You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சோழர்களை எதிர்த்து போராடிய ஈழத் தமிழர்கள் - சோழர்களின் படைகளில் சிங்கள வீரர்கள்
- எழுதியவர், ரஞ்சன் அருண்பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக, இலங்கை
இலங்கையை ஆட்சி செய்த சோழர்களிடமிருந்து நாட்டை மீள கைப்பற்றுவதற்கு சிங்கள படைகளுடன் இணைந்து தமிழர்களும் படையெழுத்துள்ளனர்.
இலங்கையை கி.பி 993ம் ஆண்டு முதல் சுமார் 70 ஆண்டு காலம் சோழர்கள் ஆட்சி செய்துள்ளமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
சோழ மன்னனான முதலாம் ராஜராஜன், இலங்கை மீது படையெடுத்து முதல் முதலில் இலங்கையின் வடப் பகுதி முதல் அநுராதபுரம், பொலன்னறுவை போன்ற பகுதிகளையும் கைப்பற்றி தனது ஆட்சியை நிலைநிறுத்தியுள்ளார்.
அநுராதபுரத்தை தலைநகராக பயன்படுத்தி, பின்னரான காலத்தில் சோழர்கள் பொலன்னறுவையை தலைநகராக அறிவித்துள்ளனர்.
எனினும், முதலாம் ராஜராஜனை தொடர்ந்து, இலங்கைக்கு வருகைத் தந்த ராஜேந்திர சோழன், இலங்கையின் தென் பகுதியையும் கைப்பற்றி, தனது ஆட்சியை இலங்கை முழுவதும் நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.
இதன் பிரகாரம், சோழர்களின் ஆட்சி இலங்கை முழுவதும் நிலைக்கொண்டுள்ளது.
ஆனால், ராஜேந்திர சோழனினால் இலங்கையை தொடர்ச்சியாக தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
வட இலங்கையில் மாத்திரமே சோழர்களின் ஆட்சி முழுமையாக நிலவியுள்ளதுடன், தென் இலங்கையில் சோழர்களினால் அவ்வாறு ஆட்சியை முழுமையாக தொடர முடியவில்லை.
தென் இலங்கையில் சோழர்களின் ஆட்சி சுமார் 4 முதல் 5 ஆண்டுகள் தொடர்ந்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே, சோழர்களுக்கு எதிரான கிளர்ச்சிகள் ஆரம்பித்ததாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை சிரேஷ்ட பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
''அநுராதபுரத்தை தலைநகராக கொண்ட அரசை வெற்றிக் கொண்டதன் மூலம் இலங்கையின் வடப் பாகத்தை ஆட்சி செய்தார்கள் என்பதை கல்வெட்டுக்கள் உறுதிப்படுத்துகின்றன.
ஆனால், ராஜேந்திர சோழனின் கல்வெட்டுக்களில் ''முரட்டொழில் சிங்கள ஈழ மண்டலம் முழுவதும்" முழு இலங்கையையும் தான் வெற்றிக் கொண்டதாக அவர் பெருமையாக பேசிக் கொள்கின்றார். அந்த வெற்றியின் பின்னர் தான் 1025ம் ஆண்டு தென்கிழக்காசியா மீது படையெடுத்த ஸ்ரீ விஜய அரசை வெற்றிக் கொள்கின்றார்.
அந்த படையெழுப்பிற்கு திருகோணமலை, ஊர்காவற்துறை போன்ற துறைமுகங்களிலிருந்தும் சோழர் படைகள் சென்றதாக சொல்லப்படுகின்றது." என அவர் கூறுகின்றார்.
தென்னிலங்கையில் சோழர்களின் ஆட்சி
தென்னிலங்கையில் சோழர்களின் ஆட்சி முழுமையாக நிலவியது என்பதை ஏற்றுக்கொள்வது கடினம் என யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை சிரேஷ்ட பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம் கூறுகின்றார்.
''தென்னிலங்கையில் இவர்களுடைய ஆதிக்கம் முழுமையாக நிலவியது என்பதை ஏற்றுக்கொள்வது கடினம். ஏனென்றால், ஒரு நான்கு, ஐந்து ஆண்டுகள் இவர்களுடைய ஆட்சி நிலவிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே அவனுக்கு எதிரான கிளர்ச்சிகள் விஜயபாகு தலைமையில் தென்னிலங்கையில் உருவாகியுள்ளது." என அவர் குறிப்பிடுகின்றார்.
விஜயபாகு படையில் தமிழர்கள்
தென்னிலங்கையை ஆட்சி செய்த சோழர்களுக்கு எதிராக படையெழுத்த விஜயபாகு தலைமையிலான படைகளில் தமிழர்களும் இருந்துள்ளதாக சிரேஷ்ட பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம் குறிப்பிடுகின்றார்.
''விஜயபாகு படையில் சிங்கள படை வீரர்கள் மட்டும் அல்ல. தமிழ் படை வீரர்களும் சேர்ந்து சோழர்களுக்கு எதிராக போரிட்டுள்ளார்கள். அதேநேரத்தில், சோழர் படையிலும் கூட சோழர்களோடு சிங்கள படை வீரர்களும் இணைந்து தான் போரிட்டுள்ளனர். ஆட்சி, அதிகாரத்தை கைப்பற்ற போராடிக் கொண்டார்கள்," என அவர் கூறுகின்றார்.
சோழர்களின் ஆட்சி 77 ஆண்டுகளும் இலங்கையில் நிலவியதா?
சோழர்களின் ஆட்சி இலங்கை முழுவதும் 77 ஆண்டு நிலவியது என்று சொல்ல முடியாது என யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை சிரேஷ்ட பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம் தெரிவிக்கின்றார்.
''சோழர்களின் ஆட்சி இலங்கை முழுவதும் 77 ஆண்டு காலம் நிலைத்தது என்று சொல்ல முடியாது. சில, பல ஆண்டுகள் வரை சோழர்களின் ஆட்சி தென்னிலங்கை வரை சென்றது உண்மை. ஆனால், அதற்கு எதிராக பல கிளர்ச்சிகள் ஏற்பட்ட போது, சோழர்களின் மேலாதிக்கம் தென்னிலங்கையில் குறைவு என்று தான் சொல்லலாம்." என அவர் குறிப்பிடுகின்றார்.
இதேவேளை, குருநாகல் மாவட்டத்தின் புதுமத்தாவய என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு, சோழர்களின் ஆட்சி இலங்கையின் தென் பகுதியிலும் தொடர்ந்தமையை உறுதிப்படுத்தி நிற்பதாக அவர் கூறுகின்றார்.
பொலன்னறுவை கால அரசியலில் சோழருடைய வகிபாகம், தென் இலங்கையில் இருந்ததை கூறுகின்றது என அவர் குறிப்பிடுகின்றார்.
இலங்கையில் அதிகளவில் ஆட்சி செய்த சோழர் யார்?
இலங்கையை அதிகளவில் ஆட்சி செய்த மன்னர் என்றால், அது ராஜேந்திர சோழன் என சிரேஷ்ட பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம் தெரிவிக்கின்றார்.
எனினும், சோழர்கள் இலங்கையில் நேரடியாக ஆட்சியில் அமரவில்லை. மாறாக அவர்களின் பிரதிநிதிகளே இலங்;கையை ஆட்சி செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்;.
''சோழர்களின் ஆட்சி காலத்தில் அவர்களின் ஆதிக்கத்திற்குட்பட்ட நாடுகளில் 9 மண்டலமாக பிரிக்கப்பட்டிருந்தது. அந்த 9 மண்டலங்களில் ஒன்று தான் இலங்கை. இலங்கையை மும்மொழி சோழ மண்டலம் என்று பெயரிட்டு, அதற்கு பொறுப்பாக தங்களுடைய பிரதிநிதியை தான் இலங்கையில் ஆட்சி செய்ய விட்டார்கள்." என அவர் கூறுகின்றார்.
சோழ லங்கேஷ்வரன் என்பவரே, சோழர்களின் பிரதிநிதியாக இலங்கையை ஆட்சி செய்துள்ளமை கந்தளாய் பகுதியில் கிடைத்த கல்வெட்டுக்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
அதற்கு பின்னரான காலத்திலும் சோழர்கள் வந்திருக்கக்கூடும் என கூறும் அவர், அதற்கான ஆதாரங்கள் கிடையாது என தெரிவித்துள்ளார்.
''சுமார் 70 ஆண்டுகள் இலங்கையை ஆட்சி சென்ற போது, பல சோழ மன்னர்கள் இருந்திருக்கின்றார்கள். அவர்களுடைய பிரதிநிதிகள் இங்கு ஆட்சி செய்தார்கள்." என அவர் கூறுகின்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்