You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தற்போதைய நிலவரம் என்ன?
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி எதிரொலியாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன.
புதுச்சேரியில் படகுகள் சேதம்
புதுச்சேரியில் அதிகபட்சமாக பெரிய காலாப்பட்டு பகுதியில் 25 சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. இந்தப் பகுதியில் சின்ன காலப்பட்டு மீனவ கிராமத்தில் நேற்று மேட்டுப்பகுதியில் இருந்து மழை நீர் வெள்ளம் போல் கடல் நோக்கி வந்தது.
இதனால் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளுடன் மீன்படி வலைகளும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டன. நள்ளிரவு முதல் அதிகாலை வரை மீனவர்கள் போராடி படகுகளை மீட்டனர். ஐந்துக்கும் மேற்பட்ட படகு கடலுக்குள் சென்றுள்ளன. 50-க்கும் மேற்பட்ட படகுகள் பழுதாகி உள்ளதாக மீனவர் தெரிவிக்கின்றனர். இதே போல் 1 கோடி ரூபாய் மதிப்பிலான வலைகள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
கடலூரில் நெற்பயிர்கள் சேதம், இருவர் உயிரிழப்பு
அதி கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டிருந்த கடலூர் மாவட்டத்தின் குறிஞ்சிப்பாடியில் தொடர் மழை காரணமாக 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளது.
குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கல்குணம், ரெட்டிபாளையம், பூதம்பாடி, எல்லக்குடி, உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பயிர் செய்யப்பட்டிருந்த சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்தா செந்தில் குமார், நள்ளிரவு முதல் பெய்த கனமழையின் காரணமாக 4 நபர்கள் காயமடைந்துள்ளனர், 6 கால்நடைகள் இறந்துள்ளன.22 குடிசைகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. மேலும் ஆண்டார் முள்ளிப்பள்ளத்தில் சுவர் இடிந்து இருவர் உயிரிழந்துள்ளனர். மேற்படி உயிரிழப்புக்கு நிவாரண நிதியுதவி உடனடியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்." எனத் தெரிவித்தார்.
திருச்சியில் மூழ்கிய நெற்பயிர்கள்
திருச்சியில் கடந்த 4 தினங்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக ஸ்ரீரங்கம் பகுதிக்குட்பட்ட பனையபுரம், உத்தமர்சீலி கிராமங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெல் மழைநீரில் மூழ்கியது.
வயல்களில் தற்போதுவரை தண்ணீர் தேங்கி வெளியேற வழியின்றி சுமார் 1500 ஏக்கர் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
நெற்பயிர்கள் முழுவதுமாக வீணாகியுள்ளதால் அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
விழுப்புரம், புதுச்சேரிக்கு, திருவண்ணாமலைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
விழுப்புரம் மாவட்டம் மைலம் ஒன்றியம் வீடூர் அணை அதன் முழு கொள்ளளவான 32 அடியை எட்டியுள்ளது. சங்கராபரணி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளான செஞ்சி, மேல்மலையனூர், பனமலைபேட்டை ஆகிய பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.
அணைக்கு 2000 கன அடிக்கு மேல் தற்போது தண்ணீர் வந்து கொண்டிருப்பதால்விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் முன்னிலையில் அணையின் பாதுகாப்பு நலன் கருதி மதகுகள் வழியாக முதற்கட்டமாக 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மாநில கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையின் நீர் மட்டம் 113.45 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7000 கன அடியாக உள்ள நிலையில் நீர் வெளியேற்றம் வினாடிக்கு 5000 கன அடியாகவும் உள்ளது.
அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான அரூர், ஊத்தங்கரை, கல்லாறு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் நீர் வெளியேற்றம் வினாடிக்கு 9000 கன அடி வரை உயரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க நீர்வளத்துறை சார்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெல்டா மாவட்டங்களில் நெற்பயிர்கள் சேதம்
காவிரி டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. ஒரத்தநாடு, பூதலூர் போன்ற பகுதிகளில் விளைந்த நெல்மணிகள் நீரில் மூழ்கியுள்ளன. குறிப்பாக, அம்மாபேட்டை மற்றும் நல்லவன்னியன் குடிகாடு பகுதிகளில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெல்மணிகள் நீரில் மூழ்கி முளைக்கத் தொடங்கியுள்ளன.
ஏற்கனவே அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதலுக்காகக் காத்திருக்கும் நிலையில் மழையிலும் நனைந்துவிட்டன.
திருவாரூரில் நீரில் மூழ்கிய பயிர்கள்
திருவாரூர் மாவட்டத்தில் எட்டியலூர், நீலக்குடி போன்ற பகுதிகளில் வெட்டாற்றின் கரைகள் உடையும் அபாயம் உள்ளதால், மாவட்ட நிர்வாகம் சவுக்கு மரங்கள் மற்றும் மணல் மூட்டைகளைத் தயார் நிலையில் வைத்துள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையாக, ஆற்றில் இறங்கிக் குளிப்பதற்கும், கரையோரத்தில் 'செல்ஃபி' எடுப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் பல இடங்களில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகத் தொடங்கியுள்ளன. திருவாரூர் வட்டாரத்தில் பெருங்குடி கிராமத்தில் கனமழையால் நான்கு கூரை வீடுகளின் சுவர்கள் இடிந்து சேதமடைந்துள்ளன.
நாகப்பட்டினம் , மயிலாடுதுறை மாவட்டங்களிலும் பாதிப்பு
நாகை மாவட்டத்தில் சுமார் 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆனதாண்டவபுரம், நீடூர், கோடங்குடி போன்ற தாழ்வான பகுதிகளில் சுமார் 300 ஏக்கருக்கும் அதிகமான சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
நெல் கொள்முதல் - ஸ்டாலின் உத்தரவு
தமிழகத்தில் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமையைப் பரிசீலிக்க, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளிக் காட்சி மூலம் ஆலோசனை நடைபெற்றது. டெல்டா மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்படாதவாறு நெல் கொள்முதல் பணிகள் இடையூறு இன்றி நடைபெற வேண்டும் எனவும் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் பாதுகாப்பாக கிடங்குகளுக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அத்துடன், நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக தளர்த்தி வழங்கும் முன்மொழிவை, தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் எனவும் முதலமைச்சர் உத்தரவிட்டார்.
தஞ்சையில் எடப்பாடி பழனிசாமி ஆய்வு
தஞ்சாவூரில் நெல் வயல்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். . தஞ்சாவூர் அருகே காட்டூர், மூர்த்தியம்பாள்புரம் ஆகிய இடங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களை அவர் நேரில் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தினமும் 2,000 மூட்டைகள் கொள்முதல் செய்வதாக அரசு அறிவித்து இருந்தது. ஆனால், விவசாயிகளிடம் கேட்டபோது 800 நெல் மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாக கூறுகின்றனர். தமிழக அரசு தவறான தகவலை கூறி விவசாயிகளை ஏமாற்றுகிறது. விவசாயிகளுக்கு இந்த தீபாவளி கண்ணீர் தீபாவளியாக தான் உள்ளது" என்று குற்றம்சாட்டினார்.
வீடுகளை சூழந்த மழை நீர்
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி எதிரொலியாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக பெய்த கனமழை காரணமாக மண்டபத்தை அடுத்துள்ள கலைஞர் நகர், மைக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்தது.
கலைஞர் பகுதியில் இன்று இரண்டாவது நாளாக மழைநீர் சூழ்ந்துள்ளதால் குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியவில்லை.
மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர்ந்து இரண்டு மின் மோட்டார்கள் வைத்து தண்ணீர் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், தொடர்ந்து மழை பெய்வதால் நீரின் அளவு குறையாமல் தொடர்ந்து வீடுகளை சுற்றி தண்ணீர் சூழ்ந்துள்ளது.
கடலூரில் சாலையில் தேங்கிய நீர், நெற்பயிர்கள் சேதம்
கடலூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் மழை விட்டுவிட்டு பெய்து, பிற்பகல் நேரத்தில் மழை ஓய்ந்திருந்தது. பின்னர், இரவு 7 மணிக்கு கனமழை கொட்டி தீர்த்தது. இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கனமழை காரணமாக கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் சாலையில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. பேருந்து நிலையம் சாலையிலும் தண்ணீர் தேங்கியது. சுற்றுலா மாளிகை முழுவதும் தண்ணீர் புகுந்தது. அரசு மருத்துவமனையின் பல்வேறு பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளது.
மக்கள் தங்குவதற்கு பாதுகாப்பு மையம் 14, புயல் பாதுகாப்பு மையம் 28 (Cyclone Shelter) தற்காலிக பாதுகாப்பு மையங்கள் 191 ஆக 233 பாதுகாப்பு மையங்கள் தயார்நிலையில் உள்ளது. அனைத்து துறைகளையும் உள்ளடக்கி 21 பாதுகாப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பேரிடர் கால நடவடிக்கைகள் மேற்கொள்ள, 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அவசரக்கால கட்டுப்பாட்டு அறையில் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் 04142 – 220 700 ஆகிய தொலைபேசி எண்கள் செயல்பட்டு வருகிறது.
கனமழையில் வீடு இடிந்து சிறுமி உயிரிழப்பு
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே கனமழையில் வீடு இடிந்து விழுந்ததில் 17 வயது நர்சிங் மாணவி உயிரிழந்தார்.
சிவகாசி அருகே திருத்தங்கல் பழைய வெள்ளையாபுரம் சாலையை சேர்ந்தவர் வீரமணி-ராதா தம்பதியின் மகள் பவானி(17). அவர் தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இரவு பெய்த கனமழையில் அவர் மீது வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் சிக்கி காயமடைந்த பவானியை உறவினர்கள் மீட்டு, விருதுநகர் மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பவானி, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
சென்னையில் மழை
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாகவே விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. சில நேரம் பலத்த காற்றும் வீசுகிறது. இதன் காரணமாக சாலையில் முறிந்து விழும் மரங்களை உடனடியாக மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அகற்றி வருகின்றனர்
தண்டையார்பேட்டை நெடுஞ்சாலையில் பலத்த காற்று வீசியதால் மரம் ஒன்று முறிந்து சாலையில் விழுந்தது. அப்போது வழியாக ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் உடனடியாக உடைந்து விழுந்து இருந்த மரத்தை அகற்றினார்கள்
புதுச்சேரி : சுரங்கப் பாதையில் தேங்கிய மழை நீர்
புதுச்சேரியில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் கிழக்கு கடற்கரை சாலை, மகாத்மா காந்தி சாலை, இந்திராகாந்தி சதுக்கம், புஸ்ஸி வீதி உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. நூறடி அடி சாலையில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் மழைநீர் தேங்கி நிற்கிறது.
மழை நீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணியில் பொதுப்பணி துறையினர் உள்ளனர். தற்காலிகமாக சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது. கிருஷ்ணா நகர், ரெயின்போ நகர், சூரியகாந்தி நகர் உள்ளிட்ட நகரின் தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. இந்திராகாந்தி சதுக்கம் பகுதியில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் செல்ல தடை
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு கருதி இன்று (22/10/2025) முதல் கோவை குற்றாலம் சுற்றுலா பயணிகள் செல்ல தற்காலிகமாக மூடப்படுகிறது.
மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படும் என வனத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
வைகையில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்
வைகை அணையில் இருந்து 3,073 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. வைகையாற்று பகுதியில் இரண்டாவது நாளாக கரைபுரண்டு ஓடும் ஆற்று நீரால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
யானைக்கல் தரைப்பாலம், தத்தனேரி தரைப்பாலம் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்துள்ளனர்.
சென்னை: ஏரிகளில் நீர்மட்டம் எவ்வளவு?
சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கக் கூடிய நீர் நிலைகளில் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது.
- பூண்டி ஏரியின் முழு கொள்ளளவு 35 அடியாக இருக்கிறது, இதில் 33.05 அடி வரை நீர் நிரம்பியுள்ளது. புழல் ஏரியில் 18.67 வரை நீரின் மட்டம் அதிகரித்துள்ளது. இந்த ஏரியின் முழு கொள்ளளவு 21.2 அடியாகும்.
- சோழவரம் ஏரியில் 18.86 அடி அதிகபட்ச கொள்ளளவாக இருக்கும் நிலையில், இது வரை 11.17 அடி வரை நீர் நிரம்பியுள்ளது.
- 24 அடி முழு கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 20.84 அடி வரை நீரின் மட்டம் உயர்ந்துள்ளது.
- புதிதாக கட்டப்பட்ட தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்தில் 36.61 அடி முழு கொள்ளளவாகும். இதில் தற்போது 34.47 அடி வரை நீர் நிரம்பியுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு