உத்தர பிரதேசத்தின் 'யோகி மாடல்' தான் பாஜகவின் எதிர்காலமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், வாத்சல்யா ராய்
- பதவி, பிபிசி செய்தியாளர்
உத்தரப்பிரதேசத்தில் 2017ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்றது. 15 ஆண்டுகளுக்குப் பின் பாஜக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது.
தலைமை அமைச்சராக அதாவது முதலமைச்சராக யார் பொறுப்பேற்கப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்த போது பலரின் பெயர்கள் அடிபட்டன.
ஆனால் இறுதியில் யோகி ஆதித்யநாத்தின் பெயர் தான் முன்னணிக்கு வந்தது. ஆனால் இது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
முதலமைச்சருக்கான போட்டியில் யோகி ஆதித்யநாத் எப்படி வெற்றிபெற்றார் என்ற கேள்வி இன்று வரை நீண்டுகொண்டிருக்கிறது.
அப்போது பாஜகவின் தேசியத் தலைவராக இருந்த அமித் ஷா கூட ஒருமுறை இதைப்பற்றிப் பேசியிருக்கிறார். "உத்தரப்பிரதேச முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அவர் எப்படி அந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட முடியும் என்றே அனைவரும் கேள்வி எழுப்பினர். ஏற்கெனவே ஒரு நகராட்சித் தலைவராகக் கூட பதவி வகித்ததில்லை," என்றனர். இதே போல் ஒரு அமைச்சராகவும் அவர் எப்போதும் பதவி வகித்தது கிடையாது.
பிரதமர் மோடிக்கும், தமக்கும் ஒரு வித்தியாசமான ஆலோசனை வழங்கப்பட்டதாகவும், அமித் ஷா அப்போது தெரிவித்தார். "ஒரு துறவியாகவும், பீடாதிபதியாகவும் இருந்த யோகியை அவ்வளவு பெரிய மாநிலத்தின் முதலமைச்சராக பதவியில் அமர்த்துங்கள்," என்பதே அந்த யோசனை.

பட மூலாதாரம், Getty Images
ஆனால் அதன் பின் 6 ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில், நிலைமை முழுமையாக மாறியுள்ளது. இப்போது பிரதமர் மோடிக்குப் பின் அடுத்த பிரதமராக யோகி ஆதித்யநாத் தான் பதவிக்கு வருவார் என்ற எண்ணம் மேலோங்கிவருகிறது.
பாஜகவின் முக்கிய தலைவர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்களைப் பொருத்தளவில், யோகி ஆதித்யநாத்துடன் இணைந்து அரசியல் நடத்தும் தலைவர்கள் அனைவரையும் விட, அவருடைய நிலை பலமடங்கு உயர்ந்திருப்பதாகக் கூறுகின்றனர்.
"டெல்லியில் அடிக்கடி பிரதமர் மோடி மற்றும் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் படங்கள் அடங்கிய போஸ்டர்களை பார்க்க முடிகிறது. இதில் அனைத்து தலைவர்களையும் பின்தள்ளிவிட்டு, மோடிக்கு அடுத்த இடத்தில் யோகி ஆதித்யநாத் இருக்கிறார்," என, பாஜகவை கடந்த பல ஆண்டுகளாக கூர்ந்து கவனித்து வரும் மூத்த பத்திரிக்கையாளர் ராதிகா ராமசேஷன் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
5 முறை எம்.பி.யாக இருந்த போது இல்லாத செல்வாக்கு
களத்திலும் அதன் தாக்கம் நன்றாகவே தெரிகிறது. முதலமைச்சராகப் பொறுப்பேற்றதற்கு முன்னதாக யோகி ஆதித்யநாத் 5 முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆனால் அப்போது அவரது செல்வாக்கு மிகவும் குறைவாக இருந்தது.
2014ம் ஆண்டு குஜராத் மாடல் மற்றும் மோடி குறித்து எப்படி பேசப்பட்டதோ, அதே போல் தற்போது யோகி குறித்தும், அவர் உருவாக்கிய உத்தர பிரதேச மாடலும் பேசப்படுகிறது.
"யோகி ஆதித்யநாத், இந்தியாவின் பல மாநிலங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். மத்திய பிரதேசம், கர்நாடகா மாநிலங்களில் கூட (பாஜக ஆட்சியில் இருந்த போது) உத்தர பிரதேச மாடல் குறித்து அதிக முறை பேசப்பட்டன," என்கிறார் ராதிகா ராமசேஷன்.
உத்தரப்பிரதேசத்தில் ஒவ்வொரு தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்றுவருவதாலேயே யோகி ஆதித்யநாத்தின் உத்தர பிரதேச மாடல் குறித்து எல்லா இடங்களிலும் அதிகம் பேசப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சியின் போது, பாஜக தொடர்ந்து வெற்றி பெறுவதை வைத்தே அக்கட்சியை அனைவரும் பார்க்கத் தொடங்கியுள்ளனர் என்று மாநில அரசியலை கூர்ந்து கவனிக்கும் மூத்த பத்திரிக்கையாளரான ராஜேந்திரசிங் கூறுகிறார்.
"ஒவ்வொரு நபரும் அவருடைய செயல்பாடுகளை ஒட்டியே பார்க்கப்படுகிறார். யோகி ஆதித்யநாத் கடந்த 2017ல் முதலமைச்சராகப் பதவியேற்றார். அதன் பின் 2019ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் ராஷ்ட்ரிய லோக் தளம் ஆகிய கட்சிகள் அமைத்த கூட்டணியை எதிர்த்துப் போட்டியிட்டு பாஜகவுக்கு நல்ல வெற்றியைப் பெற்றுத்தந்தார்," என்கிறார் பத்திரிக்கையாளர் ராஜேந்திர சிங்.
"அதன்பின் 2022ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் அறுதிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைத்தது. பின்னர் தற்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து பெரிய நகரங்களையும் பாஜக கைப்பற்றியுள்ளது. இது தான் அவர்களுடைய தற்போதைய நிலை," என்றார் அவர்.
உத்தர பிரதேசத்தைப் பொருத்தளவில் தற்போதைய நிலையில் பிற அனைத்து தலைவர்களை விடவும் யோகி ஆதித்யநாத் முன்னணியில் இருக்கிறார் என 'யோகி ஆதித்யநாத்: மதம், அரசியல், அதிகாரம்- சொல்லப்படாத கதை' என்ற புத்தகத்தை எழுதிய ஆசிரியரும், கடந்த பல ஆண்டுகளாக அம்மாநில அரசியலை கூர்ந்து கவனித்து வரும் மூத்த பத்திரிக்கையாளருமான ஷரத் ப்ரதான் கூறுகிறார்.
"உத்தர பிரதேசத்தில் மோடியை விட யோகி ஆதித்யநாத்துக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது," என்கிறார் அவர். நரேந்திர மோடி 2024ல் மீண்டும் வெற்றிபெறவேண்டும் என்றால் உத்தர பிரதேசத்தில் வெற்றிபெறுவது மிகவும் முக்கியம். இதே போல யோகி ஆதித்யநாத்துக்கும் அந்த வெற்றி முக்கியமானதாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. யோகி ஆதித்யநாத் தன்னை முன்னிறுத்திக் கொள்ள அவர் பயணிக்கும் வழிகள் அதற்கான பலன்களை நிச்சயமாக அளிக்கும்.

பட மூலாதாரம், Getty Images
யோகி ஆதித்யநாத் உருவாக்கிய உத்தர பிரதேச மாடல், அவருக்கும், பிரதமருக்கும் இடையே உள்ள ஒற்றுமையாக மாறியுள்ளது.
ஆனால் உத்தர பிரதேச மாடல் என்றால் என்ன? இக்கேள்விக்கு ராஜேந்திர சிங் இப்படி பதில் அளிக்கிறார்:
"யோகியின் உத்தர பிரதேச மாடல் என்பது சட்டம் - ஒழுங்கு மற்றும் முன்னேற்றம் தொடர்பானது. அவற்றுடன் சிறிதளவு இந்துத்துவா சாயமும் இணைந்துள்ளது. இதன் பொருள் இந்துத்துவ சாயத்துடன் சட்டம் ஒழுங்கு மற்றும் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துதல் ஆகும்," என்கிறார் அவர்.
ராதிகா ராமசேஷனும் அப்படியே தான் சொல்கிறார். மோடியின் குஜராத் மாடலைப் போலவே யோகியின் உத்தர பிரதேச மாடலும் இந்துத்துவாவுடன் தொடர்புடையது என்கிறார் அவர்.
"ஆனால் குஜராத் மாடலில் முன்னேற்றம், உள்கட்டமைப்பு, பொருளாதார வளர்ச்சி ஆகிய அம்சங்கள் இடம்பெற்றிருந்த நிலையில், இங்கு (உத்தர பிரதேச மாடலில்) சட்டம் ஒழுங்கே முக்கிய இடம்பிடித்துள்ளது. முன்னேற்றம் என்பது அதற்குப் பின்னால் இரண்டாம் இடத்தில் தான் கணக்கில் கொள்ளப்படுகிறது," என்கிறார் அவர்.
"சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் யோகி ஆதித்யநாத் மிகப்பெரும் செல்வாக்கைப் பெற்றுள்ளார். மத்திய பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் அது குறித்து அதிகம் பேசப்பட்டது. யாராவது சட்டத்தை தன் கையில் எடுத்தாலோ அல்லது மீறினாலோ அதற்கு ஒரே ஒரு தீர்வு புல்டோசர் தான் என நிலைமை மாறியுள்ளது," என்கிறார் ராதிகா.

பட மூலாதாரம், Getty Images
"யோகி ஆதித்யநாத் அரசின் சின்னமாக புல்டோசர் மாறியுள்ளது," என்கிறார் ராதிகா.
இருப்பினும் யோகியின் உத்தர பிரதேச மாடல் குறித்து அரசியல் விமர்சகர்கள் தொடர்ந்து பல்வேறு கேள்விகளை எழுப்பிவருகின்றனர்.
"அது சட்டத்துக்குப் புறம்பாக இருந்தாலும், பாஜக ஆளும் மாநிலங்களும் பிற மாநிலங்களும் குற்றங்களைக் குறைக்க புல்டோசரை மட்டுமே நம்பும் நிலை உருவாகியுள்ளது. அதனால் குற்றங்கள் குறையும் என நிரூபிக்கப்படாவிட்டாலும் அதை அனைவரும் ஆவலுடன் கவனிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது," என்கிறார் ஷரத் ப்ரதான்.
"நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள சட்டங்களுக்குப் பதிலாக உங்களுடைய சொந்த சட்டங்களை அமல்படுத்தும் போது அது நீண்ட காலத்துக்கு உதவாது. ஒரு வேளை அது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் போது தான் அவர்கள் சிந்திப்பார்கள்," என்கிறார் அவர்.
"யோகி ஆதித்யநாத் தன்னை ஒரு விரைவில் முடிவெடுக்கும் நபராகக் காட்டிக்கொண்டாலும், யாருக்கு எதிராக அந்த முடிவுகளை எடுக்கிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆதிக் அகமது என்ற குற்றவாளியும் அதே போன்ற செயல்களில் ஈடுபட்டவர் தான். அதனால் தொலைதூரத்தில் வசிக்கும் அவருடைய உறவினர்களுடைய சொத்துகளும் பறிமுதல் செய்யப்படுகின்றன. ஆனால் ஒரு குற்றவாளி பாஜகவில் இருந்தால் அவருடைய குற்றங்கள் மன்னிக்கப்படுகின்றன," என்கிறார் அவர்.
மேலும், "விளம்பரத்தின் மூலமே யோகி ஆதித்யநாத் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டார். மோடி எப்படி குஜராத் மாடல் என தன்னை முன்னிறுத்திக்கொண்டாரோ அதே போல யோகியும் செயல்படுகிறார். உண்மையில் யோகி செல்வது போல் சட்டம் ஒழுங்கு பிரச்சினை சரிசெய்யப்பட்டுள்ளதா? குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த குற்றவாளிகள் மட்டும் தண்டிக்கப்பட்டுள்ளனர்," என்கிறார் ஷரத் ப்ரதான்.

பட மூலாதாரம், ANI
சர்ச்சைக்கு வித்திட்ட 80 / 20 கருத்து
"யோகி ஆதித்யநாத் கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதியன்று தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்த சர்ச்சைக்குரிய '20ஐ விட 80 பெரிது' என்ற கருத்தில் தான் பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறார்," என ஷரத் ப்ரதான் கூறுகிறார்.
யோகியின் உத்தர பிரதேச மாடல் குறித்து இதே போன்ற கேள்விகளை ராதிகா ராமசேஷனும் எழுப்பியுள்ளார்.
"குற்றங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் சொன்னால், அது குறிப்பிட்ட மக்களை மட்டுமே பாதிக்கும் விதத்தில் உள்ளது. அந்த மக்களின் குரலை அடக்கும் முறையில் யோகியின் நடவடிக்கை இருக்கிறது," என்கிறார் ராதிகா.
விமர்சகர்கள் எந்த கருத்துகளைப் பேசினாலும், யோகி ஆதித்யநாத்தின் மாடல் உண்மையில் சிறப்பான வழியில் பயணித்துக் கொண்டிருக்கிறது என்கிறார் ராஜேந்திர சிங்.
"அவர் ஒரு குறிப்பிட்ட சமூக மக்களுக்கு எதிராக செயல்படுகிறார் என விமர்சனங்கள் எழுந்தாலும், அது தான் அவருடைய கொள்கை," என்கிறார் அவர்.
'யோகி மாடல்' என்றால் என்ன என அவர் கருதுகிறார்?
பாஜக ஆளும் பிற மாநிலங்களில் இல்லாத, அதே நேரம் கண்களுக்குத் தெரியாமல் உத்தர பிரதேசத்தில் மட்டும் இருக்கும் மற்றொரு விஷயத்தையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும். பிற பாஜக அரசுகளைப் போல் அல்லாமல், மத்திய அரசு சொல்லும் எதையும் யோகி ஆதித்யநாத் கண்களை மூடிக்கொண்டு ஆதரிப்பதில்லை என ராதிகா சொல்கிறார்.
"உண்மையைச் சொல்வதென்றால் 2017ல், உத்தர பிரதேசத்தின் முதலமைச்சராக மனோஜ் சின்ஹாவை நியமிக்கத் தான் மோடி விரும்பினார். இதே போல் கேஷவ் பிரசாத் மௌரியா உள்ளிட்ட நபர்களின் பெயர்களும் பரிசீலனையில் இருந்தன. ஆனால் கடைசியில் யோகி என்பவர் தான் மிகப்பெரிய தலைவராக முன்னிலைப்படுத்தப்பட்டார். அவர் முதலமைச்சராகத் தேர்வு செய்யப்பட்ட முதல் நாளிலிருந்தே, டெல்லியில் இருந்து வரும் உத்தரவுகளை அப்படியே ஏற்கப்போவதில்லை என்பதை புரியவைத்துக்கொண்டே இருக்கிறார். பலநேரங்களில் டெல்லிக்கும் லக்னௌவுக்கும் இடையே பதற்றமேற்படுத்தும் சூழ்நிலைகளும் இருந்திருக்கின்றன," என்கிறார் அவர்.
"உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த அரவிந்த் ஷர்மா என்பவர் குஜராத் மாநிலத்தில் மோடிக்கு ஆதரவான ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தார். அவர் பதவியிலிருந்து விலகிய பின் உத்தர பிரதேசத்தில் எம்எல்சி பதவி அவருக்கு அளிக்கப்பட்டது. 2022ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு அவரை அமைச்சராக்க பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவருக்காக ஒரு தனி மாளிகையே கட்டப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின," என ராதிகா பழைய நினைவுகளை அசைபோடுகிறார்.
"ஆனால், யோகி ஆதித்யநாத் பிடிவாதமாக இருந்து அவரை தமது அமைச்சரவையில் சேர்க்கவே மறுத்துவிட்டார். ஆனால் இப்போது அவர் ஒரு அமைச்சராக இருந்தும் பெரிய முக்கியத்துவம் எதுவுமின்றி காணப்படுகிறார். கேஷவ் பிரசாத் மௌரியாவும் தனியாக தன்னை முன்னிறுத்த முயன்றார். ஆனால் அவராலும் அதில் வெற்றிபெறமுடியவில்லை."
இன்று யோகி ஆதித்யநாத் தன்னை ஒரு பெரும் தலைவராக முன்னிறுத்திக் கொண்டுள்ளார் என ஷரத் பிரதான் கூறுகிறார்.
தற்போதைய நிலையில் யோகி ஆதித்யநாத் பிற தலைவர்களிடமிருந்து தனிப்பட்டு நிற்பதற்கு மற்றொரு காரணமும் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
யோகி ஆதித்யநாத் ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு ஆதரவாகச் செயல்படுவதாக விமர்சனங்கள் எழுந்தாலும், அதனால் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

பட மூலாதாரம், Getty Images
ராஜேந்திர சிங் இதை இப்படி விளக்குகிறார்:
"அவர் காவி உடையணிந்திருப்பதே இதற்குக் காரணம். அவர் கோரக்நாத் பீடத்தின் பீடாதிபதியாக இருக்கிறார். அவர் ஒரு உயர்சாதியைச் சேர்ந்தவராக இருக்கலாம். ஆனால் அந்த பீடத்தின் பீடாதிபதியாக பிற்பட்ட வகுப்பினரே இருந்துவருகின்றனர். காவி நிறத்தில் உடையணிவது, உயர்சாதியினருக்கு பொறுப்புகள் வழங்கப்படுகின்றன என்ற வாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது. முலாயம் சிங் யாதவ் அல்லது கல்யாண்சிங் யாதவ் போன்ற பிற்பட்ட சாதியைச் சேர்ந்த தலைவர் யாருமில்லை. மாயாவதியின் தலித் அரசியலும் பலமிழந்து வருகிறது," என்று கூறுகிறார் அவர்.
"உத்தர பிரதேசத்தில் ராமஜென்மபூமி பிரச்சினைக்குப் பின் உயர் சாதியிலும், பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த சாதியிலும் ஏராளமானோர் பாஜக ஆதரவாளர்களாக மாறியுள்ளனர். துணை முதலமைச்சர் கேஷவ் மௌரியாவைப் போல் அவர்களுக்கு பாஜகவில் பொறுப்புக்களும் அளிக்கப்படுகின்றன. கேஷவ் மௌரியாவும் யோகி ஆதித்யநாத்துடன் நெருக்கமாக இருக்கிறார்," என்கிறார் ராதிகா ராமசேஷன்.
உள்ளாட்சித் தேர்தலில் எதிர்க்கட்சிகளை பின்னுக்குத் தள்ளிய யோகி ஆதித்யநாத்துக்கு அடுத்த சோதனையாக 2024ல் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் இருக்கும். அப்போது, நரேந்திர மோடி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு பெரும் சவால்கள் எழும் வாய்ப்புகள் இருக்கின்றன.
அப்போது பாஜகவுக்கு யோகி மாடல் எவ்வளவு முக்கியமானதாக இருக்கும்?
"யோகி ஆதித்யநாத் அவரது சொந்த மண்ணில் அவருக்குத் தேவையான ஆதரவைப் பெற்றுவிட்டார். எதிர்த்தரப்பு முழுக்க முழுக்க பலவீனமாக உள்ளது. அகிலேஷ் யாதவ் இந்துகள் மீது கரிசனம் காட்டத் தொடங்கிவிட்டார். ஆனால் இதுவும் யோகிக்கு கிடைக்கும் ஆதரவை அதிகரிக்கவே செய்யும். அடுத்தவருடைய களத்தில் நீங்கள் விளையாடினால் உங்களால் எப்படி வெற்றிபெற முடியும்?" எனக்கேட்கிறார் ஷரத் பிரதான்.
அதே நேரம் ராஜேந்திர சிங்கும், பாஜக தற்போது உள்ள நிலையிலேயே தொடர்ந்து பயணிக்கும் என்கிறார்.
"பாஜகவின் முன் பெரும் சவால்கள் எவையும் இல்லை. உங்களுக்கு 2019ம் ஆண்டின் கூட்டணியை ஞாபகம் இருக்கிறதா? சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் ராஷ்ட்ரீய லோக் தளம் ஆகிய கட்சிகள் இணைந்த போதும் பாஜக தனிப்பட்ட வெற்றியைப் பெற்றது," என தனது கருத்தைத் தெரிவிக்கிறார் அவர்.

பட மூலாதாரம், Twitter
மேலும், யோகி ஆதித்யநாத்தால் பிரதமர் மோடிக்கு பெரிய சவால் எதுவும் ஏற்படப் போவதில்லை என்றும் அவர் கருதுகிறார்.
"அடுத்து வரும் அரசை பாஜக அமைத்தால் மோடி தான் பிரதமராக இருப்பார். அவரை யோகியும் மிகவும் மதிக்கிறார்," என ராஜேந்திர சிங் கூறுகிறார்.
எப்போது பிரதமர் மோடி அரசியலை விட்டுப் போகிறாரோ, அப்போது தான் அவருக்கு மாற்றாக யார் வருவார்கள் என்ற கேள்வி எழும் என அவர்கள் அனைவரும் சொல்கின்றனர்.
"உத்தர பிரதேச விதான்சபாவில் யோகி தான் முதலிடத்தில் இருக்கிறார். ஆனால் நாடாளுமன்ற மக்களவையில் பிரதமர் மோடி இன்னும் முதலிடத்திலேயே இருக்கிறார். 2024ல் பாஜக முன்பை விட அதிக இடங்களில் வெற்றிபெற்றாலும், அல்லது குறைவாகவே இருந்தாலும் மோடி தான் பிரதமராக இருப்பார். யோகி ஆதித்யநாத் பிரதமராக ஆசைப்பட்டாலும் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் அவர் அதை நோக்கி நகரமுடியும் என்பதையும் நாம் கவனிக்கவேண்டும்," என ராதிகா ராமசேஷன் கருதுகிறார்.
யோகி ஆதித்யநாத்துக்கு 51 வயது மட்டுமே ஆகிறது என்பதே அவருக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தித் தந்திருப்பதாக ஷரத் பிரதான் கூறுகிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












