மூன்று ஆண்டுகளாக கழுத்து மூலம் சுவாசிக்கும் கோவை பெண் - மருத்துவ அலட்சியம் காரணமா?

- எழுதியவர், மோகன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
கோவை மாநகர் சௌரிபாளையத்தைச் சேர்ந்த செபியா என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளாக மூக்கின் வழியாக இல்லாமல், கழுத்தின் வழியாகத் தான் சுவாசித்து வருகிறார். அறுவை சிகிச்சையின்போது ஏற்பட்ட மருத்துவ அலட்சியமே இதற்கு காரணம் என்றும் தனக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோவை மாவட்ட ஆட்சியரிடம் அவர் மனு அளித்துள்ளார்.
சமீபத்தில் சென்னையைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை ப்ரியா அரசு மருத்துவமனையில் உயிரிழந்ததற்கு சிகிச்சையில் காட்டப்பட்ட அலட்சியமே காரணம் என குற்றச்சாட்டு எழுந்து சர்ச்சையானது. இது தொடர்பாக தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்தப் பின்னணியில், தற்போது செபியா எழுப்பும் குற்றச்சாட்டு முக்கியத்துவம் பெறுகிறது.
நடந்தது என்ன?
கோவை மாநகர் சௌரிபாளையம் அண்ணா நகரைச் சேர்ந்தவர் செபியா. இவருடைய கணவர் நாகராஜ். செபியாவுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. செபியா, நாகராஜ் இருவரும் கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பராமரிப்பு வேலை செய்து வந்தனர்.
இந்த நிலையில் 2019ம் ஆண்டு செபியாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் தற்காலிகமாக பணியிலிருந்து விலகினார். நாகராஜின் வருமானத்தை வைத்துதான் அவர்களின் குடும்பம் இயங்கி வந்தது.
தனது உடல் நலப் பிரச்னைக்காக, செபியா பரிசோதனை செய்தபோது அவருக்கு தைராய்டு கட்டி இருப்பது தெரியவந்தது. கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் கடந்த 10.12.2019 அன்று செபியாவுக்கு தைராய்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அதன் பின்னர் நடந்த நிகழ்வுகளை செபியா பிபிசி தமிழிடம் விவரித்தார். “அன்றைய தினம் இரவு எனக்கு கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டது. மருத்துவமனை சென்றபோது சுவாசிப்பதற்காக கழுத்தில் ஒரு குழாய் வைத்தார்கள்.
ஆனாலும் பிரச்னை சரியாகாத நிலையில், அறுவை சிகிச்சையின்போது மூச்சுக் குழாயில் உள்ள நரம்பு லேசாக கட்டாகிவிட்டது, ஓரிரு மாதங்களில் சரியாகிவிடும் எனக் கூறினார்கள். அதன் பின்னர் மூன்று மாதம் கழித்து கழுத்தில் வைத்திருந்த குழாயை அகற்றிவிட்டு மூடிவிட்டார்கள். ஆனால் அதன் பிறகும் மூச்சு விடுவதில் சிரமம் இருந்தது.

அப்போது மீண்டும் ஈ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு சென்றபோது கொரோனா சிறப்பு மருத்துவமனையாக செயல்படுவதால் அங்கிருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கு மீண்டும் மூச்சு விடுவதற்காக குழாய் வைக்கப்பட்டது.
ஈ.எஸ்.ஐ மருத்துவர்களிடம் விசாரித்தால் லட்சத்தில் ஒருவருக்கு இவ்வாறு நடக்கும். இதை தவிர்க்க முடியாது. தற்போது எதுவும் செய்ய முடியாது என்கிறார்கள். நான் மூக்கு வழியாக சுவாசித்து மூன்று ஆண்டுகளாகிவிட்டது.
தைராய்டு அறுவை சிகிச்சையும் நிறைவாக இல்லை. தற்போது மீண்டும் கட்டி உள்ளது. அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். தற்போது அறுவை சிகிச்சை செய்தால் சுவாசப் பிரச்னையை சரி செய்துவிடலாம். ஆனால் பேச்சு தொடர்ந்து வருமா எனத் தெரியாது என்கிறார்கள்.
மூன்று ஆண்டுகளாக இந்த பிரச்னையால் போராடி வருகிறேன். கழுத்தில் உள்ள குழாயை அடைத்தால் என்னால் பேச முடியும். இயல்பாக பேச, வேலை செய்ய, உணவு கூட சரியாக உண்ண முடியாத நிலையில் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதற்கு எந்த நிவாரணம், தீர்வு எனத் தெரியாமல் தவித்து வருகிறோம். வாடகை வீட்டில் குடியிருக்கும் நாங்கள் என் கணவரின் சம்பளத்தை நம்பி மட்டுமே வாழ்ந்து வருகிறோம்” என்றார்.
செபியாவால் அதிக நேரம் பேச முடிவதில்லை. சிறிது நேரம் பேச வேண்டுமென்றாலும் கழுத்தில் பதிக்கப்பட்டுள்ள குழாயை அடைத்துவிட்டு தான் பேச வேண்டிய நிலையில் உள்ளார்.
கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி தன்னுடைய கோரிக்கைகளை கோவை மாவட்ட ஆட்சியரிடம் செபியா மனுவாக அளித்துள்ளார்.
மருத்துவமனையில் சரியான பதில் தரவில்லை என்கிறார் செபியாவின் கணவர் நாகராஜ்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “மருத்துவமனையில் சரியான பதில் இல்லையென்பதால் காவல் ஆணையரிடம் புகார் அளித்தோம். அவர் பீளமேடு காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தார். காவல்துறையினர் இந்த வழக்கை தாங்கள் விசாரிக்க முடியாது என மருத்துவ துறை அதிகாரிகளிடம் அனுப்பி வைத்தார்கள். அவர்களிடம் புகார் அளித்தால் ஈ.எஸ்.ஐ மருத்துவமனையை நாங்கள் விசாரிக்க முடியாது எனக் கூறினார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் இறுதியாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம்.
மனு மீது விசாரணை நடத்திவிட்டு கூறுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். தற்போதுவரை எந்த பதிலும் இல்லை. என்னுடைய 9,000 சம்பளத்தில் தான் செபியாவின் மருத்துவ செலவு, வீட்டு வாடகை, குழந்தைகளின் படிப்பு என அனைத்து செலவுகளையும் பார்க்க வேண்டியுள்ளது. செபியாவின் உளைச்சலுக்கு ஒரு தீர்வு கிடைத்தாக வேண்டும்” என்றார்.
காவல்துறை விசாரிக்க முடியாதா?
மருத்துவர்கள் அலட்சியம், தவறான சிகிச்சை போன்ற விஷயங்களை காவல்துறை விசாரிக்க முடியுமா என ஓய்வு பெற்ற காவல்துறை கண்காணிப்பாளர் கருணாநிதியிடம் கேள்வி எழுப்பினோம். பிபிசி தமிழிடம் பேசிய அவர், “தவறான சிகிச்சை அல்லது மருத்துவர்கள் அலட்சியத்தால் உயிரிழப்பு ஏற்பட்டால்தான் கிரிமினல் வழக்கு ஆகி காவல்துறை விசாரிக்க முடியும். அப்படி நடக்கவில்லையென்றால் மருத்துவத் துறையில் புகார் அளிக்க முடியும். அதன் பின்னர் துறை ரீதியான விசாரணை நடத்தப்படும். பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட உளைச்சலுக்கு நிவாரணம் கேட்டு தனியாக வழக்கு தொடரலாம்” என்றார்.
மருத்துவ சிக்கல்களை அலட்சியம் என சொல்ல முடியுமா?

சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த ஜி.ஆர்.ரவீந்திரநாத்திடம் இந்தப் பிரச்னை பற்றிப் பேசியபோது, “தைராய்டு அறுவை சிகிச்சையின்போது இது போன்ற சிக்கல்கள் எழும். பாதிக்கப்பட்டவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான தகவல்கள் இருந்தால்தான் முழுமையாக ஆராய முடியும்.
ஆனால் தைராய்டு அறுவை சிகிச்சையில் சிக்கல்கள் எழுவது உண்டுதான். அரிதான சம்பவங்களில் இது போன்ற சிக்கல்கள் எழும். அதற்கான சிக்கல்களை மருத்துவ அலட்சியம் என பொதுப்படையாக கூறிவிட முடியாது. மருத்துவத் துறையில் முறையிடும்போது குழு அமைத்து கொடுக்கப்பட்ட சிகிச்சையில் ஏதாவது அலட்சியம் நிகழ்ந்துள்ளதா என முடிவெடுக்கலாம்” என்றார்.
அரிதினும் அரிதான நிகழ்வு
கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனையின் டீன் ரவீந்திரன் பிபிசி தமிழிடம் பேசுகையில், “பாதிக்கப்பட்ட நோயாளிக்கு ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் தான் தைராய்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சையின்போது அரிதாக சிக்கல்கள் எழும். அதனால்தான் உயிர்காக்க ட்ரக்கியோஸ்டமி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு பின்னர் அடைக்கப்பட்டது. அதன் பின்னரும் அவருக்கு பாதிப்பு இருந்ததால் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மீண்டும் ட்ரக்கியோஸ்டமி மேற்கொள்ளப்பட்டது.
ட்ரக்கியோஸ்டமி சிகிச்சை செய்யப்படும் பலருக்கு பேச்சு வராது. உயிர் காப்பதற்காக மேற்கொள்ளப்படும் சிகிச்சை அது. அரிதான இது போன்ற சிக்கல்கள் வருவது இயல்புதான். அதை மருத்துவ அலட்சியம் எனக் கூறக்கூடாது. பாதிக்கப்பட்டவருக்கு மீண்டும் ட்ரக்கியோஸ்டமி செய்யப்பட்ட துளையை அடைப்பதற்கு ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் நேரம் கொடுக்கப்பட இருக்கிறது” என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













