அரிசிக்கொம்பன் யானையை அடிக்கடி இடமாற்றம் செய்வது சரியா? என்ன பாதிப்பு ஏற்படும்?

பட மூலாதாரம், HANDOUT
- எழுதியவர், போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
அரிக்கொம்பன் என்ற அரிசிக் கொம்பன் யானையை குறுகிய காலத்தில் தொடர்ச்சியாக இடம் விட்டு இடம் மாற்றி வருவது, மயக்க மருந்து செலுத்துவது போன்ற நடவடிக்கைகள் அந்த யானையின் உடல்நலத்திற்கும், மன நலத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தி, அதன் வாழ்வியல் சூழலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சமூக ஆர்வலர்கள் குற்றசாட்டி வருகின்றனர்.
அரிக்கொம்பன் யானை விவகாரத்தில் என்ன நடந்தது, அந்த யானை வெவ்வேறு இடங்களுக்கு தொடர்ந்து மாற்றப்பட்டு வந்தது ஏன்?
கேரளாவில் 35 வயதான அரிக் கொம்பன் எனும் ஆண் யானை, கடந்த அங்குள்ள தேயிலை தோட்ட பகுதிகளிலும்,சுற்றுலா தளங்களிலும் சுற்றி வந்தது. இதனை அப்பகுதி மக்கள்அச்சுறுத்தலாக பார்த்தனர். இதையடுத்து கடந்த மார்ச் 29-ம் தேதி, இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் வனப்பகுதியில் இருந்து,பெரியார் புலிகள் காப்பகத்தில் உள்ள முள்ளக்காடு பகுதிக்கு வனத்துறையினர் அரிக்கொம்பனை விரட்டினர். தொடர்ந்து யானையின் நடமாட்டத்தைக் கண்காணிக்க வனத்துறையினர், அதன் கழுத்தில் ஜிபிஆர்ஸ் பொருத்தப்பட்ட பட்டையை கட்டி அனுப்பினர்.
ஆனால் அங்கிருந்தும் விரட்டப்பட்ட அரிக்கொம்பன் யானை, தேனி மாவட்டம் மேகமலை ஹைவேஸ் பகுதியில் கடந்த மாதம் 16ம் தேதிவரை சுற்றித் திரிந்து, பின்னர் கம்பம் நகருக்குள் நுழைந்தது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் அச்சமடைந்தனர்.
பிடிபட்ட அரிக்கொம்பன் யானை
மக்களின் பாதுகாப்பு கருதி, அரிக்கொம்பன் யானையை காட்டுக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். இதற்காக கம்பம் பகுதியைச் சுற்றி 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக சண்முகாநதி, சின்னஓவுலாபுரம் பகுதி வனப்பகுதியில் அரிக் கொம்பன் யானை சுற்றி வந்தது. யானையைப் பிடிக்க 3 கும்கி யானைகளும் கொண்டு வரப்பட்டன.
இந்நிலையில் திங்கட்கிழமை அதிகாலை வனத்துறையினர், மருத்துவக் குழுவினர் ஆகியோர் அரிக் கொம்பன் யானையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். யானைக்கு மயக்க ஊசி செலுத்தி, கும்கி யானைகள் உதவியுடன் பிடிக்கப்பட்டது.

பட மூலாதாரம், Twitter/supriyasahuias
விமர்சனங்கள்
வனத்துறையினரால் பிடிக்கப்பட்ட இந்த அரிக்கொம்பன் யானை, பாதுகாப்பாக திருநெல்வேலி மாவட்டம், அகஸ்திய மலையில் உள்ள முத்துக் குழி பகுதியில் விடப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த அரிக்கொம்பன் யானையை கடந்த 3 மாதங்களில் மட்டும் இடுக்கி மாவட்டம், அதன்பின் கோட்டயத்திலிருந்து தேனி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்டம் என 4 இடங்களுக்கு இடமாற்றம் செய்துள்ளனர். இந்த இடமாற்றம் யானையின் வாழ்வியல் சூழலைப் வெகுவாக பாதிக்கும் என்ற விமர்சனங்கள் தற்போது முன்வைக்கப்பட்டு வருகின்றன.

பட மூலாதாரம், TN Forest Dept
புதிய சூழலால் பயம் இருக்கும்
இது குறித்து ஆனைமலை புலிகள் காப்பகத்தின் உயிரியலாளர் பீட்டர் பிரேம் சக்கரவர்த்தி பிபிசி செய்திகளிடம் கூறுகையில் “ அரிக் கொம்பன் இடமாற்றம் அதன் வாழ்வியல் சூழலை எந்தவிதத்திலும் பாதிக்காது. அரிக் கொம்பன் யானை வாழப் பழகிய அதே வாழ்வியல் சூழல் இருக்கும் இடத்தில்தான் தற்போது கொண்டுவிடப்பட்டுள்ளது. அதேசமயம், புதிய வனப்பகுதிக்குள் வந்துள்ளதால், யானைக்கு ஒரு அச்சம் இருக்கலாம். அதுவும் விரைவில் பழகிவிடும்.
யானையை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு முக்கியக் காரணமே, மக்கள் வாழுமிடங்களில் யானை வந்து பழகி, அவர்களின் உணவுகளை குறிப்பாக அரிசியை சாப்பிடப் பழகிவிட்டதுதான். இப்படியே தொடர்ந்தால் குறிப்பிட்ட இடத்திற்குள் யானை அடைபட்டுவிடும், அதன் வாழ்வியலே மாறிவிடும் என்பதற்காகத்தான் யானை தற்போது இடம் மாற்றப்பட்டுள்ளது. பொதுவாக மனிதர்களைக் கண்டால் யானைக்கு பயம் அதிகம். அந்த பயத்தோடு யானை இருக்க வேண்டும், அந்த பயம் தெளிந்துவிட்டால் மனிதர்களுக்கு ஆபத்தாகிவிடும்.
நிரந்தரமாக யானை தங்கிவிடும்
யானை விடப்பட்டுள்ள அடர்ந்த வனப்பகுதியில் நல்ல சூழல், தண்ணீர் வசதி, உணவு போன்றவை சரியான அளவில் கிடைக்கும் பகுதியாகவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கும்பட்சத்தில் அந்தப் பகுதியிலேயே நிரந்தரமாக அரிக் கொம்பன் யானை தங்கிவிடவும் வாய்ப்புள்ளது. அங்கு யானைக்குத் தேவையான நல்ல சூழல் இருக்கிறது, மேலும் அங்கு வேறு யானைகளுடன் நட்பு ஏற்படும் வாய்ப்பும இருப்பதால், அரிக்கொம்பன் யானை மனிதர்கள் வாழும் பகுதிக்கு மீண்டும் வராது” எனத் தெரிவித்தார்.

பட மூலாதாரம், TN Forest Dept
யானை - மனிதர்கள் மோதலுக்கான காரணம் என்ன?
மீண்டும் கேரளப் பகுதிக்கு அரிக் கொம்பன் யானை செல்ல வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, பீட்டர் பிரேம் பதில் அளிக்கையில் “அரிசி சாப்பிட்டு ருசி கண்ட யானை மீண்டும் செல்லாது என்று முற்றிலும் கூற முடியாது. அவ்வாறு மீண்டும் செல்லக்கூடாது என்பதற்காகவே அடர்ந்த வனப்பகுதிக்குள் யானை கொண்டு செல்லப்பட்டுள்ளது.அதிலும் திருநெல்வேலி வனப்பகுதியிலிருந்து மீண்டும் தேனி மாவட்ட வனப்பகுதிக்கு வருவது கடினம், அதற்கான வலசைப் பாதை இருந்தால்தான் யானை இறங்க முடியும். இல்லாவிட்டால் இப்போதுள்ள வனப்பகுதியிலேயே தங்கிவிடும்” எனத் தெரிவித்தார்.
“அது மட்டுமல்லாமல் யானை மிகுந்த மருத்துவப் பாதுகாப்புடன்தான் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மருத்துவ வல்லுநர்கள் குழுவினர் யானையின் உடல்நலம், எடை, உயரம் ஆகியவற்றை ஆய்வு செய்துதான் மயக்க மருந்து செலுத்துவார்கள். மயக்க மருந்தால் எந்தப் பாதிப்பும் எதிர்காலத்தில் வராது. இந்த மயக்க மருந்து சில மணிநேரத்தில் செயல் இழந்துவிடும். ஆதலால் அது குறித்து அச்சம் தேவையில்லை. யானையை லேசான மயக்கத்தில் வைக்க மட்டுமே மயக்க மருந்து கொடுக்கப்படும், யானை கீழே விழாமல் மட்டும் பாதுகாக்க வேண்டும். யானையின் பாதுகாப்பில் வனத்துறையினர், மருத்துவர்கள் குழு, வன அலுவலர்ககள் பணி மகத்தானது” என பீட்டர் தெரிவித்தார்.
யானை-மக்கள் இடையே தொடர்ந்து வாழ்வியல் மோதல் வரக் காரணம் குறித்து பீட்டர் கூறுகையில் “ யானைகள் வாழ்விடங்களை மனிதர்கள் ஆக்கிரமித்துவிட்டனர். அதன் பாதைகளில் வேலி அமைக்கும்போது, கட்டிடங்கள் கட்டும்போது யானை அத்து மீறுகிறது. முதலில் யானை குறித்து நேர்மறையான விழிப்புணர்வை மக்களிடம் கொண்டுவர வேண்டும். யானைக்கு பசியெடுத்து ஓரளவு சாப்பிட்டுவிட்டாலே அதன்போக்கில் சென்றுவிடும், அதைத் தடுக்கும்போதுதான் தொடர்ந்து யானை-மனிதர்கள் மோதல் நடக்கிறது” எனத் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
நல்ல சூழலுக்கு மாற்றப்பட்டுள்ளது
அரிக்கொம்பன் யானையை இடமாற்றியதால் பெரிதாக வாழ்வியல் பாதிப்பு வராது என்று வனஉயிரின ஆர்வலர் டிஎஸ் ராஜா தெரிவித்தார்.
அவர் பிபிசி தமிழிடம் பேசியபோது “ அரிக்கொம்பன் யானை முழுமையாக ஆய்வு செய்யப்பட்ட பின்புதான் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய வாழிடத்துக்குள் செல்லும் போது அரிக் கொம்பன் யானை மட்டுமல்ல எந்த யானைக்கும் அச்சம் என்பது இருக்கும். எங்கு செல்வது, எந்த ஆபத்து இருக்கிறது, வேறு என்ன மிருகங்கள் உள்ளன என்பதைப் பார்த்து ஒரு பயம் இருப்பது இயற்கைதான். சில நாட்களில் பழகிவிடும். யானை மனிதர்களின் வாழிடத்தில் பழகிவிடக்கூடாது. தினசரி யானை 20 மணிநேரம் அலைந்தால்தான் 200 கிலோ உணவை உண்ணும். ஆனால், மனிதர்கள் வாழ்விடத்துக்குள் வரும்போது எளிதாக 200 கிலோ உணவு கிடைத்துவிட்டால், அந்த இடத்தைவிட்டு யானை செல்லுமா, அதன் இயல்பே மாறிவிடும். அவ்வாறு மாறக்கூடாது என்பதற்காகவே இடமாற்றம். வேறு ஏதும் இல்லை." என்றார்.
மனிதர்கள் வாழுமிடத்துக்கு வருமா?
"அரிக்கொம்பன் யானை இளவயது யானை, புதிய வாழிடத்துக்குள் செல்லும்போது, அங்கு வேறு யானைகள் இருந்தால் அந்த யானைகளுடன் சேர்ந்து வாழப்பழக வாய்ப்பு அதிகம். திருநெல்வேலி அடர்வனப்பகுதி இந்த யானைக்கு புதிது. அந்த பகுதி ஓடைகள், பாறைகள், அருவிகள் நிறைந்தது. ஆதலால் பெரும்பாலும் யானை காட்டைவிட்டு வெளியே வராது. இங்கிருந்து நகர்ந்து தன்னுடைய பழைய வாழிடத்துக்கு அரிக் கொம்பன் வருவது மிக கடினம். ஒருவேளை உணவுக்கு ஆசைப்பட்டு மனிதர்கள் வாழும் பகுதிக்குள் மீண்டும் வந்தால், வேறுவழியில்லை யானையை முகாமுக்குத்தான் கொண்டு செல்ல வேண்டும்.” எனத் தெரிவித்தார்.
“வனத்துறையினர், வன அதிகாரிகள், மருத்துவக் குழுவினர் அனைத்து வல்லுநர்களிடமும் ஆலோசனை நடத்திதான் அரிக்கொம்பனை காட்டுக்குள் விட்டுள்ளனர். இளவயது யானையை முகாமுக்குள் அடைக்கக்கூடாது, அது இயல்பான வாழிடத்தில்தான் இருக்க வேண்டும் என்பதற்காகவே அடர்வனப்பகுதியில் விடப்பட்டுள்ளது.
இந்த யானை வளர வேண்டிய பருவத்திலும், இனப்பெருக்க நேரத்திலும் இருக்கிறது. ஆதலால், காட்டுக்குள் கொண்டு யானையை விட்டது சரியானது,” என சுப்பிரமணிய ராஜா தெரிவித்தார்.
"மனிதர்களை கண்டு அச்சம்"
அரிக்கொம்பன் யானையால் மக்களுக்கு பாதிப்பு வந்திருக்காது என்று கூறும் சுப்பிரமணிய ராஜா, “ யானைகள், மட்டுமல்ல எந்த விலங்கும் மனிதர்களைப் பார்த்து அச்சப்படும், ஒதுங்கிச் செல்லும். ஆனால் மனிதர்களைப் பார்த்து யானையோ அல்லது காட்டு விலங்கோ நெருங்கிவந்தால், அது மனிதர்களுக்கு ஆபத்தாகிவிடும்” எனத் தெரிவித்தார்.
மதுரையைச் சேர்ந்த பிரண்ட்ஸ் ஆஃப் அனிமல்ஸ் என்ற விலங்கு அமைப்பின் தலைவர் கரண் ராஜா, யானைகளை இடம்விட்டு இடம் மாற்றுவது வாழ்வியலை பாதிக்கும் எனத் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் “ யானைகளை ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு அடிக்கடி மாற்றுவது மனஉளைச்சலை ஏற்படுத்தும்.
அதநேரம் யானை பிடிப்பதற்காக ஓவர் டோஸ் மயக்க மருந்து செலுத்தினால், பிற்காலத்தில் யானைக்கு சிறுநீரகப் பிரச்சினை ஏற்படலாம். யானை மீண்டும் மனிதர்கள் வாழுமிடத்துக்குள் வராது என்ற கணிப்பில் வனத்துறையினர் புதிய வனப்பகுதிக்குள் விட்டுள்ளனர். ஆனால், அரி கொம்பன் யானை அரிசி சாப்பிட்டு பழகிய யானை. யானைகளுக்கு அரிசி மிகவும் பிடித்த உணவு. இதனால் மீண்டும் அரிசி தேடி வருவதற்கு வாய்ப்பு உண்டு” எனத் தெரிவித்தார்.
சிறப்பான சூழலை உருவாக்கியுள்ளோம்
அரிக் கொம்பன் யானையின் வாழ்வியல் சூழல் எந்த விதத்திலும் பாதிப்புக்குள்ளாகாது என்று தலைமை வனப்பாதுகாப்பு செயலர் ஸ்ரீனிவாச ரெட்டி கூறுகிறார்.
“அரிக் கொம்பன் யானை கம்பம் வனப்பகுதியில் இருந்தபோதுதான் அதன் வாழ்வியல் சூழல் மனிதர்கள் சாப்பிடும் உணவுகளை தேடி அலைந்தது. ஆனால், தற்போது இயல்பான சூழலுக்கு வாழ யானை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்குதான் இயற்கையான உணவுகளான இலை, புற்கள், பழங்கள், மூங்கில் போன்றவையும் போதுமான தண்ணீர், இயற்கை வாழிடம் அனைத்தும் கிடைக்கும், இங்குதான் யானைக்கு சிறந்த வாழ்வியல் சூழல் கிடைக்கும். அதைத்தான் வழங்கியுள்ளோம்." என்று அவர் குறிப்பிடுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
நீண்ட ஆய்வுக்குப்பின் தேர்வு
"கம்பம் பகுதியில் யானை சுற்றித்திரிந்தபோது, யானையின் பழக்கவழக்கங்களை ஆய்வு செய்து, அதற்குரிய இடத்தை வனத்துறையினர் தயார் செய்திருந்தனர்.
அரிக்கொம்பன் யானைக்கு நல்ல உணவு, வாழிடம், தண்ணீர் போன்றவை கிடைக்கும் இடத்தை வனத்துறையினர் ஆய்வு செய்து இந்த வனப்பகுதியை கவனமாகத் தேர்வு செய்துள்ளனர். மனிதர்கள் வாழாத பகுதியைத் தேர்வு செய்து யானை வி்டப்பட்டுள்ளது."
"யானையின் உடல்நிலை சிறப்பாக இருக்கிறது, உடலில் இருந்த காயங்கள் குணமடைந்துவிட்டன. மீண்டும், யானை மனிதர்கள் வாழும் பகுதிக்கு வருவதற்கான வாய்ப்பு மிகமிகக்குறைவு. அந்த வனப்பகுதிக்குள் யானை தன்னைத் தகவமைக்கும் என்று நம்புகிறோம் அந்த சூழலில்தான் யானை விடப்பட்டுள்ளது. யானை கழுத்தில் ரேடியா காலர் இருப்பதால் அடுத்த 2 ஆண்டுகளுக்கு தொடர்ந்து யானையின் நகர்வுகளைக் கண்காணிக்க முடியும்” எனத் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












