'இந்திய வாக்காளர் ஆவணங்களில் இடம் பெற்ற' பிரேசில் பெண் - வைரலானது பற்றி கூறியது என்ன?

பட மூலாதாரம், Congress Party
- எழுதியவர், லூயிஸ் பெர்னாண்டோ டோலிடோ , லண்டன்
- எழுதியவர், கீதா பாண்டே மற்றும் யோகிதா லிமாயே, இந்தியா
இந்தியாவில் தேர்தல் மோசடி தொடர்பாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் முன்வைக்கும் குற்றச்சாட்டில் இடம் பெற்றிருந்த ஒரு பெண்ணின் புகைப்படம் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது. அந்தப் பெண் பிரேசில் நாட்டைச் சேர்ந்த சிகையலங்கார நிபுணர் லாரிசா நேரி.
இதுவரை இந்தியாவிற்கே வந்ததில்லை என்று பிபிசியிடம் தெரிவித்த அந்தப் பெண், "ஏதோ தவறு நடந்திருக்கலாம், யாரோ குறும்பு செய்து விளையாடுகிறார்கள்" என்று நினைத்ததாகக் கூறுகிறார்.
பின்னர் தன்னுடைய சமூக ஊடகக் கணக்குகளில் செய்திகள் வந்து குவிந்தன, பலரும் இன்ஸ்டாகிராமில் டேக் செய்யத் தொடங்கினார்கள் என்று அவர் கூறுகிறார்.
"முதலில் அது தவறான செய்தி, என்னை வேறு யாரோ என தவறாக புரிந்துக் கொண்டார்கள் என நினைத்தேன்," என்று அவர் பிபிசியிடம் கூறினார்.
"பின்னர் என் முகம் பெரிய திரையில் தோன்றும் வீடியோவை எனக்கு அனுப்பினார்கள். அப்போதும், அது செயற்கை நுண்ணறிவு மூலம் செய்யப்பட்டது அல்லது ஏதோ நகைச்சுவை என்று தோன்றியது. ஆனால் நிறைய பேர் ஒரே நேரத்தில் செய்தி அனுப்பத் தொடங்கிய பின்தான், அது விளையாட்டல்ல, உண்மை என்பதை உணர்ந்தேன்" என்கிறார் லாரிசா நேரி.
தென்கிழக்கு பிரேசிலில் பெலோ ஹொரிசாண்டே நகரில் வசிக்கும் நேரி, இந்தியாவிற்கு ஒருபோதும் வந்ததில்லை. என்ன நடக்கிறது என்பதே புரியாமல், விஷயத்தைத் தெரிந்து கொள்ள கூகுளில் அவர் தேடிய போதுதான் அவருக்கு எல்லாம் புரிந்தது.
கடந்த ஆண்டு ஹரியாணா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் இந்திய தேர்தல் ஆணையம் பாஜகவுடன் கூட்டுவைத்து வாக்குத் திருட்டு செய்ததாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பில் குற்றம் சாட்டியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டுகளை பாஜக மறுத்தது.
பத்திரிகையாளர் சந்திப்புக்குப் பிறகு, ஹரியாணா மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், ஆகஸ்ட் மாதம் ராகுல் காந்திக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை பகிர்ந்தார். அதில், தகுதி இல்லாத வாக்காளர்களின் பெயர்களுடன் ஒரு உறுதிமொழியை கையெழுத்திடுமாறு அவரிடம் கேட்டிருந்ததாகவும், அதன் மூலம் தேவையான நடவடிக்கைகளை தொடங்க முடியும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது என தெரிவித்தார்.
ஆனால், அவர் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கவில்லை, நேரியின் புகைப்படத்துடன் வாக்காளர் அட்டை இருப்பது குறித்தும் எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை. தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை அறிவதற்காக அதிகாரிகளை பிபிசி தொடர்பு கொண்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் இருந்து தேர்தல் ஆணையத்தின் மீது "வாக்குத் திருட்டு" குற்றச்சாட்டுகளை ராகுல் காந்தி தொடர்ந்து கூறி வருகிறார் .
அவரது சமீபத்திய கூற்றுகளில், தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் தரவை தங்களது குழு ஆராய்ந்ததாகவும், அதில் சுமார் 2 கோடி வாக்காளர்களில், 25 லட்சம் பேரின் அடையாள அட்டையில் ஒழுங்கற்ற தரவுகளை கொடுத்திருக்கின்றனர் என்றும், ஒரு வாக்காளர் எண் - பல நபர்கள்; ஒரே நபர் - பல வாக்காளர் எண்கள் மற்றும் போலியான முகவரிகள் இருப்பதைக் கண்டறிந்ததாகவும் ராகுல் காந்தி கூறினார்.
ஹரியாணா தேர்தலில் தனது கட்சியின் தோல்விக்கு வாக்காளர் பட்டியலில் நடந்ததாகக் கூறப்படும் மோசடியே காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
ராகுல் காந்தி தனது வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக, பெரிய திரை ஒன்றில் பல ஸ்லைடுகளைக் காட்டினார். அவற்றில் நேரியின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது.

பட மூலாதாரம், AFP via Getty Images
"இந்தப் பெண்மணி யார்? அவரின் வயது என்ன? இவர் ஹரியானாவில் 22 முறை வாக்களித்துள்ளார்," என்று ராகுல் காந்தி கூறினார்.
பிரேசிலிய புகைப்படக் கலைஞர் மேத்தியஸ் ஃபெரெரோ எடுத்த ஒரு பெண்ணின் ஸ்டாக் புகைப்படம், பல வாக்காளர் பதிவுகளில் வெவ்வேறு பெயர்களில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டதாக அவர் கூறினார். நேரி என்ற பிரேசிலிய மாடல், சீமா, ஸ்வீட்டி, சரஸ்வதி என பல்வேறு பெயர்களில் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றதாக அவர் விவரித்தார்.
"அந்த புகைப்படத்தில் இருப்பது நான் தான்" என 29 வயதான லாரிசா நேரி பிபிசியிடம் உறுதிப்படுத்தினார். "ஆம், எனது சிறு வயது புகைப்படம், அதில் இருப்பது நான் தான்."
தான் சிகை அலங்கார நிபுணராக பணியாற்றுவதாகவும், மாடல் அல்ல என்றும் கூறிய லாரிசா நேரி, அந்தப் புகைப்படம் 2017-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தான் 21 வயதாக இருந்தபோது தனது வீட்டிற்கு வெளியே எடுக்கப்பட்டது என்றும் தெளிவுபடுத்தினார்.
"நான் அழகாக இருப்பதாக சொன்ன புகைப்படக் கலைஞர், என்னைப் புகைப்படம் எடுத்தார்" என்று கூறினார்.
புகைப்படம் எடுக்கப்பட்டு பல வருடங்களுக்குப் பிறகு, கடந்த இரண்டு நாட்களில், இந்தியாவைச் சேர்ந்தவர்கள், அதிலும் பெரும்பாலும் பத்திரிகையாளர்கள் என பலரின் கவனம் தன் மீது குவிந்ததால் நேரி பயந்துவிட்டார்.
"நான் பயந்துவிட்டேன். இது எனக்கு ஆபத்தானதா, அதைப் பற்றிப் பேசுவது யாருக்காவது தீங்கு விளைவிக்குமா என்று எனக்கு எதுவுமே தெரியவில்லை. யார் சரி, யார் தவறு என்றும் எனக்குத் தெரியவில்லை, ஏனென்றால் சம்பந்தப்பட்ட தரப்பினரை எனக்குத் தெரியாது," என நோரி கூறுகிறார்.
"எனது வாடிக்கையாளர்களிடமிருந்து வந்த செய்திகளைக் கூட என்னால் பார்க்க முடியவில்லை, காலையில் வேலைக்குச் செல்லவில்லை. நான் வேலை செய்யும் இடத்தின் எண்ணை கண்டுபிடித்து பல பத்திரிகையாளர்கள் போன் செய்து கொண்டிருந்தார்கள்".
"அவர்கள் நான் வேலை செய்யும் இடத்தில் தொந்தரவு செய்ததால், சலூன் பெயரை என் சுயவிவரத்திலிருந்து நீக்கிவிட்டேன். என் முதலாளியும் என்னிடம் பேசினார். சிலர் அதை ஒரு மீம் போல நினைக்கிறார்கள், ஆனால் அது என்னை தொழில் ரீதியாக பாதிக்கிறது."

பட மூலாதாரம், Congress Party
நேரியின் புகைப்படத்தை எடுத்த மேத்தியஸ் ஃபெரெரோவும் திடீர் கவனத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். சமீப காலம் வரை, இந்தியா என்றால், 2009-ஆம் ஆண்டு ஒளிபரப்பான Caminho das Índias என்ற பிரேசிலிய பிரைம் டைம் நிகழ்ச்சி மட்டுமே தெரியும் என்று அவர் கூறுகிறார்.
ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ள நாடு ஒன்றில் கடந்த சில நாட்களில் நடைபெற்ற நிகழ்வுகளை அவரால் இன்னும் சரியாக புரிந்துக் கொள்ளமுடியவில்லை.
இந்தியாவில் இருந்து ஒரு வாரத்திற்கு முன்பு தன்னைத் தொடர்பு கொண்ட சிலர், புகைப்படத்தில் உள்ள பெண் யார் என்று கேட்டதாக பிபிசியிடம் தெரிவித்த அவர், "நான் பதில் சொல்லவில்லை. யாரின் பெயரையும் என்னால் அப்படி சொல்லிவிடமுடியாது. இவரை (நேரியை) நான் பல வருடங்களாகப் பார்க்கவில்லை. இதெல்லாம் மோசடி என்று நினைத்து, அந்த எண்களை நான் பிளாக் செய்தேன்." என்று அவர் பிபிசியிடம் கூறினார்.
இருப்பினும், ராகுல் காந்தியின் பத்திரிகையாளர் சந்திப்பிற்குப் பிறகு இந்தப் பிரச்னை பெரிதாக வெடித்தது.

"இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கில் என்னிடம் கேள்வி கேட்டார்கள், அது மிகவும் மோசமாக இருந்தது. என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முயற்சித்தேன், என்னுடைய இன்ஸ்டாகிராமை செயலிழக்கச் செய்தேன். பின்னர் என்ன நடக்கிறது என்பதை கூகுள் மூலம் உணர்ந்தேன், ஆனால் முதலில் எதுவுமே புரியவில்லை."
சில வலைத்தளங்கள் அனுமதியின்றி நேரியின் புகைப்படத்துடன் தனது படங்களை வெளியிட்டதாக ஃபெர்ரெரோ கூறுகிறார். "மீம்ஸ்-களை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள், அதை ஏதோ ஒரு 'கேம்-ஷோ' நகைச்சுவை போல சித்தரிப்பது அபத்தமாக இருந்தது."
2017-ஆம் ஆண்டில், ஃபெரெரோ ஒரு புகைப்படக் கலைஞராக பணியாற்றத் தொடங்கும் போது, தனக்கு நன்கு பரிச்சயமான நேரியை புகைப்படப் படப்பிடிப்பிற்கு வருமாறு அழைத்தார். அப்போது எடுக்கப்பட்ட நேரியின் புகைப்படங்களை ஃபெர்ரெரோ பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டதாகவும், நேரியின் ஒப்புதலுடன் புகைப்பட வலைத்தளமான Unsplash-இல் வெளியிட்டதாகவும் அவர் கூறினார்.
"அந்தப் புகைப்படம் பெரிய அளவில் வைரலானது... சுமார் 57 மில்லியன் பார்வைகளைப் பெற்றது," என்று அவர் கூறினார்.
அவர் இப்போது தனது Unsplash கணக்கிலிருந்து இணைப்பை நீக்கிவிட்டார், ஆனால் அதே படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட நேரியின் மற்ற புகைப்படங்களைக் காட்டும் ஸ்கிரீன்ஷாட்களை எங்களுக்கு அனுப்பினார்.

பட மூலாதாரம், ANI
"புகைப்படங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதால் பயந்துபோய் அவற்றை நீக்கிவிட்டேன். நான் புகைப்படம் எடுத்த ஒருவருக்கு இவ்வாறு நடப்பதை நினைத்து அச்சமடைந்தேன், அத்துமீறப்பட்டதாக உணர்ந்தேன். நிறைய பேர் என்னிடம் வந்து, 'ஏதாவது தவறு செய்துவிட்டதாக நினைக்கிறாயா?' என்று கேட்கிறார்கள், ஆனால் நான் தவறேதும் செய்யவில்லை. தளம் திறந்திருந்தது, மில்லியன் கணக்கானவர்களைப் போலவே நானும் பதிவேற்றினேன்" என்று சொல்கிறார்.
அவர் இப்போது நேரியுடன் இருக்கும் தனது புகைப்படங்களுடன் கூடிய பேஸ்புக் பதிவை, தனியுரிமை அமைப்பைப் பயன்படுத்தி தனிப்பட்ட (Private) புகைப்படமாக மாற்றியுள்ளார்.
"நமது ட்விட்டர், பேஸ்புக், தனிப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கில் மக்கள் திடீரென பெருமளவில் நுழைவதைப் பார்க்கும்போது, பீதி ஏற்படுகிறது. அதன் முதல் எதிர்வினை எல்லாவற்றையும் மூடிவிட்டு, பின்னர் புரிந்துகொள்வதுதான். சிலர் அதை வேடிக்கையாக நினைத்தார்கள், ஆனால் எனக்கு அது வித்தியாசமாக இருந்தது."
ஃபெர்ரெரோவோ அல்லது நேரியோ இதுவரை இந்தியாவுக்குச் வந்ததில்லை, உலகின் ஏதோ ஓர் இடத்தில் நடந்த ஒன்று அவர்களின் வாழ்க்கையை எவ்வாறு தலைகீழாக மாற்றும் என்பதைப் புரிந்துகொள்ள இன்னும் அவர்கள் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்.
இவை அனைத்தும் தேர்தல் மோசடியைக் கண்டறிய உதவியதா, அது நேர்மறையானதா? என்று ஃபெர்ரெரோவிடம் கேட்டோம்.
"ஆமாம், அது நேர்மறையாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் எனக்கு உண்மையில் விவரங்கள் எதுவுமே தெரியாது," என அவர் கூறினார்.
இதுவரை தன்னுடைய நாட்டை விட்டு வெளியே எங்குமே செல்லாத நேரி, "இது எனது அன்றாட வாழ்விலிருந்து வெகு தொலைவில் உள்ளது. பிரேசில் தேர்தல்களைக் கூடப் பின்தொடராத நான் வேறொரு நாட்டின் தேர்தலைப் பற்றி நினைத்துக்கூட பார்த்ததில்லை" என்று சொல்கிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












