ஆந்திரா: பெத்தபுரம் அருகே 'பேய்' பயத்தில் நடுங்கும் கிராமம் - செல்போன் வீடியோவில் இருப்பது என்ன?

- எழுதியவர், சங்கர் வடிசெட்டி
- பதவி, பிபிசிக்காக
தொழில்நுட்பம் அபரிமிதமாக வளர்ந்துள்ள இக்காலகட்டத்திலும் ஒரு கிராமமே பேய் பயத்தில் உறைந்துபோயிருக்கிறடுஹ். ஆந்திரா மாநிலம், காக்கிநாடா மாவட்டம்த்தில் உள்ள ஒரு கிராமத்தில் சமீப காலமாக, சில விநோத உருவங்கள் தென்படுவதுபோலவும், சில விநோத சத்தங்கள் கேட்பது போலவும் சில வீடியோக்கள் பரப்பப்படுகின்றன. அறிவியல் கழகத்தாரும், காவல்துறையினரும் இந்த வதந்திகளைக் களையும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனாலும் அரண்டிருக்கும் அக்கிராம மக்களுக்கு இருண்டதெல்லாம் பேயாகவே தெரிகிறது.
என்ன நடக்கிறது அங்கே?
“யாராவது உடன்வந்தால் மட்டும் தைரியமாக வெளியே செல்லலாம். இல்லையென்றால், கதவைத் திறந்து வைத்துக்கொண்டு வீட்டிலேயே உட்கார வேண்டியதுதான். இருபது நாட்களாக இது தான் இங்கு நிலைமை. எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். நாங்கள் பயத்தில் உறைந்துபோயிருக்கிறோம்.”
இது, ஆந்திரா மாநிலம், காக்கிநாடா மாவட்டம், கண்டரகோட்டா கிராமத்தில் வசிக்கும் ஒர் பெண்ணின் குரல்.
கடந்த சில நாட்களாக அங்கு பரவிவரும் சில வீடியோக்களால் அவர் பயந்துபோயிருக்கிறார்.
சமீபகாலமாக காக்கிநாடா மாவட்டம் பெத்தாபுரம் அருகே உள்ள கண்டரகோட்டாவில் பேய்கள் நடமாடுவதாக சில வதந்திகளும் வீடியோக்களும் அதிகளவில் பரப்பபடுகின்றன.
காவல்துறையும், ஜனவிஞ்ஞான வேதிகா எனும் அறிவியல் அமைப்பினரும் இதுபோன்ற விஷயங்களை நம்ப வேண்டாம் என்று அங்கு பிரசாரம் செய்கிறார்கள். ஆனால், மக்கள் இன்னும் கவலையில் உள்ளனர்.

அச்சத்தில் கிராமத்தை விட்டு வெளியேறும் மக்கள்
சிலர் ஏற்கனவே 'பேய்'க்கு பயந்து கிராமத்தை விட்டு வெளியேறிவிட்டனர். சிலர் இருட்டிய பிறகு வெளியே செல்ல பயப்படுகிறார்கள்.
வினோதமான சத்தங்கள் கேட்பதுபோலவும், வினோதமான காட்சிகள் தென்படுவதுபோலவும், இருட்டில் யாரோ நிர்வாணமாக ஓடுவது போலவும் சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பேசிய கண்டரகோட்டாவைச் சேர்ந்த கிராமவாசியான நந்தீஸ்வர ராவ், “கிராமத்திற்குள் பேய் புகுந்ததாக பலரும் நம்பத் தொடங்கியுள்ளனர். மேலும், அதனைத் தொடர்ந்து, ஊடகங்களில் வெளியான செய்திகளும் மக்களின் அச்சத்தை அதிகரித்துள்ளது,” என்றார்.
“சில உருவங்கள் சுவர் ஏறி குதிப்பதைப் போன்ற வீடியோக்களை செல்போனில் காட்டி, மக்களை பயமுறுத்தும் பிரசாரம் இங்கு நடந்து வருகிறது. எங்கள் தாத்தா பாட்டி காலத்தில், இங்கு அப்படி எதுவும் நடக்கவில்லை. இருப்பினும், சிலர் அப்படியான அச்சத்தை உருவாக்குகின்றனர்,” என்றார் அவர்.

ரோந்துப்பணியில் கிராம இளைஞர்கள்
கண்டரகோட்டா கிராமத்தில் பலர் இரவில் தூங்கவே பயப்படுகிறார்கள். இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் இரவு முழுவதும் கம்புகளை வைத்துக்கொண்டு கிராமத்தை சுற்றிக் கண்காணித்து வருகின்றனர்.
ஒரு புறம் பேய் மற்றும் பிசாசுகளை நம்பும் மக்கள் பயந்துகொண்டிருக்கையில், மறுபுறம் சிலர் அதை நிராகரித்தும் வருகின்றனர்.
சிலர், கிராமத்தில் தீய சக்திகள் உள்ளதாக நம்பி, அவற்றை விரட்ட யாகங்கள் நடத்தி வரும் அதே வேளையில். ஜன விஞ்ஞான வேதிகா என்ற அறிவியல் அமைப்பு சார்பில் கிராம மக்களுக்கு விழப்புணர்வு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டன.
"ஒரு கருப்பு முகமூடி அணிந்த நபர் சுவரில் அமர்ந்திருப்பதைக் கண்டதாகவும், அவர் யார் என்று கேட்டபோது, அவர் ஓடிவிட்டதாகவும் கிராமவாசிகள் தெரிவித்தனர்," என அந்த அமைப்பின் தலைவர் கே.எம்.எம்.ஆர் பிரசாத் கூறினார்.
"பேய் என்றால் மறைய வேண்டும். ஓட வேண்டிய அவசியமில்லை. வயலில் உள்ள மரத்தின் அருகே ஒருவர் அமர்ந்திருந்ததாகவும், அவர்கள் அங்கு சென்றபோது சிலர் ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது. சில வீடியோக்கள் காட்டப்படுகின்றன. அவை அனைத்தும் உருவாக்கப்பட்டவை. இதிலிருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை. இரவில் மக்கள் நடமாட விடாமல் தடுக்கின்றனர்," என பிரசாத் கூறினார்.

செல்போன்களில் பரவும் வீடியோவில் இருப்பது என்ன?
காவல்துறையினரும் கிராமத்தைச் சுற்றி ரோந்துப்பணியில் ஈடுபட்டு, மக்களின் அச்சத்தை போக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
"சிலர் போலியான வீடியோக்களை உருவாக்கி மக்களை அச்சுறுத்தி வருகின்றனர். எங்கள் குழுவினரும் இரவில் ரோந்துப்பணியில் ஈடுபடுகின்றனர். செல்போன்களில் வரும் வீடியோக்களை நம்ப வேண்டாம். பிரச்னை இருந்தால், காவல்துறையின் கவனத்திற்கு கொண்டு வாருங்கள்,'' என பெத்தாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தெரிவித்தார்.
கண்டரகோட்டாவைச் சுற்றியுள்ள கிராமங்களில் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் பழையவை என கண்டறியப்பட்டுள்ளது.
ஆந்திராவில் தொடரும் பேய் கதைகள்

பட மூலாதாரம், Getty Images
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தின் தெருக்களில் இருபுறமும், சில சாலைகளின் நடுவேயும் பசுமைக்காக நடப்பட்ட மரங்களைக் கண்டு மக்கள் பயப்பட்டனர்.
'டெவில் ட்ரீ' என்றழைக்கப்படும் இந்த மரங்களை அகற்றக் கோரி விசாகப்பட்டினம் மாநகராட்சிக்கு புகார்களும் அளிக்கப்பட்டன. இந்த மரங்களை மக்கள் ‘பேய் மரங்கள்’ என்று அழைக்கின்றனர்.
நீர் ஆதாரங்களைப் பொருட்படுத்தாமல் இந்த மரம் ஆண்டு முழுவதும் பசுமையாக காட்சியளிக்கிறது. குளிர்காலத்திலும் பூக்கள் நிறைந்திருக்கிறது.
இந்தப் பூக்கள், அக்டோபர் முதல் பிப்ரவரி வரை மூன்று அல்லது நான்கு நிலைகளில் பூக்கும். அப்போது அந்தப்பூக்களிலிருந்து காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
இந்த துர்நாற்றம் தாங்க முடியாமல் நகரவாசிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் தங்களுக்கும் உடல் நலக்குறைவு ஏற்படுவதாகக் கூறுகின்றனர்.
விசாகா துறைமுகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற வாசுதேவ ராவ் என்பவரது வீட்டின் முன்புறம் இந்த மரம் உள்ளது. இப்போது இந்த மரம் இரண்டு மாடிக் கட்டிடம் போல உயரமாக வளர்ந்திருக்கிறது.

இந்த மரம் குறித்து பிபிசியிடம் அப்போது பேசிய வாசுதேவ ராவ், அந்த மரத்தில் இருந்து வரும் துர்நாற்றத்தால் சுவாசிக்கவே சிரமமாக உள்ளதாகக் கூறினார்.
“குளிர்காலம் முழுவதும் இந்த மரத்தில் இருந்து வீசும் காற்றினால் நாங்கள் பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறோம். எனக்கும் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. எங்கள் குழந்தைகளும் கஷ்டப்படுகிறார்கள். இந்த மரங்களை அகற்றக்கோரி மாநகராட்சியிடம் புகார் அளித்துள்ளேன். ஆனால், அவர்கள் இன்று வரை நடவடிக்கை எடுக்கவில்லை,” என்றார் அவர்.
இந்த மரங்கள் சிறியவையாக இருந்தபோது எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வருவதாக டிவி மெக்கானிக் சீனிவாச ராவ் தெரிவித்தார்.
“பூக்கள் வந்து, மீண்டும் அவை போகும் வரை பல சிரமங்களைச் சந்தித்து வருகிறோம். இந்த குளிர்காலத்தில், மூன்று அல்லது நான்கு முறை உதிர்தல் நடக்கிறது. மாநகராட்சியிடம் புகார் அளித்தும், மரங்கள் அகற்றப்படவில்லை. நாங்களே அகற்ற வேண்டும் என்றால், மரங்கள் பெரிதாக இருப்பதால், அதுவும் சாத்தியமில்லை,'' என்றார் அவர்.
ஆனால், தெலுங்கானா சாதவாகனா பல்கலைக்கழக தாவரவியல் துறை தலைவர் டாக்டர் இ. நரசிம்மமூர்த்தி, "இந்த மரம் பூக்கும்போது, வாசனை இருக்கலாம். அதன் காரணமாக, சைனஸ் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற நோய்கள் உள்ளவர்கள் சில பிரச்னைகளை உணரலாம். அதைத் தாண்டி இந்த மரத்தால் எந்த பிரச்சனையும் வராது," என்று பிபிசியிடம் தெரிவித்தார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












