தமிழ்நாட்டில் கணவரை இழந்த பெண்கள் அதிகமாக இருப்பது ஏன்? செய்ய வேண்டியது என்ன?

விதவைகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தமிழ்நாடு அரசு வெளியிட்ட மாநில மகளிர் கொள்கை விதவைகள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்போவதாக தெரிவிக்கிறது.
    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

கணவரை இழந்த, ஆதரவற்றோர் விகிதம் தமிழ்நாட்டில் தேசிய சராசரியைவிட அதிகமாக இருப்பதாக சமீபத்தில் தமிழ்நாடு அரசு வெளியிட்ட மாநில மகளிர் கொள்கை குறிப்பிட்டுள்ளது. அவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்போவதாகவும் அந்தக் கொள்கை கூறுகிறது. தமிழ்நாட்டில் கணவரை இழந்த பெண்களின் விகிதம் அதிகமாக இருப்பது ஏன், செய்ய வேண்டியது என்ன?

தமிழ்நாட்டிற்கான மாநில மகளிர் கொள்கை ஒன்றை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிப்ரவரி 21ஆம் தேதியன்று வெளியிட்டார். தமிழ்நாட்டில் அனைத்துப் பெண்களுக்கும் சமூக நீதியை உறுதி செய்வது, அவர்கள் உரிமைகளைப் பெற்று, திறன்களை உணர்வு, பெண்கள் சம வாய்ப்புகளுடன் அமைதியான வாழ்க்கை வாழச்செய்வதை நோக்கமாகக் கொண்டு இந்த கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்த பத்தாண்டுகளுக்கு என சில குறிக்கோள்களை இந்த கொள்கை முன்வைத்திருக்கிறது. பள்ளிக்கூடங்களில் பெண்களின் இடைநிற்றலை குறைத்தல், வளரிளம் பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், வேலை வாய்ப்பில் மகளிரின் பங்களிப்பை அதிகரித்தல், எல்லாப் பணியிடங்களிலும் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதிசெய்வது, டிஜிட்டல் பாலின இடைவெளியைக் குறைத்தல், கடன் வசதிகளை ஏற்பாடு செய்தல், மகளிரை அரசியல் களத்தில் பங்கேற்க ஊக்குவித்தல் ஆகியவையே அந்த இலக்குகளாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

இந்தக் கொள்கை எல்லா மகளிருக்கும் பொருந்தும் என்றாலும் அதன்படி, தனியாக வாழும் பெண்கள், கணவனை இழந்த ஆதரவற்றோர், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள், பாதிக்கப்படக்கூடிய தொழில்களைச் செய்பவர்கள், மாற்றுத் திறனாளிகள், வயது முதிர்ந்தோர் உள்ளிட்ட சில பிரிவினருக்கு சிறப்பு கவனம் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் பல முக்கியப் புள்ளிவிவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இந்தியாவில் 5.6 கோடி கணவரை இழந்த பெண்கள் உள்ளனர் என்றும் இது மொத்த மக்கள் தொகையில் 4.6 சதவீதம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், கேரளா மற்றும் தமிழ்நாட்டில் தேசிய சராசரியைவிட அதிகமாக கணவரை இழந்த பெண்கள் உள்ளனர்.

கணவரை இழந்த பெண்கள்

பட மூலாதாரம், M.K.STALIN / X

படக்குறிப்பு, முதலமைச்சர் முக.ஸ்டாலின்

தேசிய சராசரியை விட அதிகம்

கேரளாவில் 6.7 சதவீதமும் தமிழ்நாட்டில் 6.4 சதவீதமும் கணவரை இழந்த பெண்கள் உள்ளனர். ஆண்களைவிட பெண்கள் அதிக காலம் உயிர்வாழ்வதால் கணிசமான முதியோரைக் கொண்ட மாநிலங்களில் கணவரை இழந்த பெண்கள் எண்ணிக்கை அதிகம் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்தப் பெண்களுக்கு என சிறப்புக் கவனமும் முன்னுரிமையும் அளிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது.

அமைப்புகள் என்ன சொல்கின்றன?

தமிழ்நாட்டில் கணவரை இழந்த பெண்களுக்கென பல அமைப்புகள் பணியாற்றி வருகின்றன. சமூகத்தில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ள இவர்களுக்கு என செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது என்கிறார்கள் இவர்கள்.

"கணவரை இழந்த பெண்களின் பிரச்சனை என்பது மிக முக்கியமானது. எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் இந்தியாவில் உத்தரப்பிரதேசத்தில்தான் கணவரை இழந்த பெண்கள் அதிகம். ஆனால், சதவீத அடிப்படையில் கேரளா, தமிழ்நாட்டில் அதிகமாக இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வேலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது" என்கிறார் கணவரை இழந்த பெண்களுக்கென பணியாற்றும் கலங்கரை அமைப்பின் இயக்குநரான குழந்தைச்சாமி.

கணவரை இழந்த பெண்கள் அதிகம் இருப்பதற்குப் பல காரணங்கள் குறிப்பிடப்படுகின்றன. மதுப் பழக்கம், விபத்துகள், தற்கொலை, திருமணம் நடக்கும்போது பெண்ணைவிட ஆணின் வயது அதிகமாக இருப்பது ஆகியவற்றால் மனைவிக்கு முன்பாகவே கணவர்கள் உயிரிழப்பது நடக்கிறது.

விதவை

பட மூலாதாரம், Getty Images

இந்த பெண்கள் கணவரை இழந்ததில் இருந்து பிரச்சனைகள் துவங்குகின்றன.

"கணவரை இழந்த பிறகு இந்தப் பெண்களுக்கு நடக்கும் சடங்குகள் மிகக் கொடுமையானவை. அதற்குப் பிறகு எல்லா மங்கல நிகழ்வுகளில் இருந்தும் அவர்கள் ஒதுக்கிவைக்கப்படுகிறார்கள். இதனால், பல பெண்கள் கணவரை இழந்துவிட்டால் வாழ்க்கையையே இழந்துவிட்டதாக நினைக்கிறார்கள். இவர்கள் தங்களுக்கு என ஒரு மறுவாழ்வை ஏற்படுத்திக்கொள்வதில் மிகப் பெரிய பிரச்சனைகள் இருக்கின்றன" என்கிறார் தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தின் உறுப்பினரும் கல்வியாளருமான கல்யாணந்தி.

இதில் முக்கியப் பிரச்சனையாக இருப்பது மறுமணம். "கணவரை இழந்தவர்களில் சிலர் அப்படியே வாழ்ந்து முடித்துவிட நினைப்பார்கள். ஆனால், பல பெண்கள் பல்வேறு கட்டாயங்களின் காரணமாக அப்படி வாழ நிர்பந்திக்கப்படுகிறார்கள். ஜாதி வழக்கம், குடும்பப் பாரம்பரியம் இதில் முக்கியக் காரணமாக இருக்கும். குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னொரு திருமணத்தை எதிர்கொள்ள பயந்து, திருமணம் செய்யாமல் இருப்பார்கள். அதேபோல, கணவரின் குடும்பத்தை சார்ந்து இருப்பவர்களால் மறுமணம் செய்ய முடியாது. கணவர் வழியில் வர வேண்டிய சொத்துகள், தன் குழந்தைகளுக்கு வர வேண்டும் என்பதற்காகவும் மறுமணம் செய்யாமல் வாழ வேண்டியிருக்கும். இதில் படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசமே கிடையாது" என்கிறார் கல்யாணந்தி.

கணவனை இழந்த பெண்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவிலேயே முதல் முறையாக கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் நல வாரியம், தமிழ்நாடு அரசால் 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி அமைக்கப்பட்டது.

தமிழ்நாட்டின் முன்னோடி திட்டங்கள்

தமிழ்நாட்டில் கணவரை இழந்த பெண்களுக்கு என இந்தியாவிலேயே முதல் முறையாக கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் நல வாரியம், தமிழ்நாடு அரசால் 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி அமைக்கப்பட்டது. இதன் தலைவராக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரே இருந்துவருகிறார்.

"கணவரை இழந்த பெண்கள் தொடர்பாக ஒரு மாற்றுக் கலாச்சார சிந்தனையை உருவாக்க வேண்டும். கணவரை இழந்த பிறகு பூவைக்கவோ, பொட்டு வைக்கவோ கூடாது என்ற சிந்தனையை மாற்ற வேண்டும். அவர்கள் மறுமணம் செய்ய விரும்பினாலும், சமூகக் கட்டாயங்கள் அதற்கு அனுமதிப்பதில்லை. இந்தப் பெண்களுக்கு வங்கிக் கடன்களில் முன்னுரிமை தரலாம். தவிர, தமிழ்நாடு கட்டடத் தொழிலாளர் நல வாரியத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளை இவர்களுக்கும் அளிக்க வேண்டும். வீடு கட்டும் திட்டத்தில் இவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டால், கூடுதலான உதவித் தொகையை அளிக்க வேண்டும். கழிப்பறைகள் வீட்டிற்குள்ளேயே இருப்பதுபோன்ற ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்" என்கிறார் குழந்தைச்சாமி.

கணவரை இழந்த பெண்களின் நலனில் சமூகத்தின் நலனும் அடங்கியிருக்கிறது என்கிறார் கல்யாணந்தி. "தமிழ்நாட்டில் கணவரை இழந்த பெண்கள் போட்டித் தேர்வில் பங்கேற்கும்போது அவர்களுக்கு என இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. அதனை அவர்கள் பயன்படுத்தலாம். அதற்கு சமூகத்தின் தூண்டுதல் மிக முக்கியமானது. மேலும், ஒற்றைப் பெற்றோராக குழந்தையை வளர்ப்பது மிகக் கடினம். அந்தக் குழந்தைகள் சட்டமீறல்களில் ஈடுபடும் வாய்ப்பும் அதிகமாக இருக்கிறது. ஆகவே, கணவரை இழந்த பெண்களின் நலன் மேம்படும்போது சமூகத்தின் நலனும் மேம்படுகிறது" என்கிறார் அவர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)