You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் பிடிபட்டவரின் பின்னணி என்ன? தற்போது எங்கே இருக்கிறார்?
திருவள்ளூரில் சிறுமி பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த சந்தேக நபரைக் கைது செய்துள்ளதாக, ஜூலை 25 அன்று வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
முப்பதுக்கும் மேற்பட்ட தனிப்படைகள், 300க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை, 5 லட்ச ரூபாய் ரொக்கப் பரிசு என அறிவிக்கப்பட்டும் சந்தேக நபரைக் கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டது ஏன்? சந்தேக வளையத்தில் இருந்த நபர் பிடிபட்டது எப்படி?
என்ன நடந்தது?
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை 12 ஆம் தேதியன்று மதியம் சுமார் 12.45 மணியளவில் நான்காம் வகுப்பு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்.
அங்குள்ள தனியார் பள்ளியில் வகுப்புகள் முடிந்ததும் பாட்டி வீட்டுக்கு நடந்து சென்ற போது, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து சிறுமிக்கு அந்த கொடுமை நடந்துள்ளது.
சிறுமியை சந்தேக நபர் பின்தொடரும் சிசிடிவி காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தின. இதுகுறித்து ஆரம்பாக்கம் காவல்நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.
"சிசிடிவி காட்சி வெளியான பின்னரே நடவடிக்கை"
பாதிக்கப்பட்ட சிறுமி சென்னை ஆர்எஸ்ஆர்எம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. ஆனால், குற்றவாளியை கைது செய்வதில் காவல்துறை ஆர்வம் காட்டவில்லை என சிறுமியின் பெற்றோர் குற்றம் சுமத்தினர்.
" சிறுமிக்கு நேர்ந்த கொடூர சம்பவம் தொடர்பாக ஏழு நாட்களுக்கு பிறகு ஊடகங்களில் செய்தி வெளியானது. அதன் பிறகே காவல்துறை நடவடிக்கைகள் வேகம் பிடித்தன" எனக் கூறுகிறார், அப்பகுதியைச் சேர்ந்த இ.கம்யூ கட்சியின் பிரமுகர் அருள்.
சிசிடிவி வீடியோ வெளியாகியும் சிக்கல் நீடிப்பு
குற்றவாளியை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி கடந்த ஜூலை 19-ஆம் தேதி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆரம்பாக்கம் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். இதன் தொடர்ச்சியாக, வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் மேற்பார்வையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
கும்மிடிப்பூண்டி பகுதியில் தொழிற்சாலைகள் அதிகம் இருப்பதால் அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் தமிழ்நாடு-ஆந்திரா எல்லையோரத்தில் உள்ள சூலூர்பேட்டை, ஆந்திராவின் ஸ்ரீசிட்டி ஆகிய பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
ஆனால், சிசிடிவியில் காணப்பட்ட சந்தேக நபரை போலீஸாரால் கைது செய்ய முடியவில்லை. இதையடுத்து தனிப்படைகளின் எண்ணிக்கை 30 ஆக அதிகரிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபரின் 4 புகைப்படங்களை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட திருவள்ளூர் மாவட்ட காவல்துறை, மேற்கண்ட நபர் குறித்து தகவல் தெரிவித்தால் ஐந்து லட்ச ரூபாய் ரொக்கப் பரிசு அறிவிக்கப்படும் என தெரிவித்தது.
இதையடுத்து, காவல்துறை தெரிவித்த உதவி எண்ணுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளன. அதே உருவத்தில் உள்ள ஒருவர், சென்னை ராஜிவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டது. ஆனால், காவல்துறையின் நேரடி விசாரணையில் சிசிடிவியில் தென்பட்ட சந்தேக நபர் அவர் அல்ல என்பது தெரியவந்தது.
இந்த நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சந்தேகப்படும் நபரைக் கைது செய்துள்ளதாக வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் நேற்று தெரிவித்தார்.
வடக்கு மண்டல ஐ.ஜி கூறியது என்ன?
"முதல்கட்ட விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவரின் அடையாளம் தேடப்பட்டு வரும் நபரின் உருவங்களுடன் பொருந்திப் போகிறது" என அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அஸ்ரா கார்க், "இது சென்சிட்டிவான வழக்கு என்பதால் இதை மட்டும் முதற்கட்ட தகவலாக எடுத்துக் கொள்ள வேண்டும். கைதான நபரை காவலில் எடுத்து விசாரிக்கும் முயற்சிகளை மேற்கொள்ள உள்ளோம்" என்றார்.
சந்தேக நபரின் சொந்த மாநிலம் அஸாம் என்று கூறுவதாகக் குறிப்பிட்ட அஸ்ரா கார்க், "அதை நாங்கள் உறுதிப்படுத்த வேண்டும். அவர் கூறும் தகவல்களை ஆராய்ந்து வருகிறோம். அவர் ஆந்திராவில் இருந்ததாக கூறப்படுகிறது. எப்போது தமிழ்நாட்டுக்குள் வந்தார் என்பதை விசாரித்து வருகிறோம்" என்கிறார்.
கைதான நபரின் பெயரை செய்தியாளர்கள் கேட்டபோது, "ஒருவரைக் கைது செய்துள்ளோம். அதை அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளோம். காவல்துறையின் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அவரிடம் செல்போன் உள்ளது. அதையும் ஆராய வேண்டியுள்ளது" என்று மட்டும் பதில் அளித்தார்.
வழக்கில் கைதான நபரை ஆரம்பாக்கம் காவல்நிலையத்துக்குக் கொண்டு வரவுள்ளதாக தகவல் பரவியதையடுத்து, ஏராளமான பொதுமக்கள் அங்கு குவிந்தனர். இதனால் காவல்நிலையம் முன்பு போலீஸார் குவிக்கப்பட்டனர்.
75 சிசிடிவி காட்சிகள்... 300 பேரிடம் விசாரணை...
கைதான நபரிடம் இரண்டாம் கட்ட விசாரணையை காவல்துறை மேற்கொண்டு வரும் நிலையில், சந்தேக நபர் பிடிபட்டது குறித்து காவல்துறை தரப்பில் பேசினோம்.
பெயர் அடையாளங்களைத் தவிர்த்துவிட்டுப் பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர், " தொடக்கத்தில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. ஆரம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து பேசின்பிரிட்ஜ் வரை அந்த நபர் பயணித்துள்ளது தெரியவந்தது" எனக் கூறினார்.
அங்கிருந்து ஆவடி செல்லும் ரயிலில் பயணித்ததுள்ளதாகக் கூறிய அவர், "சுமார் 75க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டாலும் சந்தேக நபரை நெருங்குவதில் சிக்கல் ஏற்பட்டது" என்கிறார்.
குற்றம் நடந்த நேரத்தில் சந்தேக நபர் செல்போனில் பேசியதாக வெளியான தகவலையடுத்து, செல்போன் டவர்களில் பதிவான எண்களை வைத்து இணைய குற்றப் பிரிவு போலீஸார் ஆய்வு செய்துள்ளனர்.
சந்தேகப்படும் நபரின் புகைப்படங்கள் இருந்தாலும் அவரைக் கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டதாகக் கூறும் அந்த அதிகாரி, "அந்த நபர் ரயில் பயணம் மட்டுமே மேற்கொள்வது தெரியவந்தது. இதனால் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வரை போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்" என்கிறார்.
கைதான நபரின் பின்னணி என்ன?
வெள்ளிக்கிழமையன்று சூலூர்பேட்டை ரயில் நிலையத்தின் நடைமேடையில் நின்றிருந்த நபரின் அடையாளங்களுடன் தேடப்பட்டு நபரின் அடையாளங்கள் பொருந்திப் போனதாகவும் அவர் பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார்.
"இந்த வழக்கில் தற்போது வரை சுமார் 300க்கும் மேற்பட்டவர்களிடம் காவல்துறை விசாரணை நடத்தியது. கைதான நபர் ஆந்திராவில் உள்ள சாலையோர தாபா ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். வார இறுதியில் மட்டுமே தமிழ்நாட்டுக்குள் ரயிலில் வந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தது தெரியவந்துள்ளது" எனவும் அவர் குறிப்பிட்டார்.
''ஆந்திராவில் உள்ள தாபாவில் அவர் தன்னைப் பற்றி அளித்துள்ள பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட தகவல்களின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன" என்கிறார்.
"கைதான நபரைப் பற்றிய முழு விவரங்கள் எப்போது வெளியாகும்?" என கும்மிடிப்பூண்டி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஜெயஸ்ரீயிடம் பிபிசி தமிழ் கேட்டது. " விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. தற்போது எந்த விவரத்தையும் கூற இயலாது" என்று மட்டும் அவர் பதில் அளித்தார்.
கைதான சந்தேக நபர் எங்கே?
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஆரம்பாக்கம் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளார். ஆரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அவரை கொண்டு சென்றால் பதற்றமான சூழல் உருவாகக் கூடும் என்பதால் அவர் கவரப்பேட்டை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்த இடத்திற்கு சந்தேக நபரை காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு