சுங்கவரி விலக்கு ரத்து: டிரம்ப் முடிவால் அமெரிக்காவில் சாமானியருக்கு என்ன பாதிப்பு?

டி மினிமிஸ் ரத்து, அமெரிக்கா, டிரம்ப், சீனா, இந்தியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரூ.70,553-க்கு குறைவான மதிப்புள்ள இறக்குமதி பொருட்களுக்கு இனி சுங்கவரி விலக்கு கிடையாது.
    • எழுதியவர், ஆஸ்மண்ட் சியா & லாரா பிளேசி
    • பதவி, பிபிசி

அமெரிக்காவில் நீண்ட காலமாக இருந்து வந்த உலகளாவிய சுங்கவரி விலக்கு நிறுத்தப்பட்டுள்ளது. இது குறைந்த விலைக்கு பொருட்களை வாங்கும் அமெரிக்க மக்களுக்கு பெரிதும் பயனளித்து வந்தது.

நேற்று முதல் (வெள்ளிக்கிழமை) $800 (சுமார் ரூ.70,553) அல்லது அதற்கும் குறைவான மதிப்புள்ள இறக்குமதி பொருட்களுக்கு இனி சுங்கவரி விலக்கு கிடையாது. அதற்கு பதிலாக இனி சுங்கச் சோதனைகள் கடுமையாக இருக்கும். இதனால் நாள்தோறும் கோடிக்கணக்கான டாலர் மதிப்புள்ள சரக்குகள் தேக்கமடையும்.

கடந்த ஆண்டு மட்டும், சுமார் $64 பில்லியனுக்கு (சுமார் ரூ.8,000 கோடி ) அதிகமான மதிப்புடைய சுமார் 1.4 பில்லியன் பார்சல்கள், டி மினிமிஸ் (de minimis) என்ற விதியின் கீழ் சுங்கவரி இல்லாமல் அமெரிக்காவிற்குள் நுழைந்ததாக அமெரிக்க சுங்கத்துறை தெரிவித்தது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கொண்டு வந்த இந்த மாற்றம், சிறு தொழில்களை கடுமையாக பாதிக்கும் என்றும் நுகர்வோர் அதிக விலை மற்றும் குறைவான தேர்வுகளையே எதிர்பார்க்க முடியும் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர். நிலைமை சீராகும் வரை இதுவே தொடரும் என்கின்றனர்.

"நான் இப்போது ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருக்கிறேன். ஆனால் இரண்டு, மூன்று வாரங்களுக்கு முன்பு இந்தச் செய்தியை முதலில் கேட்டபோது, என் தொழில் முடிந்துவிடும் என்றே நினைத்தேன்." என்கிறார் பியூனஸ் அயர்ஸைத் தலைமையிடமாகக் கொண்ட Zou Xou என்ற காலணி தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனர் கேத்தரின் தியோபால்ட்ஸ்.

டி மினிமிஸ் என்றால் என்ன?

டி மினிமிஸ் ரத்து, அமெரிக்கா, டிரம்ப், சீனா, இந்தியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டி மினிமிஸ் என்பது ஓர் லத்தீன் வார்த்தை.

டி மினிமிஸ் என்பது ஒரு லத்தீன் வார்த்தை. இதற்கு 'மிகச் சிறிய விஷயங்களைப் பற்றியது' என பொருள். இது பெரும்பாலும் சட்ட ரீதியாக கவனத்தில் கொள்ளப்படாத விஷயங்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

இந்த டி மினிமிஸ் விலக்கு 1938ஆம் ஆண்டு அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது. சிறிய அளவில் சுங்கவரி வசூலிக்கச் செய்யும் செலவைத் தவிர்க்கும் நோக்கத்துடன் இது கொண்டு வரப்பட்டது.

சில ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விதியின் உச்சவரம்பு உயர்த்தப்பட்டது. இது அமெரிக்காவுக்கு சிறிய பார்சல்கள் அனுப்பும் மின் வணிக நிறுவனங்களும், உலகளாவிய சில்லறை விற்பனையாளர்களும் வளர்ச்சி அடைய வழிவகை செய்தது.

இந்த விலக்கு பெரும்பாலும் சீன மின் வணிக நிறுவனங்களான ஷெயின் (Shein) மற்றும் டெமு (Temu) உடன் தொடர்புடையதாகவே இருந்தது. இந்நிறுவனங்கள் சேமிப்பு கிடங்குகளோ கூடுதல் செலவுகளோ இல்லாமல், உற்பத்தி நிலையிலிருந்தே மலிவான பொருட்களை நேரடியாக அமெரிக்காவுக்கு வேகமாக அனுப்புவதில் முன்னோடியாக திகழ்ந்தன.

ஆனால் ஷெயின் மற்றும் டெமு இந்த முறையை முன்னெடுத்தாலும், பல்வேறு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள் தங்களின் விநியோக சங்கிலி மற்றும் விற்பனை மாடல்களில் இந்த விதியில் இருந்த பிழையை பயன்படுத்திக்கொண்டன.

அமெரிக்காவைச் சேர்ந்த ஃபேஷன் பிராண்டான கோச்(Coach)-ன் தலைமை நிறுவனமான டேபஸ்ட்ரி (Tapestry) நிர்வாகிகள், சுமார் $200 முதல் $1,000 வரை லெதர் பைகளை விற்பனை செய்பவர்கள்.

இந்த சுங்க கொள்கைகளின் மாற்றத்தால் தங்கள் லாபத்தில் $160 மில்லியன் இழப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கணிக்கிறார்கள். அதில் மூன்றில் ஒரு பங்கு டி மினிமிஸ் விதி நீக்கப்பட்டதே காரணம் என்றும் தெரிவிக்கின்றனர்.

சமீபத்தில் தனது மேம்படுத்தப்பட்ட விளம்பரத்தால் ஜென் ஸீ (GEN Z) மத்தியிலும் தனது பொருட்களை விரிவாக்கம் செய்துள்ளது கோச் நிறுவனம்.

ஷாப்பர்ஸ் மற்றும் டேபஸ்ட்ரி நிறுவனங்கள் அந்த வேகம் சுங்கச் சுமையை ஒரு அளவுக்கு சமநிலைப்படுத்தும் என நம்புகின்றன. இருப்பினும் இந்த டி மினிமிஸ் விதி நீக்கம் விநியோகத்தில் சவாலாகவே உள்ளது.

இந்த விலக்கின் கீழ் வந்த பொருட்கள், நாட்டில் நுழைந்த மொத்த சரக்குகளில் 90%க்கும் அதிகமானவை என அமெரிக்க சுங்கத் துறை தகவல் தெரிவிக்கிறது.

டி மினிமிஸ் ரத்து, அமெரிக்கா, டிரம்ப், சீனா, இந்தியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, GEN Z மத்தியிலும் தனது பொருட்களை விரிவாக்கம் செய்துள்ளது கோச் நிறுவனம்.

இந்த கொள்கை அமெரிக்க தொழில்களுக்கு தீங்கு விளைவிக்கிறது என்றும், ஃபெண்டனில் (fentanyl) போன்ற போதைப்பொருள்கள் உட்பட சட்டவிரோதமான பொருட்களை கடத்துவதற்கு இது தவறாக பயன்படுத்தப்படலாம் எனவும் அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன் விமர்சித்துள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களுடன் தொலைபேசியில் பேசிய டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவாரோ, "போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களின் உயிர்களை காப்பாற்றப்படும். இது அமெரிக்க அரசுக்கு ஆண்டுதோறும் $10 பில்லியன் வருவாய் சேர்க்கும்" என தெரிவித்தார்.

2027-ல் காலாவதியாக இருந்த டி மினிமிஸ் விதியின் முடிவை நிர்வாக ஆணையின் மூலம் இந்த ஆண்டே துரிதப்படுத்தியுள்ளார் அதிபர் டிரம்ப்.

உரிய ஆவணங்களுடன், கப்பல் நிறுவனங்கள், நாட்டின் சுங்கவரி விகிதத்தின்படி கட்டணம் செலுத்த வேண்டும். இல்லையெனில், ஒரு பார்சலுக்கு $80 முதல் $200 வரை நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்தலாம் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இந்த 2வது ஆப்ஷன் தபால் சேவைகள் மாற்றத்திற்குத் தயாராகும் நேரத்தை வழங்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், இது 6 மாதங்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

இந்த ஆண்டு மே மாதத்தில், சீனாவும் ஹாங்காங்கும் முதலில் டி மினிமிஸ் விதியிலிருந்து நீக்கப்பட்டன. இதையடுத்து டெமு நிறுவனம் அமெரிக்காவுக்கான நேரடி விற்பனையை நிறுத்தியது.

$100-க்கும் குறைவான மதிப்புள்ள கடிதங்கள் மற்றும் தனிப்பட்ட பரிசுகள் இன்னும் சுங்கவரி விலக்குடன் அனுப்பப்படுகிறது.

குறைவான தேர்வுகள், அதிக காத்திருப்பு

டி மினிமிஸ் ரத்து, அமெரிக்கா, டிரம்ப், சீனா, இந்தியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நுகர்வோருக்கு குறைவான தேர்வுகளே கிடைக்கும்.

அமெரிக்காவில் உள்ள நுகர்வோருக்கு கடைகள் மற்றும் வணிக தளங்களில் குறைவான தேர்வுகளே (variety) கிடைக்கும். தொழில்கள் சுங்க ஆவணங்களுக்கு ஏற்றாற்போல மாற வேண்டியுள்ளதால் இப்படி நிகழும் என வர்த்தக நிபுணர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

சிறு நிறுவனங்கள் தங்களைச் தகவமைத்துக்கொள்ள நேரம் எடுக்கும், ஏனெனில் இவை இந்நாள்வரை இத்தகைய ஆவணப் பணிகளில் இருந்து விலக்கு பெற்றிருந்தன என தென்கிழக்கு ஆசியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதிகளை நிர்வகிக்கும் கோல் சொல்யூஷன் (GOL Solution) எனும் லாஜிஸ்டிக்ஸ் நிர்வாக நிறுவனத்தைச் சேர்ந்த டாம் நுயென் கூறினார்.

"ஒரு தயாரிப்பில் உள்ள அனைத்து மூலப்பொருட்களும் எந்த நாடுகளில் இருந்து வருகின்றன என்பதை குறிப்பிட வேண்டியிருக்கும், அவை பல்வேறு வரி விகிதங்களைக் கொண்ட பல நாடுகளில் இருந்து வரக்கூடும். இது நிச்சயமாக சரக்கு அனுப்புவதை மந்தமாக்கும்" என்றார்.

இந்த சிக்கலான நடைமுறைகள், விற்பனையாளர்கள் விரிவான பொருட்களை ஏற்றுமதி செய்ய முன்வருவதைத் தடுக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

இது குறிப்பாக சில குறுகிய (niche) சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

போர்ட்லாந்தைத் தலைமையிடமாகக் கொண்ட 53 வயதான உளவியலாளர் கிரிஸ்டோஃபர் லுண்டெல். அவர் பொழுதுபோக்காக டிஜே வேலை செய்துவருகிறார். அவர் ஒரு தீவிர வினைல் ரெக்கார்டு சேகரிப்பாளர். சமீபத்தில், இங்கிலாந்தில் உள்ள ஒருவரிடமிருந்து $5 மதிப்புள்ள அரிய பிளேட் ஒன்றை வாங்க முயன்றபோது, டி மினிமிஸ் விலக்கு நிறுத்தப்பட்டிருப்பதை அறிந்தார்.

"அவர் என் ஆர்டரை ரத்து செய்துவிட்டு, 'மன்னிக்கவும், இங்கிலாந்து இனி அமெரிக்காவுக்கு எதையும் அனுப்புவதில்லை' என்க் கூறிவிட்டார்" என்றார்.

தான் முதலில் அமெரிக்காவிலுள்ள ரெக்கார்டு விற்பனையாளர்களைத் தேடியதாகவும், பின்னர் தான் இங்கிலாந்து, ஜப்பான், சீனா போன்ற வெளிநாடுகளில் உள்ள விற்பனையாளர்களை ஆன்லைனில் தேடுவதாகவும் லுண்டெல் தெரிவித்தார். அமெரிக்க தொழில்களைப் பாதுகாக்கும் தேவையை புரிந்துகொண்டாலும், டி மினிமிஸ் விலக்கின் நிறுத்தம் ஓர் அரசியல் நாடகம் என்று அவர் கருதுகிறார்.

சில ஆர்டர்கள் அடுத்த சில வாரங்களுக்கு முடங்கியிருக்க வாய்ப்புள்ளது. சுகாதாரத் துறையை சேர்ந்த சில வாடிக்கையாளர்களும் ஆர்டர்களை நிறுத்தியுள்ளதாக நுயென் கூறுகிறார்.

இங்கிலாந்து, ஐரோப்பா மற்றும் ஆசிய-பசிபிக் பகுதிகளில் உள்ள முக்கிய தபால் சேவைகள் இந்த வாரம் அமெரிக்காவுக்கு அனுப்பும் சரக்குகளை நிறுத்தின.

சுங்கவரி நடைமுறைகள் இந்த வரிவிதிப்பு அமல்படுத்துவதில் குழப்பம் இருப்பதாகவும், இதை ஏற்றுக்கொள்வதற்கு போதிய அவகாசமும் தரப்படுவதில்லை எனவும் சேவை நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

விலைகள் உயரக்கூடும்

டி மினிமிஸ் ரத்து, அமெரிக்கா, டிரம்ப், சீனா, இந்தியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரேசில் மற்றும் இந்தியா போன்ற நாடுகளிலிருந்து வரும் பொருட்களுக்கு 50% வரை வரி விதிக்கப்பட்டுள்ளது.

டி மினிமிஸ் விலக்கு நீக்கப்பட்டதால், வணிக நிறுவனங்கள் இப்போது அமெரிக்கா விதித்துள்ள வரியை கருத்தில் கொள்ள வேண்டியிருக்கும். இவை பெரும்பாலான நாடுகளுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளன.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கான சுங்கக் கட்டணம் 10% மட்டுமே இருந்தாலும், பிரேசில் மற்றும் இந்தியா போன்ற நாடுகளிலிருந்து வரும் பொருட்களுக்கு 50% வரை வரி விதிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறையின் கீழ், 16%-க்கும் குறைவான வரி விதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இருந்து வரும் பொருட்களுக்கு $80, 16% முதல் 25% வரை வரி விதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இருந்து வரும் பொருட்களுக்கு $160, அதற்கும் அதிகமான வரி உள்ள நாடுகளில் இருந்து வரும் பொருட்களுக்கு $200 வரை வரி விதிக்கப்படும்.

இந்த நடவடிக்கை அமெரிக்கர்களை பாதுகாப்பாகவும், செழிப்பாகவும் ஆக்கும் என அமெரிக்காவின் மூத்த அரசு அதிகாரி கூறுகிறார்.

ஒரு சில அமெரிக்க வணிக நிறுவனங்கள் இந்த முடிவை வரவேற்றுள்ளன. டி மினிமிஸ் விலக்கு நீக்கப்படுவது அனைவருக்கும் சமநிலை வாய்ப்பை உருவாக்கும் என வாதிடுகின்றன.

"உலகளவில் வரி விலக்கை நிறுத்திய அரசின் முடிவை வரவேற்கிறோம். டி மினிமஸ் விலக்கு நீண்டகாலமாக, சில இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தங்களுக்கான சுங்கக் கட்டணங்களைத் தவிர்ப்பதற்கான வழியாக இருந்து வந்தது" என Gap Inc. தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆனால் சிறு நிறுவனங்களுக்கு இது பெரும் சவாலாக இருக்கும். அமெரிக்க சுங்கச் சோதனைகளை கடக்க தணிக்கைகள் தேவையிருப்பதால் விலை நிலைத்தன்மையைப் காப்பது கடினமாக இருக்கும் என வர்த்தக நிபுணர் டெபோரா எல்ம்ஸ் கூறினார்.

மேலும், பல அஞ்சல் சேவைகள் அமெரிக்க சரக்குகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதால், விற்பனையாளர்கள் கட்டணம் அதிகமுள்ள எக்ஸ்பிரஸ் கொரியர் சேவைகளை பயன்படுத்த வேண்டியிருக்கும் என்றும் ஹின்ரிச் ஃபவுண்டேஷன் நிறுவனத்தைச் சேர்ந்த எல்ம்ஸ் எச்சரிக்கிறார்.

இங்கிலாந்தின் உல் வேர்ஹவுஸ் ( Wool Warehouse) நிறுவனம் தற்போது அமெரிக்காவுக்கு ஆர்டர்களை நிறுத்திய நிறுவனங்களில் ஒன்றாகும்.

டி மினிமிஸ் ரத்து, அமெரிக்கா, டிரம்ப், சீனா, இந்தியா
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சரக்கு அனுப்பும் நடைமுறைகள் மற்றும் கட்டணங்களை மதிப்பீடு செய்வதற்கு நிறுவனங்களுக்கு குறுகிய காலம் மட்டுமே கிடைத்ததால், பெரும் அசாதாரண நிலை நிலவுவதாக மேலாண்மை இயக்குநர் ஆண்ட்ரூ ஸ்மித் கூறுகிறார்.

அமெரிக்கா மிகப்பெரிய ஏற்றுமதி சந்தை என்பதால், இரண்டு வாரங்களுக்குள் மீண்டும் சரக்கு அனுப்பத் தொடங்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும், பிற நிறுவனங்கள் எவ்வாறு இதை எதிர்கொள்கின்றன என்பதை காத்திருந்து கவனிப்பதும் அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.

உலகம் முழுவதும் இருந்து பெறப்படும் கம்பளி மற்றும் கைத்தொழில் பொருட்களின் விலை 50% வரை அதிகரிக்கக்கூடும் என்றும் ஸ்மித் தெரிவித்தார்.

ஒவ்வொரு தயாரிப்பிற்கும் வரி விகிதத்தைத் தெளிவாகக் காட்டும் வகையில் இணையதளத்தை புதுப்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

"நாங்கள் வெளிப்படைத்தன்மையை எங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். வாடிக்கையாளர்கள் துல்லியமாக எவ்வளவு செலவாகும் என்பதை அறிந்த பிறகு பொருட்களை வாங்க வேண்டுமா வேண்டாமா என்று முடிவு செய்து கொள்ளலாம்" என்றார்.

அதேசமயம், Zou Xou நிறுவனத்தைச் சேர்ந்த தியோபல்ட்ஸ், அர்ஜென்டினாவில் உள்ள சிறிய தொழில் பட்டறைகளில் கைத்தறி முறையில் தயாரிக்கப்படும் பெண்களுக்கான காலணிகளில் கைதேர்ந்தவர் ஆவார். $200 முதல் $300 வரை விலை கொண்ட இந்த காலணிகள் பெரும்பாலும் அமெரிக்க வாடிக்கையாளர்களுக்காகவே விற்பனை செய்யப்படுகின்றன.

நியூயார்க் நகரில் தனது தொழில் பயணத்தை தொடங்கிய இவர், தற்போது அமெரிக்க வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டு தொழில் செய்து வருகிறார்.

அவர் நீண்ட காலமாக இரண்டாம் நிலை விநியோக முறையில் தொழில் செய்து வருகிறார். சில காலணிகள் அமெரிக்காவில் உள்ள பட்டறையில் இருந்து வழங்கப்படுகின்றன. மற்றவை நேரடியாக அர்ஜென்டினாவில் இருந்து DHL மூலம் அனுப்பப்படுகின்றன.

சீனாவுக்கு லாபம் கிடைக்குமா?

டி மினிமிஸ் ரத்து, அமெரிக்கா, டிரம்ப், சீனா, இந்தியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மாற்றங்களை நுகர்வோருக்கு எப்படி புரியவைப்பது என்பதே அதனை விட முக்கியம்

அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் பெரிய அளவிலான காலணிகள், ஏற்கனவே சுங்கக் கட்டணத்திற்கு உட்பட்டவையாக இருந்தன. ஆனால், பியூனஸ் ஐர்ஸிலிருந்து (Buenos Aires) ஒருசில ஜோடி காலணிகளை வாடிக்கையாளருக்கு அனுப்புவது டி மினிமிஸ் விலக்கு காரணமாக குறைந்த செலவிலும் விரைவாகவும் சாத்தியமானது.

இப்போது, கூடுதல் செலவுகளை எவ்வாறு கணக்கிடுவது என்பதைப் பற்றி அவர் தெளிவு இல்லை. பல்வேறு தேர்வுகளை ஆராய்ந்து வருகிறார். தனது வணிக மாதிரியை எவ்வாறு மாற்றுவது என்ற கேள்விக்கும் விடை தேடி வருகிறார்.

இந்த மாற்றங்களை நுகர்வோருக்கு எப்படி புரியவைப்பது என்பதே அதனை விட முக்கியம் என்று அவர் கூறுகிறார்.

விலைகளில் பெரிய மாற்றம் இல்லையென்றாலும், சுங்க நடைமுறைகள் மிகச் சிக்கலானதாகத் தோன்றினால், உயர்தர பொருளை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கே அது தடையாக மாறக்கூடும் என்றும் அவர் கவலை கொள்கிறார்.

"கைத்தறி தரத்தை மதிப்பதால்தான் எங்கள் வாடிக்கையாளர்கள் எங்களை நாடுகின்றனர். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் பெரிய சில்லறை வியாபாரிகளிடம் சென்றிருக்கலாம். ஆனால் இனி அவர்கள் சிந்திக்க வேண்டியது, எனக்கு தரம் முக்கியமா அல்லது ஒரு காலணியே போதுமா? என்பதுதான்" என்கிறார்.

அமெரிக்காவை மையமாகக் கொண்ட சில்லறை விற்பனையாளர்கள் பயன்பெற வாய்ப்புள்ளதாக எல்ம்ஸ் கூறுகிறார்.

"விலை அதிகமாகிவிட்டால், வாடிக்கையாளர்கள் வால்மார்ட் அல்லது டார்கெட்டில் பொருட்களை வாங்கச் சென்றுவிடுவார்கள்" என அவர் விளக்கினார்.

ஆனால், உலகம் முழுவதும் இருந்து வரும் பல பொருட்கள் இப்போது சுங்கக் கட்டணத்திற்கு உட்பட்டுள்ளதால், அமெரிக்க வாடிக்கையாளர்கள் மீண்டும் மலிவு விலை தேர்வுகளுக்காக சீனாவை நாடக்கூடும்.

ஷெயின், டெமு போன்ற சீன நிறுவனங்கள் அமெரிக்காவில் தங்களின் விநியோக மையங்களை அமைத்துவிட்டன. இது சுங்கவரி செலவின் ஒரு பகுதியை குறைக்க உதவும் என நுயென் கூறினார்.

மற்ற நாடுகளில் உள்ள நிறுவனங்கள் இதற்கு தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில், சீனா பல மாதங்களுக்கு முன்பே ஆவணப் பணிகளை தொடங்கிவிட்டது என்கிறார்.

டி மினிமிஸ் விலக்கு நீக்கப்பட்டிருப்பதால், சிறு தொழில்களுக்கு மின் வணிக தளங்களை தொடங்குவது கடினமாகியுள்ளது. இதனால் மொத்த சந்தையில் போட்டியாளர்கள் குறைவாக இருக்கக்கூடும் என்றும் நுயென் தெரிவித்தார்.

"இதற்கு முன்பாக நிலைமை இப்படித்தான் இருந்தது. ஒரு தளம் உருவாக்கப்படும், பொருட்கள் பட்டியலிடப்படும், அதன்பின் அனுப்பத் தொடங்குவோம். ஆனால் இப்போது அந்த குறைந்த விலைக்கான வாய்ப்பு இல்லை." என்று அவர் தெரிவித்தார்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு