கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் இந்தியாவில் பெட்ரோல் விலை குறையாமல் இருப்பது ஏன்?

பெட்ரோல்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை வெகுவாகக் குறைந்த நிலையிலும் இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் விலை குறையாமல் அதே நிலையில் நீடிப்பதற்கு சில 'அதிகார சக்திகளே' காரணம் என தமிழ்நாடு நிதியமைச்சர் குற்றம்சாட்டியிருக்கிறார். பெட்ரோல் விலையில் என்ன நடக்கிறது?

உலகம் முழுவதுமே பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் வெகுவாக வீழ்ச்சியடைந்திருக்கின்றன. WTI கச்சா எண்ணையின் விலை பேரல் 74 டாலர் என்ற நிலையிலும் ப்ரெண்ட் கச்சா எண்ணையின் விலை பேரலுக்கு சுமார் 79 டாலர் என்ற நிலையிலும் விற்பனையாகின்றன.

கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி யுக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்ததும் உலகம் முழுவதும் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர ஆரம்பித்தது.

உடனடியாகவே ஒரு பீப்பாயின் எண்ணெய் விலை நான்கரை டாலர் உயர்ந்து நூறு டாலர்களை எட்டியது. 2014ஆம் ஆண்டு செப்டம்பருக்குப் பிறகு ஒரு பீப்பாய் எண்ணையின் விலை இந்த அளவுக்கு உயர்ந்தது, பல வளரும் பொருளாதாரங்களுக்கு பேரிடியாக அமைந்தது.

பிறகு உச்சகட்டமாக, ஒரு பீப்பாய் எண்ணெயின் விலை, 120 டாலர் அளவுக்கு உயர்ந்தது. ரஷ்யாவிலிருந்து பெருமளவு எண்ணெய் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாவதால், போரின் காரணமாக அந்த ஏற்றுமதி தடைபடலாம் என்ற அச்சத்தில், இந்த விலை உயர்வு ஏற்பட்டது.

ஆனால், ரஷ்யா தொடர்ந்து பெட்ரோலிய ஏற்றுமதியில் ஈடுபட்ட நிலையில், கடந்த சில நாட்களில் பெட்ரோலியத்தின் விலை வெகுவாகக் குறைந்துவருகிறது. தற்போது 80 டாலருக்கும் கீழே சரிந்து, சுமார் 74.5 டாலர் முதல் 79 டாலர்கள் வரையில் விற்பனையாகி வருகிறது.

இந்த நிலையில்தான், தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தனது ட்விட்டர் பக்கத்தில், பெட்ரோல் விலையைக் குறையவிடாமல் சில 'அதிகார சக்திகள்' செயல்படுவதாக கூறியிருக்கிறார்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 1

இதற்குப் பதிலளிக்கும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள தமிழ்நாடு பா.ஜ.கவின் தலைவர் கே. அண்ணாமலை பெட்ரோல் விலையை தமிழ்நாட்டில் ஆட்சி செய்யும் தி.மு.கதான் குறைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

"தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாதோர் எரிபொருள் விலை குறையவில்லை என்று வருத்தப்படுவது ஏன்? பெட்ரோல் லிட்டருக்கு ₹2 மற்றும் டீசல் லிட்டருக்கு ₹4 குறைத்து வாக்குறுதியை நிறைவேற்றினால் விலை தாமாக குறையும். ஆனால், விலையை குறைக்கவிடாமல் தமிழகத்தில் ஒரு அந்நிய சக்தி தடுத்து வருகிறது!" என்கிறது அவரது ட்விட்டர் பதிவு.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 2

ஆனால், தற்போது மத்திய அரசு பெட்ரோல் மீது விதித்த வரிகளைக் குறைக்க வேண்டுமென கோரப்படவில்லை.

மாறாக, பெட்ரோலியம் குறைந்த விலைக்குக் கிடைக்கும் நிலையில், அதன் பலனை நுகர்வோருக்கு அளிக்கலாமே என்பதுதான் கோரிக்கையாக இருக்கிறது.

கடந்த மே மாதம் இந்திய அரசு பெட்ரோல் மீது விதிக்கப்படும் கலால் வரியினை குறிப்பிடத்தக்க அளவுக்குக் குறைத்தது. இந்தியாவில் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோலின் விலை மாற்றியமைக்கப்பட்டுவந்த நிலையில், கடந்த சில மாதங்களாக பெட்ரோலின் விலை மாற்றப்படாமல் அதே விலையில் விற்கப்படுகிறது.

தற்போது பெட்ரோலின் விலை பெரும் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கும் நிலையிலும் மத்திய அரசு விலையைக் குறைக்காமல் இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன என்கிறார் காங்கிரசைச் சேர்ந்த பொருளாதார நிபுணரான ஆனந்த் ஸ்ரீநிவாஸன்.

ஆனந்த் ஸ்ரீநிவாசன்
படக்குறிப்பு, ஆனந்த் ஸ்ரீநிவாசன், பொருளாதார நிபுணர்

"இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு வெகுவாக உயர்ந்திருப்பதைக் கவனிக்க வேண்டும். யுக்ரேன் யுத்தம் தொடங்கிய போது ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு 75.9 ரூபாயாக இருந்த நிலையில், தற்போதுஅது சுமார் 82 ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது. டாலர் விலையும் யுக்ரேன் யுத்தத்தை ஒட்டி பெட்ரோலியத்தின் விலையும் உயர்ந்த நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் விலையை உயர்த்தாமல் இருந்தன. ஆகவே, அப்போது ஏற்பட்ட இழப்புகளை இப்போது ஈடுகட்ட நினைக்கலாம்" என்கிறார் ஆனந்த் ஸ்ரீநிவாஸன்.

இது தவிர, மத்திய அரசின் வரிவிதிப்பிலும் பிரச்சனை இருக்கிறது என்கிறார் அவர். "முன்பு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி 40 சதவீதம் அளவுக்கு இருந்தது. அது இப்போது 25 சதவீதமாக குறைந்துவிட்டது. அந்த இழப்பை வேறு எங்காவது ஈடுகட்ட வேண்டும். தவிர, கடந்த காலாண்டில், இந்தியாவில் உற்பத்தி வெகுவாகக் குறைந்து, இறக்குமதி அதிகரித்திருக்கிறது. இப்படி பல சிக்கல்கள் இருப்பதால், பெட்ரோலியப் பொருட்களின் மீதான வரியைக் குறைக்க மத்திய அரசு இப்போதைக்கு விரும்பாது" என்கிறார் ஆனந்த் ஸ்ரீநிவாஸன்.

யுக்ரேன் யுத்தத்தை ஒட்டி உலகம் முழவதும் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்ந்தாலும் அது நமக்கு சாதகமாகவே அமைந்தது. இருந்தாலும் இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் விலை குறையவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை தலைவர் பேராசிரியர் ஜோதி சிவஞானம்.

ஜோதி சிவஞானம்
படக்குறிப்பு, பேராசிரியர் ஜோதி சிவஞானம், பொருளியல் துறை தலைவர், சென்னை பல்கலைக்கழகம்

"கடந்த சில ஆண்டுகளில் உலகில் நடந்த பல நிகழ்வுகள் இந்தியாவுக்கு சாதகமாகவே இருந்தன. கோவிட் காலகட்டத்தில் கச்சா எண்ணெயின் விலை பூஜ்ஜியம் டாலர் அளவுக்கு வந்தது. அதனால் ஏற்பட்ட விலை வித்தியாசம் மக்களுக்குக் கொடுக்கப்படவில்லை.

இப்போது யுக்ரேன் யுத்தம் வந்த பிறகு ரஷ்யா இந்தியாவிற்கு எண்ணையை, சந்தை விலையிலிருந்து குறைத்துக் கொடுக்க ஆரம்பித்தது.

தவிர, எண்ணெய்க்கான பணத்தை இந்திய ரூபாயிலேயே கொடுக்கலாம் என்றும் கூறியது.

இதனால், இரு விதங்களில் லாபம் கிடைத்து. ஒன்று, சந்தை விலையைவிட குறைவான விலையில் பெட்ரோலியம் கிடைத்தது. நாம் பணத்தை இந்திய ரூபாயில் கொடுத்ததால், அந்த இந்திய ரூபாயை நம்மிடம்தான் திரும்பச் செலவழிக்க வேண்டும் என்பதால், ரஷ்யாவுக்கான இந்திய ஏற்றுமதி அதிகரித்தது.

இதனால் ஏற்பட்ட எந்த லாபமும் உள்நாட்டில் பெட்ரோல் நுகர்வோருக்கு அளிக்கப்படவில்லை" எனச் சுட்டிக்காட்டுகிறார் ஜோதி சிவஞானம்.

பெட்ரோலிய பொருட்களின் விலை குறைப்பின் பலன் மக்களுக்குச் செல்லாத வகையில் தொடர்ந்து கலால் வரியும் செஸ் எனப்படும் சிறப்பு வரியும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டது.

"சட்டப்படி ஒரு குறிப்பிட்ட சதவீதத்திற்கு மேல் செஸ்சை அதிகரிக்க முடியாது என்பதால், சட்டம் திருத்தப்பட்டு செஸ் அதிகரிக்கப்பட்டது" என்று சுட்டிக்காட்டுகிறார் ஜோதி சிவஞானம்.

ஆகவே, பெட்ரோலியப் பொருட்களின் விலையில் சாதகமான சூழல் என்பது இப்போதுதான் ஏற்பட்டது என்பதில்லை.

கடந்த சில ஆண்டுகளாகவே சாதகமான சூழல்தான் இருக்கிறது. அதன் பலன் மக்களுக்கு அளிக்கப்பட்டதில்லை, இனியும் அளிக்கப்படாது என்கிறார் ஜோதி சிவஞானம்.

காணொளிக் குறிப்பு, பெட்ரோல் விலை உயர்வு எப்படிப் பாதிக்கிறது? பொதுமக்கள் என்ன சொல்கிறார்கள்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: