இலங்கை மனிதப் புதைகுழி போர் நடைபெற்ற காலத்தை சேர்ந்தது – அறிக்கை கூறும் புதிய தகவல்

இலங்கை மனித புதைகுழி விவகாரம்
    • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

இலங்கையில் கடந்த ஆண்டு ஜுன் மாதம் முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் பகுதியில் ஒரு மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது. இது பல சர்ச்சைகளைக் கிளப்பி வந்தது. இந்நிலையில், அங்கு கிடைத்த பொருட்களை ஆராய்ந்து தொல்பொருள் அதிகாரிகள் ஓர் அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளனர். இதில் அப்புதைகுழி 1990களில் போர் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற அறிக்கை வெளிவருவது இதுவே முதல் முறையாகும்.

இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளாக, இருபதுக்கும் அதிகமான மனித புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி சமீபத்தில் அடையாளம் காணப்பட்டது.

இலங்கையில் 56 மனித புதைகுழிகள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற நிலையில், இதுவரை 21 மனித புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழி தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்த பின்னணியில், முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இந்த மனிதப் புதைகுழியின் காலப்பகுதி தொடர்பான அறிக்கையொன்றை தொல்பொருள் அதிகாரிகள் சமர்ப்பித்துள்ளனர்.

இந்த அறிக்கை இப்புதைகுழியின் காலப்பகுதி இலங்கையில் உள்நாட்டுப் போர் நடைபெற்ற காலப்பகுதியுடன் ஒத்துப் போகின்றதாகச் சொல்கிறது.

இலங்கை மனித புதைகுழி விவகாரம்

குடிநீர் குழாய் பதிக்கும்போது வெளிவந்த புதைகுழி

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி கடந்த ஆண்டு ஜுன் மாதம் 29-ஆம் தேதி அடையாளம் காணப்பட்டது.

கொக்குத்தொடுவாய் பகுதியில் குழாய் நீர் பொருத்தும் நடவடிக்கைகளுக்காக மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது இந்த மனித புதைகுழி அடையாளம் காணப்பட்டது.

கொக்குத்தொடுவாய் - முல்லைத்தீவு பிரதான வீதியோரத்தில் இந்த மனித புதைகுழி அடையாளம் காணப்பட்டது.

குழாய் நீர் பொருத்தும் நடவடிக்கைகளுக்காக வீதியோரத்தில் அகழ்ந்த சந்தர்ப்பத்தில் மனித எச்சங்கள் மற்றும் பெண்களின் உள்ளாடைகள் சில அடையாளம் காணப்பட்டன.

இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு அறிவிக்கப்பட்டதை நிலையில், குறித்த அகழ்வு பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

அதையடுத்து, நீதவான் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, ஜுலை மாதம் 6-ஆம் தேதி நீதவான் முன்னிலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இலங்கை மனித புதைகுழி விவகாரம்

பட மூலாதாரம், JDS,FOD, CHRD, ITJP

40 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

குறித்த பகுதியில் மனித புதைகுழி காணப்படுகின்றதா என்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு, புதைகுழி இருப்பதை நீதவான் உறுதிப்படுத்தினார்.

அதையடுத்து, இந்த சம்பவம் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஆராயப்பட்டு, அகழ்வு பணிகளை முன்னெடுக்க நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த நிலையில், முதல் கட்ட அகழ்வுப் பணிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 6-ஆம் தேதி நடாத்தப்பட்டது.

இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் ஊடாக 40 மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மனித புதைகுழி விவகாரம்
படக்குறிப்பு, மன்னார் மனித புதைக்குழி தொடர்பாக அமெரிக்காவில் கார்பன் ஆய்வு செய்யப்பட்ட போது

புதைகுழியின் காலகட்டம் என்ன?

கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழி தொடர்பான இடைகால அறிக்கையை, தொல்லியல்துறை சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நேற்றைய தினம் சமர்ப்பித்திருந்தார்.

இந்த இடைகால அறிக்கையின் பிரகாரம், குறித்த மனித புதைக்குழி 1994-ஆம் ஆண்டுக்கு முற்படாததும், 1996-ஆம் ஆண்டுக்கு பிற்படாததுமான காலப்பகுதியை கொண்டிருக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளதாக வழக்குரைஞர் கே.வி.நிறஞ்சன் தெரிவிக்கின்றார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழி வழக்கு மீதான விசாரணைகள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் நேற்றைய தினம் (வியாழன், பிப்ரவரி 22) எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாகவும் அவர் கூறுகின்றார்.

''ஏற்கனவே அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித எச்சங்களிலிருந்தும், பிறிதான எடுக்கப்பட்ட பிற பொருட்கள் தொடர்பான அறிக்கை பேராசிரியர் ராஜ் சோமதேவ அவர்களினால் இன்று நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதன் அடிப்படையில், நீதவான் பிரதீபனினால் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அதற்கமைவாக எடுக்கப்பட்ட பொருட்களின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்யப்பட்ட போது, இது 1994-ஆம் ஆண்டுக்கு முற்படாததும், 1996-ஆம் ஆண்டுக்கு பிற்படாததுமான காலப்பகுதியை கொண்டிருக்கலாம் என்று பல பக்க அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன,” என்கிறார் அவர்.

இலங்கை மனித புதைகுழி விவகாரம்
படக்குறிப்பு, கே.வி.நிறஞ்சன்

புதைகுழியில் கிடைத்த பொருட்கள் என்ன?

மேலும் பேசிய அவர், “அதனடிப்படையில், இது இடைக்கால அறிக்கையாக பார்க்கப்படுகின்றது. அத்துடன், எஞ்சிய மனித எச்சங்களை அகழ்ந்து எடுப்பதற்கான அநேகமாக மார்ச் மாதம் 4-ஆம் தேதி தொடங்க இருக்கின்றது. அதற்கான பண உதவிகள் அமைச்சகத்தினால் வழங்கப்படும் பட்சத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது," என வழக்குரைஞர் கே.வி.நிறஞ்சன் தெரிவிக்கின்றார்.

இந்த மனித புதைக்குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்களின் வயது, அதன் பால் மற்றும் இறப்புக்கான காரணம் போன்ற அறிக்கைகள் இன்னும் வெளிவராது நிலுவையில் உள்ளதாக வழக்கறிஞர் கே.வி.நிறஞ்சன் மேலும் குறிப்பிடுகின்றார்.

''மனித எலும்புகள் தொடர்பாக இந்த அறிக்கை வெளிவரவில்லை. புதைக்குழியிலிருந்து எடுக்கப்பட்ட வேறு பொருட்கள் தொடர்பாகவே அறிக்கை வெளிவந்துள்ளது. இனிப்பு பண்டங்களின் கடதாசிகள், துப்பாக்கி தோட்டாக்கள், ஆடைகள் உள்ளிட்ட பொருட்களின் அடிப்படையிலேயே இந்த காலப்பகுதிக்குள் இருக்கலாம் என்று பேராசிரியர் ராஜ் சோமதேவ இந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.

"முழுமையான அறிக்கை இதுவரை கிடைக்கவில்லை. நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்ட அறிக்கையில் இது மாத்திரமே சொல்லப்பட்டுள்ளது. அறிக்கையை பெற்றுக்கொள்ள நாம் அனுமதித்துள்ளோம். ஓரிரு தினங்களில் முழமையான அறிக்கை கிடைக்கவாய்ப்புள்ளது," என வழக்குரைஞர் கே.வி.நிறஞ்சன் பிபிசி தமிழுக்கு கூறினார்.

இலங்கை மனித புதைகுழி விவகாரம்

‘யுத்தகாலத்து புதைகுழியாக இருக்கலாம்’

பிபிசி தமிழிடம் பேசிய முல்லைத்தீவு சட்ட மருத்துவ அதிகாரி கனகசபாபதி வாசுதேவ, "இந்த மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டன. அப்போது அகழ்வாய்வு பணிகளில் ஈடுபட்ட தொல்பொருளியியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ அவர்களின் இடைகால அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது,” என்றார்.

"இடைக்கால அறிக்கையின் படி தொல்பொருளியியல் குழுவினரால் 40 சடலங்கள் ஆராயப்பட்டுள்ளன. அவர்களின் முடிவுகளின் பிரகாரம், இந்த சடலங்கள் சமய ஆச்சார முறைப்படி அல்லாமல் மிக விரைவாக இந்த சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளன.

"அத்துடன், இந்த சடலங்கள் 94-ஆம் ஆண்டுக்கும், 96-ஆம் ஆண்டு காலப்பகுதிக்கும் இடையில் நடைபெற்ற யுத்தத்தினால் இறந்தபோது புதைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகின்றது," என கனகசபாபதி வாசுதேவ தெரிவிக்கின்றார்.

இலங்கை மனித புதைகுழி விவகாரம்
படக்குறிப்பு, கனகசபாபதி வாசுதேவ

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்க முல்லைத்தீவு நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாகவும் சட்ட மருத்துவ அதிகாரி கனகசபாபதி வாசுதேவ குறிப்பிடுகின்றார்.

எனினும், இந்த மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு இதுவரை நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படவில்லை என அவர் கூறுகின்றார்.

இந்த விடயம் தொடர்பாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர், நீதி அமைச்சகத்தின் செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

இந்த நிதியுதவி கிடைக்கும் பட்சத்தில், கொக்குத்தொடுவாய் அகழ்வு பணிகளை மார்ச் மாதம் முதல் வாரத்தில் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் சட்ட மருத்துவ அதிகாரி கனகசபாபதி வாசுதேவ குறிப்பிடுகின்றார்.

இந்த வழக்கு மீதான விசாரணைகள் எதிர்வரும் மார்ச் மாதம் 4-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

1800-களைச் சேர்ந்த புதைகுழி என்பது சரியா?

இலங்கை மனித புதைகுழி விவகாரம்

பிபிசி தமிழிடம் பேசிய ‘காணாமல் போனோர் குடும்பங்கள் ஒன்றிய’த்தின் தலைவர் பிரிட்டோ பெர்ணான்டோ, "நாம் அகழ்ந்த அனைத்து மனித புதைகுழிகளிலும், உதாரணமாக மாத்தளை, மன்னார் உள்ளிட்ட மனித புதைக்குழிகள் தொடர்பாக கிடைக்கப் பெற்ற அறிக்கையின் பிரகாரம், இந்த மனித புதைகுழிகள் 1800-களில் இடம்பெற்ற கிளர்ச்சிகள் என்றே இறுதி பெறுபேறாக அமைந்தது," என்றார்.

"ஆனால், அதனை நாம் நம்ப போவதில்லை. எனினும், சட்டத்திற்கு முன்பாக அதனை சவாலுக்கு உட்படுத்தும் போது, அது தொடர்பான விஞ்ஞான ரீதியான சாட்சியங்கள் எப்படி வெளிவரும் என கூற முடியாது. எனினும், நீதிமன்றங்கள் விஞ்ஞான ரீதியான அறிக்கைகளையே ஏற்றுக்கொள்கின்றன," என்றார்.

"குறிப்பாக, மாத்தளை மனித புதைகுழி தொடர்பாக கிடைக்கப் பெற்ற கார்பன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது ஒன்று. இலங்கை நிபுணர்கள் கூறியது வேறொன்று. அதேபோன்றே, கொக்குத்தொடுவாய் தொடர்பாக உள்ளுர் நிபுணர்கள் என்ன கூறினாலும், சர்வதேச ரீதியில் வேறொரு கருத்து வரக்கூடும்," என்றார்.

மேலும், "ஆட்சியிலுள்ள அரசாங்கங்களுக்கு நியாயமான அரசியல் தேவை இல்லையென்றால், இந்த சம்பவங்கள் தொடர்பான உண்மைளை வெளிக்கொணர்வதற்கு எந்தவொரு உடலையும் பழைய உடலாக மாற்ற முடியும்," என்றார்.

இலங்கை மனித புதைகுழி விவகாரம்

பட மூலாதாரம், BRITO FERNANDO

படக்குறிப்பு, பிரிட்டோ பெர்ணான்டோ

மேலும் பேசிய பிரிட்டோ பெர்ணான்டோ, "இந்த விடயத்திற்கு இன்றும் நாங்கள் நிர்கதி நிலையில் உள்ளோம். மக்கள் கருத்துக் கணிப்பொன்றை ஏற்படுத்தி, அதனை சரியான முறையில் செய்வதற்கு நாங்கள் இன்றும் நிர்கதியாகியுள்ளோம். இவ்வாறு கூறப்படுகின்ற கருத்தை எம்மால் நம்ப முடியாதுள்ளது. ஏனென்றால், பழைய அனுபவங்களின் ஊடாக கூறுகின்றேன். இந்த கருத்தை நம்ப முடியாது," என்று பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

போர் நடைபெற்ற பகுதியொன்றிலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித புதைகுழி, போர் இடம்பெற்ற காலப் பகுதிக்கு உரித்துடையது என்ற நிலைப்பாட்டை பிரதிபலிக்கும் வகையிலான உள்நாட்டு நிபுணர்களினால் வெளியிடப்பட்ட முதலாவது அறிக்கையாக இது அமைந்துள்ளது என அவர் கூறுகின்றார்.

''காணாமல் போன மக்களின் அறிக்கையொன்றை வழங்குமாறு வவுனியா நீதிமன்றம் ராணுவத்திற்கு உத்தரவு பிறப்பிக்கின்றது. ஆனால், ராணுவம் இன்றும் அதனை வழங்கவில்லை. குறித்த அறிக்கைகளை நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்குமாறு காணாமல் போனோர் அலுவலகம் பல கடிதங்களை அனுப்புகின்றது. அதனை கருத்தில் கொள்ளவில்லை.

"அவ்வாறான நாடொன்றிலேயே நாம் வாழ்ந்து வருகின்றோம். எந்த அறிக்கைகளை வழங்கினாலும், அரசாங்கத்தின் அரசியல் தேவைகளுக்கு இதனை கீழ்படிய வைக்க முடியும். அதனால், இது போர் நடைபெற்ற காலப்பகுதிக்கு சொந்தமானது என ராஜ் சோமதேவ அவர்கள் கூறுகின்றார்கள் என்றால், அந்த காலப் பகுதியில் அந்த பகுதியை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது என்றால், இனி வேறு என்ன சாட்சி தேவைப்படுகின்றது.

"எனினும், நீதிமன்றத்தில் அதனை உறுதிப்படுத்த முயற்சித்தால், அதனை எம்மால் உறுதிப்படுத்த முடியாது போகும்," என அவர் மேலும் குறிப்பிடுகின்றார்.

பாதுகாப்பு அமைச்சகத்தின் பதில்

இலங்கை மனித புதைகுழி விவகாரம்

பட மூலாதாரம், MOD, Sri Lanka

படக்குறிப்பு, நலின் ஹேரத்

பேராசிரியர் ராஜ் சோமதேவவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட காலப்பகுதியானது, குறித்த மனித புதைக்குழி காணப்பட்ட கொக்குத்தொடுவாய் நிலப்பரப்பு முழுமையாக ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததாக அந்த பிரதேச மக்கள் மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், இது குறித்து பிபிசி தமிழ் இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பியது.

''இந்த சம்பவம் தொடர்பிலான தகவல்களை ஆராய்ந்து, பதிலை பின்னர் கூறுகின்றேன்," என, பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் கேணல் நலின் ஹேரத், பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சகத்தின் பதில் கிடைத்ததும் இச்செய்தியில் பதிவு செய்யப்படும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)