ஒடிஷாவின் பிணவறைகளில் மகனைத் தேடும் தாய்

- எழுதியவர், அர்ச்சனா சுக்லா
- பதவி, பிபிசி செய்தியாளர்
லீலாவதியின் கையில் இருப்பது அவருடைய 20 வயது மகனின் புகைப்படம்.
அவருடைய மகன் ராஜா சாஹ்னி ஒடிசாவில் பாலாசோர் நகருக்கு அருகே விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் தான் பயணம் மேற்கொண்டிருந்தார். அவர் ரயிலில் ஏறியதற்கு முன்பாக இப்படத்தை தனது செல்ஃபோனில் எடுத்துள்ளார்.
இந்த படத்தைக் கையில் வைத்துக்கொண்டு லீலாவதி தற்போது தனது மகனை பாலாசோர் நகரில் தேடிவருகிறார்.
பிஹாரிலிருந்து பாலாசோர் நகருக்கு வந்த லீலாவதி, தொடர்ந்து 30 மணிநேரப் பயணம் மேற்கொண்டு இங்கு வந்துள்ளார். பெரும் சிரமங்களுக்கு இடையே தனது மகனைத் தேடியும் எந்த பலனும் இல்லை என்கிறார் அவர்.
"எல்லா மருத்துவமனைகள் மற்றும் பிணவறைகளிலும் நான் தேடியும் என் மகனைப் பற்றிய எந்த விவரங்களும் எனக்குக் கிடைக்கவில்லை. பிணவறைகளில் பணியாற்றும் அலுவலர்களிடம், ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் படங்களைக் காட்டவும் வேண்டுகோள் விடுத்தேன். ஆனால் அது போன்ற எந்த உதவியையும் அவர்கள் செய்யவில்லை," கதறி அழுதபடியே கூறினார் லீலாவதி.
மகன் நலமுடன் இருப்பதாக ஏதாவது தகவல் வராதா?
"அவன் நலமுடன் இருப்பதாக எங்காவது இருந்து ஏதாவது தகவல் வராதா என கடவுளிடம் வேண்டிக்கொண்டே இருக்கிறேன். எனக்கு அவன் கிடைத்தால் போதும். வாழ்க்கையில் வேறு எதுவும் வேண்டாம்," என்றார் அவர்.

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் ராஜா சாஹ்னி பயணம் செய்த போது லீலாவதியின் உறவினர்கள் எட்டு பேரை அவர் சந்தித்துள்ளார். இருப்பினும் தற்போது அவரைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்காமல் லீலாவதி வேதனையுடன் காத்திருக்கிறார்.
லீலாவதி தொடர்ந்து அழுதுகொண்டே இருந்ததால் அவரது உடல் மிகவும் பலவீனமடைந்திருந்தது. இதே போல் மேலும் பலருடைய நிலையும் பலவீனமாகவே இருந்தது.
இவர்கள், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களைத் தேடி மருத்துவமனைகளில் தொடங்கி பிணவறைகள் வரை அலைந்துகொண்டிருக்கின்றனர்.
இறந்து போனவர்களின் படங்களை இவர்கள் கூர்ந்து கவனிக்கின்றனர். அதிலிருந்து ஏதாவது தகவல் கிடைக்குமா என இதயம் நொறுங்கும் நிலையில் பரிதவித்துவருகின்றனர். மேலும், குடும்ப உறுப்பினர்களைப் பற்றிய நல்ல தகவல் எங்காவது இருந்து ஏதாவது ரூபத்தில் வராதா என்றும் அவர்கள் ஏங்கிக்கொண்டுள்ளனர்.
ஹௌராவில் இருந்து பெங்களூருவை நோக்கிப் பயணத்துக்குத் தயாரான ராஜா சாஹ்னி, ஹௌராவில் ரயிலில் ஏறியதற்கு முன்பு ஒரு செல்ஃபி எடுத்து அவரது வீட்டுக்கு அனுப்பியுள்ளார். ஆனால் ரயில் புறப்பட்ட இரண்டு மணிநேரம் கழித்து, அந்த ரயில் விபத்துக்குள்ளானதாக லீலாவதிக்கு அவரது உறவினர்கள் செல்ஃபோன் மூலம் தகவல் அளித்துள்ளனர்.
அப்போதிலிருந்தே ராஜா சாஹ்னியைத் தொடர்புகொள்ள லீலாதேவி முயன்றுவந்திருக்கிறார். ஆனால் அவரது செல்ஃபோன் சுவிச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதாக பதில் கிடைத்திருக்கிறது.
ரூ. 45,000 செலவு செய்து வாடகை கார் மூலம் மகனைத் தேடிப் பயணம்
விபத்து குறித்த தகவல் கிடைத்ததுமே, லீலாவதியும், அவரது குடும்பத்தினர்களும் பாலாசோர் நகருக்குப் புறப்பட்டனர். ரூ.45,000 செலவிட்டு ஒரு வாடகை கார் மூலம் அவர்கள் 30 மணிநேரப் பயணம் செய்து பாலாசோர் நகரை அடைந்தனர்.
லீலாவதிக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் இளையவர் தான் ராஜா சாஹ்னி. இதைச் சொன்ன போது லீலாவதியின் தொண்டை அடைத்துக்கொண்டது.
ராஜா சாஹ்னி பெங்களூரு நகரில் தினக்கூலி வேலை செய்வதற்காக தனது வீட்டிலிருந்து புறப்பட்டார். அவருடைய உறவினர்கள் சிலர் ஏற்கெனவே அங்கு இதே போல் கூலி வேலை செய்து கொண்டிருந்த நிலையில், அவர்களுடன் ராஜா சாஹ்னியும் புறப்பட்டு வந்திருக்கிறார்.
இப்பயணத்தின் போது ஹௌரா வரை வேறு ரயிலில் வந்த அவர் அங்கு தான் இந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறியிருக்கிறார். ஆனால், அவர் எப்போதுமே திரும்பி வர மாட்டாரோ என லீலாவதி தற்போது மிகுந்த கவலையில் மூழ்கியுள்ளார்.
இந்தியாவில் பொதுவாக ஏப்ரல் முதல் ஜுன் மாதம் வரை ரயில்களில் அதிக கூட்டம் காணப்படும். அது கோடை விடுமுறைக் காலம் என்பதால் ஏராளமான மாணவர்களும், அவர்களது குடும்பத்தினரும் சுற்றுலாப் பயணம் மேற்கொள்கின்றனர்.
அண்மைக்காலங்களில் இது போல் ரயிலில் அதிக எண்ணிக்கையில் பயணிகள் பயணம் செய்யும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு அதிக எண்ணிக்கையிலானவர்களால் பார்க்கப்பட்டன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












