பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் Vs எண்ணெய் நிறுவனங்கள் - விலைக் குறைப்பால் யாருக்கு பாதிப்பு?

பட மூலாதாரம், தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம்
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழ்
'எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து ஒருநாள் பெட்ரோல், டீசல் வாங்க மாட்டோம்' என்ற முழக்கத்தோடு 24 மாநிலங்களில் உள்ள 70 ஆயிரம் பெட்ரோல் பங்குகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது. 'மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரியை குறைத்தாலும் எங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் அதிகம்' என்கின்றனர் பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர்கள். என்ன நடக்கிறது? எண்ணெய் நிறுவனங்கள் சொல்வது என்ன?
போராட்டத்தில் 24 மாநிலங்கள்
'பெட்ரோல், டீசல் விலைக் குறைப்புக்குப் பிறகு, தங்களுக்கு உரிய கமிஷன் தொகையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தவில்லை' எனக் கூறி 24 மாநிலங்களில் உள்ள பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் இன்று (மே 31) போராட்டம் நடத்தியுள்ளனர். இந்தப் போராட்டம் என்பது, 'எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து ஒரே ஒருநாள் மட்டும் கொள்முதல் செய்யாமல் புறக்கணிப்பது' என முடிவு செய்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் தமிழ்நாட்டில் மட்டும் எண்ணெய் நிறுவனங்களுக்கு 450 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, டெல்லி, பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்ட்ரா, இமாச்சலப் பிரதேசம், பிகார், அசாம், மேகாலயா, அருணாச்சல பிரதேசம், மிசோரம், நாகாலாந்து, மணிப்பூர், திரிபுரா, சிக்கிம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பெட்ரோலிய விற்பனையாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
அதேநேரம், 'இந்தப் போராட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை எந்தவகையிலும் பாதிக்கப்படப் போவதில்லை' எனவும் பங்க் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். 'நான்கு நாள்களுக்குத் தேவையான எரிபொருள் சேமிப்பில் இருப்பதால் மக்கள் வழக்கம்போல பெட்ரோல், டீசலை நிரப்பிக் கொள்ளலாம்' எனவும் தெரிவித்துள்ளனர்.
புறக்கணிப்பின் பின்னணி
''எண்ணெய் வாங்காமல் புறக்கணிப்பதற்கு என்ன காரணம்?'' என தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.பி.முரளியிடம் பிபிசி தமிழ் சார்பில் கேட்டோம். '' கடந்த மே 21 ஆம் தேதியன்று பெட்ரோல், டீசலுக்கான கூடுதல் கலால் வரியை லிட்டருக்கு தலா 8 ரூபாய் மற்றும் 6 ரூபாயை குறைத்து அறிவிப்பு செய்ததன் மூலம் இந்தியாவில் உள்ள நடுத்தர மற்றும் விளிம்புநிலை மக்கள் பயன் அடைந்துள்ளனர். இதற்காக தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
அதேநேரம், கலால் வரி குறைப்பின் காரணமாக சில்லறை விற்பனை விலையை உடனடியாக எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்ததற்காக கடுமையான ஆட்பேசனையையும் பதிவு செய்கிறோம்'' என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
தொடர்ந்து பேசிய கே.பி.முரளி, '' சில்லறை விற்பனையாளர்களான எங்களுக்கு கடந்த 2017 ஆம் ஆண்டில் இருந்து இதுவரையில் விளிம்புத் தொகையை அதிகரித்துத் தரவில்லை. ஏற்கெனவே உள்ள விளிம்புத் தொகையில் இருந்து கிடைக்கும் ஆதாயத்தின் மூலமாகவே விற்பனை நிலையங்களின் அனைத்து நிர்வாகச் செலவுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த 2017 ஆம் ஆண்டு ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை என்பது 60 ரூபாயாக இருந்தது. தற்போது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை என்பது 104 ரூபாய் என்ற அளவில் உள்ளது. அதேபோல், டீசலின் விலை என்பது 52 ரூபாயில் இருந்து 96 ரூபாயாக உள்ளது. இதனால் நடைமுறை மூலதனம் உயர்ந்து பெட்ரோலிய பொருள்களை கொள்முதல் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
மேலும் விற்பனையாளர்களுக்கு பெட்ரோலுக்கு 3 ரூபாய் 6 காசுகளும் டீசலுக்கு 1 ரூபாய் 86 காசுகளையும் விளிம்புத் தொகையாக எண்ணெய் நிறுவனங்கள் வழங்குகின்றன. இந்த விளிம்புத் தொகையில் 90 சதவீதம் விற்பனை நிலையங்களின் நிர்வாக செலவினங்களுக்காக செலவிடப்படுகிறது. இந்த விளிம்புத் தொகையின் கட்டமைப்பு என்பது கடந்த 2010 ஆம் ஆண்டில் உள்ள செலவீனங்களுக்கான கணக்கீட்டை உள்ளடக்கியதாக உள்ளது. கடந்த 13 ஆண்டுகளாக இதே நிலைதான் நீடித்து வருகிறது'' என்கிறார்.
வரி குறைத்தது சரி.. ஆனால்?
''மத்திய அரசின் கலால் வரி குறைப்பால் விற்பனையாளர்களுக்கு என்ன சிரமம்?'' என்றோம். '' கடந்த மே மாதம் 21 ஆம் தேதியன்று இரவு மத்திய அரசால் குறைத்து அறிவிக்கப்பட்ட சிறப்பு கலால் வரியின் எதிர்வினையாக தமிழ்நாட்டில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 9 ரூபாய் 12 காசுகளும் டீசல் லிட்டர் ஒன்றுக்கு 6 ரூபாய் 68 காசுகளும் சில்லறை விற்பனை நிலையங்களின் சில்லறை விற்பனை விலையினைக் குறைத்து நிர்ணயம் செய்து விற்பதற்கான அறிவிப்பினை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டன. இதன் காரணமாக எங்களுடைய சேமிப்புத் தொட்டிகளில் இருந்த அனைத்து கலால் மற்றும் விற்பனை வரி செலுத்திய சரக்குகளின் சில்லறை விற்பனை வரி குறைக்கப்பட்டதால் குறைந்தபட்சம் 2 லட்ச ரூபாய் முதல் அதிகபட்சமாக 10 லட்ச ரூபாய் வரையில் விற்பனையாளர்கள் இழப்பினை சந்தித்துள்ளனர். இது விற்பனையாளர்களின் நடப்பு மூலதனத்தினை மிகவும் பாதித்துள்ளது. இதுபோன்ற விற்பனை விலை குறைப்பினை எண்ணெய் நிறுவனங்கள் இரண்டாவது முறையாக அமல்படுத்தியுள்ளன'' என்கிறார்.
தொடர்ந்து பேசுகையில், '' விற்பனை நிலையங்களின் சேமிப்புக் கிடங்கில் குறைந்தபட்ச அளவில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றை சேமிக்க வேண்டும் என எண்ணெய் நிறுவனங்கள் வலியுறுத்துகின்றன. எப்போதும் நான்கு நாள்களுக்கான எரிபொருள்கள் விற்பனை நிலையங்களின் சேமிப்பில் இருக்கும். அதற்கேற்ப நான்கு நாள்கள் கழித்து வரிக் குறைப்பை அமல்படுத்தியிருந்தால் டீலர்களுக்கு பாதிப்பு வந்திருக்க வாய்ப்பில்லை. இதனை கருத்தில் கொள்ளாமல் அறிவிப்பை வெளியிட்டனர்'' என்கிறார்.

பட மூலாதாரம், K.P. Murali
மேலும், ''பெட்ரோலிய பொருள்களை கொள்முதல் செய்யும்போதே அனைத்து மத்திய, மாநில அரசுகளின் வரிகளை செலுத்திய பிறகே விற்பனை நிலையங்களுக்குப் பொருள்கள் வந்து சேருகின்றன. இதன் அடிப்படையில் சில்லறை விற்பனை விலையினை எண்ணெய் நிறுவனங்கள் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள தானியங்கி உபகரணங்களின் மூலம் அறிவிப்பு செய்கின்றன. இதனால் விற்பனையாளர்களுக்கு ஏற்படும் இழப்புகளை அவர்கள் கணக்கில் கொள்வதில்லை'' என்கிறார்.
வங்கிகளில் கடன் வாங்கும் சூழல் ஏன்?
'' கடந்த ஆண்டு நவம்பர் 4 மற்றும் மே 21 ஆகிய தேதிகளில் சில்லறை விற்பனை விலை குறைப்பினால் ஏற்பட்ட இழப்பினை முதன்மை உரிமையாளர் என்ற அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் விற்பனையாளர்களுக்கு ஈடு செய்ய வேண்டும். இதன் காரணமாகவே செவ்வாய்கிழமையன்று பெட்ரோல், டீசல் கொள்முதல் செய்வதை நிறுத்தினோம்'' என்கிறார் முரளி.
'' விற்பனை நிலையங்களில் செலவுகள் அதிகம் இருந்தாலும் வேறு வழியில்லாமல் நடத்தி வருகிறோம். ஊழியர்களின் சம்பளம், சீருடை, மின் விளக்குகள் என எங்களுக்ககான செலவுகள் அதிகம். கலால் வரி குறையும்போது டீலர்களும் உற்சாகப்படுகின்றனர். ஆனால், விலையை உயர்த்தும் அதிகாரம் என்பது பொதுத்துறை நிறுவனங்களின் கைகளில் உள்ளன. விற்பனை நிலையங்களில் மின்கட்டணம், ஊழியர்களின் ஊதியம் ஆகியவை மிக முக்கியமானவை. அதன்பிறகு இதர செலவுகளையும் இதிலிருந்தே ஈடுகட்ட வேண்டும். இதையெல்லாம் கணக்கிட்டால் டீலர்களுக்கு லாபம் வருவதில்லை.
இதனால் வங்கிகளில் கடன் வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். அதற்கு வட்டி கட்ட வேண்டும். இந்தத் தொழிலை வட்டி கட்டிவிட்டு நடத்த முடியாது. சொந்தப் பணத்தில்தான் நடத்த முடியும். டீலர்களை லோன் எடுக்க வேண்டிய நிலைக்கு எண்ணெய் நிறுவனங்கள் தள்ளுகின்றன. நிறைய டீலர்கள் ஸ்டேட் வங்கியுடன் தொடர்பு வைத்துக் கொள்கின்றனர். அங்கு இடிஓடி என்ற வசதியை கொடுக்கின்றனர். பெட்ரோல் பங்குகளில் சேமிப்பில் உள்ள எரிபொருளுக்கு ஏற்ப வங்கியில் கடன் கொடுக்கின்றனர். இதனை பதினைந்து நாளில் திருப்பிச் செலுத்த வேண்டும். இந்தச் சூழலுக்கு ஏன் செல்ல வேண்டும்? அப்படியானால் ஏதோ தவறு உள்ளது என்றுதானே அர்த்தம்? ஒவ்வொரு முறை வரியை குறைக்கும்போதும் பாதிப்பு டீலர்களுக்குத்தான் ஏற்படுகிறது'' என்கிறார் கே.பி.முரளி.
எண்ணெய் நிறுவனங்களுக்கு பாதிப்பா?
''உங்கள் போராட்டத்தால் எண்ணெய் நிறுவனங்களுக்கு என்ன இழப்பு?'' என்றோம். '' நாங்கள் கொள்முதல் செய்வதை நிறுத்திவிட்டால் பொதுமக்களுக்குத்தான் பாதிப்பு. அவர்களால் எங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாதபோது நாங்கள் ஏன் சிரமத்தைத் தர வேண்டும்? பெட்ரோல் விலை குறைந்துள்ள நேரத்தில் நாங்கள் நடத்தும் போராட்டம் என்பது பொதுமக்களுக்கு எதிரானதாகத்தான் பார்க்கப்படும்.
அதேநேரம், ஆயில் நிறுவனங்களுக்கு எதிராக நாங்கள் ஏன் போராட்டம் நடத்துகிறோம் என மக்களுக்கும் தெரிய வேண்டும். எரிபொருள் கொள்முதலை நிறுத்தியதால் ஒருநாள் முழுவதும் எண்ணெய் நிறுவனங்களில் இருந்தும் ஒரு ட்ரக் எண்ணெய்கூட லோடு ஆகாமல் இருந்துள்ளது. இது ஆவணப்பூர்வமாகப் பதிவாகும். இன்றைக்கு தமிழ்நாட்டில் மட்டும் 450 கோடி ரூபாய்க்கு எண்ணெய் கொள்முதல் செய்யப்படவில்லை. இன்றைக்கு கொள்முதல் செய்யப்பட்டிருந்தால் 100 கோடி ரூபாய் கலால் வரியாகவும் 100 கோடி ரூபாய் வாட் வரியாகவும் சென்றிருக்கும். இன்றைக்கு அந்த வருமானம் சென்றிருக்க வாய்ப்பில்லை. பெட்ரோல் பங்குகளை மூடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். இதில் மாநில அரசின் பங்கு எதுவும் இல்லை. இந்த விவகாரத்தை எண்ணெய் நிறுவனங்கள் முறையாகக் கையாண்டிருந்தால் டீலர்கள் பாதுகாப்பாக இருந்திருப்பார்கள். அதனால்தான் போராட்டத்தை அறிவித்தோம்'' என்கிறார்.
இந்தியன் ஆயில் நிறுவனம் சொல்வது என்ன?
பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர்களின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் செயல் இயக்குநர் (Executive Director & State Head) வி.சி.அசோகன், ''2017 ஆம் ஆண்டு விற்பனையாளர்களுக்கான மார்ஜின் என்பது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அது ஒரு நடைமுறை. எதற்காக மாற்ற வேண்டும் என்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படுவது வழக்கம். அதில், விலைவாசி உயர்வு, செலவுகள் அதிகரிப்பு உள்பட என்னென்ன காரணங்கள் சொல்லப்படுகிறதோ, அவையெல்லாம் ஆலோசனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
இதுதொடர்பாக பெட்ரோலியத் துறை அமைச்சகத்திடம் விற்பனையாளர்கள் தரப்பில் பரிந்துரை கொடுக்கப்பட்டுள்ளது. அமைச்சகமும், தேவைப்படும் நடவடிக்கையை எடுப்பதாகத் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்றைக்கு பாதிக்கும் மேற்பட்ட டீலர்கள் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. மற்றவர்களில் பெரும்பாலானோர் ஆயில் கொள்முதல் செய்துள்ளனர். பெட்ரோல் பங்குகளும் திறக்கப்பட்டுள்ளன. சிலர் மட்டுமே கொள்முதல் செய்யவில்லை. ஆனாலும், இன்று முன்னூறுக்கும் மேற்பட்ட எண்ணெய் லோடுகள் சென்றுள்ளன. ஒரு சிலர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தாலும் மற்றொரு பிரிவினர் ஆதரவு தெரிவிக்கவில்லை'' என்கிறார்.
மேலும், '' டீலர்களுக்கான மார்ஜினை உயர்த்துவது என்பது சூழல்களைப் பொறுத்தது. அது தேவைப்படும் நேரத்தில் மாற்றப்படும்'' என்கிறார்.
''பெட்ரோல் விலை குறைக்கப்பட்டாலும், எண்ணெய் நிறுவனங்களின் செயல்பாட்டால் டீலர்களுக்கு இழப்பு ஏற்பட்டது என்கிறார்களே?'' என்றோம். ''பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும்போது இழப்பு ஏற்படும். விலையை உயர்த்தும்போது லாபம் கிடைக்கும். அதனால் இது முழுமையாக தவறு என்றோ சரி என்றோ கூற முடியாது. முன்பெல்லாம் தினசரி விலையில் மாற்றம் இருந்து கொண்டே இருக்கும். அதிக நாள்கள் விலையை மாற்றாமல் திடீரென மாற்றியதால் அவர்கள் இவ்வாறு கூறுகின்றனர். கச்சா எண்ணெய் விலை உள்பட பல்வேறு காரணங்களை முன்வைத்து முடிவுகள் எடுக்கப்படுகிறது. இந்தத் தகவல்கள் எல்லாம் எங்களுக்கே தாமதமாகத்தான் தெரியவரும்'' என்கிறார்.
'' வங்கிகளில் கடன் வாங்க வேண்டிய நிலையில் பங்குகளை நடத்துவதாக கூறுகிறார்களே?'' என்றோம். '' விற்பனை நிலையங்களின் உரிமையாளர்களும், பெட்ரோலியத் துறை அமைச்சகத்திடம் இதுதொடர்பாக மனு அளித்துள்ளனர். அதனை பரிசீலிப்பதாக அமைச்சகமும் கூறியுள்ளது'' என்கிறார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












