பள்ளிகளில் தொடரும் பாலியல் துன்புறுத்தல்: ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உதவும் அரசாணை என்ன ஆனது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டில் ஊடகங்களில் செய்திகளை உற்று நோக்குபவராக நீங்கள் இருந்தால், அதில் கடந்த சில வாரங்களாக பள்ளிகளில் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகுவது, அதுதொடர்பாக ஆசிரியர்கள் கைது, பணிநீக்கம் செய்யப்படுவது தொடர்பான செய்திகள் அடிக்கடி இடம்பெறுவதைக் கவனித்திருப்பீர்கள்.
பெரும்பாலும் அவை சிறுசிறு சம்பவங்களாக அல்லாமல் மாநிலம் முழுவதும் கவனம் பெறத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களாகவே உள்ளன.
தமிழ்நாட்டில் பள்ளிகளில் தொடரும் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களில் சிக்கும் ஆசிரியர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகின்றது? அவை போதுமானவையாக உள்ளதா?
இத்தகைய குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்களைத் தகுதி நீக்கம் செய்வது, கட்டாயப் பணி ஓய்வு உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளுடன் 2012இல் இயற்றப்பட்ட அரசாணை என்னவானது?
- சென்னையில் பெண் உணவு டெலிவரி ஊழியருக்கு பாலியல் துன்புறுத்தலா? என்ன நடந்தது?
- திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்து உடலுறவு கொண்ட பின் அதை மீறுவது சட்டப்படி குற்றமா?
- சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: சிபிஐ விசாரணைக்கு நீதிபதிகள் உத்தரவு - காவல் நிலையத்தில் என்ன நடந்தது?
- ராஜஸ்தான்: 18 வயதில் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளான பெண்ணின் 32 வருட சட்டப் போராட்டம்

சமீபத்திய சில உதாரணங்கள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் 8ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 3 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
இரு தினங்களுக்கு முன்பு, கடலூர் மாவட்டத்தில் அரசு மாதிரி பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
திருச்சியில் அரசுப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டார். சம்பந்தப்பட்ட பள்ளியை அச்சிறுமியின் உறவினர்கள், பொதுமக்கள் சூறையாடிய சம்பவமும் நடைபெற்றது.
மிகச் சமீபத்திய உதாரணமாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவிகள் சிலரை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக உதவி தலைமையாசிரியர் பிப்ரவரி 18ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டார்.

பட மூலாதாரம், @annamalai_k twitter
புதுக்கோட்டை சம்பவத்தின் பின்னணியில்தான், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "பள்ளி செல்லும் நமது பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதில், திமுக அரசு முற்றிலுமாகத் தோல்வி அடைந்துவிட்டது.
இத்தனை தொடர் குற்றங்களுக்குப் பிறகும், பள்ளி மாணவ, மாணவியர் பாதுகாப்பை உறுதி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இனியும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அமைச்சராகத் தொடரத் தகுதியோ, தார்மீக உரிமையோ இல்லை" எனத் தெரிவித்தார்.
அதோடு, உடனடியாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பதவியிலிருந்து அன்பில் மகேஷ் விலக வேண்டும் என்றும் முதலமைச்சர் உடனடியாக பள்ளிக் கல்வித்துறைக்குத் திறமையான, குழந்தைகள் நலனில் அக்கறை கொண்ட வேறு ஒருவரை அமைச்சராக நியமித்து, பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அதேபோன்று, அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், "சிறுமிகளுக்குப் பாதுகாப்பற்ற மாநிலமாக ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் தமிழ்நாடு மாறி வருவது மிகுந்த வேதனைக்குரியது."
'குற்றம் நடந்த பின் கைது செய்துவிட்டோம்' என்று சொல்லும் முதல்வர், குற்றத்தைத் தடுக்க என்ன செய்தார் என்பதைச் சொல்ல மறுப்பது ஏன்?" என விமர்சித்திருந்தார்.
2012 அரசாணை என்ன சொல்கிறது?

பட மூலாதாரம், Anbil Mahesh Poyyamozhi
இத்தகைய குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில், அவர்களுக்குக் கடுமையான துறை சார்ந்த நடவடிக்கைகளை எடுக்கும் விதமாக, 2012இல் அப்போதைய அதிமுக அரசு அரசாணை (அரசாணை நிலை எண். 121) ஒன்றை பிறப்பித்தது.
அந்த அரசாணையின்படி,
- தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அவர்களுக்கு கடும் தண்டனையான கட்டாய ஓய்வு அல்லது பணிநீக்கம் போன்ற தண்டனை வழங்கப்படும். (அரசுப் பள்ளி ஆசிரியர்களைப் பொறுத்தவரை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதி 19(2) இதற்குப் பொருந்தும். இவ்விதியை மீறுபவர்களுக்கு மேற்குறிப்பிட்ட தண்டனைகளுள் ஒன்று வழங்கப்பட வேண்டுமென தமிழ்நாடு குடிமைப் பணி (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளின் 8வது விதியில் கூறப்பட்டுள்ளது.
- சம்பந்தப்பட்ட ஆசிரியரின் கல்விச் சான்றுகள் அனைத்தையும் ரத்து செய்ய, அது சார்ந்த துறை மூலம் நடவடிக்கை எடுத்து கல்விச் சான்றுகள் ரத்து செய்யப்படும்.
- பள்ளிக் குழந்தைகளும், மாணவ மாணவிகளும் பிற நபர்களின் தவறான நடவடிக்கைகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் அவர்களுக்குப் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
- ஆசிரியர்கள் தவறான செயல்களில் ஈடுபடாவண்ணம் தகுந்த உளவியல் ஆலோசகர்கள் மூலம் ஆசிரியர்களுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும்.
- பள்ளி மாணவ, மாணவிகளின் மனநிலையை பாதிக்கும் பிரச்னைகளைக் களைவதற்கான உளவியல் ஆலோசனைகளை வழங்குவதற்கென பள்ளிக் கல்வித்துறை மூலம் உளவியல் ஆலோசகர், உதவியாளர் மற்றும் அனைத்து வகை வசதிகளுடன் கூடிய நடமாடும் ஆலோசனை மையங்களை ஏற்படுத்தி, இதன்மூலம் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வும் ஆசிரியர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கப்பட வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
இதில், ஆசிரியர்கள் மீதான பணி நீக்கம், கட்டாய ஓய்வு போன்ற நடவடிக்கைகளை எத்தனை ஆசிரியர்கள் மீது செயல்படுத்தினார்கள் என்ற விவரங்கள் பொதுவெளியில் இதுவரை பகிரப்பட்டதில்லை என்கிறார், குழந்தைகள் நல ஆர்வலர் ஆண்ட்ரூ சேஷுராஜ்.
"பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்களை அதிகபட்சம் பணியிட மாற்றம் செய்வார்கள், பணியிடை நீக்கம் செய்வார்கள். பணியிட மாற்றம் செய்யும்போது, வேறு சில குழந்தைகளிடம் அந்த ஆசிரியர் தவறாக நடந்துகொள்ள வாய்ப்புள்ளதே தவிர, குற்றம் தடுக்கப்படாது.
எனவே, 2012 அரசாணையை முறையாக இப்போதைய அரசு நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டும். அப்படிச் செய்யும்போது நிச்சயமாக இந்தச் சூழலில் மாற்றம் வரும்" என்கிறார் அவர்.
இதனிடையே, பள்ளிகளில் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடர்ச்சியாகக் கூறி வருகிறார்.
புதிய விதிமுறைகள்
மேலும், அனைத்து கல்வி நிலையங்களிலும் கற்பித்தல் மற்றும் கற்பித்தல் அல்லாத பணிகளுக்கு அமர்த்தப்படும் நபர்களுக்கு காவல்துறை சரிபார்ப்பு செயல்முறையைக் கட்டாயமாக்கி, தமிழ்நாடு அரசு புதிய விதிமுறைகளை வகுத்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
மாநிலம் முழுவதும் தொடர்ந்து வரும் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களைத் தொடர்ந்து, உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தை சில தினங்களுக்கு முன்பு தலைமைச் செயலாளர் என். முருகானந்தம் நடத்திய நிலையில் இந்த விதிமுறைகள் வகுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, அனைத்துப் பணியாளர்களும் 'குழந்தைகள் பாதுகாப்புப் பிரகடன ஆவணத்தில்' கையெழுத்திடுவதைக் கட்டாயமாக்கி விதிமுறைகளை வகுத்துள்ளதாக அந்தச் செய்திகள் கூறுகின்றன. எனினும், இந்தச் செய்தியை பிபிசியால் சுயாதீனமாகச் சரிபார்க்க முடியவில்லை.
மேலும், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை 'தனிநபர் பாதுகாப்பு கல்வி'யை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும், மாணவிகளுக்கான கல்வி நிலையங்களின் வாகனங்களில் பெண் பணியாளர் ஒருவர் கட்டாயம் இருக்க வேண்டுமென்றும், இருபாலர் மற்றும் மகளிர் பள்ளிகளில் பெண் உடற்கல்வி ஆசிரியை இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் புதிய விதிமுறைகளை வகுத்துள்ளதாக அச்செய்தி கூறுகிறது.
பள்ளிகளில் போக்சோ வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஆசிரியர்கள், பணியாளர்களின் பள்ளி மற்றும் உயர்கல்வி தகுதிச் சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
'போதிய தகவல்கள் இல்லை'

பட மூலாதாரம், Getty Images
ஆனால், "பாலியல் வழக்குகளில் நிறைய ஆசிரியர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்களின் மீது துறைரீதியாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது இதுவரை வெளியே வந்தது இல்லை. ஒருவேளை அந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால், அதுகுறித்த தகவல்கள் பொதுவெளியில் இல்லை" என்கிறார் சேஷுராஜ்.
"ஆசிரியர்களைப் பணியிடை நீக்கம், பணியிட மாற்றம் செய்வதோடு மட்டுமல்லாமல், குற்றங்களில் தண்டிக்கப்படுபவர்கள் மீண்டும் குழந்தைகளை நெருங்குவதற்கு அல்லது தொடர்பு கொள்வதற்கான வாய்ப்பைக் குறைக்க வேண்டும், அதாவது மீண்டும் அவர்களுக்கு கல்வித்துறையில் பொறுப்புகள் வழங்கப்படும் பட்சத்தில் குழந்தைகளை அவர்கள் தொடர்புகொள்ள முடியாத நிர்வாக ரீதியான பொறுப்புகளையே வழங்க வேண்டும்" என்று ஆண்ட்ரூ வலியுறுத்துகிறார்.
பாலியல் அத்துமீறல்கள் மட்டுமின்றி அவ்வித வன்முறைகளையும் எதிர்கொள்ளும் மாணவர்கள் பயமின்றி, வெளிப்படையாகத் தங்களின் புகார்களை அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் 'மாணவர் மனசு' எனும் புகார் பெட்டி வாயிலாக வெளிப்படுத்த வேண்டும் என்று குழந்தைகள் நல ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
தமிழ்நாட்டில் பள்ளிகளில் நடைபெறும் பாலியல் அத்துமீறல்கள் தொடர்ச்சியாக வெளியே வருவதற்கு மற்றொரு காரணத்தையும் ஆண்ட்ரூ சுட்டிக்காட்டுகிறார்.
"ஒரு சம்பவத்தில் குழந்தைகள் அளிக்கும் புகார்களால் நடவடிக்கை எடுக்கப்படுவதை ஊடகங்களில் பார்க்கும்போது, வேறு எங்கோ பாதிக்கப்பட்ட குழந்தைகள் நம்பிக்கையுடன் வெளியே வந்து புகார் அளிப்பதாக" அவர் கூறுகிறார்.
குழந்தைகள் மீது பாலியல் இச்சை கொண்டவர்கள் (paedophiles) குழந்தைகளை எளிதில் அணுகக்கூடிய இடமாக பள்ளிக்கூடம் திகழ்வதாகவும், குழந்தைகள் இயல்பாகவே எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்களாகவும் இருப்பதால் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாக அவர் குறிப்பிட்டார்.
குழந்தைகள் பாதுகாப்பு கொள்கை

"எல்லா இடங்களிலும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன, பள்ளிகளிலும் அதிகரித்துள்ளது. பள்ளிகள் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் இடம். எனவேதான் இது மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது" என்கிறார் மற்றொரு குழந்தைகள் நல ஆர்வலரான தேவநேயன்.
தமிழ்நாட்டில் குழந்தைகள் பாதுகாப்பு கொள்கை என்பது இல்லை எனச் சுட்டிக்காட்டும் அவர், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், ஒவ்வொரு மாநிலத்திலும் இத்தகைய பாதுகாப்பு கொள்கைகளை உருவாக்க வேண்டும் என வலியுறுத்துவதாகக் குறிப்பிட்டார்.
"குழந்தைகளுக்கு பள்ளிகளில் நடக்கக்கூடிய அனைத்து ரீதியான வன்முறைகள் மீதும் ஒன்றாகக் கவனம் செலுத்த வேண்டும். அதைத்தான் யுனிசெஃப் அமைப்புடன் இணைந்து தயாரிக்கப்பட்ட குழந்தைகள் பாதுகாப்பு கொள்கை வலியுறுத்துகிறது. ஆனால், அவை இன்னும் தமிழக அரசால் செயல்படுத்தப்படவில்லை" என்கிறார் அவர்.
மேலும், பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களை விசாரிக்க பள்ளிகளில் இணைய வல்லுநர், குழந்தைகள் பாதுகாப்பு வல்லுநர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழுக்கள் இருக்க வேண்டும் என்கிறார்.
"பள்ளிக்கூடத்தில் இத்தகைய சம்பவங்கள் நடந்தால் நிர்வாகம்தான் பொறுப்பு. ஆனால், பெரும்பாலான நேரங்களில் பெற்றோர்கள்தான் புகார் அளிக்கின்றனர். பாலியல் சம்பவங்கள் பள்ளிகளில் நடக்கின்றன என்பதை ஏற்றுக்கொண்டு, ஆசிரியர்கள் வெளிப்படையாகப் பேச வேண்டும். குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகள், காவல்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு உள்ளிட்டவற்றுடன் இணைந்து பள்ளிக் கல்வித்துறை செயல்பட வேண்டும்" என அவர் வலியுறுத்துகிறார்.
கடந்த 2012இல் இயற்றப்பட்ட அரசாணை எந்தளவுக்குச் செயல்படுத்தப்பட்டுள்ளது, பாலியல் துன்புறுத்தல்களைத் தடுக்க என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்ற கேள்விகளை தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சந்திரமோகனிடம் முன்வைத்தோம். "நீங்கள் கேட்கும் தகவல்கள் என்னிடத்தில் இல்லை" என்று மட்டும் அவர் கூறினார்.
புதன்கிழமை மாலை சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து தலைமை ஆசிரியர்கள் பள்ளி ஆசிரியர்களிடம் கலந்து பேச வேண்டும். ஜூன் மாதம் மிகப்பெரிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். எதுவாக இருந்தாலும் துணிந்து வெளியே சொல்லும் தைரியத்தை மாணவர்களுக்கு ஏற்படுத்துவோம்" என்று கூறினார்.
பாலியல் உள்ளிட்ட எந்தவித வன்முறைகளை குழந்தைகள் எதிர்கொண்டாலும் அவர்கள் 1098 என்ற இலவச உதவி எண்ணையும் தமிழக அரசு அறிவித்துள்ள 14417 என்ற உதவி எண்ணையும் தொடர்புகொள்ளலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












