தமிழ்நாட்டில் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தற்காலிக தடை விதிப்பதால் தற்கொலைகள் தடுக்கப்படுமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டில் தற்கொலை மரணங்கள் அதிகரித்துள்ளதால், கடைகளில் எளிதில் கிடைக்கும் ஆறு வகை பூச்சிக்கொல்லி மருந்துகளை மாநில அரசு தற்காலிகமாக தடை செய்துள்ளது.
அந்த ஆறு பூச்சிக்கொல்லி மருந்துகளை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என்றும் இந்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
சாணி பவுடரை தடை செய்வதற்கான முயற்சியிலும் தமிழக அரசு தீர்க்கமாக இருப்பதாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளை தடை செய்வதால் தற்கொலை சம்பவங்களை குறைக்கமுடியுமா? பூச்சிக்கொல்லி மருந்தை மக்கள் தேர்வு செய்வது ஏன்? தற்கொலை செய்து கொள்வதற்கான காரணங்கள் என்ன என்று ஆராய்கிறது இந்த கட்டுரை.
பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை வந்தது எப்படி?
கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்தில் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
2021இல் 18,925 பேர் தமிழ்நாட்டில் தற்கொலை செய்து இறந்துள்ளனர். இதுவே 2020இல் 16,883ஆக இருந்தது. தனி நபர்கள் தற்கொலை செய்து கொள்வது மட்டுமல்லாமல், குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக தற்கொலை செய்து கொள்வதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது.
இதில் பலருக்கு பூச்சிக்கொல்லி மருந்து அருந்தி உயிரை மாய்த்துக் கொள்வது எளிதான வாய்ப்பாக அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.
கடன் பிரச்னையில் உள்ளவர்கள், குடும்ப தகராறில் சந்திக்கும் பிரச்னை, மது அல்லது போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் மற்றும் அவர்களால் பாதிக்கப்பட்டவர்கள், இழப்பை சந்திக்கும் விவசாயிகள் போன்றோர் தற்கொலைக்கு ஆளாகிறார்கள்.
இந்திய அளவில், குடும்ப உறுப்பினர்கள் கூட்டாக தற்கொலை செய்துகொள்வதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. 2021இல் இந்தியாவில் குடும்ப உறுப்பினர்கள் தற்கொலை தொடர்பான 131 தற்கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதில் 33 சம்பவங்கள் தமிழகத்தில் பதிவாகியுள்ளன. இந்த எண்ணிக்கை 2020ல் இந்திய அளவில் 122ஆகவும் தமிழகத்தில் 22ஆகவும் இருந்தது.
இதுபோன்ற தனிநபர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக இறக்கும் தற்கொலை சம்பவங்களில், பூச்சிக்கொல்லி மருந்தை பயன்படுத்தி ஏற்படும் தற்கொலை சம்பவங்களை கவனித்த தமிழக அரசு அத்தகைய தற்கொலைக்கு காரணமானதாக கருதப்படும் 6 முக்கிய பூச்சிக்கொல்லி மருந்துகளை தற்காலிகமாக தடை செய்துள்ளது.
தடை செய்யப்பட்டுள்ள பூச்சிகொல்லி மருந்துகள் எவை?

மோனோ குரோட்டோபாஸ், புரோபெனோபாஸ், அசிபேட், புரோபெனோபாஸ் சைபர்மெத்ரின், குளோர்பைரிபாஸ் சைபர்மெத்ரின், குளோர்பைரிபாஸ் ஆகிய ஆறு பூச்சிக்கொல்லி மருந்துகள் மிகவும் அபாயகரமானவை என்றும் இவற்றை பயன்படுத்துவது தமிழகத்தில் 60 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது என வேளாண் துறை அரசாணை பிறப்பித்துள்ளது. அதோடு, ரேட்டால் எனப்படும் எலிகளை கொல்லும் மருந்தையும் தடை செய்துள்ளது.
தற்காலிக தடை ஏன்?

பட மூலாதாரம், Getty Images
தற்காலிக தடை எந்த விதத்தில் பயன்தரும் என்றும் தடைசெய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளின் வீரியம் குறித்தும் தமிழக வேளாண் உற்பத்தித்துறை செயலாளர் சமயமூர்த்தியிடம் பிபிசி தமிழ் கேட்டது.
''தமிழகத்தில் பயன்பாட்டில் உள்ள ஆறு பூச்சிக்கொல்லி மருந்துகள் தற்கொலை சம்பவங்களில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன என்று ஆய்வில் தெரியவந்தது.
நிபுணர் குழுவினர் அளித்த தகவலை பார்த்ததும், அந்த ஆறு பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கும் மாற்று இருப்பதை உறுதிசெய்துவிட்டு, சோதனை காலமாக 60 நாட்களுக்கு அவற்றை விற்பது, வாங்குவது, பயன்படுத்துவது, பதுக்கிவைப்பது உள்ளிட்டவற்றை தடை செய்திருக்கிறோம்.
இந்த இரண்டு மாதங்களில் தற்கொலை எண்ணிக்கையில் உள்ள மாற்றங்களை கொண்டு இந்த தடையை மீண்டும் நீடிப்பது பற்றி முடிவு செய்யப்படும். நிரந்தர தடை என்பது மத்திய அரசு மூலமாக செய்யவேண்டிய நடைமுறை என்பதால், அதற்காகவும் மத்திய அரசிடம் வலியுறுத்தியிருக்கிறோம்,'' என்கிறார் சமயமூர்த்தி.
விவசாயிகள் தற்கொலைகள் குறித்து கேட்டபோது, ''இந்தியாவில், மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்கள், விவசாயிகள் அதிகம் தற்கொலை செய்துகொள்ளும் மாநிலங்களாக அறியப்படுகிறது. பிற மாநிலங்களை ஒப்பிடும்போது, தமிழகத்தில் விவசாயிகளின் தற்கொலை அதிகரிக்கவில்லை. இருந்தபோதும் பூச்சிக்கொல்லி மருந்துகள் எளிதில் கிடைக்கும் வாய்ப்பிருப்பதால், அதனை விவசாயிகள் மட்டும்மல்ல, தற்கொலை எண்ணத்தில் உள்ளவர்கள், உடனே பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிந்துகொண்டோம். அதனால், இந்த மருந்துகளை தடைசெய்வதால் தற்கொலைகளை தவிர்க்கும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் தடை கொண்டுவந்துள்ளோம்,''என்கிறார் அவர்.
குறிப்பாக ஆறு பூச்சிக்கொல்லி மருந்துகளை தடை செய்தது ஏன் என்று கேட்டபோது, ''தற்கொலை செய்துகொள்பவர்கள் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்துகள் பல உள்ளன. ஆனால் இந்த ஆறு மருந்துகள் அபாயகரமானவை. அதாவது இவற்றை உட்கொண்டால், அந்த நபரை முதலுதவி அல்லது பிற சிகிச்சைகள் மூலமாக காப்பாற்றுவது மிகவும் சிரமம், உயிரிழக்கும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் தடை செய்துள்ளோம்,'' என்கிறார் சமயமூர்த்தி.
இந்த நடவடிக்கையால் தற்கொலைகள் குறையுமா ?

பட மூலாதாரம், Getty Images
பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை கொண்டுவருவதற்கான நிபுணர் குழுவில் இடம்பெற்றிருந்த அதிகாரி ஒருவர் பேசுகையில், ''தமிழகத்தில் சாலை விபத்துகளில் இறப்பவர்களை விட, தற்கொலையால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இது மிகவும் கவலை தரும் விஷயம். தற்கொலையை கட்டாயம் தடுக்கமுடியும் என்பதால், தற்கொலை செய்துகொள்பவர்கள் தேர்வு செய்யும் முறைகள் என்ன, தற்கொலை செய்துகொள்ளவதற்கான வாய்ப்புகளை எப்படி குறைப்பது என பல கட்ட ஆலோசனைகள் நடைபெற்றன. அதன் அடிப்படையில்தான் இந்த தடையை அரசு கொண்டு வந்துள்ளது. இதன் முடிவுகள் அடுத்த இரண்டு மாதங்களில் தெரியும், பின்னர் இந்த தடையை நீடிக்கவும் முடியும்,''என்கிறார் அவர்.
மேலும், ''தமிழகத்தில் நடக்கும் தற்கொலை மரணங்களை பொறுத்தவரை, தூக்கிட்டு இறப்பது, தீவைத்துக்கொண்டு இறப்பது, மாடியில் இருந்து குதிப்பது, ரயில் முன் பாய்வது, மருந்து குடிப்பது உள்ளிட்ட பல விதங்களில் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அதில் பூச்சிக்கொல்லி, எலிமருந்து விஷம் குடிப்பவர்கள் எண்ணிக்கையை குறைப்பது இந்த தடை மூலம் சாத்தியம். ஒரு நபர் தற்கொலை செய்துகொள்வது என்பது பெரும்பாலும் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் எடுக்கும் முடிவாகதான் இருக்கும். அதனை தடுப்பதற்கு இந்த தடை உதவும்,''என்கிறார் அவர்.
எந்தெந்த நாடுகளில் தடை உள்ளது?

உலக சுகாதார அமைப்பின், தற்கொலை தொடர்பான ஆராய்ச்சி மற்றும் தடுப்புக்கான சர்வதேச வலையமைப்பு உறுப்பினராக இருப்பவர் மருத்துவர் லட்சுமி விஜயகுமார்.
தற்கொலை தடுப்பு இலவச உதவி எண்சேவையை நடத்திவரும் இவர், தற்கொலை தடுப்பு தொடர்பாக தமிழகத்தில் தொடர் ஆய்வுகளை நடத்தி வருகிறார்.
பூச்சிக்கொல்லி மருந்துகளை தடை செய்வது பலன் தருமா என்று கேட்டபோது, ''இந்த தடை பலன் தரும். கொரியா, இலங்கை போன்ற நாடுகளில் பூச்சிக்கொல்லி மருந்துகளை தடை செய்தபின்னர், தற்கொலை எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது என பதிவு செய்திருக்கிறார்கள்.
தற்கொலை எண்ணத்தில் இருக்கும் 80 சதவீதம் பேர் தற்கொலை செய்துகொள்ளலாமா, வேண்டாமா என்ற இரண்டு யோசனையில் இருப்பார்கள். வாய்ப்பு கிடைப்பவர்கள் உடனே தற்கொலை செய்துகொள்வார்கள்.
அதற்கு இது போன்ற பூச்சிக்கொல்லி மருந்துகள் எளிதில் கிடைப்பதும் ஒரு வாய்ப்பாக இருக்கும். அந்த மருந்துகள் இல்லையெனில், அவர்கள் தற்கொலை செய்துகொளவதற்கான ஒரு வாய்ப்பு குறைவு என்பதை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்,''என்கிறார்.
2010 முதல் 2019வரை காட்டுமன்னார்கோயில் பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றை பற்றி பேசிய அவர், ''வங்கி லாக்கர் வசதி போன்ற பூச்சிக்கொல்லி மருந்துகளை வைக்கும் லாக்கர் வசதி ஒன்றை காட்டுமன்னார் கோயிலில் நிறுவினோம்.
பூச்சிக்கொல்லி மருந்துகள் வீட்டில் இருந்தால், தற்கொலை எண்ணத்தில் இருப்பவர்கள் உடனடியாக பயன்படுத்துவார்கள். அந்த மருந்துகள் ஒரு பொது இடத்தில், லாக்கரில் இருப்பதால், பூச்சிக்கொல்லி மருந்துக்கான அணுகல் குறைந்தது. பல விவசாயிகள் எங்களிடம் இந்த லாக்கர் இருந்ததால், தற்கொலை முடிவுக்கு போகவில்லை என்று வாக்குமூலம் அளித்தனர். அதனால், தமிழக அரசு கொண்டுவந்துள்ள தடை என்பது நிச்சயம் பலன் தரும்,''என்கிறார்.
விவசாயிகள் சொல்வது என்ன?

பட மூலாதாரம், Getty Images
இதுபோன்ற பூச்சிக்கொல்லி மருந்துகளை தடை செய்வது ஒரு முட்டுக்கட்டையாக மட்டும் செயல்படும் என்றும் தற்கொலை எண்ணத்தில் இருந்து விடுவிக்குமா என்பது சந்தேகம்தான் என்கிறார் தமிழக விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த பெ.சண்முகம்.
''தமிழக அரசு தடை செய்துள்ள பூச்சிக்கொல்லி மருந்துகள் களைக்கொல்லியாக செயல்படும் மருந்துகள். தற்கொலை எண்ணத்தில் இருப்பவர்களுக்கான ஒரு கதவை சாத்தியிருக்கிறீர்கள் என்றுதான் சொல்லமுடியும்.
தற்கொலைதான் முடிவு என்ற எண்ணத்தில் இருப்பவர்கள் மற்ற வாய்ப்புகளை யோசிப்பார்கள், தற்கொலைக்கு முடிவு செய்யும் ஒரு நபர் செல்வதற்கான மூலத்தை அரசாங்கம் கண்டறிந்து, பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும்.
விவசாயிகளைப் பொறுத்தவரை, கடன் பிரச்சனை மற்றும் விவசாயத்தில் வருமானம் குறைவாக இருப்பதால்தான் பலரும் வாழ்நாள் முழுவதும் கடனில் சிக்குகிறார்கள். தற்காலிகமாக மருந்துகளை தடை செய்வதால், இந்த பிரச்சனை தீருமா என்பது சந்தேகம்தான்,'' என்கிறார் சண்முகம்.
தற்கொலை எண்ணத்தில் இருப்பவர்களுக்கு ஆலோசனை அளிக்கும் உதவி எண் சேவையை பிரபலப்படுத்தவேண்டும் என்றும் தற்கொலை எண்ணத்தில் இருக்கும் நபர்களை கண்டறிந்தால், அவர்களை சில காலம் கண்காணித்து வருவதும் அவசியம் என்கிறார் அவர்.
''ஒரு சிலர், தற்கொலை எண்ணத்தை சில காலம் மனத்தில் வைத்திருப்பார்கள். ஒரு முறை முயன்றவர்கள், காப்பாற்றப்பட்டவர்கள் ஆகியோரை தொடர் கண்காணிப்பில் வைத்து, அவர்கள் அந்த எண்ணத்தில் இருந்து வெளியேறி விட்டார்களாக என்றும் கவனிக்க வேண்டும்,'' என்கிறார் சண்முகம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












