலவாக ரூ.1.41 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தக் குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை விமர்சித்து பேசிய சுமந்த் சி ராமன், “தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு ஊடகங்களிலிருந்தும் ஒரு பிரதிநிதியைக் கொண்டு ஒரு குழு அமைத்து அவர்கள் மூலம் உண்மை சரிபார்ப்புக் குழுவை அமைப்பதே நியாயமானதாக இருக்கும். மாறாக, தமிழ்நாடு அரசே இந்தக் குழுவை நியமிக்கும்போது திமுக உறுப்பினர்கள் பொய் செய்தி பரப்பினால் அவர்கள் மீது இந்தக் குழு நடவடிக்கை எடுக்குமா?” என அவர் கேள்வி எழுப்பினார்.

உத்தரப்பிரதேசம் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் கருத்து சுதந்திரம் நசுக்கப்படுவது போல தமிழ்நாட்டிலும் நடைபெறுகிறது. அதை இந்த அறிவிப்பு மேலும் உறுதிப் படுத்துகிறது. கருத்து சுதந்திர விவகாரத்தில் பாஜகவிற்கும் திமுகவிற்கும் வேறுபாடே இல்லை எனவும் சுமந்த் சி ராமன் தெரிவித்தார்.

ஐயன் கார்த்திகேயன்

பட மூலாதாரம், Facebook/MKStalin

படக்குறிப்பு, விமர்சிக்கப்படும் தமிழ்நாடு அரசின் முன்னெடுப்பு

“திமுகவிற்கு ஆதரவாக பேசுபவர்களுக்கு தொடர்ந்து பதவி”

உண்மை சரிபார்ப்புக் குழு குறித்து எழுந்த விமர்சனத்தை திமுக செய்தித் தொடர்பாளர் தமிழன் பிரசன்னா மறுத்திருக்கிறார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், “திராவிட சித்தாந்தத்திற்கு எதிராக தொடர்ச்சியாக பொய்யை மட்டுமே பரப்பி வரும் பாஜக போன்ற பொய்யர்கள்தான் பதற்றப்படுகிறார்கள். ஐயன் கார்த்திகேயன் என்றில்லை அந்த இடத்தில் யாரை நியமித்தாலும் பாஜகவினர் எதிர்ப்பார்கள்” எனத் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “இறந்து போன பாரதியார் 10 வருடம் கழித்து வந்து பேசினார், முத்துராமலிங்கத் தேவருக்கும் அண்ணாவிற்கும் சண்டை போன்ற பொய்கள் மற்றும் ஆளுநர் கூறும் பொய்கள் என்று இவை அனைத்தையும் அரசால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. மக்களிடம் அரசு உண்மையை கொண்டு சேர்க்க வேண்டும் என்று முயல்கிறோம். உண்மையை விட பொய் வலிமையானது. எனவே மக்களிடம் உண்மையை கொண்டு சேர்க்கும் கட்டமைப்பை திமுக அரசு உருவாக்கியுள்ளது” என அவர் தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வைகைச்செல்வன் கூறுகையில், “நடுநிலைவாதிகள் என்று கூறிக்கொண்டு யாரெல்லாம் திமுகவிற்கு ஆதரவாக பேசுகிறார்களோ அவர்கள் அனைவருக்கும் தொடர்ந்து பதவி வழங்கப்படுகிறது. மாநில அரசின் திட்டக்குழுவின் துணை தலைவர் ஜெயரஞ்சன், கவிஞர் மனுஷ்யபுத்திரன் உள்ளிட்டவர்கள் வரிசையில் தற்போது ஐயன் கார்த்திகேயனுக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவர் திமுகவிற்கு சார்பாக செயல்படுவார் என்பதால்தான் அவருக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளது”என அவர் தெரிவித்தார்.

ஐயன் கார்த்திகேயன்

பட மூலாதாரம், Twitter/Vaigaichelvan

படக்குறிப்பு, “திமுகவிற்கு ஆதரவாக பேசுபவர்களுக்கு தொடர்ந்து பதவி”

பா.ஜ.க. என்ன சொல்கிறது?

இது குறித்து தமிழ்நாடு பாஜகவின் மாநில துணைத்தலைவர் நாரயணன் திருப்பதி பிபிசி தமிழிடம் பேசினார். அவர் கூறுகையில், “தமிழ்நாடு அரசின் இந்த முன்னெடுப்பு முழுக்கமுழுக்க திமுக அரசுக்கு எதிரான விமர்சனங்களை அடக்கி ஒடுக்க கொண்டு வரப்பட்டுள்ள நடவடிக்கையாகத்தான் பாஜக கருதுகிறது. ஏனென்றால், இந்தக் குழுவில் அரசு அதிகாரிகளுக்கு இடம் வழங்காமல் திமுகவிற்கு சார்புடைய ஒருவரை திட்ட இயக்குநராக திமுக அரசு நியமித்துள்ளது. இது கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் நடவடிக்கை. இதனால் திமுகவை பாசிஸ திமுக என்று அழைக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

மேலும், “மத்திய அரசிடம் கூட இந்த மாதிரியான குழுக்கள் உள்ளன. ஆனால் அவற்றில் பாஜகவைச் சேர்ந்த யாரும் இல்லை. ஆனால், திமுக அரசு அதிகாரிகளை நியமிக்காமல் திமுகவிற்கு சாதகமான ஆட்களை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக நியமித்திருக்கிறது. திமுக சார்ந்த செய்திகளின் உண்மைத்தன்மையை கண்டறிய ஐயன் கார்த்திகேயன் மாதிரியான நபர்களை நியமித்துக் கொள்ளலாம். ஆனால் நீங்கள் அரசு சார்ந்த செய்திகளை சரி பார்க்கும்பொழுது அதை அரசு அதிகாரிகள்தான் செய்ய வேண்டும். எனவே இது வன்மையாக கண்டிக்கத்தக்கது” என நாராயணன் திருப்பதி தெரிவித்தார்

ஐயன் கார்த்திகேயன்

பட மூலாதாரம், FACEBOOK/NARAYANAN THIRUPATHY

நீதிமன்றத்தால் விமர்சிக்கப்பட்ட மத்திய அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு

கடந்த ஏப்ரல் 7ம் தேதி மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சசகம் தகவல் தொழில்நுட்ப விதிகளில் சில திருத்தங்களை கொண்டுவந்தது. இதன்மூலம் சமூக மற்றும் செய்தி ஊடகங்களில் வெளியாகும் செய்திகளின் உண்மைத்தன்மையை சரி பார்க்க ஒரு குழுவை அரசு அமைக்க அனுமதி வழங்கப்பட்டது.

தகவல் தொழில்நுட்ப விதிகளில் மத்திய அரசு கொண்டு வந்த திருத்தத்தை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் ஜிஎஸ் பட்டேல் மற்றும் நீலா கோக்கலே ஆகியோர் கொண்ட அமர்வு அரசு கொண்டு வந்த திருத்ததில் குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் குறித்து கேள்வியெழுப்பியுள்ளது.

அவர்கள் கூறுகையில், “இந்த உண்மை சரிபார்ப்புக் குழு எதன் அடிப்படையில் ஒரு செய்தி உண்மையா பொய்யா என்று கண்டுபிடிக்கும். சில நேரங்களில் நீதிமன்றங்களால் கூட எது உண்மை எது பொய் என்று கூறமுடியாத நிலை உள்ளது. உதாரணத்திற்கு, நாட்டின் பொருளாதாரம் குறித்து அரசு ஒரு தகவலை சொல்கிறது. பொருளாதார வல்லுனர்கள் அதை மறுக்கலாம். இப்போது எதை நீங்கள் உண்மை அல்லது பொய் என்று கூறுவீர்கள்?” என நீதிபதிகள் கேட்டனர்.

மேலும், மத்திய அரசிற்கு Press Information Bureau இருக்கும்பொழுது தனியாக ஒரு உண்மைக் கண்டறியும் குழு எதற்கு என்றும் நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். இந்த வழக்கு மீதான தீர்ப்பை வரும் டிசம்பர் 1ம் தேதி நீதிபதிகள் வழங்கவுள்ளனர். அது வரை மத்திய அரசால் உண்மைக் கண்டறியும் குழுவை அமைக்க முடியாது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)