இந்தியாவில் பெட்ரோல், டீசலுக்கு அதிக வரி வசூலிப்பது மத்திய அரசா, மாநில அரசா?

பெட்ரோல்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், பிரசாந்த் முத்துராமன்
    • பதவி, பிபிசி தமிழ்

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதற்குக் காரணம் மத்திய அரசு விதிக்கும் வரிகளா மாநில அரசு விதிக்கும் வரிகளா என்ற விவாதம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சமீபத்தில் இந்திய அரசு கலால் வரியைக் குறைத்த பின் நிலை என்ன?

கலால் வரி குறைப்பு:

அனைத்து நுகர் பொருட்களையும் உற்பத்தி செய்வது முதல் சில்லறை விற்பனைக்கு கொண்டு சேர்ப்பது வரை வாகனங்களின் பங்கு தவிர்க்க முடியாதது என்பதால், பெட்ரோலும் டீசலும் வாகனம் வைத்திருப்பவர், இல்லாதவர் என்ற வித்தியாசமின்றி அனைவரது வாழ்க்கையிலும் தாக்கம் ஏற்படுத்தவல்ல பொருட்களாக உள்ளன.

இந்த நிலையில், பெட்ரோல் மீதான மத்திய கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும் டீசல் மீதான வரியை லிட்டருக்கு 6 ரூபாயும் குறைத்து இந்திய அரசு அறிவித்தது.

"இதன் மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.50 வரையும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.7 வரையும் குறையும்," என்றும் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

இதையடுத்து, இந்திய அரசு கலால் வரியைக் குறைத்துவிட்ட நிலையில், தமிழ்நாடு அரசும் வாட் வரி என்று பரவலாக அறியப்படும் மதிப்புக்கூட்டு வரியைக் குறைக்க வேண்டும் என்று குரல்கள் எழுந்து வருகின்றன. அத்துடன் மாநில அரசுதான் தற்போது அதிக வரி விதிக்கிறது என்றும் விமர்சிக்கப்படுகிறது. உண்மை என்ன?

தலைநகர் டெல்லியில்:

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ விலைவிவரக் குறிப்பின்படி, இந்திய தலைநகர் டெல்லியில் மே 23ஆம் தேதி நிலவரப்படி 96 ரூபாய்க்கு பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டது.

இதில், 57.13 ரூபாய் என்ற அடிப்படை விலையில், பெட்ரோல் வாங்கப்படுகிறது. விற்பனையாளர்களுக்கு 57.33 ரூபாய்க்கு தரப்படுகிறது. இந்த விலையுடன், இந்திய அரசின் கலால் வரி 19.9 ரூபாயும், டெல்லி அரசின் வாட் வரியாக 15.7 ரூபாயும் அத்துடன் விற்பனையாளர் லாபம் 3.78 ரூபாயும் சேர்த்துதான் 96.72 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

டெல்லியில்

பட மூலாதாரம், Screengrab / IOCL

இதில் மாநில அரசின் வாட் வரியை விட இந்திய அரசின் கலால் வரிதான் அதிகம். டெல்லியை பொறுத்தவரை வாட் வரியாக, 19.4% வசூலிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் நிலை என்ன?

தமிழ்நாட்டில் பெட்ரோலுக்கு மாநில அரசின் சார்பில் 13% வாட் வரியுடன் லிட்டருக்கு கூடுதலாக 11.52 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது, டீசலுக்கு 11% வாட் வரியுடன் கூடுதலாக 9.62 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.

Petroleum Planning & Analysis Cell

பட மூலாதாரம், Screengrab

படக்குறிப்பு, தமிழ்நாட்டில் வாட் வரி

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் இந்த வரி முறையில் தமிழ்நாடு எந்த மாற்றமும் செய்யவில்லை.

01.08.2014 அன்று மத்திய அரசின் வரிகள் பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ. 9.48 என்றும் டீசல் மீது லிட்டருக்கு ரூ. 3.57 என்றும் இருந்தன.

ஆனால், கலால் வரி 2021ஆம் ஆண்டு நவம்பரில் கூடுதஸ் செஸ் காரணமாக பெட்ரோல் மீது ரூ. 32.90 என்றும் டீசல் மீது லிட்டருக்கு ரூ. 31.80 என்றும் இருந்தது. இது பெட்ரோல், டீசல் மீது முறையே ரூ. 27.90 மற்றும் ரூ. 21.80 என குறைக்கப்பட்டது. தற்போது மேலும் குறைத்து பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ. 19.90 மற்றும் டீசல் மீது லிட்டருக்கு ரூ. 15.80 ஆகியிருக்கிறது என்று தமிழ்நாடு நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

மத்திய கலால் வரி எவ்வளவு?

மத்திய கலால் வரி - Petroleum Planning & Analysis Cell

பட மூலாதாரம், Screengrab

படக்குறிப்பு, மே 21 2022 வரை மத்திய அரசின் கலால் வரி

மே 21ஆம் தேதி வரை மத்திய அரசின் கலால் வரி லிட்டருக்கு 27.90 ரூபாயாக இருந்தது ( அடிப்படை கலால் வரி - 1.40 ரூபாய் , சிறப்பு கூடுதல் கலால் வரி - 11 ரூபாய், விவசாய மேம்பாட்டு செஸ் - 2.50 ரூபாய், சாலை மேம்பாட்டுக்கான கூடுதல் செஸ் - 13 ரூபாய் என அந்த 27.90 வசூலிக்கப்பட்டு வந்தது. இதில் சாலை மேம்பாட்டுக்கான செஸ் 13 ரூபாயிலிருந்து 8 ரூபாய் தற்போது குறைக்கப்பட்டு 5 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி 19.90 ரூபாய் கலால் வரி விதிக்கப்படும்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

எனில், 22ஆம் தேதி நிலவரப்படி, 57.33 ரூபாய் அடிப்படை விலைக்கு வாங்கப்படும் பெட்ரோல் 19.9 ரூபாய் கலால் வரி சேர்க்கப்பட்டு 77.23 ரூபாய்க்கு தமிழ்நாடு அரசின் கைகளுக்கு வருகிறது.

இதிலிருந்து 13% வாட்வரியாக (10.03 +11.52) சேர்த்து 21.53 ரூபாய். இத்துடன் விற்பனையாளர் கமிஷன் 3.80 ரூபாயும் சேர்த்து பெட்ரோல் 102.56 ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது.

இதன்படி, தமிழ்நாட்டில் மத்திய அரசு விதிக்கும் வரியை விட மாநில அரசு விதிக்கும் வரித்தொகைதான் தற்போதைய பெட்ரோல் விலையில் கூடுதலாக உள்ளது.

என்ன சொல்கிறார் நிதியமைச்சர்

ஆனாலும் 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு மத்திய அரசு உயர்த்திய வரிகளின் விளைவாகவே, இந்த விலைஉயர்வு ஏற்பட்டது. இந்த வரிக்குறைப்புக்குப் பிறகும் கூட 2014ஆம் ஆண்டு விகிதத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால், தற்போதைய வரி விகிதம் அதிகமாகவே இருக்கிறது என்பதால் மத்திய அரசு இன்னும் வரியைக் குறைக்க வேண்டும் என்று இதுகுறித்து தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

தமிழ்நாடு நிதியமைச்சர்

பட மூலாதாரம், P Thiagarajan

படக்குறிப்பு, தமிழ்நாடு நிதியமைச்சர்

மேலும், "பெட்ரோல், டீசல் மீதான வரிகளை பலமுறை உயர்த்தியபோது, ​​மத்திய அரசு ஒரு முறை கூட அது பற்றி மாநிலங்களுடன் கலந்தாலோசிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் அதிகப்படியான வரி அதிகரிப்பு, தற்போது பகுதியளவு குறைக்கப்பட்டிருந்தாலும், அந்த நடவடிக்கை 2014ஆம் ஆண்டு விகிதங்களுடன் ஒப்பிடுகையில் தொடர்ந்தும் அதிகமாகவே உள்ளது. எனவே, மாநிலங்கள் அவற்றின் வரிகளைக் குறைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமாக இல்லை" என்றும் பிடிஆர் பழனிவேல் ராஜன் தெரிவித்துள்ளார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :