You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ சோதனை
தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, தென்காசி உள்ளிட்ட பல மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்திவருகிறது.
சட்டவிரோதமாக ஆயுதம் தயாரிக்கப்பட்டது தொடர்பான ஒரு வழக்கு தொடர்பாகவே இந்த சோதனைகள் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், தென்காசி உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள பல இடங்களில் பிப்ரவரி இரண்டாம் தேதி அதிகாலை முதல் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே இருக்கும் விஸ்வநாதபேரியில் உள்ள நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் என்பவர் வீட்டில் 5 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தினர். இவர் 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்டார்.
சோதனையின் முடிவில் 3 செல்போன்கள், புத்தகங்களை கைப்பற்றிய என்ஐஏ அதிகாரிகள் வரும் 7ஆம் தேதி சென்னை தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு மதிவாணனுக்கு சம்மன் கொடுத்து விட்டு சென்றுள்ளனர்.
திருச்சி சண்முகா நகரில் வசிக்கும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த யூடியூபர் சாட்டை துரைமுருகனின் வீட்டிற்கு அதிகாலையில் வந்த என்ஐஏ அதிகாரிகள், சில மணி நேரம் சோதனை நடத்திவிட்டுப் புறப்பட்டுச் சென்றனர்.
அதேபோல், சிவகங்கை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி பிரமுகரான விஷ்ணு பிரதாப் என்பவரது வீட்டிலும் அதிகாலை ஐந்து மணி முதல் என்ஐஏ சோதனை நடத்திவருகிறது. இவர் நாம் தமிழர் கட்சியில் தகவல் தொழில்நுட்ப பாசறையின் மாவட்ட நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார். யு டியூப் சானல் ஒன்றையும் நடத்திவருகிறார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் இரண்டு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர் ஆலாந்துறை ஆர்.ஜி. நகரில் வசிக்கும் ரஞ்சித் என்பவரது வீட்டில் சோதனை நடைபெற்றது. காளப்பட்டியில் முருகன் என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
அதேபோல, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியான இடும்பாவனம் கார்த்திக்கு, விசாரணைக்கு ஆஜராகும்படி கட்சி அலுவலக முகவரிக்கு என்ஐஏ சம்மன் அனுப்பியுள்ளது. பிப்ரவரி 5ஆம் தேதி அவர் ஆஜராக வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது.
இந்தச் சோதனைகள் எதற்காக?
கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் சேலம் மாவட்டம் ஓமலூரில் துப்பாக்கி தயாரித்ததாக சிலர் கைதுசெய்யப்பட்டனர். அந்த வழக்குத் தொடர்பாகத்தான் இந்தச் சோதனைகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
2022ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் தேதி ஓமலூர் காவல்துறையினர் புளியம்பட்டியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சேலத்திலிருந்து ஓமலூர் நோக்கிவந்த இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரை நிறுத்தி சோதனை இட்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் இரண்டு கைத்துப்பாக்கிகள், துப்பாக்கி தயாரிப்பதற்கான உதிரி பாகங்கள், கத்தி, தோட்டா, வெடிமருந்து, முகமூடி ஆகியவை கைப்பற்றப்பட்டன.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் இருவரும் சேலம் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி சஞ்சய் பிரகாஷ், கிச்சிப்பாளையத்தை சேர்ந்த எம்.சி.ஏ. பட்டதாரி நவீன் சக்கரவர்த்தி என அடையாளம் காணப்பட்டனர்.
இவர்கள் சேலம் செட்டிச்சாவடியில் வாடகைக்கு அறை ஒன்றை எடுத்து துப்பாக்கி தயாரித்தது தெரிய வந்தது. இவர்களுக்கு உதவியதாக சேலம் அழகாபுரத்தைச் சேர்ந்த கபிலர் என்பவரையும் காவல்துறை கைதுசெய்தது. இந்த வழக்கை முதலில் சேலம் மாவட்ட 'க்யூ' பிரிவு காவல்துறை விசாரித்து வந்தது.
அந்த விசாரணையில், பணத்திற்காக இயற்கையைச் சீரழிப்பவர்களை அழித்தொழிப்பதற்காக ஒரு ஆயுதப் போராட்டத்தை நடத்த அந்த இளைஞர்கள் முடிவெடுத்திருந்ததாகவும் இதற்காக கல் குவாரிகளில் பயன்படுத்தப்படும் வெடி மருந்துகளைச் சேகரித்ததாகவும் தெரியவந்தது. இதற்குப் பிறகு இந்த வழக்கு தேசியப் புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது.
இப்போது இந்த வழக்கு தொடர்பாகத்தான், சோதனைகளும் விசாரணைகளும் நடைபெற்று வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு
இந்நிலையில் என்ஐஏ சோதனை மற்றும் சட்ட விதிமீறலை எதிர்த்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது.
என்ஐஏ அனுப்பிய சம்மனுக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க அவகாசம் வழங்காமல் உடனடியாக சோதனையில் ஈடுபட்டதாக நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர்கள் சங்கர், சேவியர் பெலிக்ஸ் ஆகியோர் நீதிபதி ரமேஷிடம் முறையிட்டனர்.
நாம் தமிழர் கட்சி சார்பாக தொடரப்பட்ட இந்த முறையீட்டு வழக்கு பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக் , இன்ஸ்டாகிராம் , எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)