You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சொடக்கு போடுவதால் நம் கை எலும்புகள் என்ன ஆகும்? கட்டுக்கதையும் உண்மையும்
நாம் பதற்றமடையும்போது அல்லது ஆழ்ந்த யோசனையில் இருக்கிறபோது கைகளில் சொடக்கு போடுவது என்பது அரிதான விஷயமல்ல.
விளையாட்டாகவும் கைகளில் சொடக்கு போடும் பழக்கம் பலருக்கும் உண்டு. சிலர் தங்களை அமைதிபடுத்திக் கொள்ள சொடக்கு போடுவார்கள், ஒரு சிலர் அந்த சத்தத்தைக் கேட்டாலே அயர்ச்சி அடைவார்கள்.
சொடக்கு போடுவதால் நம் கை எலும்புகளுக்கு என்ன ஆகிறது என்பது பற்றி பல தகவல்களும் கட்டுக்கதைகளும் உள்ள நிலையில் கைகளில் ஆர்த்ரிட்டிஸ் (வீக்கம்) ஏற்படும் என்பது பரவலான ஒன்று.
சொடக்கு போடுவது தீங்கானதா?
இந்த தகவல் உண்மைதானா என்பது பற்றி மருத்துவர்கள் கிறிஸ் மற்றும் ஸாண்ட் பிபிசியின் பைட் சைஸ் நிகழ்ச்சியில் பேசினர்.
சொடக்கு போடும்போது என்ன நடக்கும் என்பதை கிறிஸ் விளக்கினார். "நமது உடலில் எலும்புகள் இணையும் மூட்டுகளில் உள்ள திரவங்களில் வாயுக்கள் கலந்துள்ளன. நீங்கள் அழுத்தம் கொடுக்கிறபோது சிறிய குமிழி உருவாகி வெடிக்கின்றன. அது தான் சொடக்கு போடும்போது வருகின்ற சத்தத்தை உருவாக்குகிறது." என்றார்.
கிறிஸ் மட்டுமல்ல, பலரும் இதே விளக்கத்தைத்தான் தருகின்றனர். நீங்கள் இணையத்தில் பார்த்தால் நூற்றுக்கணக்கான கட்டுரைகளும் விளக்கங்களும் காணொளிகளும் இதையொட்டி உள்ளன. ஆனாலும் இது தொடர்பாக கட்டுக்கதைகளும் தவறான தகவல்களும் பரவி வருகின்றன.
ஆர்த்ரிட்டிஸ் என்றால் என்ன?
ஆர்த்ரிட்டிஸ் என்பது நமது எலும்புகளை இணைக்கும் மூட்டுகளை பாதிக்கும் நிலை ஆகும். அதில் குருத்தெலும்பு என்பது மூட்டுகள் எளிதாக நகர்ந்து செல்ல உதவுகிறது. பல்வேறு வகையான ஆர்த்ரிட்டிஸால் இந்த குருத்தெலும்பு பாதிக்கப்படுகிறது. அதனால் அவை வீக்கமாகவும் மெல்லியதாகவும் ஆகக்கூடும். இது நமது மூட்டுகளையும் எலும்புகளையும் அசைப்பதை கடினமாகவும் வலி மிகுந்ததாகவும் ஆக்குகிறது.
நீண்ட காலமாக சொடக்கு போடும் பழக்கம் உள்ளவர்களுக்கு பிற்காலத்தில் ஆர்த்ரிட்டிஸ் வரலாம் என்கிற செய்தியும் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
சொடக்கு போடுவதால் ஆர்த்ரிட்டிஸ் வருகிறதா?
இது ஒரு கட்டுக்கதை என்பதே மருத்துவர்களின் கருத்தாகவும் உள்ளது, இதனை ஒரு உதாரணத்தோடு விளக்கினார் மருத்துவர் கிறிஸ்.
"இதற்கான விடையைக் காண பல அறிவியல் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் மிகவும் பிரபலமானது ஒரு மருத்துவர் செய்த பரிசோதனைதான். அந்த மருத்துவர் தனது இரு கைகளில் ஒரு கையில் மட்டும் தொடர்ந்து சொடக்கு போட்டு வந்தார். இன்னொரு கையில் எதுவுமே செய்யவில்லை. பல ஆண்டுகள் இவ்வாறு தொடர்ந்து பின்பற்றி வந்தார். அதன் பின்னர் பரிசோதித்து பார்த்ததில் இரு கைகளிலும் ஆர்த்ரிட்டிஸ் அளவில் எந்த வித்தியாசமும் இல்லை." என்றார்.
இது ஒரு உதாரணம்தான். இணையத்தில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ ஆய்வுகளும் சொடக்கு போடுவதால் ஆர்த்ரிட்டிஸ் வருவதில்லை என்றே தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் 1975, 1990, 2011 ஆகிய ஆண்டுகளில் சொடக்கு போடுவதற்கும் ஆர்த்ரிட்டிஸ் நிலைக்கும் தொடர்பு இருக்கிறதா என்பதை அறிய தனித்தனி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இரண்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதே அதன் முடிவுகளாக இருந்தன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு