வரலாறு: பெண்கள் நீண்ட காலம் அரசாண்ட போபால் சமஸ்தானம்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சுரேஹ் நியாசி
- பதவி, பிபிசி இந்தி சேவைக்காக
உலகெங்கிலும் பெண்களின் வளர்ந்து வரும் சக்தி மற்றும் சமூகத்திற்கு அவர்களின் பங்களிப்பைப் பறைசாற்றுகிறது சர்வ தேச மகளிர் தினம்.
போபால் சமஸ்தானத்தின் வரலாற்றைச் சற்றே நோக்கினால், இங்குள்ள பெண் ஆட்சியாளர்கள் ஆண்களால் செய்ய முடியாத அனைத்தையும் சாதித்தார்கள்.
போபால் சமஸ்தானத்தின் அஸ்திவாரம் சர்தார் தோஸ்த் முகமது கான் என்பவரால் ஃபதேகர் கோட்டையில் போடப்பட்டது. ஆனால் இந்த இடத்தின் பேகம் நவாப்களால் அதற்கு முறையான அங்கீகாரம் வழங்கப்பட்டது.
சுமார் 107 ஆண்டுகள் நீடித்த குத்சியா பேகம் காலம் தொட்டு இந்த ஆட்சி தொடங்குகிறது. அதிகாரம் 1819 முதல் 1926 வரை பேகத்தின் கைகளில் இருந்தது.
குத்சியா பேகம் தான் முதல் பெண் நவாப் ஆவார். அவர் கௌஹர் பேகம் என்றும் அழைக்கப்படுகிறார். 1819 இல் அவரது கணவர் படுகொலை செய்யப்பட்ட பிறகு, அவர் 18 வயதில் நவாப் ஆனார்.

பட மூலாதாரம், Sureh Niasi
அவர் படிப்பறிவில்லாதவளாக இருந்தாலும் வரலாற்றாசிரியர்கள் அவரை தன் காலத்தைத் தாண்டிய ஒரு பெண் என்றே புகழ்கிறார்கள். அவர் தன் படையுடன் பல போர்களையும் சந்தித்துள்ளாள்.
அவர் கட்டிய கௌஹர் மஹால் இன்றும் பெரிய குளத்தின் கரையில் உள்ளது. அவர் போபாலின் ஜமா மசூதியையும் கட்டினாள்.
சைஃபியா கல்லூரியின் வரலாற்றாசிரியரும் பேராசிரியருமான அசார் கித்வாய் விளக்குகிறார், "இன்றும் மக்கள் பெண்களைத் தங்களை விட உயர்வான இடத்தில் பார்க்க விரும்பவில்லை. ஆனால் பெண்கள் ஆட்சி செய்து முழு மாநிலத்தையும் எல்லா வகையிலும் முன்னெடுத்துச் சென்ற ஒரு மாகாணமாக போபால் இருந்தது."
மேலும், "இந்தப் பெண்கள் ஆட்சி செய்தது மட்டுமின்றி, இந்துக்களையும், முஸ்லிம்களையும் ஒன்றாகப் பயணிக்கச் செய்தனர். இவர்களின் ஆட்சிக் காலத்தில், இந்துக்களும், முஸ்லிம்களும் அமைச்சர்களாக பதவி வகித்தனர்."

பட மூலாதாரம், Sureh Niyazi
இரண்டாவதாக ஆண்ட சிக்கந்தர் ஜஹான் பேகத்திற்கும் சவால்கள் குறையவில்லை என்கிறார் அசார் கித்வாய். அப்போது அவருக்கு உதவியாக அவரது தாய் மாமா ஃபவுஜ்தார் முகமது கானும் அமைச்சராக்கப்பட்டார். ஆனால் இதன் காரணமாக நிர்வாகத்தை நடத்துவதில் அவர் தொடர்ந்து சிரமங்களை எதிர்கொண்டார். கடைசியில் ஃபவுஜ்தார் முகமது கான் பதவி விலக வேண்டியதாயிற்று.
சிக்கந்தர் ஜஹான் பேகத்தின் சிறப்பு என்னவென்றால், அவர் குதிரையில் அமர்ந்து முழு சமஸ்தானத்தையும் சுற்றிப்பார்வையிடுவது வழக்கம்.
டெல்லி ஜமா மசூதியை ஆங்கிலேயர்களிடம் இருந்து முஸ்லிம்களிடம் திரும்பப் பெற்றுத் தருவதில் பெரும் பங்கு வகித்தார் அவர். 1857 ஆம் ஆண்டு கிளர்ச்சிக்குப் பிறகு ஜமா மஸ்ஜித் மூடப்பட்டது. முஸ்லிம்கள் மசூதியில் கூடித் தங்களுக்கு எதிராகச் சதி செய்யலாம் என்று ஆங்கிலேயர்கள் கருதினர்.
கித்வாய் விளக்குகிறார், "சிகந்தர் ஜஹான் பேகம் தனது சமஸ்தானத்தில் உள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று அனைத்தையும் வரைபடமாக்கினார். இந்த வரைபடம் கையால் செய்யப்பட்டது, அதில் எல்லாம் எழுதப்பட்டது. சமஸ்தானத்தில் மலைகள், நீர் ஆதாரங்கள் எங்கே இருக்கின்றன என்பது தெளிவாக வரையப்பட்டது.

பட மூலாதாரம், Sureh Niazi
அந்த காலகட்டத்தில் முதல் முறையாக ஒரு நவாப் இந்த வேலையைச் செய்தார் என்று அவர் கூறுகிறார்.
சிக்கந்தர் ஜஹான், கல்விக்காகவும் நிறையப் பணிகளைச் செய்தார், மேலும் கல்வியை மேம்படுத்த வெளியில் இருந்து அறிஞர்களையும் அழைத்தார்.
மற்றொரு வரலாற்றாசிரியர் டாக்டர் ஷம்புதயாள் குரு, 'சிகந்தர் ஜஹான் பேகம் நிர்வாகத்தைச் சிறப்பாக நடத்தினார், மேலும் அவரது திறமையின் காரணமாக, போபால் சமஸ்தானத்தின் 30 லட்சம் கடனை எளிதாகத் திருப்பிச் செலுத்தினார்,’ என்று பதிவிடுகிறார்.
அப்போது ஒப்பந்த முறையில் வசூலிக்கப்பட்ட வருவாய் வசூலை சிக்கந்தர் ஜஹான் பேகம் ஒழித்துவிட்டார்” என்கிறார் அவர்.

பட மூலாதாரம், Sureh Niazi
பெண் நவாப்களின் வரிசையில் மூன்றாவதாக ஷாஜகான் பேகத்தின் பெயர் வருகிறது. ஷாஜஹான் பேகமும் இரண்டு நவாப்களின் பணியை முன்னெடுத்துச் சென்றார், ஆனால் அவர் கட்டடங்கள் கட்டுவதில் மிகவும் ஆர்வம் காட்டினார்.
ஆக்ராவைப் போலவே போபாலில் ஷாஜஹான் பேகத்தால் கட்டப்பட்ட தாஜ்மஹால் என்ற கட்டடமும் உள்ளது என்பது சிலருக்குத் தெரிந்திருக்கும். இதனுடன், தாஜுல் மஸ்ஜித் கட்டும் பணியையும் அவர் தொடங்கினார், ஆனால் அதை முடிக்க முடியவில்லை.
தாஜுல் மஸ்ஜித் நாட்டின் மிகப்பெரிய மசூதிகளில் ஒன்றாகும். அவரது மரணத்திற்குப் பிறகுதான் அது முடிந்தது.
அதே நேரத்தில், ஷாஜஹானி மசூதி என்று அழைக்கப்படும் இங்கிலாந்தின் முதல் மசூதியையும் அவர் கட்டினார். ஷாஜஹான் பேகம் ஒரு திறமையான நிர்வாகி என்பதைத் தவிர, ஒரு நல்ல எழுத்தாளராகவும் இருந்தார். உருது மொழியில் பல நூல்களை அவர் எழுதியுள்ளார்.

பட மூலாதாரம், Sureh Niyazi
ஹிந்துக்களின் பாதுகாப்பிற்காகவும் பல சட்டங்களை இயற்றியதாகப் பல வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். இந்துக்களின் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக இந்து சொத்து அறக்கட்டளை ஒன்றையும் நிறுவினார்.
அவர் முஸ்லிம் பெண்களின் கல்விக்காக பள்ளிக்கூடம் தொடங்கினார், ஆனால் குர்ஆன் மற்றும் தீன் ஆகியவை அங்கு கற்பிக்கப்பட்டன. இந்து பெண்கள் அங்கு படிக்க முடியாததால், இந்து பெண்களுக்காக ஒரு பெண்கள் பள்ளியைத் தொடங்கினார்.
போபாலின் கடைசி பெண் நவாப் சுல்தான் ஜஹான் பேகம் ஆவார். 1901இல் அரியணையை கைப்பற்றியவர். சுல்தான் ஜஹான் பேகமும் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்.
போபாலை நவீனமயமாக்கிய பேகம்
கல்வி பற்றிப் பேசும்போதெல்லாம் குர்ஆனிலும் ஹதீஸிலும் பெண்கல்விக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது என்பது பற்றியே அவர் கூறியதாக கித்வாய் கூறுகிறார்.
அந்தக் கால கட்டத்தில், தனது சமஸ்தானத்தில் நவீன விஷயங்களைக் கொண்டுவர வலியுறுத்திய பெண்ணாக கித்வாய் இவரைக் கருதுகிறார்.
அவர் காஸ்ர்-இ-சுல்தானி அரண்மனையைக் கட்டினார், இது இப்போது போபாலில் அகமதாபாத் அரண்மனை என்று அழைக்கப்படுகிறது. இதனுடன், அவர் மிண்டோ ஹால் என்ற ஒன்றையும் கட்டினார். பின்னர் அது நீண்ட காலமாக மத்தியப் பிரதேச சட்டமன்றமாகப் பயன்படுத்தப்பட்டது.
அதுமட்டுமல்லாமல், சுல்தானியா பெண்கள் பள்ளியையும் அப்போது கட்டியெழுப்பினார், அது இன்னும் இயங்கி வருகிறது. அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் முதல் வேந்தராகவும், அகில இந்திய கல்வி மாநாட்டின் முதல் தலைவராகவும் அவர் இருந்தார்.
போபாலின் நவாபி காலத்துக் கட்டடக்கலை குறித்துப் பல ஆய்வுகளை மேற்கொண்ட ஸ்கூல் ஆஃப் பிளானிங் அண்ட் ஆர்கிடெக்சர் பேராசிரியர் சவிதா ராஜே கூறுகையில், போபாலில் இந்த பேகம்கள் கட்டிய அரண்மனைகள் மற்றும் பிற பொருட்களை காப்பாற்ற வேண்டிய அவசியம் உள்ளது என்கிறார்.

பட மூலாதாரம், Sureh Niyazi
"நாட்டில் உள்ள மற்ற அரண்மனைகளில் பெண்கள் மற்றும் ஆண்களின் தனித்தனி பகுதிகளைக் காணலாம். ஆனால் இங்கே, போபால் நகரத்தில் பெண்களே ஆண்கள் போல வேலை செய்கிறார்கள்” என்கிறார்.
இங்குள்ள அரண்மனைகளின் இந்த சிறப்பே அதை வேறுபடுத்திக் காட்டுகிறது என்று ராஜே கூறுகிறார்.
ஒவ்வொரு ஆண்டும் யாத்-இ-பேகமாத் நிகழ்ச்சியை நடத்தும் பர்கத்துல்லா இளைஞர் மன்றத்தின் போபால் ஒருங்கிணைப்பாளர் அனஸ் அலி கூறுகையில், “இந்தப் பெண் நவாப்கள் நகரத்திற்கு வித்தியாசமான அடையாளத்தைக் கொடுத்தனர். கடைசிப் பெண் நவாப் சுல்தான் ஜஹான் பேகம் போபாலில் கிங் ஜார்ஜ் மருத்துவமனையைக் கட்டினார், இது இப்போது ஹமிதியா மருத்துவமனை என்று அழைக்கப்படும் இது, நகரத்தின் மிக முக்கியமான மருத்துவமனையாகும்.”என்றார்.
மேலும், “இந்தப் பெண்கள் கட்டடங்கள் கட்டினார்கள், அமைதியை நிலைநாட்டினார்கள், தொழிற்சாலைகள் அமைத்தார்கள், பெண் குழந்தைகளின் கல்விக்காகப் பள்ளிகளைத் திறந்தார்கள். இப்படிப்பட்ட புகழ்பெற்ற வரலாற்றை நினைவுகூருவதும், அதைத் திரும்பத் திரும்பச் சொல்வதும் நமது கடமை" என்கிறார் அனஸ் அலி.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












