இஸ்ரேல்: 2 குழந்தைகள் உள்பட பணயக் கைதிகளின் உடல்களை அனுப்பிய ஹமாஸ், துக்கத்தில் மூழ்கிய மக்கள்

பட மூலாதாரம், PA Media
- எழுதியவர், ஜார்ஜ் ரைட்
- பதவி, பிபிசி நியூஸ்
காஸாவில் இருந்து இஸ்ரேலுக்கு பிப்ரவரி 20 அன்று அனுப்பி வைக்கப்பட்ட நான்கு பணயக் கைதிகளின் உடல்களில் ஒன்று ஷிரி பிபாஸ் என்ற பெண்ணுடையது அல்ல என்று இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. இறந்த பெண் ஷிரி தான் என ஹமாஸ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
2023-ஆம் ஆண்டு இஸ்ரேலில் இருந்து ஹமாஸால் பணயக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்ட ஷிரி பிபாஸுக்கு அப்போது வயது 33. அவருடைய மகன்கள் ஏரியல் மற்றும் க்ஃபிர் என மூவரும் இறந்து போன செய்தி இஸ்ரேலில் பதற்றத்தையும் கவலையையும் ஏற்படுத்தியது.
இஸ்ரேல் ராணுவம் பிபாஸ் குடும்பத்தினரிடம் இது குறித்து பேசிய நிலையில், இரண்டு குழந்தைகளின் உடல்கள், பிபாஸின் குழந்தைகள் தான் என்பதை உறுதிப்படுத்தியது. ஆனால், ஹமாஸால் அனுப்பி வைக்கப்பட்ட பெண்ணின் உடல் ஷிரியுடையது அல்ல என்று ராணுவம் தெரிவித்துள்ளது.
அவருடைய உடல் மற்றும் மீதமுள்ள பணயக் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் இதுவரை ஹமாஸ் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
- காஸா போர்நிறுத்தம் அமலுக்கு வந்தது - 3 பணயக்கைதிகளை விடுவித்த ஹமாஸ்
- காஸா போர் நிறுத்தம் நீடிக்குமா? ஹமாஸுக்கு எழுந்துள்ள சந்தேகம் இதுவா?
- சௌதி, பாலத்தீனம் பற்றிய இஸ்ரேல் பிரதமர் பேச்சுக்கு இஸ்லாமிய நாடுகள் எதிர்ப்பு - என்ன பேசினார்?
- காஸா உண்மையில் யாருக்கு சொந்தம்? டிரம்பின் திட்டம் என்ன? - 5 கேள்விகளும் பதில்களும்
- இன சுத்திகரிப்பு - இனப் படுகொலை என்ன வித்தியாசம்? காஸாவில் டிரம்ப் செய்ய நினைப்பது என்ன?

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்த பதிவு ஒன்றில், "அடையாளம் காணும் பணிகள் நடந்தபோது, ஹமாஸ் ஒப்படைத்த உடல்களில் ஷிரி பிபாஸ் என்று கூறப்பட்டவரின் உடல் அவருடையது அல்ல என்பது தெரியவந்தது. இது அடையாளம் தெரியாத நபரின் உடல்" என்று குறிப்பிட்டது இஸ்ரேல் ராணுவம்.
"இது ஹமாஸ் பயங்கரவாத குழுவின் மோசமான விதிமுறை மீறலாகும். அந்த அமைப்பு இறந்து போன நான்கு பணயக் கைதிகளின் உடல்களை விடுவிக்க ஒப்புக் கொண்டது. ஹமாஸ் உடனடியாக ஷிரியின் உடலையும் (உயிருடன் உள்ள) இதர பணயக் கைதிகளையும் விடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்," என்றும் அதில் குறிப்பிட்டிருந்தது இஸ்ரேல் ராணுவம்.
உளவு மற்றும் தடயவியல் ஆதாரங்களின் படி பிபாஸின் குழந்தைகள் இருவரும் 2023 நவம்பர் மாதம் பயங்கரவாதிகளால் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர் என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவிக்கிறது. ஹமாஸோ, இவர்கள் இஸ்ரேலின் வான்வழி தாக்குதலின் போது கொல்லப்பட்டனர் என்று கூறுகிறது.

பட மூலாதாரம், Reuters
காஸாவில் இருந்து இஸ்ரேல் வரை
இஸ்ரேலின் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு இஸ்ரேல் மற்றும் காஸாவில் பெருத்த அமைதியும் கடினமான சூழலும் நிலவியது என்று தன்னுடைய செய்தியில் குறிப்பிட்டுள்ளார் பிபிசி செய்தியாளர் பால் ஆடம்ஸ். வியாழக்கிழமை காஸாவில் நிகழ்ந்த ஒவ்வொரு நிகழ்வையும் அவர் கீழ்கண்டவாறு எழுதியுள்ளார்.
அடிக்கடி மழைச்சாரல் வந்து நனைக்கும் ஒரு பின்பனிக்கால நாளில், இஸ்ரேலியர்கள் பெரிதும் அச்சத்துடனும் வருத்தத்துடனும் எதிர்பார்த்திருந்த நிகழ்வு அரங்கேறியது.
இறந்தவர்களின் உடல்கள் திரும்பி வரத் துவங்கின.
இதுநாள் வரை பிடித்து வைத்திருந்த பணயக்கைதிகளை விடுவிக்கும் போது நிலவிய அதே சூழல் நேற்றும் நிலவியது. ஹமாஸ் அமைப்பினரும் ஆயுதம் தாங்கிய பாலத்தீன குழுவினரும் இறந்த பணயக் கைதிகளின் உடல்களை ஒப்படைக்கத் துவங்கினர். 2023 தாக்குதலின் போது 500க்கும் மேற்பட்ட பணயக் கைதிகளை பிடிப்பதில் இந்த குழுக்கள் ஈடுபட்டிருந்தன.
அங்கே காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலின் விளைவையும், பாலத்தீனத்தின் நிலைப்பாட்டையும் எடுத்துக் காட்டும் வகையில் பெரிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட மேடை ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது.
அதிர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு, உடல் எடை குறைந்து போய் பல பணயக் கைதிகள் அங்கே விடுவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் வழக்கத்துக்கு மாறாக, நேற்று, நான்கு சவப்பெட்டிகள் இருந்தன. அதில் இறந்தவர்களின் பெயர்களும், புகைப்படங்களும் இருந்தன. ஒடேட் லிஃப்சிட்ஸ், ஷிரி பிபாஸ் மற்றும் அவரின் இரண்டு மகன்கள் ஏரியல் மற்றும் க்ஃபிர் தான் அந்த இடத்தில் இடம்பெற்றிருந்த பெயர்களும் புகைப்படங்களும்.
அங்கே இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் புகைப்படமும் இடம் பெற்றிருந்தது.
தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஏவுகணை மிச்சத்தின் மீது, "அமெரிக்க குண்டுகளால் அவர்கள் கொல்லப்பட்டனர்," என்று எழுதப்பட்டிருந்தது. இந்த நான்கு பேரும் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலின் மூலமே கொல்லப்பட்டனர் என்று ஹமாஸ் பல காலமாக கூறி வருகிறது. ஆனால் இதனை உறுதிபடுத்த இயலவில்லை.

பட மூலாதாரம், Reuters
இதற்கு முன்பு இருந்ததைப் போன்றே, செஞ்சிலுவை அதிகாரிகள், இறந்தவர்களின் உடலை ஒப்படைக்கும் பணியை மேற்பார்வையிட்டனர். மிக அரிதாக வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், இந்த நிகழ்வை மட்டும் ஹமாஸ் பொதுவெளியில் இல்லாமல், தனியாக அதே நேரத்தில் கண்ணியத்துடன் உடல்களை ஒப்படைக்குமாறு செஞ்சிலுவை சங்கம் கேட்டுக் கொண்டது.
ஆனால் அவர்களின் முயற்சிகள் வீணாகின. மக்களின் பார்வையில் படாத வகையில் சவப்பெட்டிகள் மீது வெள்ளை துணி போர்த்தி மூடினார்கள். இந்த நிகழ்வை பார்க்க வந்தவர்களின் கூட்டம் குறைவாகவே இருந்தது. அதிகமழை பெய்து கொண்டிருப்பதும் அதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.
அவர்களின் உடல்கள் வியாழக்கிழமை, பிப்ரவரி 20, அன்று ஒப்படைக்கப்பட்ட பிறகு, காஸா கரையின் ஒரு எல்லையில் ராணுவ மரியாதை இறந்தவர்களுக்கு வழங்கப்பட்டது. இறந்தவர்களின் உடல்கள் மீது இஸ்ரேலின் தேசியக்கொடி போர்த்தப்பட்டது. ராணுவத்தின் தலைமை ராபி அந்த இறுதி மரியாதையை செலுத்தினார்.
அவர்களின் உடல்கள் அங்கிருந்து ஜஃப்பாவில் இருக்கும் அபு கபிர் தடயவியல் மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கே இறந்தவர்களின் அடையாளத்தை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது தான் ஷிரியின் உடல் அதில் இல்லை என்பது தெரிய வந்தது.
அவர்களின் உடல்கள் எடுத்துச் சென்ற வழி முழுவதும், சிறு சிறு குழுக்களாக இஸ்ரேலியர்கள் அவர்களின் தேசியக் கொடிகளையும், பணயக் கைதிகளுக்கு ஆதரவு நிறமாக கருதப்படும் மஞ்சள் நிற பதாகைகளையும் தாங்கிக்கொண்டிருந்தனர்.
நிர் ஓஸ் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து கர்மெய் காட்டில் வாழும் மக்கள் சோகத்துடன் காணப்பட்டனர். இறந்து போன நான்கு நபர்களும் நிர் ஓஸ் பகுதியில் இருந்து அக்டோபர் 7, 2023 அன்று பணயக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டவர்கள்.
டெல் அவிவில் அமைந்துள்ள பணயக்கைதிகள் சதுக்கத்தில் மக்கள் தரையில் அமர்ந்து அழுது துக்கம் அனுசரித்தனர்.

பட மூலாதாரம், EPA
சோகத்தில் இஸ்ரேலியர்கள்
ஏரியல் மற்றும் க்ஃபிரின் சிவந்த முகங்களைக் கொண்ட புகைப்படங்கள் சுவர்களிலும், சாலை பதாகைகளிலும், ஜன்னல்களிலும் ஒட்டப்பட்டிருந்தன. பெரும் அச்சத்தோடு இருந்தாலும் கூட, ஷிரி மற்றும் அவருடைய இரண்டு மகன்களும் உயிரோடு இருக்க வேண்டும் என்று இஸ்ரேலியர்கள் நம்பிக்கையோடு இருந்தனர்.
"இந்த செய்தி கேட்டு நாங்கள் மன உளைச்சலுக்கு ஆளானோம்," என்று கூறுகிறார் ஓர்லி மாரோன்.
"என்னுடைய பேரக்குழந்தைகளும் அப்படி தான் இருப்பார்கள். இந்த குழந்தைகளின் புகைப்படங்களை பார்க்கும் போது மிகவும் வருத்தமாக உள்ளது," என்று கூறினார்.
ஒடேட் லிஃப்சிட்ஸின் மகன் யிசார் இஸ்ரேல் வானொலியில் பேசிய போது, 2023-ஆம் ஆண்டு அவருடைய அப்பா பணயக் கைதியாக பிடித்துச் செல்லப்பட்ட காலத்தில் இருந்தே அவருடைய உடல் நலம் குறித்து வருத்தப்பட்டதாக கூறினார்.
ஒடேட் பிடித்துச் செல்லப்பட்ட போது அவருக்கு வயது 84. அவருடைய மனைவி யோசேவெத்தும் காஸாவில் உள்ள கான் யூனிஸ் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கிருந்து இருவரும் பிரிக்கப்பட்டனர். அதன் பின்னர் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளவில்லை. தாக்குதலுக்குப் பிறகு, இரண்டு நாட்கள் கழித்து ஹமாஸ் யோசேவெத்தை விடுவித்தது.
"இதனை நாம் மறந்து முன்னோக்கிச் செல்ல வேண்டும்," என்று யிசார் கூறினார். மேலும் அவருடைய தந்தை ஒரு பத்திரிகையாளர், அமைதியை வேண்டிய ஒரு செயற்பாட்டாளர், மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெறும் பிரச்னைகளை எப்படி முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற பார்வையை அவர் வெகு காலமாக கொண்டிருந்தார் என்றும் யிசார் தன்னுடைய அப்பா குறித்து நினைவு கூறுகிறார்.
"ஒரு முழு சுழற்சியை நாங்கள் அனுபவித்துள்ளோம். ஆனாலும் அதற்கு நம்மால் தீர்வு காண இயலவில்லை. ஏதோ ஒன்றுக்கு முழுமையாக தீர்வு காணாமல் நாம் வந்துவிட்டோம். இப்போது எங்கே இருக்கிறோம் பாருங்கள்" என்றும் அவர் தெரிவித்தார்.
கிழக்கு லண்டனில் வாழும் ஒடேடின் மகள் ஷேரோன், கடந்த மாதம் பிபிசியிடம் பேசிய போது, தன்னுடைய தந்தையின் வயதை கணக்கில் கொண்டால் அவர் உயிரோடு இருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று கூறினார். ஆனால் அதிசயங்களை நம்புவதாக அவர் தெரிவித்தார்.
"ஒரு வழி இல்லையென்றால் மற்றொரு வழியில் நாங்கள் எங்களின் அப்பா இன்னும் எங்களுடன் இருக்கிறாரா, இல்லையா என்பதை தெரிந்துகொள்வோம். என்னுடைய அப்பாவுக்கு இது நிகழ்ந்திருக்கக் கூடாது," என்றும் அப்போது தெரிவித்தார்.
உடல்நலக் கோளாறால் பாதிக்கப்பட்ட பாலத்தீனர்களை இஸ்ரேலில் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றவர் ஓடேட். பாலத்தீனர்களின் உரிமைகளுக்காக அவர், பாலத்தீனிய விடுதலை அமைப்பான பி.எல்.ஓவின் அன்றைய தலைவர் யாசெர் அராஃபெத்தை நேரில் சந்தித்துப் பேசியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், LIFSCHITZ FAMILY
சிறப்பு செய்தியாளர் லூசி மேன்னிங் வழங்கிய செய்தி:
இதற்கிடையில், காஸாவில் பல பாலத்தீனர்கள் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தினார்கள். இஸ்ரேலியர்களின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டுவிட்டன. ஆனால் இஸ்ரேலின் ராணுவ தாக்குதலின் காரணமாக கொல்லப்பட்ட எண்ணிலடங்கா பாலத்தீனர்களின் உடல்கள் இன்னும் காஸா கரையின் இடிபாடுகளுக்கு அடியே இருக்கின்றன என்று அவர்கள் கவலை தெரிவித்தனர்.
மேலும் 665 பாலத்தீனர்களின் உடல்கள் இஸ்ரேல் அரசின் கட்டுப்பாட்டில் கல்லறைகளில் வைக்கப்பட்டுள்ளது என்று பாலத்தீன போராட்டக் குழு ஒன்று கூறுகிறது. அந்த குழு தியாகிகளின் உடலை மீட்பதற்கான தேசிய அளவிலான குழு, பல பாலத்தீனர்களின் உடல்கள் பல ஆண்டுகளாக இஸ்ரேலின் வசம் உள்ளது என்றும் கூறுகிறது.
கான் யூனிஸில் வசிக்கும் இக்ரம் அபு, "இந்த ஒப்பந்தத்தில் எனக்கு துளியும் விருப்பம் இல்லை," என்று கூறினார். "அவர்கள் இன்னும் இடிபாடுகளை அப்புறப்படுத்தவில்லை. நம்முடைய குழந்தைகளும் குடும்பத்தினரும் எங்கே இருக்கிறார்கள் என்றும் கூட நமக்கு தெரியாது," என்று அவர் கூறினார்.
அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே, எகிப்து கொடிகளை தாங்கிய புல்டோசர்கள் வடக்கு காஸா எல்லை வழியாக காஸாவுக்குள் நுழைந்தது. இறந்தவர்களின் உடல்களை ஒப்படைப்பது மற்றும் உயிருடன் இருக்கும் 6 பணயக் கைதிகளை விடுவிப்பதற்கு மாற்றாக இஸ்ரேல் இடிபாடுகளை அப்புறப்படுத்துவதற்கு தேவையான உபகரணங்கள் மற்றும் கருவிகளை காஸாவுக்குள் அனுமதித்தது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












