பிளஸ் 2 தேர்வில் மார்க் குறைவா? கவலையை விடுங்க! இதைப் படிங்க, அறியப்படாத படிப்புகள்

- எழுதியவர், விஷ்ணுபிரகாஷ் நல்லதம்பி
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த தருணத்தில் தேர்வெழுதிய மாணவர்கள் அனைவரும் எதிர்கொள்ளும் கேள்வி இதுவாகத்தான் இருக்கும்.
"எத்தனை மார்க் வாங்கியிருக்க, அடுத்து என்ன படிக்க போற?"
இந்த கேள்விக்கு என்ன பதிலைச் சொன்னாலும், "அந்த படிப்புக்கு பெருசா மதிப்பு கிடையாது, இன்ஜினியரிங், மெடிக்கல் படிக்குறதுதான் நல்லது," என்று அவர்களிடமிருந்து பரிந்துரைகள் கிடைக்கும்.
இன்ஜினியரிங், மெடிக்கல் மட்டுமே உயர்கல்வியா? பன்னிரெண்டாம் வகுப்புக்கு பிறகு வேறு என்ன படிக்கலாம்? மதிப்பெண் குறைவாக வாங்கிய மாணவர்கள் என்ன படிப்பில் சேருவது நல்லது?
துணை மருத்துவப் படிப்புகள்

பட மூலாதாரம், Getty Images
பலருக்கும் மருத்துவம் படித்து டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவு இருக்கும். ஆனால் ஆசைப்படும் அனைவருக்கும் அது கைகூடுவதில்லை. தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ் படிப்புக்கு 11,000 இடங்கள் வரையுள்ளன.
ஆனால் பன்னிரெண்டாம் வகுப்பில், உயிரியல் பாடப்பிரிவை சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எடுத்து பயில்கின்றனர். நேற்று நடந்த நீட் தேர்வில் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் ஒன்றரை லட்சம் மாணவர்கள் எதிர்கொண்டுள்ளனர்.
அதனால் மருத்துவச் சேர்க்கைக்கு இடம் கிடைக்காத மாணவர்கள் துவண்டுவிட வேண்டாம்.
மருத்துவ படிப்புகளுக்கு மாற்றாக பாரா மெடிக்கல் என்று அழைக்கப்படும் துணை மருத்துவப் படிப்புகள் உள்ளன. அதைத் தேர்வு செய்து படிப்பதன் மூலமாக மருத்துவத் துறையில் வேலையில் சேர முடியும்.
B.Sc - நர்சிங்
மருத்துவமனைகளில் செவிலியராக பணியாற்ற விரும்பும் நபர்கள் இந்த படிப்பைத் தேர்வு செய்து படிக்கலாம். இந்த படிப்பை 4 ஆண்டு காலம் படிக்க வேண்டும். இந்த படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் வேலை வாய்ப்பு காத்திருக்கிறது.
பிளஸ் 2 வகுப்பில் உயிரியல், இயற்பியல், வேதியியல் பாடத்தை தேர்வு செய்து படித்தவர்கள் பி.எஸ்சி நர்சிங் படிப்புகளில் சேர விண்ணப்பிக்க முடியும். இதற்கான கலந்தாயவு மருத்துவ கலந்தாய்வு முடிந்த பிறகு நடைபெறும்.
4 ஆண்டுகால நர்சிங் படிப்புக்கு மாற்றாக ஓராண்டு கால நர்சிங் டிப்ளமா படிப்பிலும் சேர முடியும்.
B.Pharm

பட மூலாதாரம், Getty Images
மருந்தியல் எனப்படும் பி.பார்ம் படிக்கும் மாணவர்கள், மருத்துவமனைகளில் உள்ள மருந்தகங்களில் பணியில் சேர முடியும். இந்த படிப்பை 4 ஆண்டுகாலம் படிக்க வேண்டும்.
பன்னிரெண்டாம் வகுப்பில் உயிரியல் பாடத்தை தேர்வு செய்து படித்த மாணவர்கள் இந்த படிப்பில் சேர முடியும்.
பி.பார்ம் படிப்பை 4 ஆண்டுகள் பயில வேண்டும். பி.பார்ம் படிக்க விருப்பம் இல்லாத நபர்கள், D.Pharm (மருந்தியல் டிப்ளமா) படிப்பிலும் சேர முடியும்.
Pharm.D
பி.பார்ம் படிப்புக்கு மாற்றாய் அண்மைக்காலத்தில் பிரபலமானது பார்ம்.டி படிப்பு. Doctor of Pharmacy என்ற படிப்பு, வெறும் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், நோயாளிக்கு வழங்கப்படும் சிகிச்சையின் போது உடனிருந்து மருந்துகள் வேலை செய்யும் தன்மையை கண்காணிப்பது. அதன் தன்மைக்கேற்ப மருந்துகளை மாற்றுவது, அளவை மாற்றுவது என இந்த படிப்பை படித்தவர்கள் செய்ய வேண்டும்.
6 ஆண்டுகால பார்ம்.டி படிப்பை முடித்த பிறகு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் எளிதாக வேலைக்கு சேர முடியும்.
பி.பார்ம் படிப்புக்கு மாற்றாய் உருவாகி இருக்கும் பார்ம்.டி படிப்பை 6 ஆண்டுகள் பயில வேண்டும். 5 ஆண்டுகள் வரை கல்லூரியிலும், கடைசி ஒரு வருடம் மருத்துவ படிப்புகள் போல செயல்முறை பயிற்சியிலும் ஈடுபட வேண்டும்.
BPT பிசியோதெரபி
BPT என்பது உடல் இயக்கத்தை சீர் செய்ய, மருந்துகளோடு சேர்த்து முடநீக்கியல் சிகிச்சையும் வழங்க கற்றுத்தரும் படிப்பாகும். செயல்முறை பயிற்சியுடன் சேர்த்து இந்த படிப்பை நான்கரை ஆண்டுகள் பயில வேண்டும்.
BOT ஆக்குபேஷனல் தெரபி
மனநலம் மற்றும் மனநலம் சார்ந்த உடல் பிரச்னைகளுக்கான சிகிச்சைகளை பரிந்துரைக்கும் படிப்பே BOT எனப்படும் இளநிலை ஆக்குபேஷனல் தெரபி படிப்பாகும்.
- ஸ்பீச் தெரபி - பேச்சு வராத, பேசும் போது குழறல் ஏற்படும் நபர்களுக்கு சிகிச்சை வழங்க கற்றுத்தரும் படிப்பு
- ரேடியோ இமேஜிங் - எக்ஸ்.ரே, சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன் உள்ளிட்ட உடலின் பாகங்களை பகுப்பாய்வு செய்ய உதவும் கருவிகளை இயக்கக் கற்றுத் தரும் படிப்பாகும்.
- ஆப்தோமெட்ரி - கண் பார்வை சார்ந்த தொழில்நுட்ப நிபுணருக்கான படிப்பாகும்.
இது மட்டுமின்றி இதயம், நரம்பு, நுரையீரல் போன்ற உடலில் ஒவ்வொரு பாகங்கள் குறித்தும் இளநிலை, முதுகலை படிப்புகள் தனித்தனியாக உள்ளன. அவற்றில் சேர்ந்து படிப்பதன் மூலம் அவசர கால சிகிச்சை, அறுவை சிகிச்சை போன்ற நேரங்களில் மருத்துவருடன் இணைந்து உதவி செய்யும் வேலையில் சேர முடியும்.
இது போல 25க்கும் மேற்பட்ட துணை மருத்துவப் படிப்புகளை தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் சேர்ந்து படிக்க முடியும்.
பயோமெடிக்கல் படிப்புகள்

பட மூலாதாரம், Getty Images
மருத்துவத்துறை சார்ந்து பொறியியல் படிப்புகளை விரும்பும் மாணவர்கள் பயோமெடிக்கல், பயோடெக்னாலஜி போன்ற படிப்புகளில் சேர்ந்து படிக்கலாம். இந்த படிப்புகள் மூலமாக மருத்துவத்துறையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய மருந்து, சிகிச்சை முறை போன்றவற்றை உருவாக்குவது தொடர்பாக கற்றுக்கொள்ள முடியும்.
படித்து முடித்த பிறகு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களில் பணிக்கு சேர்ந்து புதிய மருத்துவக் கருவிகள், வைரஸ், பாக்டீரியாக்கு எதிரான தடுப்பு மருந்து ஆராய்ச்சி போன்ற வேலைகளில் ஈடபட முடியும்.
கொரொனா தொற்று பரவலுக்கு பிறகு இந்த துறை சார்ந்த தேவை அதிகமாகியிருப்பதாக கல்வி ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.
அறிவியல் படிப்புகள்
- B.Sc - உயிரியல் - பயாலஜி என்று அழைக்கப்படும் இந்த அறிவியல் படிப்பில் உயிரியல் மூலக்கூறு, செல் பயலாஜி போன்றவற்றை படித்து ஆசிரியர், ஆராய்ச்சி போன்ற பணிகளில் சேர முடியும்
- B.Sc - தாவரவியல், விலங்கியல் - அறிவியல் பாடப்பிரிவின் அடிப்படை படிப்புகளான இதில் சேர்ந்து அறிவியல் ஆராய்ச்சி, ஆசிரியர் போன்ற வேலையில் சேர முடியும். பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிலும் Subject Matter Expert(SME) பணிக்காக இந்த படிப்பைகளை முடித்தவர்கள் சேர முடியும்
- B.Sc - அனாடமி - மனித உடலில் அமைப்பு பற்றி தெரிந்து கொள்ளும் பாடப்பிரிவாகும். ஆசிரியராகும் வாய்ப்பு இதில் அதிகமுள்ளது என்றாலும், முனவைர் பட்டம் பெறும் நபர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து மருத்துவர்களுக்கு பாடம் எடுக்கும் விரிவுரையாளர் பணிக்கு செல்ல முடியும். இது போன்ற வெகுசில பாடங்கள் மட்டுமே மருத்துவர்களுக்கே பாடம் எடுக்கும் வேலைக்கு செல்லும் அளவு தகுதியுள்ளவை.
விவசாயப் படிப்புகள்

பட மூலாதாரம், Getty Images
கடந்த சில ஆண்டுகளான விவசாயம் சார்ந்த படிப்புகளுக்கு மாணவர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து வருகிறது.
B.Sc Agriculture, B.E. Agricultural Engineering போன்ற படிப்புகளில் சேர்வதன் மூலம் விவசாயம் சார்ந்த ஆராய்ச்சி, உற்பத்தி துறைகளில் வேலைக்கு சேர முடியும். விவசாய பொருட்களை மதிப்புக்கூட்டும் நடைமுறை தமிழ்நாட்டில் பிரபலமாகி வருவதால், இந்த படிப்புகளில் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் சேர்கின்றனர்.
மேலும் விவசாயப் படிப்புகளை முடிக்கும் மாணவர்களை விவசாய அதிகாரிகளாக வங்கிகள் வேலைக்கு சேர்த்துக் கொள்வதால், அரசு வேலையில் அதிக வாய்ப்பும் காத்திருக்கிறது.
மீன் வள, கால்நடை படிப்புகள்
தமிழ்நாட்டில் மீன்வளங்களை குறித்து கற்றுத்தரும் Fisheries படிப்பை சில கல்லூரிகள் வழங்குகின்றன. மீன் வளர்ச்சி, ஏற்றுமதி தரத்திலான மீன்களை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வளர்ப்பது குறித்து இந்த படிப்பு வாயிலாக கற்றுக் கொள்ள முடியும்.
கால்நடை வளர்ச்சி சார்ந்த படிப்புகளும் தமிழ்நாட்டில் உள்ளன. கால்நடை மருத்துவர் மட்டுமல்லாது பால் வளம், கோழி வளர்ப்பு போன்ற படிப்புகளிலும் 4 ஆண்டுகால இன்ஜினியரிங் படிக்கலாம்.
Poultry Technology, Diary Technology போன்ற படிப்புகளில் சேர கடந்த சில ஆண்டுகளில் மாணவர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து இருப்பதால், இதற்கான கட் ஆஃப் மதிப்பெண்ணும் உயர்ந்து இருக்கிறது.
உணவு தொழில்நுட்பம்
Food Technology என்று அழைக்கப்படும் உணவை பதப்படுத்தும் தொழில்நுட்பம் குறித்து கற்றுத்தரும் படிப்புகளுக்கு தேவை அதிகமாகி இருக்கிறது.
உணவு தானியங்களை மதிப்புக்கூட்டும் நடவடிக்கை மற்றும் உணவு வகைகளை பதப்படுத்தும் நடவடிக்கையின் காரணமாக இது சார்ந்த தொழில்நுட்ப படிப்புகளுக்கு வாய்ப்பு அதிகமாகி இருக்கிறது.
பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்திருந்தால் அடுத்தது என்ன?

பட மூலாதாரம், Getty Images
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண்ணோ, தோல்வி அடைந்த மாணவர்களோ பயப்பட வேண்டாம் என்கின்றனர் கல்வியாளர்கள்.
"பன்னிரெண்டாம் வகுப்பு என்பது வாழ்க்கையின் இறுதி அத்தியாயம் கிடையாது. அதில் நினைத்த மதிப்பெண் கிடைக்கவில்லை என்றால், பயப்பட வேண்டும். தோல்வி அடைந்த மாணவர்கள் அடுத்த முறை தேர்வெழுதி கல்லூரிக்கு செல்லலாம். இன்ஜினியரிங் படித்து விட்டு வேலை கிடைக்காமல் பல வருடங்கள் காத்திருப்பதற்கு பதிலாக இந்த ஒரு வருடம் காத்திருந்து அடுத்த ஆண்டு நுழைவுத் தேர்வு எழுதி நல்ல கல்லூரியில் சேரலாம்," என்கிறார் பேராசிரியர் ஸ்ரீராம்.
"JEE தேர்வு என்பது ஐ.ஐ.டி, என்.ஐ.டி போன்ற கல்லூரிகளுக்கு மட்டுமல்லாது, பல அரசு கல்லூரிகளுக்காக நடத்தப்படுகிறது.
உதாரணமாக தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் செயல்படும் ஒரு மத்திய அரசு கல்வி நிறுவனத்தில் சேர JEE தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் எடுத்திருந்தால் போதுமானது.
அங்கு சேர்ந்து நெல் பதனிடும் தொழில்நுட்ப படிப்பில் சேர முடியும். ஆனால் தமிழ்நாட்டில் பலருக்கும் இப்படி ஒரு கல்லூரி இருப்பது தெரியவில்லை. அதனால் மாணவர்கள் ஒரு வருடம் இடைவெளி விட்டு அடுத்த ஆண்டு கல்லூரியில் சேருவது தவறில்லை. பெற்றோர்களும் இதை புரிந்து கொள்ளவேண்டும்," என்கிறார் கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன்.
வழக்கமான பொறியியல், மருத்துவம், சட்டம் போன்ற படிப்புக்களை தாண்டி சுற்றுலா, தடய அறிவியல், லாஜிஸ்டிக்ஸ், ஹோட்டல் மேனேஜ்மென்ட், ஃபேஷன் டெக்னாலஜி, சினிமா என பல துறைகளில் மாணவர்கள் தங்கள் வாழ்க்கையை கட்டமைக்க முடியும் என்று கல்வியாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












