கையில் பணமும் இல்லை, உணவும் இல்லை - ஒடிஷாவில் சடலங்களைத் தேடி அலையும் மேற்கு வங்க சகோதரர்கள்

- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ், ஒடிஷாவில் இருந்து
ஒடிஷா ரயில் விபத்தில் இறந்தவர்களின் சடலங்கள் அனைத்தும் மாநிலத் தலைநகர் புவனேஸ்வருக்கு கொண்டுவரப்பட்டுவிட்டன. ஆனால், விபத்து நடந்து 3 நாட்கள் முடிந்துவிட்டதால், சடலங்களை அடையாளம் காட்டத் திணறுகிறார்கள் உறவினர்கள். சிலரது ஏழ்மை நிலைமையை இன்னும் சிக்கலாக்குகிறது.
விரோதிக்குக்கூட இப்படி ஒரு நிலை வரக்கூடாது என்பார்களே, அம்மாதிரியான நிலையில்தான் இருக்கிறார்கள் மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தைச் சேர்ந்த ராய் சகோதரர்கள். பருண் ராய், சித்தம் ராய், பாசுதேவ் ராய் ஆகிய மூன்று பேரும் இறந்துபோனதாகக் கருதப்படும் தங்கள் உறவினர்கள் இருவரைத் தேடி, எல்லா இடமும் அலைந்துவிட்டார்கள். இதுவரை அவர்களால் சடலங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த மூன்று பேரும் கேரளாவில் கூலித் தொழிலாளராக வேலைபார்த்து வருகிறார்கள். இவர்களுடைய சகோதரியின் கணவரான நித்தம் ராயும் சகோதரரான சந்தன் ராயும் கேரளாவுக்கு வந்து இவர்களோடு சேர்ந்து ஏதாவது வேலை பார்க்கலாம் என நினைத்தார்கள். மேற்கு வங்கத்திலிருந்து சென்னைக்கும் சென்னையிலிருந்து கேரளாவுக்கும் செல்வதுதான் இவர்கள் திட்டம்.
இதற்காக ஜூன் இரண்டாம் தேதி நித்தம் ராயும் சந்தன் ராயும் கோரமண்டல் எக்ஸ்பிரசில் ஏறினார்கள். அன்று மாலை ஏழரை மணியளவில் நித்தம் ராயின் போனிலிருந்து இந்தச் சகோதரர்களுக்கு ஒரு போன் வந்தது. ரயில் விபத்துக்குள்ளாகிட்ட தகவலும் போனுக்குரியவர் இறந்துவிட்ட தகவலும் சொல்லப்பட்டது.
அதிர்ந்துபோன மூவரும் கேரளாவிலிருந்து அடித்துப்பிடித்துக்கொண்டு பாலாசோரை வந்தடைந்தனர். ஆனால், அதற்குள் சடலங்கள் அனைத்தும் புவனேஸ்வருக்கு மாற்றப்பட்டுவிட்டன. பிறகு இவர்கள் மூவரும் புவனேஸ்வரை வந்தடைந்தனர். புவனேஸ்வரில் வந்து இறங்கியபோது இவர்களிடம் மொத்தமே ஐநூறு - அறுநூறு ரூபாய்தான் இருந்தது.

இந்தத் தொகையை வைத்துக்கொண்டு, எந்த மருத்துவமனைக்குப் போவது, எப்படி சாப்பிடுவது என்று இவர்களுக்குப் புரியவில்லை. ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு ஆட்டோவின் ஓட்டுநரை அணுகி, நிலைமையை விளக்கினர். அவர் பெயர் பிவா ரஞ்சன் தாஸ். நிலைமையைப் புரிந்துகொண்ட பிவா, இவர்களுக்கு உதவுவதாகக் கூறியதும் இவர்களால் நம்ப முடியவில்லை. "நான்கைந்து மருத்துவமனைகளில் தேட வேண்டியிருக்கும், பரவாயில்லையா?" எனத் திரும்பத் திரும்பக் கேட்டனர். பிவா ரஞ்சன் அதற்கு ஒப்புக்கொண்டார்.
இதற்குப் பிறகு சடலங்கள் வைக்கப்பட்டிருந்த ஒவ்வொரு மருத்துவமனையாகத் தேட ஆரம்பித்தார்கள். ராய் சகோதரர்களுக்கான பகல் உணவை, பிவா ரஞ்சன் தாஸே வாங்கிக் கொண்டுத்தார்.
காலையில் ஆரம்பித்த பயணம் மாலையில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வந்து நின்றது. ஆனால், அங்கேயும் அவர்கள் தேடிவந்தவர்களின் சடலங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இவர்களிடம் இருந்த புகைப்படத்தின் சாயலில் இருந்த இரு சடலங்களைக் காட்டினாலும், இவர்களால் அதை ஏற்க முடியவில்லை. ஒரு கட்டத்தில், டிஎன்ஏ பரிசோதனைக்காக ரத்தத்தைக் கேட்டபோதும் ராய் சகோதரர்கள் மறுத்துவிட்டனர்.
இரவு வந்துவிட்ட நிலையில், அதற்குப் பிறகு என்ன செய்வதென யாருக்கும் தெரியவில்லை. "இவர்கள் விரும்பினால், மீண்டும் ரயில் நிலையத்தில் கொண்டுபோய் விடுவதற்குத் தயாராக இருக்கிறேன்" என்றார் பிவா ரஞ்சன் தாஸ். எங்கேயாவது தங்கிக் கொள்வதற்கும் கையில் காசு இல்லை. என்ன செய்வதெனத் தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்கள் ராய் சகோதரர்கள்.

சடலங்களை அடையாளம் காண முடிந்தவர்கள், சடலங்களை வாங்கிக்கொண்டு புறப்படுகிறார்கள். ஆனால், இதுபோல சடலங்களை அடையாளம் காண முடியாதவர்கள் நிலைமைதான் சிக்கல். சடலங்கள் இல்லாததால் தாங்கள் தேடிவந்த உறவினர்கள் உயிரோடு இருக்கிறார்களா, இறந்துவிட்டார்களா என்றுகூட புரியாத நிலையில் பரிதவிக்கிறார்கள்.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு உதவ, அம்மாநில அதிகாரிகள் எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒரு உதவி மையம் ஒன்றை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இருந்தபோதும், சடலங்களை அடையாளம் காண முடியாவிட்டால் நிலைமை சிக்கலாகிவிடுகிறது.
பாலாசோருக்கு அருகில் நடந்த ரயில் விபத்தில் இறந்தவர்களின் சடலங்கள் அனைத்தும் பாலாசோரிலிருந்து மாநிலத் தலைநகர் புவனேஸ்வரத்திற்குக் கொண்டுவரப்பட்டுவிட்டன. அங்குள்ள எய்ம்ஸ் மருத்துவமனை, பிற தனியார் மருத்துவமனைகளின் பிணவறைகளில் வைக்கப்பட்டுள்ளன.

சடலங்கள் பாலாசோரில் இருக்கும்போதே 82 சடலங்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் கொடுக்கப்பட்டுவிட்டன. 193 சடலங்கள் புவனேஸ்வருக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதில் திங்கட்கிழமை மாலை வரை 75க்கும் மேற்பட்ட சடலங்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் பிஹார், ஜார்க்கண்ட், ஒடிஷா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
சடலங்களை உறவினர்களிடம் ஒப்படைக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், இதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. அந்த ரயிலில் பயணம் செய்தவர்கள், தங்கள் உறவினர்களிடம் தாங்கள் பயணம் செய்யும் ரயில் உள்ளிட்ட தகவல்களைச் சொல்லிவிட்டு பயணத்தைத் துவங்கியிருந்தால், விபத்து குறித்து அறிந்ததும் அந்த உறவினர்கள் இவர்களைத் தேட ஆரம்பித்திருப்பார்கள். அப்படிச் சொல்லாமல் பயணம் செய்தவர்கள், தூரத்து உறவினர்களை மட்டுமே கொண்டவர்கள் ஆகியோரின் சடலங்களை கோரி உறவினர்கள் வர இன்னும் கால தாமதமாகும்.
ஆனால், விபத்தில் சிக்கியதால் ஏற்கனவே சடலங்கள் சிதைய ஆரம்பித்துவிட்ட நிலையில், இன்னும் எத்தனை நாள் இவற்றை பிணவறையில் பாதுகாக்க முடியும் என்ற கேள்வியும் இருக்கிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












