தமிழ்நாட்டில் அதிகரிக்கும் மாணவர் தற்கொலைகள் - உண்மையில் யார் மீது தவறு? - கள நிலவரம்

- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களில் பதின் பருவத்தில் உள்ள 6 மாணவர்கள் தற்கொலைசெய்து கொண்டு இறந்துபோயுள்ளனர். இந்த நிகழ்வுகள் கல்வி குறித்தும் கல்வி நிலையங்கள் குறித்தும் ஊடகச் செயல்பாடுகள் குறித்தும் பல தீவிர கேள்விகளை எழுப்பியுள்ளன.
கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள தனியார் பள்ளிக்கூடம் ஒன்றில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இவரது சடலம் கடந்த ஜூலை 13ஆம் தேதி பள்ளி வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டது. இவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து தற்கொலைசெய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்தது.
கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலையைப் பொருத்தவரை, படிப்பில் இருந்த அழுத்தத்தின் காரணமாக தான் தற்கொலை செய்துகொண்டதாக மாணவி எழுதியதாகச் சொல்லப்படும் கடிதத்தில் இருந்தாலும், அந்த மாணவியின் பெற்றோர் இதனை ஏற்கவில்லை. மாணவியின் சடலத்தை வாங்க மறுத்து, அவர்கள் போராட்டத்தில் இறங்கினர். பிரேதப் பரிசோதனை செய்யும்போது தங்கள் தரப்பு மருத்துவரும் உடனிருக்க வேண்டுமென அவர்கள் நீதி மன்றத்தையும் நாடினர்.
இந்த நிலையில், அந்த மாணவியின் மரணத்திற்கு ஜூலை 17ஆம் தேதி நீதி கேட்கப் போவதாக வாட்ஸ்அப்பிலும் ட்விட்டரிலும் செய்திகள் பரவின. அன்றைய தினத்தில் பள்ளி முன்பாக திரண்டவர்கள், பள்ளியில் தாக்குதல் நடத்தி அங்கிருந்த பொருட்களை தீயிட்டுக் கொளுத்தினர். இந்த வன்முறை நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நடந்த தொடர் தற்கொலைகளின் முதல் புள்ளி இதுதான்.
ஜூலை 25ஆம் தேதி கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் தன் பெற்றோரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் தன்னால் படிக்க முடியவில்லை என்ற வருத்தத்தில் 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. பெற்றோர் தன்னை ஐ.ஏ.எஸ். அதிகாரியாக உருவாக்க விரும்பும் நிலையில், தன்னால் சரியாகப் படிக்க முடியவில்லை என்றும் இதன் காரணமாக பெற்றோர் தன்னிடம் சரியாகப் பேசுவதில்லை என்றும் மாணவி வருத்தத்தில் இருந்துள்ளதாக தெரிகிறது. அந்த மாணவி மாதாந்திரத் தேர்வை சரியாக எழுதாத நிலையில், வீட்டிலேயே தற்கொலை செய்துகொண்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இறப்பதற்கு முன்பாக மாணவி எழுதிய நான்கு பக்கக் கடிதம் ஒன்றையும் காவல்துறை கைப்பற்றியுள்ளது. இந்த மாணவியின் தந்தை செல்போன் கடை ஒன்றில் பணியாற்றிவந்தா். இந்த மாணவி மெட்ரிக்குலேஷன் பள்ளிக்கூடம் ஒன்றில் 12ஆம் வகுப்புப் படித்துவந்தார்.
இதே ஜூலை 25ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரியில் அமைந்துள்ள அரசு உதவிபெறும் பள்ளிக்கூடம் ஒன்றில் படித்துவந்த 17வது மாணவி ஒருவர் தனது விடுதி அறையிலேயே தூக்கிலிட்டு தற்கொலைசெய்துகொண்டார். ஏற்கனவே கள்ளக்குறிச்சி பள்ளி மரண விவகாரம் பெரும் பிரச்சனையாக உருவெடுத்த நிலையில், உடனடியாக செயலில் இறங்கிய காவல்துறை, வழக்கை சிபிசிஐடியிடம் ஒப்படைத்தது. பள்ளிக்கூடத்திற்கு காவல் அதிகரிக்கப்பட்டது.

ஆனால், பெற்றோர் மற்றும் உறவினர் தரப்பில் இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கருதுகின்றனர். பிபிசியிடம் பேசிய மாணவியின் சகோதரர் சரவணன், முந்தைய நாள் இரவில் தங்களிடம் நன்றாக போனில் பேசிய மாணவி அடுத்த நாள் தற்கொலைசெய்து கொண்டது எப்படி எனக் கேள்வி எழுப்பினார். பள்ளிக்கூடத்தில் அவருக்கு ஏதாவது நடந்திருக்க வேண்டுமென்ற சந்தேகம் தங்களுக்கு இருப்பதாகவும் அவர் கூறினார்.
இதற்கடுத்தபடியாக, ஜூலை 26ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் பில்ராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு முடித்த மாணவி ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
பள்ளிப் படிப்பை முடித்த நிலையில், திருமணம் செய்துகொண்டு கல்லூரியில் படிக்கலாம் என பெற்றோர் கூறியதால் இந்த மாணவி தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிகிறது. இந்த மாணவியின் பெற்றோர் இருவரும் கூலித் தொழிலாளர்களாக வேலைபார்த்து வருகின்றனர். தங்களது மகளை கல்லூரியில் படிக்க வைக்க வசதியில்லாத நிலையில், அவரைத் திருமணம் செய்துகொடுத்துவிட அவர்கள் முடிவுசெய்துள்ளனர். இதனால் ஏற்பட்ட விரக்தியில் அந்த மாணவி தற்கொலை செய்துகொண்டார். அவர் 12ஆம் வகுப்பில் 411 மதிப்பெண்களைப் பெற்றிருந்தார்.
இதற்கடுத்து ஜூலை 26ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் முனீர்பள்ளத்தைச் சேர்ந்த 17 வயது மாணவன், மருதநகர் என்ற இடத்தில் ரயில் முன்பாகப் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டான். பாளையங்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்த இந்த மாணவனுக்கு செல்போனைப் பயன்படுத்துவதில் தீவிர விருப்பம் இருந்த நிலையில், பெற்றோர் செல்போனைக் கொடுக்க மறுத்ததால் ஏற்பட்ட வருத்தத்தில் மாணவன் இந்த முடிவை எடுத்ததாக காவல்துறையின் விசாரணையில் தெரியவந்தது.
இதற்கடுத்த நாள் ஜூலை 27ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே உள்ள ராஜலிங்கபுரத்தைச் சேர்ந்த, முதலாமாண்டு கல்லூரி மாணவி வீட்டிலேயே தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார். கூலித் தொழிலாளியான தனது தந்தை, தன்னுடைய படிப்பிற்கான கல்விக் கட்டணத்தை மிகவும் சிரமப்பட்டு செலுத்துவதைப் பார்த்து தற்கொலை செய்துகொண்டார். மரணத்திற்கு முன்பு அவர் எழுதிய கடிதத்தில், 'தனது படிப்பு செலவுக்காக பெற்றோர்களை சிரமப்படுத்தி விட்டதால் தற்கொலை செய்ய முடிவு எடுத்ததாக' குறிப்பிட்டிருந்தார். இந்த மாணவிக்கு வயது வெறும் 18தான்.
"என் மகளுக்கான கல்விக் கட்டணத்தைச் செலுத்தவதில் சிரமம் இருந்தது உண்மைதான். ஆனால் அது ஒரு பெரிய சிரமம் அல்ல. என் மகள் இறந்ததால் எனது கஷ்டம் தீர போவதில்லை. கூடுதலாக மன அழுத்தம்தான் ஏற்பட்டிருக்கிறது. என் மகள் இப்படி செய்திருக்க தேவை இல்லை" என பிபிசியிடம் பேசிய அந்த மாணவியின் தந்தை முத்துக்குமார் தெரிவித்தார்.

அதே ஜூலை 27ஆம் தேதி காலையில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சாக்கோட்டை என்ற கிராமத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு பள்ளி மாணவன் வீட்டிலேயே தூக்கிலிட்டு தற்கொலைசெய்து கொண்டான். அந்த மாணவன் எழுதியதாகச் சொல்லப்படும் கடிதத்தில், "தனது சாவுக்கு யாரும் காரணமில்லை" என்று கூறியிருந்தாலும் கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு தனது பாடங்களைச் சரிவர படிக்க முடியாததால் ஏற்பட்ட மன அழுத்தமே இந்த தற்கொலைக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டில், மூன்று நாட்களுக்கு ஆறு மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்ட நிகழ்வு தேசிய அளவில் கவனத்தைப் பெற்றது. ஜூலை 13 முதல் 27ஆம் தேதிக்குள் 7 பேர் மொத்தமாக உயிரிழந்திருந்தனர். இதில் இரண்டு பேர் பள்ளிக்கூடத்திலேயே உயிரிழந்தனர். மீதமுள்ள ஐந்து பேர் வீட்டிலேயோ,வெளியிலோ உயிரிழந்தனர். பள்ளிக்கூடங்களில் மாணவிகள் இறந்த நிகழ்வுகளில் பள்ளி நிர்வாகத்தின் மீது குற்றம்சாட்டப்பட்டாலும், மற்ற மரணங்கள் பெற்றோர் தரும் அழுத்தம் உள்ளிட்ட வெவ்வேறு காரணங்களாலேயே நிகழ்ந்திருக்கிறது.
"கடந்த பத்து வருடங்களில் மாணவர்களில் தற்கொலை செய்து கொள்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகிலேயே மாணவர்கள் தற்கொலை அதிகம் நடக்கும் நாடாக இந்தியா உருவெடுத்திருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களில் நடந்தது 'copy cat' தற்கொலை. ஒரு தற்கொலை நடந்தால், அதனை செய்தி நிறுவனங்கள் பொறுப்பாகப் பதிவுசெய்கின்றனவா என்ற கேள்வி இருக்கிறது. கள்ளக்குறிச்சி மாணவியின் தற்கொலையை தமிழக ஊடகங்கள் கையாண்ட விதம் மிக மோசமாக இருந்தது. அவர் புதைக்கப்படுவதைக்கூட Close-upல் நேரலை செய்தனர். இறந்துபோன அந்த மாணவிக்குக் கிடைக்கும் கவனம், பிரச்சனைகளில் உள்ள வேறு மாணவர்களையும் தற்கொலைக்குத் தூண்டுகிறது" என்கிறார் மனநல மருத்துவரான சிவபாலன்.

கள்ளக்குறிச்சி மாணவியின் இறுதிச் சடங்குகள் ஜூலை 23ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற்றபோது, தமிழ்நாட்டில் பல தொலைக்காட்சிகள் அதனைக் காலை முதல் நேரலையில் ஒளிபரப்புச் செய்தன. அந்த மாணவியின் சடலம் புதைக்கப்படும்வரை நேரலை செய்யப்பட்டது. 23ஆம் தேதி மாணவியின் இறுதிச் சடங்கு நிகழ்வுக்குப் பிறகுதான் அடுத்தடுத்த மாணவர் மரணங்கள் நடைபெற்றன என்பதைப் பார்க்கும்போது, மனநல மருத்துவரின் கருத்து கவனிக்கப்பட வேண்டியதாகிறது.
"தற்போதைய தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்களுக்கு என தனிப்பட்ட கருத்தோ, பார்வையோ கிடையாது. அப்படியே ஒரு கருத்து இருந்தாலும் அது மேலோட்டமானதாகவும் ஆழமற்றதாகவும் இருக்கும். இந்த இளைஞர்கள் சமூக வலைதளங்களால் வழிநடத்தப்படக்கூடியவர்கள். இவர்கள் தங்கள் கருத்தை எளிதில் மாற்றிக்கொள்ளக்கூடியவர்கள். இப்படியான சூழலில் தற்கொலை குறித்த செய்திகள் வரும்போது அதில் ஈர்க்கப்படுகிறார்கள். அந்தச் செய்தியில், தற்கொலை செய்துகொண்டவரைத் தவிர மற்ற எல்லோருமே குற்றவாளி. தற்கொலை செய்துகொண்டவர் மட்டுமே பதிக்கப்பட்டவர். ஏதாவது ஒரு சிறிய பிரச்சனையில் இருக்கக்கூடிய மாணவர்கூட, இந்தச் செய்திகளால் தூண்டப்படக்கூடும். ஆகவே இதுபோன்ற செய்திகளை இந்த அளவுக்கு விரிவாக ரிப்போர்ட் செய்ய வேண்டுமா என்பதை யோசிக்க வேண்டும்" என்கிறார் சிவபாலன்.
பெற்றோர், ஆசிரியர், பள்ளிக்கூடம் என எல்லா தரப்புகளிலும் பிரச்சனை இருக்கிறது என்கிறார் குழந்தைகள் உரிமைச் செயல்பாட்டாளரான தேவநேயன். "பெற்றோரால் தங்கள் குழந்தைகளுடன் தரமான நேரத்தைச் செலவிட முடியவில்லை. அதனால், குழந்தைகளுக்கு யாரை நம்புவது, யாரிடம் பிரச்சனைகளைச் சொல்வது என்றே தெரியவில்லை. மற்றொரு புறம், பெற்றோர் என்ன நினைக்கிறார்கள் என்றால், நான்தான் சிரமப்பட்டுவிட்டேன்; நீயாவது படி என்ற அழுத்தத்தை குழந்தைகள் செலுத்துகிறார்கள். இதைக் குழந்தைகளால் தாங்கவே முடிவதில்லை. குழந்தைகளின் படிப்பிற்குச் செலவழிப்பதை ஒரு முதலீடாகப் பார்க்கிறார்கள். அந்த முதலீடு வீணாகிவிடுமோ என்று அஞ்சுகிறார்கள். அந்த அச்சத்தை குழந்தைகள் மீது கடத்துகிறார்கள். அந்தக் குழந்தை என்ன செய்ய விரும்புகிறது என்று கவலைப்படுவதேயில்லை" என்கிறார் தேவநேயன்.

சிவகங்கை மாவட்டத்தில் நடந்த தற்கொலையும் விருதாச்சலத்தில் நடந்த தற்கொலையும் தேவநேயன் சொல்வதைப் போல, படிப்பு தொடர்பான அழுத்தத்தினாலேயே நடந்திருக்கிறது.
இப்போது மாணவர்களுக்கு என மனநல ஆலோசகர்களை பள்ளிக்கூடங்களில் நியமிப்பது குறித்து அரசு ஆராய்ந்து வருகிறது. ஆனால், இதெல்லாம் எந்த அளவுக்கு சாத்தியம் என்ற கேள்வியை எழுப்புகிறார் தேவநேயன். "எத்தனை பள்ளிக்கூடங்களில் இதெல்லாம் சாத்தியம்? பள்ளி ஆசிரியர்கள் தற்காலத்திற்கு ஏற்றவகையில் இல்லை. அதுதான் முக்கியப் பிரச்சனை. மாணவர்கள் ஒரு உலகத்திலும் ஆசியர்கள் கடந்த கால உலகத்திலும் இருக்கிறார்கள். இந்த நிலையில் குழந்தைகள் சமூகவலைதளங்களின் மூலமாகவே எல்லாவற்றையும் கற்றுக்கொள்கிறார்கள். அவர்களுக்கு சமூகவலைதளங்களில் கிடைப்பனவற்றில் பெரும்பாலும் தவறான தகவல்களே இருக்கும் என்பதே தெரியாது. இவ்வளவு நடந்த பிறகும் ஆசிரியர் சங்கங்கள் இது குறித்து வாயைத் திறப்பதில்லை. அது யாருடைய பிரச்சனையோ என்பதுபோல இருக்கின்றன. எல்லாம் சேர்ந்துதான் இந்த மரணங்களுக்கு வித்திட்டுவிட்டது" என்கிறார் அவர்.
அதே நேரம், நிறுவனமயமாக்கப்பட்ட ஊடகங்களும் யு டியூப்களில் செயல்படும் ஊடகங்களும் தற்கொலைச் செய்திகளை ரிப்போர்ட் செய்யும்போது மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்பட வேணடும் என்கிறார் அவர்.
தற்கொலை எண்ணம் வந்தால் அழைக்க வேண்டிய தொலைபேசி உதவி எண் '104'

பட மூலாதாரம், Getty Images
அப்படிப்பட்ட எண்ணம் வரும்போது, மருத்துவரைத்தான் பார்க்க வேண்டும் என்றில்லை. உங்கள் மீது அக்கறை வைத்துள்ள யாரிடம் வேண்டுமானாலும் பேசலாம்.
பள்ளிகளில் ஆசிரியர்கள் சிலர் அக்கறையுடன் இருப்பார்கள். வளரிளம் சிறார்கள் மத்தியில் இதனைக் கையாள்வதில் சிக்கல் இருக்கலாம். இதற்காக '104' என்ற உதவி எண் உள்ளது. அதனைத் தொடர்பு கொண்டால் உரிய வழிகாட்டுதல்கள் கிடைக்கும்.
இதன் அடுத்தகட்டமாக, `மருத்துவரைப் பார்க்க வேண்டிய தருணம் இதுதானா?' என்பது தெரியவரும். இந்த விவகாரத்தில் மனநல மருத்துவரைத்தான் சென்று பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்கள் குடும்ப மருத்துவரை முதலில் சென்று பாருங்கள். அதன்பிறகு தேவைப்பட்டால் மனநல மருத்துவரிடம் செல்லலாம். அப்போதும் உடனடியாக மருந்துகள் கொடுக்கப்படுவதில்லை.
`இதனை வெளியில் சொன்னால் அவமானம்' என நினைப்பதைவிட `உயிர் முக்கியம்' என நினைக்க வேண்டும். `தற்கொலை முடிவு என்பது எவ்வளவு தவறானது' என்பதை அவர்கள் உணர வேண்டிய நிலையை உருவாக்க வேண்டும்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












