ஐஏஎஸ் தேர்வுகளில் தொடர் பின்னடைவை சந்திக்கும் தமிழ்நாடு - மொழி ஒரு முக்கிய காரணமா?

ஐஏஎஸ் தேர்வு

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுகளுக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருப்பது தெரிய வந்துள்ளது. ஏன் இப்படி நடக்கிறது? இது மாநிலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுகளுக்கான முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளன. மொத்தமாக 933 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இஷிதா கிஷோர் என்பவர் முதலிடத்தைப் பிடித்துள்ளார். முதல் பத்து இடங்களில் ஆறு இடங்களை பெண்களே பிடித்துள்ளனர்.

ஆனால், அதிர்ச்சியளிக்கும் விதமாக முதல் 100 இடங்களைப் பிடித்தவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் யாரும் இடம்பெறவில்லை. இதுபோல நடப்பது கடந்த பல ஆண்டுகளில் இதுவே முதல்முறை.

மேலும் 933 மாணவர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். ஐ.எஃப்.எஸ் பணிகளுக்குத் தேர்வாகியிருக்கும் நிலையில், இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் வெறும் 42 பேர்தான்.

தமிழ்நாட்டிலிருந்து தேர்வானவர்களில் முதலிடம் பிடித்த ஜிஜி ஏஸ், தரவரிசைப் பட்டியலில் 107வது இடத்தையே பிடித்திருக்கிறார். கடந்த ஆண்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்வஸ்தி ஸ்ரீ 42வது இடத்தைப் பிடித்திருந்தார்.

மொத்த எண்ணிக்கையைப் பொருத்தவரை, கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு சற்றுப் பரவாயில்லை என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த ஆண்டு தேர்வான 685 பேரில் 27 பேர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். மொத்தம் தேர்வானவர்களில் இது வெறும் 3 சதவீதம்தான். இந்த ஆண்டு அது சற்று உயர்ந்து, 4.5 சதவீதமாகியுள்ளது.

2014இல் 1126 பேர் யுபிஎஸ்சி தேர்வானதில், 119 பேர், அதாவது 11 சதவீதம் பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். 2017இல் இது 7 சதவீதமாகக் குறைந்தது. 2019இல் 6.69 சதவீதமாகவும் 2020இல் ஐந்து சதவீதமாகவும் குறைந்தது. தற்போது 4.5 சதவீதத்தில் வந்து நிற்கிறது.

தொடர் முயற்சி இல்லை

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியானால், அதில் குறைந்தது பத்து சதவீதமாவது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இருக்க வேண்டும் என்கிறார் கல்வியாளரான ஜெயப்ரகாஷ் காந்தி.

"இந்த எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் குறைந்துகொண்டே போகிறது. இது கவலைக்குரிய விஷயம். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மருத்துவர், பொறியாளர் என்று தொழிலைத் தேர்வுசெய்து படித்து, வேலை வாய்ப்புகளைப் பெறுவதால், குடிமைப் பணித் தேர்வுகளில் கவனம் செலுத்துவதில்லை என்கிறார்கள். அது சரியான கருத்து அல்ல.

சாதாரண க்ரூப் - 4 தேர்வுக்கு எத்தனை பொறியாளர்கள் விண்ணப்பிக்கிறார்கள் என்பதைப் பாருங்கள். இதற்கு முக்கியமான காரணம் தொடர் முயற்சி இல்லாததுதான்," என்கிறார் அவர்.

கல்வியாளர் ஜெயப்ரகாஷ் காந்தி
படக்குறிப்பு, கல்வியாளர் ஜெயப்ரகாஷ் காந்தி

மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள், கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு, சிறிது காலம் பயிற்சி செய்கிறார்கள். அதற்குப் பிறகு சில தடவைகளே முயல்வதாகவும் நான்கைந்து முறை முயன்று கிடைக்காவிட்டால், வேறு வேலைக்குச் சென்றுவிடுவதாகவும் கூறுகிறார் அவர்.

"ஆனால், இந்தியாவின் வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் 12ஆம் வகுப்பு முதல் இதற்கான பயிற்சிகளில் ஈடுபடுகிறார்கள். அதுதவிர, என்னதான் தேர்வுக்கான பயிற்சி மையங்களில் படித்தாலும், தொடர்ந்து நிறைய விஷயங்களைத் தெரிந்துகொண்டால்தான் ஐஏஎஸ் ஆக முடியும்.

இன்னொரு தவறான எண்ணமும் தமிழக மாணவர்களிடம் இருக்கிறது. பிஎஸ்சி அக்ரி படித்தால், எளிதாகத் தேர்ச்சி பெற்றுவிடலாம் எனக் கருதுகிறார்கள். அந்தக் கருத்து எப்படி ஏற்பட்டதெனத் தெரியவில்லை. அது தவறான கருத்து.

தமிழ்நாடு உயர்கல்வியில் முன்னணியில் இருக்கிறது. ஆனால், யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சியடைபவர்கள் மிகக் குறைவாக இருக்கிறார்கள். இந்த முறை முதல் 100 இடங்களைப் பிடித்தவர்களைப் பார்த்தால், அதில் நிறைய பேர் தொழில்முறை படிப்பைப் படித்தவர்கள். மருத்துவர்களும் பொறியாளர்களும் இதற்கு முயலவேண்டும்," என்கிறார் ஜெயப்ரகாஷ்.

ஐஏஎஸ் தேர்வு
படக்குறிப்பு, ஐஏஎஸ் தேர்வு - கோப்புப்படம்

கடுமையாகும் தேர்வு

அது தவிர, யுபிஎஸ்சியும் சில விஷயங்களில் வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும் என்கிறார் ஜெயப்பிரகாஷ்.

தேர்ச்சியடைபவர்கள் எந்தப் பாடத்தைத் தேர்வுசெய்து தேர்ச்சியடைந்தார்கள், தேர்ச்சியடைந்தவர்களின் வயது விவரம், எத்தனாவது முறையில் தேர்ச்சியடைந்தார்கள் போன்ற புள்ளிவிவரங்களை வெளியிட வேண்டும். அப்படிச் செய்தால், பல விதங்களில் மாணவர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்கிறார் அவர்.

கடந்த சில ஆண்டுகளில் யுபிஎஸ்சியின் தேர்வுகள் மிகக் கடுமையாகி வருவதாகச் சொல்கிறார்கள் பயிற்சியாளர்கள். ஒரு கட்டத்தில் முதன்மைத் தேர்வுகளில் 200க்கு 100 என்பது கட் - ஆஃபாக இருந்தது மாறி, தற்போது 88வரை வந்துவிட்டது என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்கள் அவர்கள்.

"முதன்மைத் தேர்வுகளில் (Preliminary exam) கட் - ஆஃப் குறைந்து வருவது, அந்தத் தேர்வு மிகக் கடினமாகி வருவதைக் காட்டுகிறது. இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே இந்தத் தேர்வை எழுத முடியும் என்பதால், இந்தி தெரிந்தவர்கள் கேள்விகளை உடனடியாகப் புரிந்துகொண்டு எழுத முடியும்.

மற்றவர்கள் ஆங்கிலத்தில் இருக்கும் கேள்விகளைப் புரிந்துகொண்டு எழுத வேண்டும். ஆகவே, இந்தத் தேர்வில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்," என்கிறார் ஷங்கர் ஐஏஎஸ் அகாடெமியின் மேனேஜிங் பார்ட்னரான வைஷ்ணவி.

அதேபோல, பிரதான தேர்வைப் பொறுத்தவரை 1750 மதிப்பெண்களுக்கு எழுத வேண்டும். நேர்முகத் தேர்வுக்கு 275 மதிப்பெண்கள் வழங்குவார்கள். மொத்தம் 2025 மதிப்பெண்கள்.

இதில் பிரதான எழுத்துத் தேர்வில் மாணவர்கள் 800 - 900 வரை மதிப்பெண்களைப் பெற வேண்டும். நேர்முகத் தேர்வில் 150-220 வரை எடுத்தால், தேர்ச்சி பெற்றுவிடலாம்.

ஐஏஎஸ் தேர்வு

"ஆனால், நேர்முகத் தேர்வில் மதிப்பெண் பெறுவதென்பது பல விஷயங்கள் சம்பந்தப்பட்டது. தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் நேர்முகத் தேர்வை எதிர்கொள்வதிலும் பல பிரச்னைகள் இருக்கின்றன.

அதனால், நேர்முகத் தேர்வை பெரிதாகச் சார்ந்திருக்க முடியாது. ஆகவே பிரதான எழுத்துத் தேர்வில்தான் கூடுதல் மதிப்பெண்களைப் பெற வேண்டும்.

இதற்கு நன்றாக எழுதும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். நம்மைச் சுற்றியுள்ளவர்களைக் கவனிக்க வேண்டும். தவிர, கல்லூரி காலத்திலேயே இந்தத் தேர்வுகளுக்குத் தயாராகத் தொடங்க வேண்டும்," என்கிறார் வைஷ்ணவி.

அதேபோல, கடந்த சில ஆண்டுகளில் இலக்கியங்களைத் தங்கள் பிரதான பாடமாகக் கொண்டு தேர்வு எழுதியவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்பதையும் மனதில்கொள்ள வேண்டும் என்கிறார் வைஷ்ணவி.

ஒரு மாநிலத்தில் தேர்ச்சி எண்ணிக்கை குறைந்தால், அந்த மாநிலத்திற்கு பாதிப்பா?

"பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் எனச் சொல்ல முடியாது. ஏனென்றால், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் 'கேடர் லாயல்டி' என்பது மிக முக்கியமான ஒன்று.

அவர்கள் எந்த மாநில 'கேடர்'இல் இடம்பெறுகிறார்களோ அந்த மாநிலத்திற்கு விசுவாசமாக இருப்பார்கள். ஆனால், மத்திய அரசில் தமிழ் ஐஏஎஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை குறைவது ஓரளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்," என்கிறார் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான பாலச்சந்திரன்.

1948இல் துவங்கி பல ஆண்டுகளுக்கு தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய இரு மாநிலங்களைச் சேர்ந்தவர்களே அதிகமாக ஐ.ஏ.எஸ். பதவிகளில் தேர்ச்சி பெற்றதைச் சுட்டிக்காட்டும் பாலச்சந்திரன், அந்தக் காலகட்டத்தில் இந்த இரு மாநிலங்களிலும் அதிகம் படித்தவர்கள் இருந்ததது முக்கியமான காரணம் என்கிறார்.

ஆனால், தற்போது தமிழ்நாட்டில் உயர்கல்வி படிப்பவர்கள் அதிகம் இருந்தாலும் இங்கு வேலை வாய்ப்புகள் மிக அதிகமாக இருப்பதால், இந்தத் தேர்வில் ஆர்வம் காட்டுவதில்லை என்கிறார் அவர்.

வேலைவாய்ப்புகள் குறைவாக உள்ள ஜார்க்கண்ட், சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களே இந்தத் தேர்வில் தற்போது கூடுதல் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

பாலச்சந்திரன்
படக்குறிப்பு, பாலச்சந்திரன், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி

மேலும், குடிமைப் பணி அதிகாரிகள் மீது தற்போது பெரிய மரியாதை இல்லை என்பதும் இந்த வேலை மீதான கவர்ச்சி குறைய முக்கியக் காரணம் என்கிறார் பாலச்சந்திரன்.

தமிழ்நாட்டில் இருந்து தேர்ச்சி குறைவாக இருப்பதற்கு, பயிற்சியாளர்கள் சுட்டிக்காட்டும் ஒரு காரணத்தையும் குறிப்பிடுகிறார் அவர்.

அதாவது முதன்மைத் தேர்வில், கேள்வித்தாள்கள் ஆங்கிலத்திலும் இந்தியிலும் இருப்பது, இந்தி பேசக்கூடிய மாணவர்களுக்கு சாதகமாக உள்ளது என்கிறார்.

"சரியான பதிலைத் தேர்வுசெய்து விடையளிக்கும் கேள்வித்தாளில், எவ்வளவு சீக்கிரம் நாம் கேள்வியைப் படிக்கிறோம் என்பதுதான் முக்கியம்.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள், கேள்வியை ஆங்கிலத்தில் படித்துப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தி பேசும் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் தாய் மொழியிலேயே கேள்வியைப் புரிந்துகொள்ள முடியும்." என்கிறார் பாலச்சந்திரன்.

அதோடு, எல்லா மொழியிலும் முதன்மைத் தேர்வுக்கான கேள்வித்தாளை அச்சிடுவதுதான் இதற்குச் சரியான தீர்வு என்றும் கூறுகிறார் அவர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: