You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
700 ஆண்டு பழமையான கம்போடிய அங்கோர் வம்சத்தின் விலைமதிப்பற்ற பொக்கிஷம் லண்டனில் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?
- எழுதியவர், செலியா ஹேடன்
- பதவி, பிபிசி நியூஸ்
கம்போடியாவின் 700 ஆண்டுகள் பழமையான அங்கோர் வம்சத்தின் அரச நகைகள் லண்டனில் கண்டுபிடிக்கப்பட்டன.
பழங்கால தொல்பொருட்களை கடத்தி வந்த பிரிட்டனை சேர்ந்த டக்ளஸ் லாட்ச்ஃபோர்ட் என்பவரிடம், திருடப்பட்ட இந்த நகைகள் இருந்துள்ளன. இது போன்ற பழங்கால நகைகளை தாங்கள் பார்த்ததே இல்லை என்றும் அதை கண்டு வியப்பதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த நகைகள் கம்போடியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. அந்த நாட்டின் தேசிய அருங்காட்சியகத்தில் இவை விரைவில் காட்சிக்கு வைக்கப்படும்.
லாட்ச்ஃபோர்ட் 2020 ஆம் ஆண்டில் காலமானார். அந்த நேரத்தில் அவர் மீது அமெரிக்காவில் வழக்கு நடைப்பெற்று வந்தது. அவரது மரணத்திற்குப் பிறகு அவரது குடும்பத்தினர் திருடப்பட்ட இந்த நகைசேகரிப்பை கம்போடியாவுக்கு திருப்பித் தருவதாக உறுதியளித்தனர்.
ஆனால் உண்மையில் என்ன கிடைக்கும், எப்படி கிடைக்கும் என்று அதிகாரிகளுக்குத் தெரியவில்லை.
கம்போடியாவின் புலனாய்வுக் குழுவின் தலைவரான பிராட் கார்டன், அந்நாட்டிலிருந்து நகைகளைப் பார்த்த முதல் பிரதிநிதி ஆவார். கடந்த கோடையில் அவர் லண்டனுக்கு சென்றிருந்தார்.
"லாட்ச்ஃபோர்ட் குடும்பத்தினர் என்னை ஒரு தெரியாத இடத்திற்கு அழைத்துச் சென்றனர். கார் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் நான்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன,"என்று அவர் பிபிசியிடம் கூறினார்.
"நான் உணர்ச்சிவசப்பட்டேன். ஆஹா, ஒரு காரின் டிக்கியில் பண்டைய கம்போடிய நாகரிகத்தின் நான்கு பெட்டி அரச நகைகள் உள்ளன என்று மனதில் நினைத்தேன்," என்றார் அவர்.
அங்கோர்வாட் கோவில் சூறை
இந்த பெட்டிகளை திறந்து பார்த்தபோது, அதில் 77 தங்க ஆபரணங்கள் இருப்பது தெரியவந்தது. இவற்றில் கிரீடங்கள், ஒட்டியாணங்கள் மற்றும் காதணிகள் அடங்கும். இத்தொகுப்பில் காணப்படும் ஒரு பெரிய கிண்ணம் 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கிண்ணம் அங்கோர் அரச குடும்பத்திற்கு சாதம் பரிமாற பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று நிபுணர்கள் ஊகிக்கின்றனர்.
கண்டுபிடிக்கப்பட்ட கிரீடங்களில் ஒன்று அங்கோர் சகாப்தத்திற்கு முந்தையது என்றும் இது 7 ஆம் நூற்றாண்டின் கைவினைஞர்களால் செய்யப்பட்டிருக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள். ஒரு செதுக்கப்பட்ட மலர் கலைப்படைப்பு மற்ற ஆபரணங்களில் காணப்படுகிறது. இதில் ஏதோ ரகசியம் உள்ளது என்ற உணர்வை அது தருகிறது.
இது எதற்காக உருவாக்கப்பட்டது, எதற்காகப் பயன்படுத்தப்பட்டது என்பது நிபுணர்களுக்குத்தெரியவில்லை.
இந்த நகைகள் எப்போது, எப்படி திருடப்பட்டன, எப்படி லண்டனை அடைந்தது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இந்த ஆபரணங்களின் வடிவமும் அளவும் அங்கோர்வாட் கோவிலின் உள்ளே இருக்கும் கல் வேலைப்பாடுகளை ஒத்திருக்கிறது.
அங்கோர்வாட், யுனெஸ்கோவிடமிருந்து உலக பாரம்பரிய சின்ன அந்தஸ்தைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது உலகின் மிகப்பெரிய மத நினைவுச்சின்னமாகும். விஷ்ணு பகவானுக்கு அர்ப்பணிக்க இதன் கட்டுமானம் கி.பி 1122 இல் தொடங்கப்பட்டது.
பிரெஞ்சு காலனித்துவ காலத்தில் அங்கோர்வாட் சூறையாடப்பட்டது. கம்போடியாவின் மற்ற கோயில்கள் 1970 களில் கெமர் ரூஜ் ஆட்சியின் போது கொள்ளையடிக்கப்பட்டன. அதன் பிறகு அந்த நாட்டில் பல தசாப்தங்கள் கொந்தளிப்பு நிலவியது.
நகைகளை விற்க புத்தகம் எழுதப்பட்டது
தொல்பொருள் ஆய்வாளர் சோனேத்ரா செங், அங்கோர்வாட்டின் ஆபரணங்கள் மற்றும் அதில் செய்யப்பட்டிருக்கும் வேலைப்பாடுகள் குறித்து பல ஆண்டுகள் ஆய்வு செய்துள்ளார்.
"இந்த நகைகளில் காணப்படும் வேலைப்பாடுகள், வதந்திகளை உண்மையாக்கிவிட்டன. கம்போடியா கடந்த காலத்தில் மிகவும் செல்வந்த நாடாக இருந்தது. வெளிநாட்டில் கிடைத்த ஒரு சேகரிப்பில் இவ்வளவு இருக்கிறது என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை," என்று அவர் கூறினார்.
இந்த ஆபரணங்களில் சில முன்பும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 2008 ஆம் ஆண்டில், டக்ளஸ் லாட்ச்ஃபோர்ட், தனது சக ஊழியரான எம்மா பங்கருடன் சேர்ந்து, ’கெமர் கோல்ட்’ என்ற புத்தகத்தை எழுதினார். அதில் இந்தத் தொகுப்பில் உள்ள சில நகைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
கெமர் தொல்பொருட்கள் குறித்த நிபுணரான ஆஷ்லே தாம்சன், இந்தப் புத்தகத்தையும் வேறு இரண்டு புத்தகங்களையும் 'விற்பனைக்கான பிரசுரங்கள்' என்று விவரித்தார். சட்டவிரோதமாக எவையெல்லாம் விற்கப்படுகின்றன என்பதை தெரிவிப்பதற்காக தனியார் சேகரிப்பாளர்களுக்கு இவை வழங்கப்பட்டன.
"இந்த நகைகளை பற்றிய விவரங்களை வெளியிடுவது, அருங்காட்சியகத்தில் முன்பு உள்ள மற்ற பொருட்களுடன் அவற்றை பொருத்திப்பார்க்க மற்ற நிபுணர்களை அழைப்பது ஆகியவை அவற்றை சட்டப்பூர்வமாக்குவதற்கும் அவற்றின் உண்மையான மதிப்பை தெரிந்துகொள்வதற்கும் ஒரு வழியாகும்,"என்று ஆஷ்லே தாம்சன் தெரிவித்தார்.
இந்த நகைகளை ஆராய நிபுணர்களுக்கு நேரம் எடுக்கும் என்று லண்டனில் உள்ள SOAS பல்கலைக்கழகத்தின் தென்கிழக்கு ஆசிய கலைப் பேராசிரியர் தாம்சன் கூறினார்.
பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் பல ஆபரணங்கள்
அங்கோர் வம்சத்தின் இன்னும் பல ஆபரணங்கள் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதாக கம்போடிய அதிகாரிகள் கருதுகின்றனர். லாட்ச்ஃபோர்ட், 2019 இன் பிற்பகுதி வரை சேகரிப்பிலிருந்து நகைகளை விற்க ரகசிய முயற்சிகளை மேற்கொண்டார். மின்னஞ்சல் மூலம் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டார். இந்த கடித ஆதாரம் கம்போடியாவிடம் உள்ளது.
லாட்ச்ஃபோர்டின் கூட்டாளிகளும் விசாரிக்கப்படுகிறார்களா என்று நாங்கள் லண்டனின் பெருநகர காவல்துறையிடம் கேட்டோம். ஆனால் அவர்கள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
கிரிமினல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு முன்பும், விசாரணையின் போதும் யாருடைய அடையாளத்தையும் வெளியிட முடியாது என்றும் எங்களிடம் தெரிவிக்கப்பட்டது.
சிலரை நேர்காணல் செய்ய பிபிசி, சென்ற ஆண்டு கம்போடியாவுக்குச் சென்றது. பிற்காலத்தில் அரசாங்க சாட்சிகளாகி, பழங்கால நகைகளை அடையாளம் காட்டியவர்கள் அவர்கள்.
கோயில்களில் இருந்து இவற்றைத் திருடி, பின்னர் லாட்ச்ஃபோர்டுக்கு விற்றதாக அவர்கள் கூறினார்கள். புலனாய்வாளர்கள் இந்த பொருட்களில் சிலவற்றை, தற்போது பிரிட்டிஷ் மியூசியம் மற்றும் V&A போன்ற புகழ்பெற்ற பிரிட்டிஷ் நிறுவனங்களில் உள்ள நகைகளுடன் பொருத்திப்பார்த்தனர்.
பிபிசிக்கு பேட்டியளித்த பெண்களில் ஒருவரான அயர்ன் பிரின்சஸ், அந்த ஆபரணங்களை அடையாளம் காண்பதில் பணியாற்றுவார்.
தற்போது இந்தத் தொகுப்பை நாட்டின் ஆட்சியாளர் ஹுன் சென் ஏற்றுக்கொள்வார்.
பல தசாப்தங்களாக தூசி நிறைந்த பெட்டியில் பூட்டி வைக்கப்பட்டிருந்த இந்த ஆபரணங்கள் கம்போடியாவில் பொது மக்களுக்கு விரைவில் காட்சிப்படுத்தப்படும். இந்த ஆபரணங்களின் பிரகாசம் கம்போடியா முழுவதும் மீண்டும் பரவும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்