ஒடிஷா ரயில் விபத்து: 3 ரயில்வே ஊழியர்களை கைது செய்த சிபிஐ - இதுவரை நடந்தவை என்னென்ன?

ஒடிஷா ரயில் விபத்து

பட மூலாதாரம், Getty Images

ஒடிஷா ரயில் விபத்து இந்தியாவை உலுக்கியது மட்டுமின்றி, உலகம் முழுவதுமே துயரத்தை படரவிட்டது. 288 பேரை பலிகொண்ட இந்த ரயில் விபத்து, இந்தியாவின் நடைபெற்ற மோசமான ரயில் விபத்துகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

விபத்து நடந்து ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையிலும் இன்னும் 52 உடல்கள் அடையாளம் காணப்படாமல் உள்ளன.

ஒடிஷாவின் பாலாசோர் மாவட்டத்தில் மூன்று ரயில்கள் மோதி ஏற்பட்ட கோர ரயில் விபத்து சம்பவத்தில் சிபிஐ விசாரணை மேற்கொண்டிருந்தது.

இந்நிலையில், தற்போது இந்த விபத்து தொடர்பாக மூத்த பொறியாளர், தொழில்நுட்பவியலாளர் உட்பட மூன்று பேரை, குற்றவியல் சட்டப்பிரிவுகள் 304, 201 ஆகியவற்றின் கீழ் சிபிஐ கைது செய்துள்ளது.

இந்தத் துயரம் எப்போது, எப்படி நடந்தது? அதனைத் தொடர்ந்து ஒட்டுமொத்த சூழலும் மாறியது எப்படி? விபத்துக்குக் காரணம் என்ன? மத்திய, மாநில அரசுகள் எடுத்த மீட்பு, நிவாரண நடவடிக்கைகள், உறவுகளின் நிலை தெரியாதவர்கள் என்ன செய்ய வேண்டும்? என்பன போன்ற அனைத்து விவரங்களையும் சுருக்கமாகப் பார்க்கலாம்.

ரயில் விபத்து எங்கே, எப்போது நடந்தது?

வெள்ளிக்கிழமை மாலை 6.55 மணியளவில் ஒடிஷா மாநிலம் பாலாசோர் அருகே பஹானகா பஜார் ரயில் நிலையத்திற்கு அருகே விபத்து நேரிட்டது. 2 பயணிகள் ரயில்களும், ஒரு சரக்கு ரயிலும் மோதிக் கொண்டன. அந்த இரண்டு பயணிகள் ரயில்களிலும் சுமார் 2 ஆயிரம் பேர் பயணித்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஒடிஷாவில் விபத்துக்குள்ளான 3 ரயில்கள் எவை?

ஒடிஷா ரயில் விபத்து
  • கொல்கத்தாவின் ஷாலிமரில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ்
  • பெங்களூரில் இருந்து ஹவுரா நோக்கிச் சென்று கொண்டிருந்த யஷ்வந்த்பூர் - ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்
  • சரக்கு ரயில்

ஒடிஷா ரயில் விபத்து நடந்தது எப்படி?

சரக்கு ரயில் நின்றிருந்த 'லூப்' லைனில் நுழைந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலானது, அங்கே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது. இதில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் 14 பெட்டிகள் தடம்புரண்டன. அதில் சில பெட்டிகள் அருகில் இருந்த மற்றொரு தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த யஷ்வந்த்பூர் - ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் மீது விழுந்தன. இதில், சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலின் கடைசி 3 பெட்டிகள் தடம் புரண்டன.

சிக்னல் குறித்த டிஜிட்டல் பதிவுகள் கூறுவது என்ன?

"அன்றைய இரவில் பதிவான டிஜிட்டல் தரவுகளை ஆய்வு செய்ததில், அந்த பாதையில் சிக்னல் சரியாக, எதிர்பார்த்தபடியே இருப்பது தெரியவந்துள்ளது. ஆனாலும் விபத்து நேரிட்டுள்ளது. ஆகவே, எந்த இடத்தில் தவறு நடந்தது என்பதை கண்டுபிடிக்க வேண்டியுள்ளது." என்று ரயில்வே சிக்னல் கட்டமைப்பின் தலைமை செயல் இயக்குநர் சந்தீப் மாத்தூர் தெரிவித்ததாக 'தி ஹிந்து' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அதேநேரத்தில், இன்டர்லாக்கிங் சிஸ்டத்தில் பெரிய பிரச்னை இருக்கிறது என்று ஒரு மூத்த ரயில்வே அதிகாரி தெரிவித்தாக அந்த பத்திரிகை கூறுகிறது. சிக்னலில் மனித குறுக்கீடு அல்லது கணினி கருவிகள், மென்பொருளில் ஏற்பட்ட கோளாறு ஆகிய இரண்டில் ஒன்றே விபத்துக்கு காரணங்கள் இருக்கலாம்.

ஒடிஷா ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எத்தனை பேர்?

3 ரயில்கள் மோதிக் கொண்ட இந்த கோர விபத்தில் 288 பேர் பலியானதாக முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர், சில உடல்கள் மீண்டும் மீண்டும் கணக்கில் கொள்ளப்பட்டதாக கூறி, அந்த எண்ணிக்கையை 275 என்றுஅறிவித்தனர். ஆனால் பலி எண்ணிக்கையை மீண்டும் ஒருமுறை சரிபார்த்து இறுதியாக 288 என்றே அறிவிக்கப்பட்டது. ஜூன் 6ஆம் தேதி மாலை, ரயில் விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 288 தான் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 205 பேரின் உடல் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 83 பேரின் உடல்கள் அடையாளம் தெரியாமல் புவனேஷ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையிலும், மற்ற சில மருத்துவமனைகளிலும் வைக்கப்பட்டுள்ளது.

இதில் காயமடைந்த 1000க்கும் புவனேஷ்வர், பாலாசோர் உள்ளிட்ட நகரங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒடிஷா ரயில் விபத்து

ஒடிஷா ரயில் விபத்தில் உயிரிழந்தோர் உடல்கள் எங்கே வைக்கப்பட்டன?

பாலாசோரில் விபத்தில் உயிரிழந்தவர்களில் 190 பேரின் உடல்கள் புவனேஷ்வருக்கு கொண்டு வரப்பட்டன. அதில் 110 பேரின் உடல்கள் அங்கிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டன. மற்ற 80 பேரின் உடல்கள் தனியார் மருத்துவமனைகளில் உள்ள பிணவறைகளில் வைக்கப்பட்டிருந்தன.

ஒடிஷாவில் விமான, ரயில் நிலையங்களில் சிறப்பு கவுண்டர்

வேறு மாநிலங்களில் இருந்து சடலங்களை அடையாளம் காண வருவோருக்கு உதவும் வகையில் பல ஏற்பாடுகளைச் செய்திருக்கிறது ஒடிஷா அரசு.

விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இதற்கென சிறப்பு கவுன்டர்கள் செயல்பட்டன. சடலங்களைத் தேடி புவனேஸ்வருக்கு வந்து சேரும் உறவினர்கள், உடனடியாக அரசு வாகனத்தின் மூலம் மருத்துவமனைகளுக்கு உடல்களை அடையாளம் காண அழைத்துச் செல்லப்பட்டனர்.

உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க என்ன ஏற்பாடு செய்யப்பட்டது?

உயிரிழந்தவர்களை அடையாளம் காண வரும் குடும்பத்தினருக்கு முதலில் சடலங்களின் புகைப்படங்களை கணினியில் காட்டி, அதில் நபர்கள் அடையாளம் காணப்பட்ட பிறகு, நேரடியாக அந்த உடல்கள் குடும்பத்தினருக்குக் காட்டப்பட்டன.

அதைத் தொடர்ந்து உயிரிழந்தோரின் குடும்பத்தினர் அடையாளங்களை உறுதி செய்த பிறகு, ஒடிஷா மாநில அரசே சொந்த செலவில் உடல்களைச் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தது.

ஒரு உடலுக்கு உரிமைக் கோரும் இரண்டு குடும்பங்கள்

இந்தக் கோர விபத்தில் உயிரிழந்ததாகக் கருதப்படும் பிகாரை சேர்ந்த 16 வயது சிறுவன் தஃப்சீர் அன்சாரி மற்றும் இவரின் மூன்று வயது இளைய சகோதரரான தௌசீஃப் ஆகியோரின் உடல்கள் பாலாசோர் மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தன. அவற்றைக் கண்ட அவர்களின் தாத்தா முகமது நிஜாமுதீன் கதறி அழுதார்.

இந்த நிலையில், “சிறுவன் தஃப்சீர் அன்சாரியின் உடல் என்று அவரது தாத்தா நிஜாமுதீன் அடையாளம் காட்டிய சடலத்துக்கு மற்றொரு குடும்பமும் உரிமை கோரியுள்ளது” என அதிகாரிகள் அவரிடம் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார்.

“இது எப்படி சாத்தியம் என்று கேள்வியெழுப்பிய அவர் உடைந்து போனார். அவரை சமாதானம் செய்த அதிகாரிகள், குழப்பம் தொடர்ந்து நீடித்ததால் டி.என்.ஏ பரிசோதனைக்கு உதவுகிறோம் என அந்த முதியவருக்கு வாக்குறுதியளித்தனர்.

ஒடிஷா ரயில் விபத்து

பட மூலாதாரம், Getty Images

எந்த மாநிலத்தவருக்கு அதிக பாதிப்பு?

2 ரயில்களிலும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளுக்கே அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் மேற்குவங்கம், பிகார், சத்தீஷ்கர் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அதிலும் சென்னை நோக்கி வேலை தேடி வந்த ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களே அதிகம்.

மீட்புப் பணியில் ஒடிஷா அரசின் பங்கு என்ன?

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதமாக செய்ததில் ஒடிஷா அரசின் பங்கு அளப்பரியது.

புயல் போன்ற இயற்கைப் பேரிடர்களை அதிகம் எதிர்கொள்ளும் மாநிலம் என்பதால், அதற்காக சிறப்புக் கட்டமைப்புகளுடன் எப்போதும் ஆயத்தமாக இருக்கும் ஒடிஷா அரசு, ரயில் விபத்துக்குப் பிறகான சூழலை திறம்படக் கையாண்டது.

அதனால், காயமின்றி தப்பிய பயணிகளை அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதும், உறவினர்களின் நிலை அறிய வெளிமாநிலத்தவர் பாலாசோருக்கு செல்வதும் சரியாகக் கையாளப்பட்டது.

15.6 கோடி ரூபாய் நிவாரணம்

தென்கிழக்கு ரயில்வேவின் தலைமை செய்தித்தொடர்பாளர் ஆதித்ய குமார் சவுத்ரி நிவாரணம் தொடர்பாக ஏ.என்.ஐ. செய்தி முகமையிடம் பேசுகையில், `531 பேருக்கும் சுமார் 15.6 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

தங்கள் குடும்ப உறுப்பினரை இழந்த குடும்பங்கள் மற்றும் இழப்பீடு பெற விரும்புவோர், கட்டாக், மிட்னாபூர், புவனேஸ்வர் மற்றும் பாலாசோர் ஆகிய இடங்களில் உள்ள எங்கள் உதவி மையங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்` என்று குறிப்பிட்டிருந்தார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் நிலை என்ன?

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் தமிழ்ப் பெயர்கள் மற்றும் தமிழ்நாட்டை இருப்பிடமாக கொண்டு முன்பதிவு செய்த 127 பேரில் 119 பேரை தொடர்பு கொண்டு அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை மாநில அரசு உறுதிப்படுத்தியது.

பின்னர் இவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக ஒடிஷாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு திரும்பிய அதிகாரிகள் குழு தெரிவித்தது.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளின் நிலை என்ன?

பேரிடர் மீட்புப்படை, தீயணைப்புத்துறை, காவல்துறை ஆகியோருடன் ராணுவமும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் இணைந்து கொண்டது.

ராணுவ பொறியாளர்களும், மருத்துவர்களும் விபத்து நேரிட்ட இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைகளுக்குக் கொண்டுபோய் சேர்ப்பதில் ராணுவமும் முக்கியப் பங்காற்றியது.

பயணிகளுக்கு என்ன மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது?

விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா சூப்பர் பாஸ்ட் ரயில் பயணிகளில் காயமின்றி தப்பிய அனைவரும் சொந்த ஊர் சென்றடைய மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அவர்கள் பாலாசோர் அழைத்துச் செல்லப்பட்டு, சிறப்பு ரயில்கள் மூலம் அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த வகையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 137 பேருடன் சிறப்பு ரயில் சென்னை வந்தடைந்தது.

தமிழ்நாடு அரசு செய்தது என்ன?

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை வரக் கூடியது என்பதால், அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகம் இருக்கக் கூடும் என்ற அடிப்படையில் தமிழ்நாடு அரசு 24 மணி நேர அவசர நிலை செயல்பாட்டு மையத்தை அமைத்தது.

தமிழ்நாடு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் விபத்து நேரிட்ட இடத்திற்கே அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் அங்கிருந்தபடி, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்குத் தேவையான உதவிகள் தாமதமின்றி கிடைப்பதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு

பிரதமர் மோதி நேரில் ஆய்வு

மறுநாளே விபத்து நடந்த இடத்தில் பிரதமர் மோதி நேரில் ஆய்வு செய்தார். அத்துடன், பாலாசோரில் மருத்துவமனைக்குச் சென்று, அங்கு சிகிச்சை பெற்று வந்தவர்களிடம் அவர் நலம் விசாரித்தார். இந்த விபத்துக்குக் காரணமான ஒருவரையும் அரசு தப்ப விடாது என்று அவர் உறுதிபடக் கூறினார்.

ரயில்வே அமைச்சர் என்ன செய்தார்?

தகவல் அறிந்ததுமே ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விபத்து நேரிட்ட இடத்திற்கு விரைந்து விட்டார். அங்கேயே இரவு, பகலாக தொடர்ந்து தங்கியிருந்த அவர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தினார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் தொடர்ச்சியாக பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

விபத்துக்கு காரணம் என்ன?

ரயில் விபத்து எவ்வாறு நேரிட்டது? அதற்கு யார்யார் காரணம்? என்பது குறித்த விவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். சிக்னல்களை ஒழுங்குபடுத்தும் மின்னணு இன்டர்லாக்கிங் சிஸ்டத்தில் ஏற்பட்ட மாற்றமே விபத்துக்குக் காரணம் என்று அவர் முடிவாகக் கூறியுள்ளார்.

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஓட்டுநர் கூறியது என்ன?

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஓட்டுநர் விபத்தில் படுகாயமுற்று உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலை அப்படியே தொடர்ந்து இருப்பதாக ரயில்வே வாரிய உறுப்பினர் ஜெயா வர்மா சின்ஹா தெரிவித்துள்ளார். அவர் சுயநினைவுடன் இருக்கையில் பேசும் போது, கிரீன் சிக்னல் கிடைத்த பிறகே அந்த பாதையில் சென்றதாக குறிப்பிட்டதாக ஜெயா வர்மா கூறியுள்ளார். விபத்துக்கு சதிச்செயல் காரணமாக இருக்கக்கூடும் என்பதற்கான வாய்ப்புகளை மறுக்க முடியாது என்பது அவரது கருத்து.

ஒடிஷா ரயில் விபத்து

பட மூலாதாரம், Getty Images

'கவச்' இருந்திருந்தால் விபத்தை தடுத்திருக்கலாமா?

'கவச்' இருந்திருந்தால் இந்த விபத்தை தடுத்திருக்கலாம் என்ற பேச்சு எழுந்தது. 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்ட கவச் திட்டத்தை முனைப்புடன் முன்னெடுத்துச் சென்றிருந்தால் இத்தகைய கோர விபத்து நேரிட்டிருக்காது என்று பலரும் கருத்து தெரிவித்தனர். அத்துடன், கவச் சிஸ்டத்தை பரிசோதிக்கும் போது அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசும் வீடியோவை சமூக வலைதளங்களை பகிர்ந்து பலரும் பல விதமான கேள்விகளை முன்வைத்தனர்.

ரயில்வே அமைச்சர் பதவி விலக கோரிக்கை

லால் பகதூர் சாஸ்திரி, நிதிஷ்குமார் போன்ற முன்னுதாரணங்களை சுட்டிக்காட்டி, இந்த விபத்துக்கு தார்மீகப் பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. "எப்படி அலட்சியம் காட்டப்பட்டது, எப்படி இவ்வளவு பெரிய விபத்து நடந்தது என்பதை விசாரித்து அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில்வேயை சீரழித்துவிட்டனர்" என்று முன்னாள் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் குற்றம்சாட்டினார்.

வந்தேபாரத் வரவால் ரயில் பாதுகாப்பில் அலட்சியமா?

புல்லட் ரயில், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகியவற்றில் முதலீடு செய்யும் ரயில்வே, பயணிகளின் பாதுகாப்பில் குறைந்த கவனமே செலுத்துவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் அதிரஞ்சன் செளத்ரி குற்றம்சாட்டினார். தினமும் 25 லட்சம் பேர் பயணிக்கும் ரயில்களில் தேவையான அடிப்படை கட்டமைப்புகள், கீழ் மட்டத்தில் தேவைப்படும் விஷயங்கள் மீது கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அதே வழித்தடத்தில் மீண்டும் ரயில் சேவை தொடங்கிவிட்டதா?

விபத்து நேரிட்ட இடத்தில் இடைவிடாமல் இரவு, பகலாக நடந்த மீட்புப் பணிகள் ஒரே நாளில் நிறைவடைந்தன. தலைகுப்புற கவிழ்ந்த, தடம்புரண்ட பெட்டிகள் அப்புறப்படுத்தப்பட்டு அதற்குள் இருந்த பயணிகளின் உடல்கள் அகற்றப்பட்டதுடன், காயமுற்றிருந்த நபர்களும் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அதன் பிறகு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் கடும் உழைப்பால், தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டு மூன்றே நாட்களில் அவ்வழியே ரயில் சேவை மீண்டும் தொடங்கியது.

சதியா? - சிபிஐ விசாரணைக்கு ரயில்வே பரிந்துரை

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது. கோரமண்டல் ரயில் விபத்து நடந்த பகுதிக்கு 10 பேர் கொண்ட சிபிஐ குழு அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

சந்தேகம் எழுப்பும் அகிலேஷ் யாதவ்

மமதா பானர்ஜியைத் தொடர்ந்து, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும், ஒடிஷா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் சரியான எண்ணிக்கையை சொல்ல முடியாதது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் பேசிய அவர், "ஒடிஷாவில் 3 என்ஜின்கள் மோதிக் கொண்டுள்ளன. எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பதைக் கூறுங்கள்? எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பதை அவர்களால் இன்னும் கூற முடியவில்லை" என்றார்.

சிபிஐ விசாரணை - FIR பதிவு

ஒடிசா ரயில் விபத்து

பட மூலாதாரம், ANI

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.

அப்போது சிபிஐ வெளியிட்ட செய்திக்குறிப்பில், "கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யெஸ்வந்த்பூர்- ஹௌரா எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் மோதிக்கொண்ட விபத்து தொடர்பாக ரயில்வே அமைச்சகம் கேட்டுக்கொண்டதன்படியும், ஒடிசா அரசாங்கத்தின் ஒப்புதல்படியும் மற்றும் இந்திய அரசு உத்தரவின்படியும் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரனையைத் தொடங்கியுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டது.

கோரமண்டல் ரயில் விபத்து நடந்த பகுதிக்கு 10 பேர் கொண்ட சிபிஐ குழு அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

மின்னணு இன்டர்லாக்கிங் முறையில் ஏற்பட்ட கோலாறின் காரணமாக ரயில் விபத்து ஏற்பட்டது என ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் சிபிஐயின் 10 பேர் குழு, விபத்து நடந்த இடத்தில் விசாரணையைத் தொடங்கியது. மேலும் 3 ரயில்கள் மோதி ஏற்பட்ட விபத்து தொடர்பாக முதல் தகவல் அறிக்கையை சிபிஐ பதிவு செய்துள்ளது.

"288 பேரை பலிவாங்கிய இந்த விபத்து மனித தவறின் காரணமாக ஏற்பட்டதா அல்லது ரயிலை கவிழ்க்க சதி ஏதாவது நடந்ததா என்ற கோணத்தில் விசாரணை நடக்கும்," என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய சிபிஐ மூத்த அதிகாரி தெரிவித்திருந்தார்.

சிபிஐ தொடங்கிய இந்த விசாரணையின் தொடர்ச்சியாக தற்போது மூத்த பொறியாளர் உட்பட மூன்று ரயில்வே அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: