You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமித் ஷாவுக்காக அன்று ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர்; இப்போது ராகுலுக்கு தண்டனை வழங்கிய நீதிபதி
- எழுதியவர், சுபைர் அகமது
- பதவி, பிபிசி செய்தியாளர்
'மோதி குடும்பப்பெயர்' வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் தன்னை குற்றவாளி என்று அறிவிக்கும் முடிவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மேல்முறையீடு செய்துள்ளார்.
போலி என்கவுன்டர் தொடர்பான ஒரு வழக்கில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வழக்கறிஞராக இருந்த நீதிபதி ராபின் பால் மொகேரா இந்த வழக்கை விசாரித்து வருகிறார்.
நீதிபதி ஆவதற்கு முன்பு, ராபின் பால் குஜராத்தில் மொகேராவில் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார். 2017ல் அவர் மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
வழக்கறிஞர்களுக்கான 25 சதவிகித இடஒதுக்கீட்டின் மூலமாக அவர் நீதிபதியாக ஆனார்.
அமித் ஷாவின் வழக்கறிஞராக செயல்பட்டவர்
துளசிராம் பிரஜாபதியின் போலி என்கவுண்டர் என்று கூறப்பட்ட வழக்கில் அமித்ஷா சார்பில் சிபிஐ நீதிமன்றத்தில் அவர் வாதாடினார்.
பிரஜாபதியின் என்கவுண்டர் 2006 டிசம்பரில் நடந்தது. 2005 ஆம் ஆண்டு நடந்த சொராபுதீன் என்கவுண்டர் சம்பவத்தில் பிரஜாபதி நேரில் கண்ட சாட்சி.
இந்த இரண்டு என்கவுண்டர்களின்போதும் குஜராத்தில் உள்துறை அமைச்சராக அமித் ஷா இருந்தார்.
பின்னர் சொராபுதீன் ஷேக் மற்றும் துளசிராம் பிரஜாபதி போலி என்கவுன்டர் வழக்குகளில் இருந்து மத்திய புலனாய்வு கழகத்தின் (சிபிஐ) சிறப்பு நீதிமன்றத்தால் அமித் ஷா விடுவிக்கப்பட்டார்.
அரசியல் போட்டியாளருக்கு ஒருமுறை வழக்கறிஞராக இருந்தவர், இதுபோன்ற வழக்கை நீதிபதியாக விசாரிப்பது சரியா என்ற கேள்விகள் இப்போது எழுந்துள்ளன.
இது தார்மீக ரீதியாக சரியானதா? இது நீதிபதியின் தார்மீகத்தைப் பொருத்தது என்று உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஷாஷ்வத் ஆனந்த் கூறுகிறார்.
" குற்றவாளி-மேல்முறையீட்டாளரின் தற்போதைய அரசியல் போட்டியாளர் ஒருவரின் வழக்கறிஞராக இருந்தவர், இந்த வழக்கில் நீதிபதியாக உள்ளார். சாத்தியமான பாரபட்ச குற்றச்சாட்டுகளைத் தவிர்ப்பதற்காகவும், நியாயமான செயல்பாட்டின் நலன் மற்றும் நீதித்துறையின் கண்ணியத்தை கருத்தில்கொண்டும் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அவர் அவ்வாறு செய்யவேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை,” என்று அவர் கூறினார்.
இதுபோன்ற வழக்குகளில் இருந்து நீதிபதிகளை நீக்குவது என்பது இந்தியாவின் எந்த சட்டத்திலும் இல்லை. ஆனால் அது ஒரு பாரம்பரியம் என்றும் ஆனந்த் கூறுகிறார்.
இந்த பாரம்பரியத்தின் மிகப் பழமையான உதாரணம் 1852 ஆம் ஆண்டு வழக்கில் காணப்படுவதாக ஷாஷ்வத் ஆனந்த் கூறுகிறார்.
பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் 1852 ஆம் ஆண்டின் இந்த வழக்கு டைம்ஸ் vs கிராண்ட் ஜங்ஷன் கால்வாய் உரிமையாளர், 3 HL வழக்கு எண். 759.
இதில் லார்ட் சான்சிலர் கோட்டன்ஹாம், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் சில பங்குகளை வைத்திருந்ததால், வழக்கில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டார்.
அப்போதிருந்து இது எல்லா நீதிமன்றங்களிலும் ஒரு வழக்கமான நடைமுறையாக வளர்ந்தது.
"நீதிபதி அல்லது மாஜிஸ்திரேட்டுக்கு தனிப்பட்ட முறையில் ஆதாயமுள்ள வழக்குகளை விசாரிப்பதை சிஆர்பிசியின் 479வது பிரிவு தடுக்கிறது. மேலும், ஒரு நீதிபதி பாரபட்சமாக இருக்க்கூடும் என்று சந்தேகிக்கப்பட்டால், நீதிபதி வழக்கில் இருந்து விலக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்புகளில் கூறியுள்ளது." என்று ஆனந்த் சுட்டிக்காட்டினார்.
விசாரணையில் இருந்து விலக விரும்பும் நீதிபதிகள் ஏன் விலகுகிறார்கள் என்பதை விளக்க வேண்டிய அவசியமில்லை என்கிறார் ஷாஷ்வத் ஆனந்த்.
சில வழக்குகளில் இருந்து தங்களை விலக்கிக் கொள்ளுமாறு நீதிபதிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்ய மாட்டார்கள்.
இரண்டு வகைகளுக்கும் சில எடுத்துக்காட்டுகள் உள்ளன:
- ஒரு சந்தர்ப்பத்தில், அப்போதைய நீதிபதி என்.வி. ராமண்ணா, எம்.நாகேஸ்வர ராவின் மகள் திருமணத்தில் கலந்துகொண்டதை காரணம் காட்டி, இடைக்கால சிபிஐ இயக்குநர் எம்.நாகேஸ்வர ராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கை விசாரிப்பதில் இருந்து விலகினார்.
- நீதிபதி லோயா வழக்கில், அப்போதைய நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் (தற்போதைய தலைமை நீதிபதி) விசாரணையில் இருந்து விலகுமாறு பலமுறை கேட்டுக் கொள்ளப்பட்டார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் பம்பாய் உயர் நீதிமன்றத்தின் நீதிபதி. நீதிபதி சந்திரசூட் நீதிபதியாக தனது பணியை அங்கிருந்துதான் தொடங்கினார். ஆனால் வழக்கில் இருந்து விலக அவர் மறுத்தார்.
- ஸ்டெரைட் தொடர்பான இதேபோன்ற வழக்கில், அப்போதைய நீதிபதி எஸ்.எச்.கபாடியாவை, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், நலன் முரண்பாடு மற்றும் பாரபட்சம் ஆகியவற்றின் அடிப்படையில் விலகுமாறு கேட்டுக் கொண்டார், ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை.
- எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் பிற பாஜக- விஎச்பி தலைவர்களுக்கு எதிராக குற்றவியல் சதி வழக்கை கைவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்வதிலிருந்து, 2016 ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்ற நீதிபதி கோபால் கெளடா, எந்த காரணமும் கூறாமல் விலகினார்.
ராகுல் காந்திக்கு தண்டனை
2019 ஆம் ஆண்டின் அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் கடந்த மாதம் 23-ஆம் தேதி தண்டனை வழங்கியது.
சூரத்தின் தலைமை நீதித்துறை மாஜிஸ்ட்ரேட் எச்.எச்.வர்மா, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 499 மற்றும் 500-ன் கீழ் அவதூறாக பேசிய குற்றத்திற்காக காங்கிரஸ் எம்.பி.க்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் .15,000 அபராதமும் விதித்தார்.
2019 ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலுக்கு முன் ராகுல் காந்தி, கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் தனது உரை ஒன்றில், 'நீரவ் மோதி, லலித் மோதி, நரேந்திர மோதி... இவர்களின் குடும்பப்பெயர் மோதி எப்படி? எல்லா திருடர்களின் குடும்பப்பெயரும் மோதி என்று இருப்பது ஏன் என்று கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து, பாஜக தலைவரும் குஜராத் முன்னாள் அமைச்சருமான பூர்ணேஷ் மோதி, ராகுல் காந்தி தனது கருத்துகளால் மோதி சமூகத்தை இழிவுபடுத்தியதாகக் கூறி கிரிமினல் வழக்கு தொடர்ந்தார்.
நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை அடுத்து ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டபோது, தன் வாயை அடைப்பதற்கான மோதி அரசின் முயற்சி இது என்று அவர் கூறியிருந்தார்.
“ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது இந்திய ஜனநாயக வரலாற்றில் இருண்ட நாள். விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பில் பல சட்ட சிக்கல்கள் இருக்கிறது. எங்கள் சட்டக் குழுவால் பொருத்தமான இடத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று ராகுல் காந்தியின் உறுப்பினர் பதவி பறிப்பு குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறினார்.
சூரத்தில் உள்ள நீதிபதி மொகேராவின் நீதிமன்றத்தில் ஏப்ரல் 3 ஆம் தேதியன்று ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார்.
'மோதி குடும்பப்பெயர்' அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் மனுவை விசாரித்த நீதிபதி, அன்றைய தினமே பிறப்பித்த உத்தரவில் அவரது தண்டனையை நிறுத்தி வைத்தார்.
மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. 15,000 ரூபாய் ஜாமீன் பத்திரத்தை அளிக்குமாறு ராகுல் காந்தியிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.
நீதிபதி ராபின் பால் மொகேரா 2014ல் அமித்ஷாவின் வழக்கறிஞராக இருந்தார். 2014 ஜூன் மாதம் அமித் ஷா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மொகேரா, தனது கட்சிக்காரர் நீதிமன்றத்திற்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்படவேண்டும் என்று இரண்டு தனித்தனி சந்தர்பங்களில் முறையிட்டார்.
இதற்கு நீதிபதி அதிருப்தி தெரிவித்தார். சில நாட்களுக்குப் பிறகு, நீதிபதி மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக நீதிபதி பி.எச்.லோயா நியமிக்கப்பட்டார்.
பிகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோதியும் ராகுல் காந்தி மீது தனி கிரிமினல் அவதூறு புகாரை பதிவு செய்துள்ளார்.
இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு பிகார் சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்த நிலையில், அவரால் நேரில் ஆஜராக முடியவில்லை. தற்போது அவரை ஏப்ரல் 25ஆம் தேதி ஆஜராகுமாறு நீதிமன்றம் கூறியுள்ளது.
சமீபத்தில் சாவர்க்கருக்கு எதிரான கருத்துகளுக்காகவும் ராகுல் காந்தி விமர்சனங்களை எதிர்கொண்டார்.
மகாராஷ்டிர மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உட்பட பல பாஜக மற்றும் சிவசேனா தலைவர்கள் அவரது கருத்துக்காக அவரை 'தண்டிக்க'வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
ராகுல் காந்தி மீது இருக்கும் மற்ற அவதூறு வழக்குகள்
ராகுல் காந்தி மீது மேலும் சில அவதூறு வழக்குகள் உள்ளன.
2014 ஆம் ஆண்டில், ஆர்எஸ்எஸ் செயல்பாட்டாளர் ராஜேஷ் குண்டே மிஷ்ரா அளித்த புகாரின் அடிப்படையில், ஐபிசியின் 499 மற்றும் 500 பிரிவுகளின் கீழ் மற்றொரு அவதூறு வழக்கில் பிவாண்டி நீதிமன்றம் அவருக்கு சம்மன் அனுப்பியது.
மகாத்மா காந்தியின் படுகொலைக்கு ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) காரணம் என்று குற்றம்சாட்டியதற்காக ராகுல் காந்தி மீது புகார் தாக்கல் செய்யப்பட்டது.
2014 மக்களவை தேர்தலுக்கு முன், மகாராஷ்டிராவின் பிவாண்டி பகுதியில் நடந்த காங்கிரஸ் பேரணியின் போது, ராகுல் காந்தி,"இது அவர்களது பாணி. காந்திஜி அவர்களால் கொல்லப்பட்டார். ஆர்எஸ்எஸ் அமைப்பினர் காந்திஜியை சுட்டுக் கொன்றனர். இன்று அவரைப்பற்றி பேசுகின்றனர்,” என்று கூறியதாக ஆர்எஸ்எஸ் தொண்டர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி ராகுல் காந்தி மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகினார். ஆனால் அவருக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை.
இதைத் தொடர்ந்து அவர் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். ஆனால் அங்கும் அவருக்கு நிவாரணம் கிடைக்கவில்லை.
சூரத் நீதிமன்றத்தால் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு ராகுல் காந்தி ஒரு புதிய அவதூறு வழக்கை எதிர்கொண்டுள்ளார்.
பாரத் ஜோடோ யாத்திரையின் போது ராகுல் காந்தி கூறிய கருத்து தொடர்பாக ஹரித்வார் நீதிமன்றத்தில் சில வாரங்களுக்கு முன் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் ஆற்றிய ஒரு உரையில், ஆர்எஸ்எஸ் அமைப்பை "21ஆம் நூற்றாண்டின் கௌரவர்" என்று ராகுல் காந்தி அழைத்தது தொடர்பானது இந்த வழக்கு.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்