ஈரோட்டில் பிடிபட்ட காட்டு யானை கருப்பனின் பெயருக்கு எதிர்ப்பு கிளம்புவது ஏன்?

- எழுதியவர், மோகன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
தமிழ்நாட்டில் யானை - மனித மோதல்களால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து செய்தி வருவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. இதற்கு மத்தியில் யானைக்கு வைக்கப்பட்ட பெயர் ஒன்று தற்போது விவாதப் பொருளாகியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திற்கு உட்பட்ட தாளவாடி மற்றும் ஜீரஹள்ளி வனப்பகுதிகளில் கடந்த ஒரு வருடமாக விவசாய நிலங்களில் சேதத்தை ஏற்படுத்தி வந்த கருப்பன் என்கிற ஆண் யானை வனத்துறையால் பிடிக்கப்பட்டது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தாளவாடி மற்றும் ஜீரஹள்ளி வனப்பகுதிகளில் கருப்பன் என்கிற ஆண் யானை கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக சுற்றி வந்துள்ளது. இந்த யானையால் தங்களின் பயிர்கள் சேதம் அடைவதால் அதனைக் கைப்பற்றி வேறு பகுதியில் விட வேண்டும் என அந்தப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். கருப்பன் யானை தாக்கியதில் இரு விவசாயிகளும் உயிரிழந்துள்ளனர்.
கருப்பன் யானையை பிடிக்கும் முயற்சிகள் கடந்த காலங்களில் பலன் தரவில்லை. கும்கி யானைகளை வரவழைத்தும் மயக்க ஊசி செலுத்தியும் யானையை பிடிக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியிலே முடிந்தன. யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தாலும் ஒரு சில தினங்களிலே மீண்டும் ஊருக்குள் வந்துவிடுவது வாடிக்கையாக இருந்து வந்துள்ளது.
மூன்று முறை கும்கி யானைகளை வரவழைத்தும் கருப்பனை கட்டுப்படுத்த முடியாமல் போனது. இந்த நிலையில் சமீபத்தில் மீண்டும் கருப்பன் நடமாட்டம் அதிகரித்ததால் நான்காவது முறையாக கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. பொள்ளாச்சி டாப்ஸ்லிப் முகாமிலிருந்து மாரியப்பன், சின்னதம்பி என்கிற இரு கும்கி யானைகள் தாளவாடிக்கு கொண்டு வரப்பட்டன.
நீண்ட முயற்சிக்குப் பிறகு கருப்பன் நேற்று அதிகாலை கும்கி யானைகள் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. அதன் பிறகு நேற்று இரவு அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதி தட்டக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட தமிழ்நாடு - கர்நாடக எல்லையான கர்கேகண்டிபள்ளம் வனப்பகுதியில் யானை விடப்பட்டது.
இந்த நிலையில் யானை இருவரை கொன்றுவிட்டது, அதிக சேதங்களையும் ஏற்படுத்தியுள்ளது எனவே ஆண் யானைக்கு வைக்கப்பட்ட கருப்பன் என்கிற கடவுள் பெயரை மாற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தாளவாடியைச் சேர்ந்த விவசாயி ராணி யானையின் பெயரை மாற்ற வேண்டும் என கூறியது ஏன் என தெரிவிக்கையில், “மற்ற யானைகளை சற்று விரட்டினால் கூட காட்டுப்பகுதிக்குள் சென்றுவிடும். ஆனால் கருப்பன் விரட்டுவதற்கு பணிவதில்லை.

பெயருக்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?
இந்த ஒரு யானையால் மட்டும் தான் பாதிப்பு என்பதை வனத்துறைக்கு புரிய வைப்பதற்கே அதிக காலம் ஆனது. கருப்பன் யானை இரண்டாவதாக ஒருவரை கொன்ற பிறகு தான் அதற்குப் கருப்பன் எனப் பெயர் வைத்தார்கள். யார் பெயர் வைத்தார்கள் என எங்களுக்கு தெரியவில்லை. கருப்பன் இந்த கிராம மக்களின் காவல் தெய்வமாக உள்ளது. குலசாமியின் பெயரை பயிரை நாசம் செய்யும் யானைக்கு வைத்தது விவசாயிகளுக்குப் பிடிக்கவில்லை.
அதனால் கருப்பன் என்கிற பெயரை மாற்றச் சொல்லி கேட்டோம்.” என்றார்.
பயிர்களை உண்பதை பழக்கமாக்கிக் கொண்ட யானை
கருப்பன் யானை பயிர்களை உண்ணப் பழகிவிட்டதாக சொல்கிறார் தாளவாடி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் கண்ணையன் சுப்ரமணியன். பிபிசி தமிழிடம் பேசியவர், “சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ஜீரஹள்ளி, தாளவாடி வனப்பகுதியில் தான் இந்த யானை அதிகம் சுற்றி வந்துள்ளது. இந்த வனப்பகுதியைச் சுற்றி நிறைய விவசாய தோட்டங்கள் உள்ளன. கரும்பு, வாழை, சோளம் போன்றவை பிரதானமாக பயிரிடப்பட்டுள்ளன. இங்கு பெரும்பாலும் சிறு விவசாயிகள் தான் உள்ளனர். இங்கு கூட்டமாக நிறைய யானைகள் வந்து செல்வது வழக்கம்.
ஆனால் கருப்பன் என அடையாளம் காணப்படும் இந்த ஆண் யானை தான் அதிகம் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை உண்கிறது. இந்த யானை `Habitual Crop Raider` என்று சொல்லக்கூடிய பயிர்களை உண்பதை பழக்கமாக்கி கொண்ட யானையாக மாறிவிட்டது. இந்த யானை இவ்வாறு மாறியதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.
தோட்டங்களில் காவலுக்கு இருந்த இரண்டு விவசாயிகளை இந்த யானை கொன்றுள்ளது. கடந்த ஒரு வருடமாக இந்தப் பிரச்சனை அதிகமானதால் கருப்பன் யானையைப் பிடித்து இடமாற்ற வேண்டும் என வனத்துறைக்கு கோரிக்கை வைத்தோம். ஆனால் இந்த ஒரு யானையால் மட்டுமே பாதிப்பு ஏற்படுவதில்லை என வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

யானை உணவு தேடி தோட்டங்களுக்கு வருவது அதற்கும் ஆபத்து தான். ஆனால் இந்த யானை சிரமேற்று விவசாய தோட்டங்களுக்கு வருகிறது. இந்த யானை இந்த வனச்சரகங்களையே சுற்றி வருகிறது மற்றும் வலசை செல்வதாகவும் தெரியவில்லை.
யானையைப் பிடித்த பிறகு ரேடியோ காலர் அணிவித்து வேறு இடத்தில் விட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தோம். தற்போது கடும் சிரமத்திற்கு மத்தியில் வனத்துறையினர் தட்டக்கரை வனப்பகுதிக்குள் விட்டுள்ளனர். யானை மீண்டும் இங்கு வராது என நம்புகிறோம். ஆனால் ரேடியார் காலர் மாட்டியிருந்தால் யானையை அடையாளம் கண்டு அதன் நடமாட்டத்தை கண்காணிக்க உதவியாக இருந்திருக்கும்.
யானையால் சிக்கல்கள் இருந்தாலும் யாரும் அவற்றை விரோதமாகப் பார்ப்பதில்லை. யானையை பத்திரமாக மீட்க வேண்டும் என விவசாயிகள் பூஜை நடத்தும் நம்பிக்கையும் இங்கு உள்ளது.
கருப்பன் என்பதை சாமி பெயராக மக்கள் பார்க்கிறார்கள். அதனால் அடாவடியான ஒரு யானைக்கு கருப்பன் பெயர் வைத்திருப்பது ஊர் மக்கள் சிலருக்குப் பிடிக்கவில்லை. பெயரை மாற்ற சொல்லியதும் யானை பிடிபட்டதாக விவசாயிகள் நம்புகின்றனர். அது அவர்களின் நம்பிக்கை. ஆனால் இந்த யானையால் தாளவாடியைச் சுற்றியுள்ள கிராமங்களில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளது உண்மை. இனி அந்தப் பிரச்சனை இருக்காது என நம்புகிறோம்,” என்றார்.

பெயர் வைப்பதற்கு விதிமுறைகள் உள்ளதா?
யானைகளுக்கு பெயர் வைப்பதற்கென எந்த விதிமுறையும் இல்லை என்கிறார் ஹாசனூர் கோட்ட வன அதிகாரி தேவேந்திர மீனா. பிபிசி தமிழிடம் பேசுகையில், “சிக்கலான யானைகளுக்கு பெயர் வைப்பதற்கு தனியாக நடைமுறை எதுவும் கிடையாது. அவை எந்தப் பகுதியில் உலாவுகின்றதோ அங்கு மக்கள் எளிதாக அடையாளம் காணக்கூடிய பெயர்கள் தான் பொதுவாக வைக்கப்படுகிறது. இந்த யானைக்கு வனத்துறை அதிகாரிகள் பெயர் வைக்கவில்லை. பொதுமக்களிடமிருந்து அந்த பெயர் வந்தது. விவசாயிகள் தான் கருப்பன் என அழைக்க தொடங்கியிருப்பார்கள். அதனால் வனத்துறையினரும் அவ்வாறே அழைக்க ஆரம்பித்தார்கள். பெயர் என்பது யானையை அடையாளம் காண்பதற்கான ஒரு நடைமுறை மட்டுமே.
கருப்பன் யானைக்கு ரேடியோ காலர் மாட்டினால் மக்கள் அதை அடையாளம் கண்டு எதிர்மறையாக அணுகுவார்கள் என்பதால் அவ்வாறு செய்யவில்லை. தாளவாடி கடினமான வனப்பகுதி என்பதால் யானை மீண்டும் இங்கு வராது என நம்புகிறோம்” என்றார்
யானைகள் பயிர்களை உண்ணப் பழகுவது ஏன்?
இதுகுறித்து வன உயிர் ஆய்வாளர் ராமகிருஷ்ணன் பிபிசி தமிழிடம் பேசுகையில், “ஒரு பெரிய யானை கூட்டம் இருக்கிறதென்றால் அதில் 5 - 10% யானைகள் `Habitual Crop Raider` ஆக மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது. கூட்டத்தோடு வாழும் யானைகள் அவ்வாறு மாறாது. தனித்து வாழும் ஆண் யானைகள் தான் கடினமாக நடந்து கொள்ளக்கூடியவையாக மாறும். கரும்பு, வாழை போன்ற பணப்பயிர்களின் சுவை பழகிவிட்டால் எளிதில் யானைகளால் விட முடியாது.
மனிதர்களைப் போல தான் யானைகளுக்கும். விவசாயிகளை பயிரிடும் முறையை மாற்றச் சொல்ல முடியாது. யானைகளையும் வரக்கூடாது என தடுக்க முடியாது. மோதல்களை தடுக்க வேண்டுமென்றால் சிக்கலான யானைகளை அடையாளம் கண்டு கண்காணிப்பதே ஒரே வழியாக இருக்கும். வனத்துறை அதற்கு தயாராக இருக்க வேண்டும்.
யானைகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றபோது இது போன்ற மூர்க்கத்தனமான யானைகளும் அதிகரிக்கவே செய்யும். அவற்றை எதிர்கொள்வதற்கான திறன்களையும் வசதிகளையும் அதிகரிக்க வேண்டும். யானைகள் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் பயணித்து மீண்டும் பிடித்த இடத்திற்கே வந்துள்ளன. இந்த யானை மீண்டும் இதே இடத்திற்கு வரும் என உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் கருப்பன் யானைக்கு ரேடியோ காலர் மாட்டியிருந்தால் அதன் நடமாட்டத்தை கண்காணிக்க உதவியாக இருந்திருக்கும்,” என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












