அதிமுக vs அண்ணாமலை: கூட்டணி எதை நோக்கிப் போகிறது?

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

தி.மு.க. மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் தாக்குதலில் இறங்கியிருக்கும் நிலையில், அ.தி.மு.கவும் அவர் மீது விலகலைக் காண்பிக்கிறது. என்ன காரணம்?

கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, தி.மு.கவினரின் சொத்துப் பட்டியலை வெளியிட்டார். மேலும் முதலமைச்சர் மீது ஊழல் புகார் ஒன்றையும் சுமத்தினார். ஆனால், அதற்கடுத்தபடியாக "தி.மு.க. மட்டுமல்ல, தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த அனைத்துக் கட்சியினரின் சொத்துப் பட்டியலையும் வெளியிடுவோம்" என்றார்.

அவரது இந்த வாக்கியம்தான் அ.தி.மு.கவினரை கோபத்திற்குள்ளாக்கியது. அண்ணாமலையின் இந்தக் கருத்து குறித்து செய்தியாளர்கள் அ.தி.மு.கவின் பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிச்சாமியிடம் கேட்டபோது, "ஏன் அவரைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறீர்கள்? இப்படி பேசி பேசித்தான் அவர் பெரிய ஆளாகிறார். எனவே அவரைப் பற்றியே பேச வேண்டாம். நான் அரசியலுக்கு வந்து 50 ஆண்டுகளாகிறது. யாராவது முதிர்ந்த அரசியல் தலைவர் கருத்து குறித்துக் கேட்டால் பதில் சொல்லலாம்" என்று சொன்னார்.

இதற்குப் பிறகு, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் கே. அண்ணாமலையை விமர்சித்துப் பேச ஆரம்பித்தார். "அ.தி.மு.க.தான் கூட்டணித் தலைமை. மற்றவர்கள் நாங்கள் கொடுப்பதை வாங்கிக்கொண்டு செல்லவேண்டியதுதான்" என்று தெரிவித்தார். இது, அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த எல்லாக் கட்சிகளையும் குறிப்பிட்டு சொல்லப்பட்டது என்பதைவிட, பா.ஜ.க. தலைவர் கே. அண்ணாமலையை குறிப்பிட்டுச் சொல்லப்பட்டது என்பதுதான் பொருத்தமாக இருக்கும். அந்த அளவுக்கு அ.தி.மு.கவுக்கும் கே. அண்ணாமலைக்கும் இடையில் இடைவெளி வந்திருக்கிறது.

இந்த விவகாரம் குறித்து பிபிசியிடம் பேசிய அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்டபோது, "அவர் தி.மு.கவினரின் சொத்துப் பட்டியலை வெளியிட்டிருக்கிறார். அதற்கு தி.மு.கவினர் ஏதோ பதில் சொல்லியிருக்கிறார்கள். அதை எதிர்கொள்ள வேண்டியது அவர் பொறுப்பு. மேலும், தி.மு.க மீது குற்றம்சாட்டுவதாக இருந்தால், உடனடியாக சி.பி.ஐ மூலமும் அமலாக்கப் பிரிவு மூலமும் வழக்குப் பதிவுசெய்திருக்க வேண்டும். சம்பந்தமே இல்லாமல் கூட்டணியில் இருக்கும் எங்களை ஏன் 'டச்' பண்ணுகிறார்?

நாங்கள் எதற்கும் அஞ்சாதவர்கள். இதற்கெல்லாம் பயப்பட மாட்டோம். அ.தி.மு.கவினரின் சொத்துப் பட்டியலை வெளியிடட்டும். மடியில் கனம் இருந்தால்தானே பயம் இருக்கும்?

அண்ணாமலை வந்து இரண்டு வருடம்தான் ஆகிறது. புரபேஷன் காலகட்டத்தில் இருப்பவர். கூட்டணியெல்லாம் அவர் முடிவுசெய்ய முடியாது. அமித் ஷாவும் எங்கள் கட்சி பொதுச் செயலாளரும் கூட்டணி இருக்கிறதென சொல்லிவிட்டார்கள். கூட்டணியைப் பற்றி அதற்கு மேல் இவர் என்ன முடிவுசெய்வது?" என்கிறார் ஜெயக்குமார்.

மேலும், அ.தி.மு.க. கூட்டணியைப் பொறுத்தவரை கூட்டணியில் உள்ள பிற கட்சிகள் எங்களிடம் வந்து எத்தனை இடங்கள் வேண்டும், எந்தெந்த இடங்கள் வேண்டுமெனச் சொல்வார்கள். அதில் நாங்களாகப் பார்த்துக் கொடுப்பதைத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் எங்கள் தலைமையில்தான் கூட்டணி. இதிலெல்லாம் எந்த மாற்றமும் இருக்காது என்கிறார் ஜெயக்குமார்.

பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் அண்ணாமலையைப் பொறுத்தவரை, அவர் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடவே விரும்புகிறார் என்பதை பல தருணங்களில் உணர்த்தியிருக்கிறார். இதன் மூலம், 2024ல் தனது பலத்தை உணர்த்தி, 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கூட்டணியில் இருந்தாலும் கூடுதல் இடங்களைக் கேட்டுப் பெறுவது என்பது அவரது திட்டமாக இருக்கக்கூடும். ஆனால், அ.தி.மு.கவைப் பொறுத்தவரை கூட்டணியில் தொடர்வதாகவே சொல்கிறது.

இதற்கிடையில், பா.ஜ.கவின் மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் தலைவரான அமர் பிரசாத் ரெட்டி, ஜெயக்குமார் அளித்த பேட்டிக்கு பதிலளிக்கும் வகையிலும் அவரைச் சீண்டும் வகையிலும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

"எங்களை தேவையில்லாம 'டச்' பண்ணினா நெருப்போட விளையாடற மாதிரின்னு அண்ணன் ஜெயக்குமார் சொல்லி இருக்காரு. அணைந்துபோன நெருப்போட விளையாடுறது எங்களுக்கும் பிடிக்காதுண்ணே... முதல்ல நீங்க எரியும் நெருப்பாகிட்டு அப்புறம் வாங்க. நாங்க எப்படி விளையாடுவோங்கறதை ரசிச்சுப் பாருங்க." என்கிறது அமர் பிரசாத் ரெட்டியின் ட்வீட்.

அமர் பிரசாத் ரெட்டி, கே. அண்ணாமலைக்கு மிக நெருக்கமானவராக அறியப்படும் நிலையில் அவரது இந்த ட்வீட் அண்ணாமலையில் ஒப்புதலோடுதான் பதிவிடப்பட்டதா, அ.தி.மு.கவுடனான கூட்டணியை முறித்துக்கொள்வதற்காக அண்ணாமலையின் ஆதரவாளர்கள் இதுபோலப் பதவிடுகிறார்களா என்பதெல்லாம் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

ஆனால், அ.தி.மு.க. அவசரப்பட்டு எதிர்வினையாற்றுகிறது என்கிறார் பா.ஜ.கவின் மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி. "2024ஆம் ஆண்டும் தேர்தலைப் பொறுத்தவரை, ஊழல்தான் முக்கியப் பிரச்சனையாக இருக்கும்.

ஆகவே, எந்தக் கட்சி ஊழல் செய்தாலும் அதனை வெளியில் கொண்டுவருவோம். அண்ணாமலை பேசியதைத் திரித்து அ.தி.மு.க. தலைவர்களிடம் ஊடகத்தினர் கேள்விகளைக் கேட்கிறார்கள். உண்மையிலேயே அண்ணாமலை அப்படித்தான் பேசினாரா என்பதை ஆராயாமல் அ.தி.மு.கவினரும் பதில் சொல்கிறார்கள். அ.தி.மு.கவினர் இதுபோன்ற சொல்லாடல்களைத் தவிர்க்க வேண்டும்.

அண்ணாமலை பேசுவதற்கு ஊழல் செய்பவர்கள்தான் எதிர்வினையாற்ற வேண்டும். எந்தத் தனி நபர் குறித்தும் அண்ணாமலை பேசவில்லை. எந்தக் கட்சியையும் சொல்லவில்லை.

காங்கிரஸ்கூடத்தான் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்தது. சொல்வதை அவர்கள் சரியாகப் புரிந்துகொண்டு எதிர்வினையாற்ற வேண்டும்" என்கிறார் அவர்.

அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் இயற்கையான கூட்டணி என்று சொல்லிக்கொண்டாலும் 2021ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு தொடர்ந்து இரு கட்சிகளிடையேயும் மோதலே நிலவுகிறது.

இனிமேல் பா.ஜ.கவுடன் கூட்டணியே வைக்க மாட்டேன் என ஜெயலலிதா கூறியிருந்த நிலையில், அவரது மறைவுக்குப் பிறகு 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் கைகோர்த்தன.

ஆனால், மொத்தமுள்ள 39 தொகுதிகளில் அ.தி.மு.க. ஒரே ஒரு தொகுதியை மட்டுமே பெற்றது. 2021 சட்டமன்றத் தேர்தலிலும் இதே கூட்டணி தொடர்ந்தது. அதிலும் தோல்வி.

இதற்குப் பிறகுதான் உரசல்கள் மெல்லமெல்ல வெளிப்பட ஆரம்பித்தன. பா.ஜ.கவிலிருந்த பலர் தாங்கள்தான் உண்மையான எதிர்க்கட்சி என்று சொல்ல ஆரம்பிக்க, இந்த நெருடலும் மோதலும் உச்சகட்டத்தை நோக்கிச் சென்றது. இதனால், உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க. தனித்தே போட்டியிட்டது.

அ.தி.மு.கவைப் பொறுத்தவரை தாங்கள் தொடர்ந்து தாங்கள் பா.ஜ.க. கூட்டணியில்தான் இருக்கிறோம், கூட்டணி குறித்து பா.ஜ.கவின் தேசியத் தலைமையே முடிவுசெய்யும் என்று சொல்லிவருகிறது.

ஆனால், இரு கட்சியின் தலைவர்களிடையே நிகழும் வாக்குவாதம் இரு கட்சியின் தொண்டர்களிடமும் பிளவை ஏற்படுத்த ஆரம்பித்திருக்கிறது. இரு தரப்பினரும் ஆபாசமாக ட்விட்டரில் திட்டிக்கொள்ளும் அளவுக்கு நிலைமை கீழிறங்கியிருக்கிறது.

ஜெயலலிதாவைப் போல நானும் ஒரு ஆளுமை என்று சொன்னது, எடப்பாடி கே. பழனிச்சாமியின் படத்தை எரித்தவர்களை கட்சியில் மீண்டும் சேர்த்துக்கொண்டது போன்றவையெல்லாம் அ.தி.மு.க. தொண்டர்களிடம் ஆறாத காயமாகவே இருக்கின்றன.

அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் ஒரே கூட்டணியில் இல்லாவிட்டால்கூட இந்த அளவுக்கு இருவருக்கிடையில் கசப்புணர்வு வளர்ந்திருக்காது என்ற அளவுக்கு நிலைமை மோசமாகியிருக்கிறது. இப்போதைய சூழலில் "மத்தியத் தலைமையுடன்தான் பேச்சு, கூட்டணி தொடர்கிறது" என அ.தி.மு.க. சொல்லிக்கொண்டிருக்கிறது. மாநில பா.ஜ.கவோ குழப்பமான சமிக்ஞைகளை வெளியிடுகிறது.

2024வரை இதே போன்ற நிலை நீடித்தால், இரு கட்சிகளுக்குமே அது நல்ல விளைவை அளிக்காது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: