CUET: தமிழ்நாட்டில் எதிர்ப்பு ஏன்? துணைவேந்தர், கல்வியாளர்கள் என்ன சொல்கிறார்கள்?

பட மூலாதாரம், DEEPAK SETHI/GETTYIMAGES
- எழுதியவர், ஜோ. மகேஸ்வரன்
- பதவி, பிபிசி தமிழ்
சியுஇடி எனப்படும் மத்திய பல்கலைக்கழகங்கள் பொது நுழைவுத் தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கை என்கிற இந்திய அரசின் அறிவிப்புக்கு கல்வியாளர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எதற்காக இந்த எதிர்ப்பு? என்பதைப் பார்க்கலாம்.
இந்திய அரசு கடந்த மார்ச் 21 ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பல்கலைக்கழக நிதிக்குழுவின் நிதியுதவி (யுஜிசி) பெறும் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் கலை அறிவியல் உள்ளிட்ட இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை - 2022-23க்கு பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு (CUET) மூலம் மேற்கொள்ளப்படும்,'' என்று அறிவித்தது.
மேலும், ''இந்தத் தேர்வினை மாநில பல்கலைக்கழகங்கள், தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் ஏற்கலாம்'' என்றும் அறிவுறுத்தப்பட்டது. அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் கட்டாயம் இல்லை என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மறைமுகமாக அழுத்தம் கொடுத்து கட்டாயம் ஆக்கப்படும் என்கிற அச்சத்தை கல்வியாளர்கள் எழுப்பி, எதிர்ப்பு தெரிவித்தனர்.
தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி, "ஒற்றை நுழைவுத் தேர்வு என்பது அனைவருக்கும் சமமான வாய்ப்பினை வழங்காது. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுவின் பாடத்திட்ட அடிப்படையிலான இந்தத் தேர்வு, மாநில பாடத்திட்ட அடிப்படையில் பயின்ற லட்சக்கணக்கான மாணவர்களுக்கு சமமான வாய்ப்பினை வழங்காது. இதனால் தமிழ்நாடு மாணவர்கள் மிகவும் பாதிப்புக்கு ஆளாவார்கள்" என்று கூறியுள்ளார்.
பல்கலை. தனித்துவத்தை சிதைக்கும்

பட மூலாதாரம், Prince Gajendra babu
இது குறித்து, பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு பிபிசி தமிழிடம் கூறுகையில், "ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் ஒரு தனித்தன்மை உள்ளது. ஆனால், இந்த பொது நுழைவுத்தேர்வு அந்த தனித்தன்மையை சிதைத்து விடும். யாரை சேர்க்க வேண்டும் என்பதை பல்கலைக்கழகங்கள் தீர்மானிக்க முடியாது. பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் என்பதை சான்றிதழ் அளிக்கும் நிறுவனங்களாக மட்டுமே செயல்படும் நிலைக்குக் கொண்டு செல்கிறார்கள்.
இப்போது மத்திய பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே இந்த பொது நுழைவுத் தேர்வு. பிற பல்கலைக்கழகங்கள் விரும்பினால் நடத்தலாம் என்கிறார்கள். ஆனால், வரும் காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் கட்டாயம் என்ற நடைமுறைக்குக் கொண்டு வந்துவிடுவார்கள். எனவே, இதை மத்திய பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே என்று கடந்து சென்று விடமுடியாது.
கல்வி என்பது குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்கிற புதிய கல்விக் கொள்கையின் ஒரு கூறு, சூழ்ச்சியே இந்த பொது நுழைவுத் தேர்வு. தேர்வு முறையும் நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்களுக்கு வருவாயைத் தரும் வணிக நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
பெரும்பகுதி மாணவர்களை தவிர்த்து விட்டு, குறிப்பாக கிராமப்புற, ஏழை, எளிய மாணவர்களை இந்த தேர்வு வெளியேற்றி விடும்.
மேல்நிலைக் கல்வியில் ஒரு தேர்ச்சி சான்றிதழ் பெற்ற பிறகு மீண்டும் ஒரு நுழைவுத் தேர்வு எதற்காக? பள்ளி பாடத்திட்டத்திலும் படித்து, நுழைவுத் தேர்வுக்கும் ஒரு மாணவன் தயாராக வேண்டும் என்கிற அழுத்தம் தரப்படுகிறது. மாணவர்களை துன்புறுத்தும் பெற்றோர்கள் மீது சுமையை ஏற்றும் இந்த நுழைவுத் தேர்வு தேவையற்றது'' என்கிறார்.
மாணவர்களுக்கு தடை

பட மூலாதாரம், D Nedunchezhian
கல்வியாளர் நெடுஞ்செழியன், "இந்த தேர்வு அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் பொருந்தாது. ஏனெனில், ஹரியாணா உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்களில் உரிய கட்டமைப்பு வசதிகள் இல்லை. இந்தியாவின் மொத்த உயர்கல்வி பெறுவோர் சதவீதம் 27 சதவீதமாக உள்ளது. இதை அதிகரிப்பதற்கான முயற்சி எடுக்காமல், குறைக்கும் நிலையை ஏற்படுத்துகிறார்கள்," என்கிறார்.
"சமூக, பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் உயர் கல்விக்கு செல்லும் வாய்ப்பை மத்திய அரசின் அறிவிப்பு தடுக்கிறது. உலக அளவில் அதிக இளைஞர்களைக் கொண்டுள்ள நாடாக இந்தியா இருக்கிறது. ஆனால், இதுபோன்ற தேர்வுகள் மூலம் நாட்டின் மக்கள் வளத்தை அறிவுகுன்றியதாக வைத்திருப்பதா?'' என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ''பொதுவாக அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படும் உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் தமிழ்நாட்டு மாணவர்களின் எண்ணிக்கை குறைவு. அதேநேரத்தில், மாணவர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி, உயர்கல்விக்கு அதிகமானவர்களை கொண்டு வர வேண்டும். மாறாக தடைகளை ஏற்படுத்தக் கூடாது. ஆனால், நடைமுறையில் தடைகளையே ஏற்படுத்துகிறார்கள். மேலே அழைத்துச் செல்வதில்லை,'' என்கிறார்.
டெல்லிக்காக ஒரு தேர்வா?
தொடர்ந்து அவர் கூறுகையில், ''டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான இடங்களை விட, பெரும் எண்ணிக்கையில் விண்ணப்பிக்கிறார்கள். அவர்களுக்கு இடம் கொடுக்க முடியவில்லை என்று இப்படி ஒரு நுழைவுத் தேர்வை நடத்துவது ஆக்கபூர்வமானதல்ல. காஷ்மீர் குளிருக்கு கன்னியாகுமரியில் இருப்பவருக்கு கம்பளியை கட்டாயப்படுத்துகிறார்கள். இது ஆரோக்கியமானதல்ல,'' என்கிறார் நெடுஞ்செழியன்.
"நுழைவுத் தேர்வு புதிதல்ல" - துணைவேந்தர்

பட மூலாதாரம், PIB CHENNAI
இது குறித்து, திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் மு.கிருஷ்ணனிடம் பிபிசி தமிழ் கேட்டதற்கு, "மத்திய பல்கலைக்கழகத்தில் புதிதாக நுழைவுத் தேர்வு நடத்தப்படவில்லை. மாணவர் சேர்க்கைக்கு 2009ஆம் ஆண்டு முதல் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. மத்திய, மாநில பாடத்திட்டங்கள் எல்லாம் கலந்துதான் தேர்வில் கேள்விகள் கேட்கப்படும்.
இதன்படிதான், திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் 44 படிப்புகளில் ஆண்டுக்கு 800 - 900 மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்,'' என்றார்.
'தமிழில் தேர்வு எழுதலாம்'
இப்போது அறிவிக்கப்பட்டுள்ள பொது நுழைவுத் தேர்வு குறித்து கூறுகையில், ''என்.ஐ.டி, ஐஐடி சேர்க்கைக்கு நடத்தப்படுவது போல், மத்திய பல்கலைக்கழங்களுக்கும் ஒரே பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டு முதல் 49 பல்கலைக்கழகங்களை ஒருங்கிணைத்து இந்த தேர்வு நடைபெறுகிறது. மேலும், நடப்பாண்டில் தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் தேர்வு எழுதலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது,'' என்கிறார், துணைவேந்தர் கிருஷ்ணன்.
சட்டப்பேரவையில் தீர்மானம்
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
இந்நிலையில், மத்திய பல்கலைக்கழகங்களில் நடத்தத் திட்டமிட்டுள்ள நுழைவுத் தேர்வை கைவிடக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தீர்மானத்தை கொண்டு வந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "பெரும்பாலான மாநிலங்களில் உள்ள 80 சதவீத மாணவர்கள் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்து வருகிறவர்கள்தான். இவர்கள் விளிம்புநிலை பிரிவினைச் சேர்ந்தவர்கள்". "என்சிஇஆர்டி பாடத்திட்ட அடிப்படையிலான நுழைவுத் தேர்வின் மூலம் பெரும்பான்மையோருக்கு பாதகமான நிலையை ஏற்படுத்தும்," என்றார்.
பயிற்சி மையங்களை சார்ந்து
நீட் நுழைவுத் தேர்வைப் போலவே பல்கலைக்கழக நுழைவுத் தேர்வும் பள்ளிகளில் நீண்டகால கற்றல் வழிமுறைகளை குறைத்து மதிப்பிட வழிவகுப்பதாக அமையும் எனச் சுட்டிக் காட்டிய முதல்வர், "மாணவர்கள் நுழைவுத் தேர்வு மதிப்பெண்ணை அதிகரிப்பதற்கு பயிற்சி மையங்களைச் சார்ந்திருக்கக்கூடிய சூழலை ஏற்படுத்திவிடும். பயிற்சி மையங்கள் பெருகுவதற்கு மட்டுமே இது சாதகமாக அமையும். இதனால் மாணவர்கள் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாவார்கள். எனவே, பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறோம்" என்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













