எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குரலில் ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கும் 15 பாடல்கள்

பட மூலாதாரம், G VENKET RAM
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
சுமார் அரை நூற்றாண்டாக தமிழ் திரையிசை ரசிகர்களை தன் குரலால் மயக்கிய எஸ்.பி. பாலசுப்ரமணயத்தின் நினைவு நாள் செப்டெம்பர் 25. இந்தத் தருணத்தில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடிய பாடல்களில் மறக்க முடியாத 15 பாடல்களின் தொகுப்பு இது. 1969லிருந்து தன்னுடைய மரணம் வரை ஆயிரக்கணக்கான பாடல்களை எஸ்.பி.பி. பாடியிருக்கும் நிலையில், 90களின் துவக்கம்வரை அவர் பாடிய பாடல்களில் இருந்து இந்தத் தொகுப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.
1. ஆயிரம் நிலவே வா (1969):
எஸ்.பி. பாலசுப்ரமணியம் ஏற்கனவே தெலுங்கு, கன்னடம் ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் அடிமைப் பெண் படத்தின் மூலம்தான் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.
எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் நடித்த இந்தப் படத்திற்கு கே.வி. மகாதேவன் இசையமைத்திருந்தார். இந்தப் படத்திற்கு முன்பே சாந்தி நிலையம் படத்திற்காக எம்.எஸ். விஸ்வநாதனின் இசையில் 'இயற்கை எனும் இளைய கன்னி' பாடலை அவர் பாடியிருந்தாலும் அந்தப் படம் வெளியாகும் முன்பே, அடிமைப் பெண் வெளியானதால், இந்தப் பாடலே எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் முதல் தமிழ் பாடலாக அமைந்துவிட்டது.
இதே படத்தில்தான் ஜெ. ஜெயலலிதாவும் 'அம்மா என்றால் அன்பு' பாடலின் மூலம் பாடகியாக அறிமுகமானார். ஆயிரம் நிலவே வா பாடலை புலமைப்பித்தன் எழுதியிருந்தார். எம்.ஜி.ஆர். நடித்த படமொன்று, தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டபோது, அதில் ஒரு பாடலை எம்.ஜி.ஆருக்கு எஸ்.பி.பி. பாடியிருந்தார். அந்தப் பாடலைக் கேட்ட எம்.ஜி.ஆருக்கு குரல் பிடித்துப்போனது.
ஆகவே, அப்போது நடித்துக் கொண்டிருந்த அடிமைப் பெண் படத்தில், அந்த பாடகருக்கு ஒரு வாய்ப்பளிக்கும்படி கே.வி. மகாதேவனிடம் சொன்னார் எம்.ஜி.ஆர். அப்படித்தான் இந்தப் பாடலைப் பாடும் வாய்ப்பு எஸ்.பி.பிக்குக் கிடைத்தது. இந்தப் பாடல் ஜெய்ப்பூரில் படமாக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். நினைத்ததைப் போலவே, பாடல் மிகப் பெரிய ஹிட்.

பட மூலாதாரம், SP Charan
2. ஒரு நாள் உன்னோடு ஒரு நாள் (1976):
தேவராஜ் - மோகன் இயக்கத்தில் சிவக்குமார் நடித்து வெளியான படம் உறவாடும் நெஞ்சம். படத்திற்கு இசை இளையராஜா. யாராலும் நினைவுகூரப்படாத, தோல்விப்படமாக இந்தப் படம் அமைந்தது என்றாலும், இதில் இடம்பெற்ற ஒரு பாடல் மறக்க முடியாததாக அமைந்தது. அந்தப் பாடல்தான், "ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்" பாடல். "மஞ்சளின் மகராணி குங்குமப் பெருந்தேவி…உன்னால் பொன் நாள் கண்டேனே…கண்ணில் சொர்க்கத்தின் நிழலைக் கண்டேனே…" என்ற வரிகளை எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடும்போது சொக்கிப்போகாதவர்கள் குறைவு.
3. நம்ம ஊரு சிங்காரி (1979):
ரஜினி, கமல், ஜெயப்ரதா ஆகியோர் இணைந்து நடித்த நினைத்தாலே இனிக்கும் படத்தில் இடம்பெற்ற பாடல் இது. எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைத்த இந்தப் படத்தில் மொத்தம் 14 பாடல்கள். அதில் பத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எஸ்.பி.பியே பாடியிருந்தார். "எங்கேயும் எப்போதும்", "யாதும் ஊரே யாவரும் கேளிர்", "இனிமை நிறைந்த உலகம் இருக்கு", "காத்திருந்தேன் காத்திருந்தேன்", "நினைத்தாலே இனிக்கும்" என பல பாடல்கள் குறிப்பிடத்தக்கவையாக இருந்தன. ஆனால், இந்த 'நம்ம ஊரு சிங்காரி' பாடல் ஒரு துள்ளலான இசையைக் கொண்டது. அந்தப் பாடலை எஸ்.பி.பி. பாடும்போது குரலில் பல ஜாலங்களைக் காட்டுவார். குறிப்பாக, "மன்மதன் வந்தானா, நம்ம சங்கதி சொன்னானா" என்று பாடும்போது 'மன்மதன் வந்தானா' என்ற வரிகளுக்குப் பிறகு வரும் குரலின் நீட்சியை, அவரால் மட்டுமே செய்ய முடியும் எனத் தோன்றும். அதனாலேயே இது ஒரு தனித்துவமிக்க பாடல்.
4. மடை திறந்து தாவும் நதியலை நான் (1980):
பாரதிராஜாவின் இயக்கத்தில் இளையராஜாவின் இசையில் வெளியான நிழல்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் இது. திரைத்துறையில் நுழைய விரும்பும் சந்திரசேகர், தயாரிப்பாளர்களுக்கு ஒரு பாடலை இசையமைத்துக் காண்பிப்பதைப்போல இந்தப் பாடல் துவங்கும். முழுக்க முழுக்க மேற்கத்திய இசையின் பாணியில் உருவாக்கப்பட்டிருந்த இந்தப் பாடல், இளையராஜா, எஸ்.பி. பாலசுப்ரமணியம் ஆகிய இருவருக்குமே மிக முக்கியமான பாடலாக அமைந்தது. "புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே, புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே, விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின் நாட்டியம் அமைத்தேன் நான்" என்ற வரிகளை இளையராஜாவே பாடுவதுபோல படமாக்கப்பட்டிருக்கும். அபூர்வமான இசைக்கோவையுடன் உருவாக்கப்பட்ட இந்தப் பாடல் இப்போது கேட்டாலும் மன எழுச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தும்.

பட மூலாதாரம், Getty Images
5. சங்கரா நாதசரீராபரா (1980):
கே. விஸ்வநாத் இயக்கத்தில் கே.வி. மகாதேவன் இசையில் வெளியான தெலுங்குத் திரைப்படம் சங்கராபரணம். இந்தப் படம் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டது. கர்நாடக சாஸ்த்ரீய இசையை கதையின் பின்னணியாகக் கொண்ட இந்தப் படத்தில் ஏகப்பட்ட பாடல்கள். அனைத்துப் பாடல்களிலும் ஆண் குரலாக எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் குரலே ஒலித்தது. எல்லாமே சாஸ்த்ரீய சங்கீதத்தின் அடிப்படையில் அமைந்த பாடல்கள் என்பதால் ஆரம்பத்தில் பாலமுரளி கிருஷ்ணாவையே பாடல்களை பாட வைக்க நினைத்தார் கே.வி. மகாதேவன். ஆனால், பிறகு எஸ்.பி.பிக்கு அந்த வாய்ப்புக் கிடைத்தது. இந்தப் படத்தில் பெரும்பாலான பாடல்கள் மிகச் சிறப்பாக இருந்தன என்றாலும் 'சங்கரா.. நாதசரீராபரா' பாடல் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது.
6. பூந்தளிர் ஆட பொன் மலர் சூட (1981):
பாரதி வாசு இயக்கத்தில் வெளியான பன்னீர் புஷ்பங்கள் படத்தில் இடம்பெற்ற பாடல் இது. இளம்பருவ காதலை மையமாகக் கொண்ட படம் இது. ஒரு காட்சியில் நாயகி சாந்தி கிருஷ்ணாவிடம் நாயகன் சுரேஷ், "நீ இவ்வளவு அன்பாகப் பேசுவதாக இருந்தால் நான் எவ்வளவு அடி வேண்டுமானாலும் வாங்குவேன் உமா" என்று சொல்வார். அதற்கு சாந்தி கிருஷ்ணா, "எனக்கு உன்மேல் அன்பில்லைன்னு நினைக்கிறியா?" என்பார். "இப்ப அப்படி நினைக்கலை உமா" என்பார் சுரேஷ். சட்டென பின்னணி இசை ஒலிக்க ஆரம்பிக்கும். பிறகு பாடல் துவங்கும். "பூமலர் தூவும் பூமரம் நாளும், போதை கொண்டு பூமி தன்னை பூஜை செய்யுதே, பூவிரலாலும் பொன்னிதழாலும், பூவை எண்ணம் காதல் என்னும் இன்பம் செய்யுதே" என்ற கவித்துமிக்க வரிகளை, வேறொரு உயரத்திற்கு கொண்டுசெல்லும் எஸ்.பி.பியின் குரல்.
7. ஆயிரம் தாமரை மொட்டுகளே (1981):
பாரதிராஜா இயக்கத்தில் வெளியான அலைகள் ஓய்வதில்லை படத்தில் இடம்பெற்ற பாடல் இது. இளையராஜா இசையமைத்த மிகச் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று. பாடல் வரிகளை வைரமுத்து எழுதியிருந்தார். கைதட்டல் ஒலியுடன் ஆரம்பிக்கும் பாடலில் சில வினாடிகளில் மிருதங்க இசை கலக்க ஆரம்பிக்கும். பாடலின் பல்லவியை எஸ். ஜானகி பாடுவார். அதற்குப் பிறகு, "ஓ ஓஓ ஓஓ" என்று துவங்கி, "கொத்து மலரே அமுதம் கொட்டும் மலரே இங்கு தேனை ஊற்று இது தீயின் ஊற்று" என்று பாட ஆரம்பிப்பார் எஸ்.பி.பி. இசை, பாடல் வரிகள், குரல்கள், படமாக்கப்பட்ட விதம் என எல்லாவற்றிலும் உயர்ந்து நிற்கும் பாடல் இது. இதே படத்தின் தெலுங்குப் பதிப்பில் இந்த மெட்டில் உருவான "மின்னெட்டி சூரிடு வெச்சினெம்மா" பாடலையும் எஸ்.பி.பியே பாடியிருந்தார்.
8. நீதானே எந்தன் பொன் வசந்தம் (1982):
ஸ்ரீதர் இயக்கத்தில் இளையராஜா இசையில் வெளியான நினைவெல்லாம் நித்யா படத்தில் இடம்பெற்ற பாடல் இது. கார்த்திக்கும் ஜீஜியும் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். படம் பெரிய வெற்றிபெறவில்லை. இருந்தபோதும், இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் இப்போதும் வானொலிகளில் தொடர்ந்து ஒலிக்கின்றன. மெல்லிசை நிகழ்ச்சிகளில் பாடப்படுகின்றன. பாடல்கள் அனைத்தையும் எஸ்.பி. பாலசுப்ரமணியமே பாடியிருந்தார். அதில் 'பனிவிழும் மலர் வனம்' 'ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்' 'நீ தானே என் பொன் வசந்தம்' ஆகிய பாடல்கள் அட்டகாசமாக அமைந்திருந்தன. ஆனால், சற்று வித்தியாசமான இசையால் 'நீ தானே என் பொந் வசந்தம்' பாடல் தனித்துத் தெரிந்தது.
9. இளைய நிலா பொழிகிறது (1982):
ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் இளையராஜாவின் இசையில் வெளியான 'பயணங்கள் முடிவதில்லை' படத்தில் இடம் பெற்ற பாடல் இது. இந்தப் படத்தில் ஏழு பாடல்கள். இந்த ஏழு பாடல்களையுமே எஸ்.பி.பிதான் பாடியிருந்தார். எல்லாப் பாடல்களுமே சிறப்பானவை என்றாலும் நான்கு பாடல்கள் வெகுவாக கவனிக்க வைத்தன. 'இளைய நிலா பொழிகிறது', 'மணி ஓசை கேட்டு எழுந்து', 'தோகை இளமயில் ஆடிவருகையில்', 'சாலையோரம் சோலை ஒன்றைப் பார்த்தேன்' ஆகிய நான்கு பாடல்களில் 'இளைய நிலா' பாடல் பல விதங்களில் கவனிக்க வைத்தது. இசை, பாடல் வரிகள், பாடப்பட்டவிதம் என எல்லாவற்றிலும் கவனிக்கவைத்தது இந்தப் பாடல். "முகிலினங்கள் அலைகிறதே, முகவரிகள் தொலைந்தனவோ, முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ, நீல வானிலே வெள்ளி ஓடைகள், ஓடுகின்றதே என்ன ஜாடைகள், விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள்" என்ற வைரமுத்துவின் வரிகளை இளையராஜாவின் இசையும் எஸ்.பி.பியின் குரலும் சேர்ந்து வேறோரு பரிமாணத்திற்கு இட்டுச்சென்றன.

பட மூலாதாரம், G VENKET RAM
10. மூங்கிலிலே பாட்டிசைக்கும் (1982):
டி. ராஜேந்தரின் இசையில் வெளியான ராகம் தேடும் பல்லவி படத்தில் இடம்பெற்ற பாடல் இது. பாடலை டி. ராஜேந்தரே எழுதியிருந்தார். திரைப்படம் சொல்லிக்கொள்ளும் வகையில் வெற்றி பெறவில்லை என்றாலும் இந்தப் பாடல் கவனிக்க வைத்த பாடலாக இருந்தது. வழக்கமாக, பல்லவிக்கு பிறகு வரும் சரணம் ஒரே மாதிரியான மெட்டில் அமைந்திருக்கும். இந்தப் பாடலில் இரு வரிகளுக்கு ஒரு முறை சரணத்தின் மெட்டு மாறும். அந்த மாற்றத்தை மிக அற்புதமாக தன் குரலில் எடுத்துச் செல்வார் எஸ்.பி.பி. 80களில் வானொலியில் திரும்பத் திரும்ப ஒலித்த பாடல் இது.

பட மூலாதாரம், SP Charan
11. சந்தனம் பூச மஞ்சள் நிலாவும் (1983):
ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான துடிக்கும் கரங்கள் படத்தில் இடம்பெற்ற பாடல் இது. படத்திற்கு இசையமைத்தவர் எஸ்.பி.பி. தமிழில் அவர் முதன்முதலில் இசையமைத்த படம் இது. பாடலை புலமைப்பித்தன் எழுதியிருந்தார். ", நீ பார்க்கும் நேரங்கள் நிலம் பார்க்கும் நாணங்கள், நெஞ்சுக்குள் ஏதோ செய்தன. - இதமாக மைபோட்டு இமையென்னும் கைபோட்டு, உன் கண்கள் என்னை கொய்தன" போன்ற கவித்துவம் மிக்க வரிகளுடன் எழுதப்பட்ட இந்தப் பாடலை இப்போது கேட்டாலும், நிலா நெஞ்சில் உலாவும் உணர்வைப் பெறலாம்.
12. மௌனமான நேரம் (1983):
கே. விஸ்வநாத் இயக்கத்தில் தெலுங்கில் வெளியான சாகர சங்கமம் படத்தின் தமிழ் வடிவமாக வெளியானது சலங்கை ஒலி திரைப்படம். இதுவும் இசையைப் பின்னணியாகக் கொண்ட திரைப்படம்தான். அதனால், பாடல்களில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தார் இளையராஜா. மொத்தம் ஏழு பாடல்கள். ஆண் குரல் அனைத்தும் எஸ்.பி.பியுடையது.
அதில் மௌனமான நேரம் பாடல், இளையராஜாவின் இசையும் வைரமுத்துவின் வரிகளும் இணைந்து பிறந்த ஒரு செவ்வியல் பாடல் என்றே சொல்லலாம். சரத் பாபுவுக்கு முதலிரவு. அவரை கமலும் ஜெயப்ரதாவும் முதலிரவு அறைக்குள் அனுப்பும்போதே பின்னணியில் எஸ். ஜானகியின் குரல் ஒலிக்க ஆரம்பிக்கும்.
கதவை மூடும்போது கமலுடைய கரங்களும் ஜெயப்ரதாவின் கரங்களும் உரசிக்கொள்ள, எந்த சத்தமும் இல்லாத ஒரு மௌனம் சில வினாடிகளுக்கு நீடிக்கும். அங்கே துண்டிக்கப்படும் காட்சி, வள்ளுவர் கோட்டத்தில் தொடரும்.
கமலும் ஜெயப்ரதாவும் ஒருவரை ஒருவர் பாராதவரைப் போல நடந்துகொள்ள, சட்டென எஸ். ஜானகியின் குரலில் இசை ஏதும் இல்லாமல் 'மௌனமான நேரம்' என ஒலிக்க ஆரம்பிக்கும். பிறகு, ஜெயப்ரதாவின் வீட்டிற்கு இருவரும் வருவார்கள். ஜெயப்ரதா வீட்டின் படியேற, நான் புறப்படுகிறேன் என தலையசைப்பார் கமல். இருவருமே எதையோ சொல்ல நினைத்து, சொல்லாமல் இருப்பார்கள். அப்போது 'இளமைச் சுமையை மனம் தாங்கிக் கொள்ளுமோ' என ஒலிக்க ஆரம்பிக்கும் எஸ்.பி.பியின் குரல். இளையராஜா, வைரமுத்து, எஸ்.பி.பி. ஆகிய மூன்று பேருக்குமே இது ஒரு குறிப்பிடத்தக்க பாடல்.

பட மூலாதாரம், SP Charan
13. காதலின் தீபம் ஒன்று (1984):
ரஜினி, மாதவி நடித்து வெளியான தம்பிக்கு எந்த ஊரு படத்தில் இடம்பெற்ற பாடல் இது. இளையராஜாவின் இசைக்கு பஞ்சு அருணாச்சலம் பாடல்களை எழுதியிருந்தார். இந்தப் படத்தில் இரு பாடல்களை எஸ்.பி.பி. பாடியிருந்தார். அதில் 'காதலின் தீபமொன்று' பாடல் தனித்துத் தெரிந்தது. பாடமாக்கப்பட்ட விதம், எஸ்.பி.பியின் குரல் ஆகியவை இந்தப் பாடலை பல ஆண்டுகளுக்கு ரசிகர்களின் நெஞ்சில் நீடிக்கச் செய்தது. இப்போதும் தூரத்தில் எங்காவது இந்தப் பாடல் ஒலிக்கும்போது, ஒரு இதமான அமைதியை மனதில் ஏற்படுத்தும் பாடல் இது.
14. மண்ணில் இந்த காதலின்றி (1990):
வசந்த் இயக்கத்தில் வெளியான கேளடி கண்மணி திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் இது. இந்தப் படத்தில் எஸ்.பி. பாலசுப்ரமணியமே நாயகனாகவும் நடித்திருந்தார். கடற்கரையில் ராதிகாவும் எஸ்.பி.பியும் வரும்போது கையில் கிடைக்கும் காகிதத்தில் இடம்பெற்ற பாடலைப் பாட ஆரம்பிப்பார் எஸ்.பி.பி. பாடலின் இடையில், "மூச்சு விடாமல் பாடுகிறேன் என்று சொன்னீர்களே" என்று ராதிகா கேட்கவும் நீளமான சரணத்தை மூச்சுவிடாமல் பாடுவார் எஸ்.பி.பி. இதன் காரணமாகவே பெரும் முக்கியத்துவத்தைப் பெற்ற பாடல் இது.

15. இதோ இதோ என் பல்லவி (1991):
அனந்து இயக்கிய சிகரம் படத்தில் எஸ்.பி.பியே நாயகனாக நடித்திருப்பா். பின்னணி இசையும் அவர்தான். படத்தில் ஏகப்பட்ட பாடல்கள். அதில் ஆறு பாடல்களை எஸ்.பி.பியே பாடியிருப்பார். இதோ இதோ என் பல்லவி, வண்ணம் கொண்ட வெண்ணிலவே, உன்னைக் கண்ட பின்புதான் ஆகிய பாடல்கள் கவனிக்கத்தக்கதாக இருந்தன. அதிலும் இதோ இதோ என் பல்லவி பாடல் இசை, பாடல் வரிகள், பாடப்பட்ட விதம் என பல விதங்களிலும் கவனிக்க வைத்தது. எஸ்.பி.பியும் ராதாவும் இந்தப் பாடலில் நடித்திருந்தார்கள். ஆனால், பாடல்களை அவர்கள் பாடுவதைப் போல அல்லாமல், பாடல் பின்னணியிலேயே ஒலிக்கும். மிக மிக இனிமையான பாடல் இது.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












