உலகக்கோப்பை: தென்னாப்பிரிக்கா வெற்றி - இறுதி வரை போராடிய ஆப்கானிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடந்த ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு இது கடைசிப் போட்டி.
ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 244 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடிய அஸ்மத்துல்லாஹ் 97 ரன்கள் அடித்தார். தென்னாப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக கோட்சீ 4 விக்கெட்டுகள் எடுத்தார்.
பின்னர் விளையாடிய தென்னாப்பிரிக்கா 15 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. 76 ரன்கள் அடித்த தென்னாப்பிரிக்காவின் வான் டர் டஸ்ஸன் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இது பழைய ஆப்கானிஸ்தான் இல்லை!

பட மூலாதாரம், Getty Images
இந்த உலகக்கோப்பையில் அனைவரையும் ஆச்சரியப்படுத்திய ஓர் அணி என்றால் அது ஆப்கானிஸ்தான்தான். கடந்த 2015 மற்றும் 2019 உலகக்கோப்பைகளில் ஸ்காட்லாந்து அணியை மட்டுமே வீழ்த்திய பழைய ஆப்கானிஸ்தான் அணி கிடையாது இது.
நடப்பு உலகக்கோப்பையில் இங்கிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் என மூன்று முன்னாள் சேம்பியன்களை ஆப்கானிஸ்தான் வீழ்த்தியுள்ளது.
தங்களது நாட்டின் அரசு தாலிபன்களின் கையில் இருக்கும் நிலையில் மிகவும் குறைந்த அளவிலான நிதியையும் வசதியையும் வைத்துக்கொண்டு நடப்பு உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி மிகச் சிறப்பாக விளையாடி வருகிறது.
எப்போதுமே ரஷித் கான் போன்ற ஒரு சில வீரர்கள்தான் ஆப்கானிஸ்தான் அணியில் சிறப்பாக விளையாடுவார்கள். ஆனால், இந்த முறை நூர் அகமது, ஃபசல்ஹக் ஃபரூக்கி, நவீன் உல் ஹக், இப்ராஹிம் ஸத்ரான் உள்ளிட்ட வீரர்கள் ஆப்கன் அணிக்காக சிறப்பாக விளையாடி ஜொலிக்கின்றனர். ஆப்கன் அணியின் முதல் ஐந்து பேட்ஸ்மேன்களும் இந்த உலகக்கோப்பையில் 250க்கும் அதிகமாக ரன்கள் அடித்துள்ளனர்.
இந்த உலகக்கோப்பையில் தங்களது கடைசிப் போட்டியான தென்னாப்பிரிக்கா உடனான இந்தப் போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடியது. ஏனென்றால் இந்தப் போட்டியில் 438 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வென்றால் மட்டுமே 4வது இடத்தில் உள்ள நியூசிலாந்தின் இடத்தை பிடிக்க முடியும் என்ற நிலையில் அதற்கு வாய்ப்பு மிகக் குறைவாகவே இருந்தது.
ஆனால், இந்தப் போட்டியில் வெற்றி பெற்றிருந்தால், ஆப்கானிஸ்தான் அணி 10 புள்ளிகளோடு தொடரில் இருந்து வெளியேறும். 4வது இடம் பிடித்து அரையிறுதிக்குச் செல்லும் அணி பெற்றிருக்கும் அதே புள்ளியைத்தான் தாங்களும் பெற்றோம் என்ற தன்னம்பிக்கையோடு ஆப்கானிஸ்தான் இந்தத் தொடரை நிறைவு செய்ய முயன்றது. ஆனால் அது நடக்கவில்லை.
தனி ஒருவனாகப் போராடிய அஸ்மத்துல்லாஹ்

பட மூலாதாரம், Getty Images
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றியின் விளிம்பிற்குச் சென்று மேக்ஸ்வெல்லின் அசுர ஆட்டத்தால் வெற்றியைப் பறிகொடுத்தது. அந்தப் போட்டியில் சதம் விளாசிய இப்ராஹிம் ஸத்ரானும் குர்பாஸும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
ஒன்பதாவது ஓவரில் கேஷவ் மஹாராஜ் வீசிய பந்தில் குர்பாஸ் 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரே ஸத்ரானும் ரன்களுக்கு ஜெரால்ட் கோட்ஸீயிடம் விக்கெட்டை இழந்தார். பவ்ர்ப்ளே முடியும்போது ஆப்கானிஸ்தான் அணி 42 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தது.
அடுத்த ஓவரிலேயே கேஷவ் மஹாராஜ் வீசிய பந்தில் அஸ்மத்துல்லாஹ் அவுட்டானார். இருபது ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் இழந்து 78 ரன்கள்தான் அடித்திருந்தது. நான்காவது விக்கெட்டுக்கு அஸ்மத்துல்லாஹ் ஒமர்சாயோடு சேர்ந்து 49 ரன்கள் கொண்டுவரப் பங்காற்றிய ரஹ்மத் ஷா 26 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த இம்ரான் அலிகிலும் 12 ரன்களுக்கு அவுட்டானார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட முகமது நபியும் 2 ரன்களில் லுங்கி இங்கிடி பந்தில் அவுட்டானார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிய மற்றொரு பக்கம் அஸ்மத்துல்லாஹ் ஒமர்சாய் பொறுப்பாக விளையாடி 71 பந்துகளில் அரை சதம் அடித்தார்.
அதிரடி காட்டிய தென்னாப்பிரிக்க பவுலர் கோட்சீ

பட மூலாதாரம், Getty Images
ஒமர்சாயோடு சேர்ந்து அடுத்து வந்த ரஷித் கான் வழக்கம்போல அதிரடியாக 4, 5 சிக்சர்கள் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வழக்கத்திற்கு மாறாக 30 பந்துகளில் 14 ரன்கள் அடித்து அவுட்டானார். 40 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 173/7 என்ற நிலையில் இருந்தது.
நூர் அகமது 26 ரன்களுக்கு அவுட்டாக ஒமர்சாய் மற்றும் தனி ஆளாக ஆடி வந்தார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஒமர்சாய் 107 பந்துகளில் 97 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி பந்தில் நவீன் உல் ஹக் ரன் அவுட்டாக 50 ஓவர் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 10 விக்கெட்டுகள் இழந்து 244 ரன்கள் அடித்திருந்தது.
தென்னாப்பிரிக்கா சார்பில் கோட்சீ 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். லுங்கி இங்கிடியும் கேஷவ் மஹாராஜும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஃபெலுக்வாயோ ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
தென்னாப்பிரிக்காவிற்கு நெருக்கடி கொடுத்த ஆப்கானிஸ்தான் பவுலர்கள்

பட மூலாதாரம், Getty Images
தென்னாப்பிரிக்க அணி 245 என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் டி காக் மற்றும் கேப்டன் டெம்பா பவுமா அணிக்கு ஒரு நிலையான ஆரம்பத்தை அளித்தனர்.
பவர்ப்ளே முடிவில் தென்னாப்பிரிக்க அணி விக்கெட் இழப்பின்றி 57 ரன்கள் எடுத்திருந்தது. 11வது ஓவரில் முஜீப் வீசிய பந்தில் 23 ரன்கள் எடுத்திருந்த பவுமா அவுட்டானார். இந்த உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ரச்சின் ரவீந்திராவிற்கு அடுத்து இரண்டாவது இடத்தில்ல் டி காக் உள்ளார்.
இந்தப் போட்டியிலும் டி காக்கின் ஃபார்ம் தொடர்ந்தது. பெரிய ஸ்கோர் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் நபி வீசிய 14வது ஓவரில் ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்கச் சென்று 41 ரன்களுக்கு டி காக் அவுட்டானார்.
மூன்றாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த மார்க்ரம் மற்றும் வேன் டர் டஸ்ஸன் இணை 50 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரஷித் கானின் சுழலில் மார்க்ரம் சிக்கி விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த க்ளாசனும் 10 ரன்களுக்கு ரஷித் கானிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.
இந்நிலையில், சிறப்பாக விளையாடிய டஸ்ஸன் 66 பந்துகளில் அரை சதம் கடந்தார். நபி வீசிய 38வது ஓவரில் மில்லர் 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நபியிடமே கேட்ச் கொடுத்து அவுட்டானார். சீரான இடைவெளியில் தென்னாப்பிரிக்கா விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
நாற்பது ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 192/5 என்ற நிலையில் இருந்தது. கடைசி பத்து ஓவர்களில் தென்னாப்பிரிக்கா 53 ரன்கள் அடிக்க வேண்டியிருந்தது.
வெற்றியைத் தேடித் தந்த வேன் டர் டஸ்ஸன்

பட மூலாதாரம், Getty Images
ஆறாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்து ஆடிய டஸ்ஸன் மற்றும் ஃபெலுக்வாயோ ஜோடி நிதானமாக விளையாடியது. இந்த பார்ட்னெர்ஷிப்பை உடைக்கத் தவறிய ஆப்கானிஸ்தான் அணி வெற்றியைக் கைவிட்டது.
தென்னாப்பிரிக்க அணி 15 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 247 ரன்கள் அடித்து இந்தத் தொடரில் தனது 7வது வெற்றியைப் பெற்றது.
சிறப்பாக ஆடிய டஸ்ஸன் 95 பந்துகளில் 76 ரன்கள் அடித்தார். ஃபெலுக்வாயோ தனது பங்கிற்கு 39 ரன்கள் அடித்தார்.
ஆப்கானிஸ்தான் அணி சார்பில் நபி மற்றும் ரஷித் கான் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். முஜீப் 1 விக்கெட் எடுத்தார்.
இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்க அணி புள்ளிப் பட்டியலில் 12 புள்ளிகளோடு 2ஆம் இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் அணி 8 புள்ளிகளோடு 6வது இடத்தில் இந்த உலகக்கோப்பை தொடரை நிறைவு செய்தது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












