இரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் 30 லட்சம் பேர் பலியான கொடிய பஞ்சம் - பிரிட்டிஷ் அரசு என்ன செய்தது?

பட மூலாதாரம், Keystone/Getty Images
1943 ஆம் ஆண்டு ஏற்பட்ட வங்காளப் பஞ்சம் கிழக்கு இந்தியாவில் 30 லட்சத்திற்கும் அதிகமான மக்களை பலிகொண்டது. இரண்டாம் உலகப் போரில் நேச நாடுகளின் தரப்பில் அதிக எண்ணிக்கையில் பொதுமக்களின் உயிரிழப்பு ஏற்பட்ட மிக மோசமான சம்பவங்களில் இதுவும் ஒன்றாகும்.
இதில் இறந்தவர்களுக்காக உலகில் எங்குமே நினைவுச்சின்னம், அருங்காட்சியகம் அல்லது நினைவுப்பலகை கூட இல்லை. ஆயினும் அதில் உயிர் பிழைத்தவர்களில் ஒரு சிலர் இப்போதும் எஞ்சியுள்ளனர். காலம் கடப்பதற்குள் அவர்களின் கதைகளை சேகரிக்க ஒருவர் உறுதியாக இருக்கிறார்.
'பசி எங்களைத் துரத்தியது'
"சிறிது அரிசிக்காக பலர் தங்கள் ஆண் மற்றும் பெண் குழந்தைகளை விற்றனர். பல மனைவிகளும் இளம் பெண்களும் தங்களுக்குத் தெரிந்த அல்லது தெரியாத ஆண்களுடன் ஓடினர்."
வங்காள பஞ்சத்தின் போது உணவுக்காக மக்கள் வேறு வழிதெரியாமல் மேற்கொண்ட பல நடவடிக்கைகளை விவரிக்கிறார் பிஜோய்கிருஷ்ணா திரிபாதி.
அவருக்கு தனது உண்மையான வயது தெரியவில்லை. ஆனால் அவரது வாக்காளர் அட்டையின்படி அவருக்கு வயது 112. பேரழிவை நினைவில் வைத்திருக்கும் ஒருசிலரில் பிஜோய்கிருஷ்ணாவும் ஒருவர்.
வங்காளத்தின் ஒரு மாவட்டமான மேதினிப்பூரில் தான் வளர்ந்தது பற்றி அவர் மெதுவாக விவரித்தார். அப்போது அரிசி பிரதான உணவாக இருந்தது. மேலும் 1942 ஆம் ஆண்டின் கோடைக்காலத்தில் அதன் விலை "மிக அதிகமாக உயர்ந்ததை” அவர் நினைவு கூர்ந்தார்.

பட மூலாதாரம், SAILEN SARKAR
அதன்பிறகு அதே ஆண்டு அக்டோபரில் வீசிய சூறாவளி அவரது வீட்டின் மேற்கூரையை பறித்துச்சென்றது. அந்த ஆண்டின் நெற்பயிர் முழுவதையும் அழித்தது. விரைவில் அரிசி வாங்குவது அவரது குடும்பத்திற்கு கட்டுப்படியாகாமல் போனது.
"பசி எங்களைத் துரத்தியது. பசி மற்றும் கொள்ளை நோய். எல்லா வயதினரும் இறக்கத் தொடங்கினர்."
ஓரளவு உணவு நிவாரணம் கிடைத்ததை பிஜோய்கிருஷ்ணா நினைவு கூர்ந்தார். ஆனால் அது போதுமானதாக இல்லை என்று அவர் கூறுகிறார்.
“எல்லோரும் அரைவயிறு உணவுடன் வாழ வேண்டியிருந்தது” என்கிறார் அவர். "சாப்பிட எதுவும் இல்லாததால் கிராமத்தில் பலர் இறந்தனர். உணவைத் தேடி மக்கள் கொள்ளையடிக்கத் தொடங்கினர்."
அவரது வீட்டின் வராண்டாவில் அமர்ந்தபடி அவர் சொல்வதை கேட்டுக்கொண்டிருந்தனர் அவரது குடும்பத்தின் நான்கு தலைமுறையினர். சைலேன் சர்க்காரும் அப்போது உடனிருந்தார். அவர் கடந்த சில ஆண்டுகளாக வங்காளத்தின் கிராமப்புறங்களில் பயணம் செய்து, பேரழிவை ஏற்படுத்திய பஞ்சத்தில் இருந்து தப்பியவர்களிடமிருந்து நேரடியாக விவரங்களை சேகரித்து வருகிறார்.

பட மூலாதாரம், Getty Images
மிகுந்த நட்பு பாவத்தோடும், இளமை துடிப்புடனும் இருக்கும் 72 வயதான அவர் முகத்தில் எப்போதும் புன்முறுவல் உள்ளது. பிஜோய்கிருஷ்ணா போன்றவர்கள் ஏன் அவரிடம் மனம் திறந்து பேசுகிறார்கள் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. கால் செருப்பு, முதுகில் தொங்கும் பை மற்றும் ரோல்-அப் சிகரெட்டுகளுடன் வானிலை எப்படி இருந்தாலும் அவர் கிராமப்புறங்களில் பயணம் செய்கிறார். மக்கள் சொல்லும் விவரங்களை பேனாவால் காகிதத்தில் குறித்துக்கொள்கிறார்.
குடும்ப புகைப்பட ஆல்பத்தின் காரணமாக தனக்கு வங்காளப் பஞ்சம் பற்றிய ’வெறி’ ஏற்பட்டதாக சைலேன் கூறுகிறார். அப்போது சிறிய பையனாக கல்கத்தாவில் (இப்போது கொல்கத்தா) இருந்த அவர், அந்த ஆல்பத்தில் எலும்பும் தோலுமாக காணப்பட்டவர்களின் புகைப்படங்களை பார்த்துக் கொண்டிருப்பார்.
பஞ்சத்தின் போது நிவாரணம் அளித்த உள்ளூர் இந்திய தொண்டு நிறுவனத்துடன் தொடர்புடைய அவரது தந்தை எடுத்த படங்கள் அவை. தனது தந்தை ஒரு ஏழை என்று சைலேன் கூறுகிறார். "என் குழந்தைப் பருவத்தில் அவர் கண்களில் பட்டினியின் பயங்கரத்தை நான் பார்த்தேன்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ஓய்வு பெற்ற ஆசிரியரான சைலேன் 2013 ஆம் ஆண்டு தனது தேடலைத் தொடங்கினார். மேதினப்பூரில் நடந்து கொண்டிருந்தபோது ஒரு 86 வயது முதியவருடன் பஞ்சம் பற்றிய உரையாடலில் அவர் ஈடுபட்டார்.

பிஜோய்கிருஷ்ணாவைப் போலவே ஸ்ரீபதிசரண் சமந்தாவும் பேரழிவை ஏற்படுத்திய சூறாவளியை நினைவு கூர்ந்தார். அந்த நேரத்தில் வாழ்க்கை நடத்துவது ஏற்கனவே கடினமாக இருந்தது. மேலும் அரிசியின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது.
1942 அக்டோபருக்குள் அவருக்கு தினசரி சிறிதளவு சாதத்துடன் ஒரு வேளை உணவு மட்டுமே சாப்பிடக் கிடைத்தது. அந்த நேரத்தில் புயல் தாக்கியது.
சூறாவளிக்குப் பிறகு அரிசியின் விலை கிடுகிடுவென உயர்ந்ததையும், மிச்சமிருந்த கொஞ்சநஞ்ச அரிசியையும் வியாபாரிகள் எந்த விலை கொடுத்தும் வாங்கினார்கள் என்பதையும் ஸ்ரீபதிசரண் நினைவு கூர்ந்தார்.
”விரைவில் எங்கள் கிராமத்தில் அரிசியே இருக்கவில்லை," என்று அவர் சைலேனிடம் கூறினார். "மக்கள் சிறிது காலம் வீட்டில் இருந்த கையிருப்பில் வாழ்ந்தனர். ஆனால் விரைவில் அரிசிக்காக தங்கள் நிலங்களை விற்கத் தொடங்கினர்."
புயலுக்குப் பிறகு அவரது வீட்டின் அரிசி இருப்பு சில நாட்கள் மட்டுமே நீடித்தது. பின்னர் அது தீர்ந்து போனது.
ஆயிரக்கணக்கான மக்களைப் போலவே, ஸ்ரீபதிசரணும் கிராமப்புறத்தை விட்டு நகரத்திற்கு இடம் பெயர்ந்தார். நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர் கல்கத்தா சென்றார். அவர் அதிர்ஷ்டசாலி. தங்குவதற்கு ஒரு உறவினர் வீடு இருந்தது. அவர் உயிர் பிழைத்தார். ஆனால் பலரும் இதுபோல அதிர்ஷ்டசாலிகள் இல்லை. தங்களுக்கு உதவி கிடைக்கும் என்று நம்பிவந்த பலரும், முன்பின் தெரியாத நகரத்தின் சாலையோரங்களிலும், குப்பைத் தொட்டிகளைச் சுற்றியும், நடைபாதைகளிலும் மயங்கி விழுந்து உயிரை விட்டனர்.

பட மூலாதாரம், SAILEN SARKAR
பிரிட்டிஷ் அரசு என்ன செய்தது?
பஞ்சத்திற்கான காரணங்கள் பல. அவை சிக்கலானவை. அவை குறித்து இப்போதும் பரவலாக விவாதிக்கப்படுகிறது.
இரண்டாம் உலகப்போர் கால கட்டமான 1942 ஆம் ஆண்டில் வங்காளத்தில் அரிசி சப்ளை பாதிக்கப்பட்டிருந்தது.
வங்காளத்தின் எல்லையில் இருந்த பர்மா மீது ஆண்டின் தொடக்கத்தில் ஜப்பான் படையெடுத்தது. அந்த நாட்டிலிருந்து அரிசி இறக்குமதி திடீரென நின்றுபோனது.
போர்க்கள பகுதிக்கு அருகில் தான் இருப்பதை வங்காளம் உணர்ந்தது. ஆயிரக்கணக்கான நேச நாட்டு வீரர்களும், போர்க்காலத் தொழில்களில் வேலை செய்த தொழிலாளர்களும் கல்கத்தாவில் முகாமிட்டனர். அதனால் அரிசியின் தேவை அதிகரித்தது. போர்க்கால விலைவாசி உயர்வு மக்களை தாக்கியது. ஏற்கனவே போராடிக் கொண்டிருந்த லட்சக்கணக்கான மக்களுக்கு அரிசி எட்டாக்கனியானது.
இதற்கிடையில் ஜப்பானியர்கள் கிழக்கு இந்தியாவை ஆக்கிரமிக்க முயற்சிப்பார்கள் என்ற பிரிட்டிஷ் அரசின் அச்சம் ஒரு "மறுப்பு" கொள்கையை அமலாக்க வைத்தது. வங்காள டெல்டா பகுதியில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து உபரி அரிசி மற்றும் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
முன்னேறி வர முயற்சிக்கும் எந்த ஒரு படைக்கும் உணவு விநியோகம் மற்றும் போக்குவரத்தை மறுப்பது இதன் நோக்கமாக இருந்தது. ஆனால் அது ஏற்கனவே பலவீனமாக இருந்த உள்ளூர் பொருளாதாரத்தை சீர்குலைத்தது. விலை மேலும் உயர இது வழிவகுத்தது. உணவு பாதுகாப்பிற்காக அரிசி பதுக்கி வைக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலும் லாபத்திற்காகவே இது செய்யப்பட்டது.
எல்லாவற்றிற்கும் மேலாக 1942 அக்டோபரில் வீசிய பேரழிவு சூறாவளி பெருமளவு நெற்பயிர்களை அழித்தது. எஞ்சியிருந்ததை பயிரை நோய் கொண்டுசென்றது.
இந்த மனிதாபிமானப் பேரழிவு குறித்து குறிப்பாக அதன் தீவிரத்தை அறிந்தபிறகு பல முனை போருக்கு நடுவில், நெருக்கடியைத் தணிக்கவும், இந்தியர்களுக்கு உதவவும் பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் போதுமான அளவு நடவடிக்கைகளை மேற்கொண்டாரா என்பது குறித்து நீண்ட காலமாகவே சூடான விவாதம் நடைபெற்று வருகிறது.
1943 ஆம் ஆண்டின் இறுதியில் புதிய வைஸ்ராய், ஃபீல்ட் மார்ஷல் லார்ட் வேவல் அவர்களின் வருகையுடன் நிவாரண முயற்சிகள் தொடங்கப்பட்டன. ஆனால் அதற்குள் பலர் இறந்துவிட்டனர்.

பட மூலாதாரம், Getty Images
'வாழும் ஆவண காப்பகம்'
காரணங்களைப் பற்றிய விவாதங்கள் மற்றும் இதற்கு யார் பொறுப்பு என்பது தொடர்பான விவாதங்கள் பெரும்பாலும் தப்பிப் பிழைத்தவர்களின் கதைகளை மறைத்து விடுகின்றன.
சைலேன் இப்போது 60க்கும் மேற்பட்ட நேரில் பார்த்த சாட்சிகள் தெரிவித்த விவரங்களை சேகரித்துள்ளார். தான் பேசியவர்களில் பலரும் படிக்காதவர்கள், பஞ்சத்தைப் பற்றி அரிதாகவே அவர்கள் பேசியுள்ளனர் என்றும் அவர்களது குடும்பத்தார் கூட அது பற்றி அவர்களிடம் கேட்டதில்லை என்றும் சைலேன் தெரிவிக்கிறார்.
உயிர் பிழைத்தவர்களின் விவரிப்பை சேகரிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஆவணக் காப்பகம் எதுவும் இல்லை. அவர்கள் சமூகத்தில் மிகவும் ஏழ்மையானவர்கள் மற்றும் மிகவும்
கீழ்நிலையில் இருப்பவர்கள் என்பதால் அவர்களின் கதைகள் கவனிக்கப்படவில்லை என்று சைலேன் கருதுகிறார்.
"அவர்கள் அனைவரும் காத்திருப்பது போல் உள்ளது. யாராவது தாங்கள் சொல்வதை கேட்க மாட்டார்களா என்று அவர்கள் காத்திருக்கின்றனர்," என்று அவர் கூறுகிறார்.
சைலேன் அவரை சந்தித்தபோது நிரதன் பெத்வாவுக்கு வயது 100. தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை காப்பாற்றுவதற்காக அனுபவித்த துயரங்களை அவர் விவரித்தார்.
"தாய்மார்களிடம் தாய்ப்பால் இல்லை. அவர்களின் உடல்கள் எலும்பு கூடாக மாறிவிட்டன. சதைப்பிடிப்பே இருக்கவில்லை," என்று அவர் கூறினார். "பிறக்கும்போதே பல குழந்தைகள் இறந்தன. அவர்களின் தாய்மார்களும் இறந்தனர். ஆரோக்கியமாக பிறந்தவர்கள் கூட இளம் பருவத்திலேயே பசியால் இறந்தனர். அந்த நேரத்தில் ஏராளமான பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர்."
தங்கள் கணவர்களால் உணவளிக்க முடியாத நிலை ஏற்பட்ட போது பல பெண்கள் மற்ற ஆண்களுடன் ஓடிப் போனதாகவும் அவர் சைலேனிடம் கூறினார். "அந்த நேரத்தில் சமூகம் இந்த விஷயங்களை அவதூறாக கருதவில்லை," என்று அவர் கூறினார். "வயிற்றுக்கு சோறு இல்லை. உணவளிக்க யாரும் இல்லை. அந்த நேரத்தில் எது சரி, எது தப்பு என்று யார் சொல்ல முடியும்,” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
பஞ்சத்தால் ஆதாயம் அடைந்தவர்களிடமும் சைலேன் பேசினார். "அரிசி மற்றும் பருப்பு அல்லது கொஞ்சம் பணத்திற்கு ஈடாக" பெருமளவு நிலம் வாங்கியதாக ஒருவர் ஒப்புக்கொண்டார். வாரிசு யாரும் இல்லாமல் ஒரு குடும்பத்தினர் அனைவருமே இறந்துவிட்டதாகவும், அதனால் அந்த நிலத்தை தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டதாகவும் அவர் சைலேனிடம் தெரிவித்தார்.
பஞ்சத்தில் பிழைத்தவர்களை சந்திப்பதற்காக ஒரு முறை சைலேனுடன் வங்காள-அமெரிக்க எழுத்தாளரான குஷனவா சௌத்ரி சென்றார்.

பட மூலாதாரம், KUSHANAVA CHOUDHURY
"நாங்கள் அவர்களைத் தேட வேண்டி இருக்கவில்லை. அவர்கள் ஒளிந்து கொண்டிருக்கவில்லை. அவர்கள் அனைவரின் பார்வைக்கும் முன்னால்தான் இருக்கின்றனர். மேற்கு வங்காளம் மற்றும் வங்கதேசம் முழுவதும் உள்ள கிராமங்களில் உலகின் மிகப்பெரிய ஆவண காப்பகமாக அவர்கள் இப்போதும் இருக்கின்றனர்," என்று அவர் கூறுகிறார்.
"யாரும் அவர்களுடன் பேச வேண்டும் என்று நினைக்கவில்லை. அது எனக்கு மிகுந்த வெட்கக்கேட்டை அளித்தது."
பஞ்சம் என்பது இந்தியத் திரைப்படங்கள், புகைப்படங்கள் மற்றும் ஓவியங்களில் நினைவுகூரப்பட்டது, ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது உயிர் பிழைத்தவர்களின் குரலில் அது அரிதாகவே நினைவுகூரப்பட்டது என்று குஷனாவா கூறுகிறார்.
1940 கள் என்பது இந்தியாவைப் பொறுத்தவரை "மரணத்தின் தசாப்தம்" என்பதால் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டவர்களின் தலைவிதி கவனிக்கப்படாமல் போயிருக்கக்கூடும் என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியை ஸ்ருதி கபிலா கூறினார்.
1946 இல் கல்கத்தாவில் பெருமளவு வகுப்புவாத கலவரங்கள் ஏற்பட்டன. இதில் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர்.
ஒரு வருடம் கழித்து நாட்டை, இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள இந்தியா என்றும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பாகிஸ்தான் என்று பிரித்த பிறகு ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு வெளியேறினர். சுதந்திரம் கிடைத்ததில் மகிழ்ச்சி இருந்தது. ஆனால் பிரிவினையின்போது ஏற்பட்ட இரத்தக்களறி அதிர்ச்சிகரமானதாக இருந்தது. பிரிவினையின்போது ஏற்பட்ட கலவரங்களில் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இறந்தனர். 1 கோடியே 20 லட்சம் பேர் புதிய எல்லையைக் கடந்தனர்.
வங்காளம், இந்தியாவிற்கும் கிழக்கு பாகிஸ்தானுக்கும் இடையில் பிரிக்கப்பட்டது. கிழக்கு பாகிஸ்தான் பின்னர் வங்கதேசமாக ஆனது.
”பெரும் எண்ணிக்கையில் மக்கள் மரணமடைந்த நிகழ்வுகளுக்கு நடுவே வங்காளப் பஞ்சம் தனக்கான இடத்தைக் கண்டுபிடிக்க போராடுகிறது என்று நான் நினைக்கிறேன்," என்று இந்த காலகட்டத்தைப் பற்றிப்பேசிய பேராசிரியர் கபிலா தெரிவித்தார்.

பட மூலாதாரம், SAILEN SARKAR
பஞ்சம் தாக்கி எண்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. எனவே இப்போதும் உயிருடன் இருப்பவர்கள் ஒரு சிலரே. அனங்கமோகன் தாஸ் என்ற ஒருவருடன் தான் பேசியதை சைலேன் நினைவு கூர்ந்தார். அனங்கமோகன் தாஸுக்கு அப்போது வயது 91. சைலேன் ஏன் அங்கு வந்துள்ளார் என்று தெரிந்துகொண்டபிறகு அவர் சிறிது நேரம் அமைதியாக இருந்தார். "ஏன் இவ்வளவு தாமதமாக வந்துள்ளீர்கள்?" என்று அவர் கேட்டபோது அவரது குழிந்த கன்னங்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.
ஆனால் சைலேன் சேகரித்த விவரங்கள் லட்சக்கணக்கானவர்களை பலிகொண்ட மற்றும் லட்சக்கணக்கானவர்களின் வாழ்க்கைப் பாதையை திசை திருப்பிய ஒரு நிகழ்வுக்கு மிகச்சிறிய சான்று மட்டுமே.
"நீங்கள் உங்கள் வரலாற்றை மறக்க நினைக்கும் போது, எல்லாவற்றையும் மறக்க விரும்புகிறீர்கள்" என்று அவர் கூறுகிறார். இது நடக்கக் கூடாது என்பதில் சைலேன் உறுதியாக இருக்கிறார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












