ஆளுநர் vs முதல்வர்: குடியரசுத் தலைவருக்கு ஸ்டாலின் திடீர் கடிதம் ஏன்? அதன் பின்னணி என்ன?

ஆளுநர் ரவி- முதல்வர் மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆளுநர் ஆ.என்.ரவி செயல்பாடு தொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்

தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே மோதல் போக்கு நிலவிவரும் சூழலில், ஆளுநரின் செயல்பாடுகள் தமிழ்நாட்டிற்கும் மக்களும், அரசுக்கும் எதிராக அமைந்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ஆர்.என். ரவி ஆளுநர் பதவியில் நீடிக்க தகுதியற்றவர் என்றும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி பதவியேற்றார். அதன் பின்னர் `தமிழ்நாடு - தமிழகம்` பெயர் சர்ச்சை, திராவிடம் குறித்த கருத்து, மசோதாவை நிறுத்திவைப்பதாக எழும் குற்றச்சாட்டு, அரசு தயாரித்த உரையில் சில பகுதிகளை சட்டப்பேரவையில் வாசிக்காமல் விட்டது என பல்வேறு விவகாரங்களிலும் தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநருக்கு இடையே மோதல் போக்கு நிலவிவருகிறது.

இதில் சமீபத்தியதாக, செந்தில்பாலாஜி விவகாரம் இணைந்தது. செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஆளுநர் வலியுறுத்தினார். அமலாக்கத்துறை வழக்கை சந்தித்து வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியை ஆளுநர் பதவி நீக்கம் செய்வதாக ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பு வெளியிட்டது. பின்னர் இந்த அறிவிப்பு நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது.

அதேவேளையில், அமைச்சரை நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இருவருக்கும் இடையேயான கடித விவரங்களும் வெளியானது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எரிச்சலூட்டும், மிதமிஞ்சிய வார்த்தைகளைக் கூறியதாக ஆளுநர் ரவி தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

ஆளுநர் ரவி- முதல்வர் மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, திரௌபதி முர்மூ- குடியரசுத் தலைவர்

தற்போது டெல்லி சென்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஜூலை 8ஆம் தேதி சந்தித்து பேசினார். அமித் ஷாவுடன் ஆளுநர் ரவி பயனுள்ள சந்திப்பை மேற்கொண்டார் என்று ஆளுநர் மாளிகையின் ட்விட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிய திருப்பமாக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், ஆளுநர் போன்ற உயர்ந்த அரசியலமைப்பு பதவியில் ஆர்.என்.ரவி நீடிப்பது விரும்பத்தக்கதாகவோ அல்லது பொருத்தமானதாகவோ உள்ளதா என்பதை குடியரசுத் தலைவரின் முடிவுக்கே விட்டுவிடுவதாகவும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

கடிதத்தில் கூறப்பட்டுள்ளது என்ன?

தமிழ்நாடு சட்டப்பேரவை இயற்றி அனுப்பியுள்ள சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநர் தேவையற்ற காலதாமதம் செய்வதாக முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். சட்டமுன்வடிவுகள் தொடர்பாக ஆளுநர் கோரிய அனைத்து விளக்கங்களையும் தமிழ்நாடு அரசு அளித்துள்ளது என்றும் சட்ட முன் வடிவுகளுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு காலக்கெடு வகுக்கப்படவில்லை என்பதை ஆளுநர் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்றும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், இப்படிப்பட்ட உயர் பதவிகளில் இதுபோன்ற செயல்கள் நடக்கும் என்று அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்கள் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்ததாக, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மீதான புகார் தொடர்பாக வழக்குத் தொடர அனுமதி வழங்குவதில் ஆளுநர் காலதாமதம் செய்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தொடர அனுமதி வழங்குவது தொடர்பான கோப்புகளை ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், அதிமுக முன்னாள் அமைச்சர்களான பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தொடர்பான கோப்புகள் ஆளுநரிடம் நிலுவையில் இருப்பதாக பட்டியலிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசின் அரசியல் மற்றும் கருத்தியல் எதிராளியாக ஆளுநர் செயல்படுகிறார் என்ற விமர்சனத்தையும் தனது கடிதத்தில் முதலமைச்சர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

ஆளுநர் ரவி- முதல்வர் மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம், STALIN

படக்குறிப்பு, மு.க.ஸ்டாலின் - தமிழ்நாடு முதலமைச்சர்

`சனாதான தர்மத்தைப் புகழ்வது, திருக்குறளை வகுப்புவாதப்படுத்துவது, திராவிட பாரம்பரியத்தையும் தமிழ்ப் பெருமையையும் கண்டிப்பது போன்ற வகுப்புவாதக் கருத்துகளை ஆளுநர் தெரிவித்திருக்கிறார். திராவிட அரசியல் பிற்போக்குத்தனமானது என்று ஆளுநர் கூறியிருப்பது அவதூறானது மட்டுமல்ல, அறியாமையும் ஆகும். தமிழ்நாடு என்பதை தமிழகம் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று கூறியதன் மூலம் ஆளுநர் ரவி தமிழர்களின் நலனுக்கு எதிரானவர் என்பதும், தமிழ்நாடு, தமிழ் மக்கள், தமிழர் பண்பாடு ஆகியவற்றின் மீது விவரிக்க முடியாத, ஆழமான வேருன்றிய பகைமை கொண்டவர் என்பதும் தெளிவாகிறது` என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

காவல்துறை விசாரணையில் ஆளுநர் தலையிடுவதாக முதலமைச்சர் தனது கடிதத்தில் குற்றஞ்சாட்டியுள்ளார். குழந்தைத் திருமணப் புகார்கள் தொடர்பாக சிதம்பரம் நடராஜர் கோவிலைச் சேர்ந்த 2 தீட்சிதர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் மீது பொய்யான புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகத்துக்கு ஆளுநர் பேட்டியளித்தது விசாரணையில் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு காவல்துறையின் நியாயமான விசாரனைக்கு இடையூறாக இருந்ததாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநர் நடந்துகொண்ட விதம் கடுமையான அரசியலமைப்பு மீறல் என்றும் குடியரசுத் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் கூறியுள்ளார்.

ஆளுநர் ரவி- முதல்வர் மு.க.ஸ்டாலின்
படக்குறிப்பு, டி.ஜெயக்குமார்- முன்னாள் அமைச்சர், அதிமுக

திசை திருப்பும் முயற்சி

மேகேதாட்டு அணை , சட்டம் ஒழுங்கு பிரச்னை, செந்தில்பாலாஜி வழக்கு போன்ற விவகாரங்களில் இருந்து மக்களை திசைத் திருப்பவே குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளதாக அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், “கடிதம் எழுதுவதில் வல்லமை பெற்றவர்கள் திமுகவினர். அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். அதை திசைத் திருப்பவே இந்த கடிதத்தை முதலமைச்சர் எழுதியுள்ளார். ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதேவேளையில், திமுகவின் மக்கள் விரோத செயல்கள், எதிர்க்கட்சி மீது பொய் வழக்கு போடுவது போன்ற செயல்களுக்கு ஆளுநர் எப்படி துணை நிற்க முடியும்.

அதிமுக ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று மனு கொடுத்தார்கள். அப்போது மட்டும் ஆளுநர் தேவைப்பட்டாரா?தங்களுக்கு ஆதரவாக செயல்பட்டால் ஆளுநர் வாழ்க என்பார்கள், எதிராக செயல்பட்டால் ஆளுநர் ஒழிக என்பார்கள்” என்றார்.

உச்ச நீதிமன்றத்தை தமிழக அரசு நாட வாய்ப்பு உள்ளது

ஆளுநர் விவகாரத்தில் தமிழ்நாடு உச்ச நீதிமன்றத்தை நாட வாய்ப்பு இருப்பதாக இந்த கடிதத்தை குறிப்பிட்டு கூறுகிறார் மூத்த செய்தியாளர் தராசு ஷ்யாம். பிபிசி தமிழிடம் பேசிய அவர், “ஆளுநர் பதவியில் இருப்பது என்பது குடியரசுத் தலைவரின் இசைவு கோட்பாடு தொடர்பானது. அதனால்தான் இசைவு தெரிவித்த குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். ஆளுநரின் செயல்பாடு தொடர்பான விவகாரத்தை உச்ச நீதிமன்றத்துக்கு தமிழ்நாடு கொண்டு செல்லவும் வாய்ப்பு இருக்கிறது. அப்படி செல்லும்போது, குடியரசுத் தலைவரிடம் முறையிட்டீர்களா என்ற கேள்வியை நீதிமன்றம் எழுப்பக்கூடும். எனவே, உச்ச நீதிமன்றத்துக்கு செல்வதற்கு முன்பான நடவடிக்கையாக கூட இதை பார்க்கலாம்” என்றார்.

ஆளுநர் ரவி- முதல்வர் மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம், TNDIPR

படக்குறிப்பு, ஆளுநர் ஆர்.என்.ரவி

“ஆர்.என்.ரவி- ஸ்டாலின் மோதலை, சென்னாரெட்டி - ஜெயலலிதாவுடன் ஒப்பிடுகிறார்கள். ஆனால், இரண்டுமே வேறுவேறு. சென்னாரெட்டி அரசியல்வாதியாக இருந்து ஆளுநரானவர். நிறைய விவகாரத்தை அரசியல் ரீதியாகவே அவர் கையாண்டார். ஜெயலலிதா- சென்னாரெட்டி விவகாரத்தில் ‘ஈகோ’ மோதல் இருந்தது. ஆனால், ஆர்.என்.ரவியோ அனைத்து விகாரத்திலும் அரசை விமர்சிக்கிறார். முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தைக் கூட ஆளுநர் விமர்சிக்கிறார்” என்று தராசு ஷ்யாம் கூறுகிறார்.

அதிகாரியாக இருந்து ஆளுநராகி உள்ள ஆர்.என்.ரவி இன்னும் தன்னை அதிகாரியாகவே நினைத்துக் கொண்டிருக்கிறார் என்றும் தராசு ஷ்யாம் குறிப்பிட்டுகிறார். “பொதுவாக நீதிபதியாக இருந்து ஆளுநராகும் நபர்கள் கொஞ்சம் பொறுப்புடன் செயல்படுவார்கள். அரசியவாதியாக இருந்து ஆளுநராகும் நபர்கள் அரசியல் செய்வார்கள் என்றாலும் இதுபோன்று கீழ்த்தரமாக இறங்க மாட்டார்கள்.

அதிகாரியாக இருந்து ஆளுநராகும் நபர்களிடம் தங்களின் உயர் அதிகாரியை திருப்திப்படுத்தும் மனநிலை இருக்கும். ஆர்.என்.ரவியிடமும் அதுதான் உள்ளது. முதலில் துணை குடியரசுத் தலைவராக வேண்டும் என்று அவர் விரும்பினார் அது முடியாமல் போனது. தற்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆக வேண்டும் என்று விரும்புகிறார். இதற்காக மேலிடத்தை எப்படியாவது திருப்திப்படுத்த வேண்டும் என்று அவர் செயல்படுகிறார்” என கூறுகிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: