அகதிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் - தொண்டு நிறுவன உரிமையாளர் கைதான பின்னணி

- எழுதியவர், ஃபண்டனூர் ஓஸ்ட்டர்க்
- பதவி, பிபிசி நியூஸ் துருக்கி
- எழுதியவர், கவுன் காமூஷ்
- பதவி, பிபிசி உலக சேவை
துருக்கியில் இயங்கிய தொண்டு நிறுவனத்தின் உரிமையாளர் பாலியல் துன்புறுத்தல் புகாரின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த குற்றச்சாட்டுகள் பிபிசி துருக்கியால் வெளியுலகுக்கு தெரிவிக்கப்பட்டன.
ஓராண்டாக பிபிசி நியூஸ் துருக்கி மேற்கொண்ட விசாரணையில் இந்த துருக்கி தொண்டு நிறுவன உரிமையாளர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் வெளிப்பட்டுள்ளன. துருக்கியின் தலைநகர் அங்காராவில் உள்ள பல பெண்கள் இவரால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்தக் குற்றச்சாட்டுகள் கூறுகின்றன. ஆனால், அவை அனைத்தையும் அவர் மறுக்கிறார்.
உதவிக்காக ஏங்கும் சிரிய பெண்கள் முதலில் கரகோஸை "தேவ தூதனாக" பார்த்தார்கள். அவரது சமூகத்தைச் சேர்ந்த பலருக்கும் அவர், "அகதிகளின் தாத்தா" என அறியப்படுகிறார்.
அங்காராவில் உள்ள ஆல்டின்டாக் சுற்றுப்புறத்தை சிறிய ஆலப்போ என்று மக்கள் அழைக்கிறார்கள். ஏனெனில் சிரியாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான அகதிகள் அங்கு வருவதால், அந்த சிரிய நகரத்தின் பெயரை வைத்து அழைக்கிறார்கள். இங்குதான் 2014-ஆம் ஆண்டு தன்னுடைய தொண்டு நிறுவனத்தை கரகோஸ் நிறுவினார்.
துருக்கி உலக அளவில் அதிக அகதிகள் கொண்ட நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. கரகோஸின் நிறுவனம் உள்பட பல தொண்டு நிறுவனங்களும் இருக்கின்றன. அகதிகளாக வரும் பெண்கள் பெரும்பாலும் வேலைகள் செய்வதில்லை என்பதால், அவர்களுக்கு இந்தத் தொண்டு நிறுவனங்கள் உயிர்நாடியாக விளங்குகின்றன.
அந்தப் பெண்களில் ஒருவரான மதினா*, 2016 உள்நாட்டுப் போரின்போது தன் சொந்த ஊரான அலெப்போ முழுவதும் சண்டை நடக்க, தன் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார். இரண்டு ஆண்டுகள் கழித்து அவருடைய மூன்று குழந்தைகளுள் ஒன்று நோய்வாய்பட்டதாகவும், அவருடைய கணவர் அவரைப் பிரிந்து சென்றுவிட்டதாகவும் கூறுகிறார் அவர். தன் குழந்தைகளைத் தனியாகப் பார்த்துக்கொள்ளவேண்டிய நிலையில் அங்காராவில் உதவியை நாடிக் காத்திருக்கிறார் மதினா.
அவருக்கு மக்கள் கை காட்டியது சதெத்தின் கரகோஸின் நிறுவனம், உமுத் ஹயிர் மகஸாசி அல்லது ஹோப் சேரிட்டி ஸ்டோர் (Hope Charity Store) இவற்றில் ஒன்றைத்தான். இந்த நிறுவனங்கள் நாப்கின்கள், பாஸ்தா, எண்ணெய், பால், உடைகள் போன்ற நன்கொடைகள் பெற்று அதை அகதிகளுக்கு விநியோகிக்கும்.

"என் கதவுகள் உனக்குத் திறந்தே இருக்கும்" என்று கரகோஸ் தன்னிடம் சொன்னதாகக் கூறுகிறார் மதினா. "உனக்குப் புகலிடம் எதுவும் இல்லாதபோது நீ என்னிடம் வரலாம். நான் உன்னைப் பார்த்துக்கொள்கிறேன்" என்றும் அவர் மதினாவிடம் கூறியிருக்கிறார்.
ஆனால் கரகோஸை அவர் தொடர்புகொண்டபோது அவர் வேறொரு ஆளாக மாறியிருந்ததாகக் கூறுகிறார் மதினா. அறக்கட்டளையில் அவர் பெண்களை அனுமதியின்று தொடுவதைப் பார்த்த மதினா, தன்னையும் கரகோஸ் தொட்டதாகக் கூறுகிறார். கடைசியாக அவர் அறக்கட்டளைக்குச் சென்றபோது விஷயம் இன்னும் பெரிதானதாகவும் சொல்கிறார் மதினா.
பொருள்கள் வாங்குவதற்கு அந்த அலுவலகத்தில் திரைக்குப் பின்னால் இருந்த ஒரு இடத்துக்கு தன்னை கரகோஸ் அழைத்ததாகச் சொல்கிறார்.
"அவர் என்னைப் பற்றிக்கொண்டு என்னை விரும்புவதாகக் கூறினார். எனக்கு முத்தமிட ஆரம்பித்தார். நான் கத்தத் தொடங்கினேன். என்னிடமிருந்து விலகிச் செல்ல சொன்னேன். ஒருவேளை நான் கத்தாமல் இருந்திருந்தால் அவர் என்னை வன்கொடுமை செய்திருப்பார்" என்று கூறினார் மதினா.
அந்த இடத்திலிருந்து எப்படியோ தப்பித்த மதினா, நடந்தவற்றைத் தான் போலீஸிடம் புகார் செய்யப்போவதாக கரகோஸிடம் கூறியிருக்கிறார். ஆனால் அவர் தன்னிடம் வரக்கோரி மதினாவை தொடர்ந்து வற்புறுத்தியிருக்கிறார். இந்நிலையில் ஒருநாள் மதினாவின் வீட்டுக்கே சென்று பலமாக கதவுகளைத் தட்டி அதைத் திறக்கச் சொல்லியிருக்கிறார் கரகோஸ்.
"அவர் மிகவும் அறுவெறுப்பான விஷயங்கள் பேசினார். நான் பயப்பட்டதால் கதவுகளைத் திறக்கவில்லை" என்று தன் கண்ணீரை அடக்கிக்கொண்டு சொல்கிறார் மதினா. மேலும், அவர் தன்னை சிரியாவுக்கே நாடு கடத்திவிடுவதாக மிரட்டியிருக்கிறார் என்றும் கூறியிருக்கிறார்.
அதற்குப் பயந்த மதினா தான் போலீஸிடம் போகவில்லை என்றும், வேறு எவரிடமும் இதைப் பற்றிச் சொல்லவில்லை என்றும் கூறுகிறார்.

ஓய்வுபெற்ற வங்கி அதிகாரியான கரகோஸ் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கிறார். பிபிசி-யிடம் பேசிய அவர், அகதிகள் உள்பட சுமார் 37,000 மக்களுக்கு தன்னுடைய நிறுவனம் உதவி செய்திருப்பதாகக் கூறுகிறார். அறக்கட்டளையில் பொருள்கள் விநியோகிக்கும் இடம் சிறிதானது என்று கூறும் அவர், மக்கள் நிறைந்த அந்த இடத்தில் சிசிடிவி கேமராக்களும் இருப்பதாகவும், அதனால் தான் ஒரு பெண்ணுடன் தனியாக இருந்திருக்கவே முடியாது என்றும் கூறுகிறார்.
கடந்த சில ஆண்டுகளாக பரவலான அங்கீகாரம் பெற்ற அவரது அறக்கட்டளைக்கு 2020-ஆம் ஆண்டு ஒரு உள்ளூர் நாளிதழ் விருது வழங்கியது. தேசிய தொலைக்காட்சிகளில் இடம்பெற்ற அவரது அறக்கட்டளைக்கு தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களிடமிருந்து உதவிகள் கிடைப்பதாகக் கூறியிருக்கிறார் கரகோஸ்.
அதே சமயம், மொத்தம் 3 பெண்கள் கரகோஸ் தங்களிடம் பாலியல் ரீதியாக தாக்கியதாகவும் துன்புறுத்தியதாகவும் பிபிசியிடம் தெரிவித்தனர். 2016 முதல் 2024 காலகட்டத்தில் கரகோஸ் பாலியல் துன்புறுத்தல்கள் செய்ததை பார்த்ததாகவோ, அதனால் பாதிக்கப்பட்டவர்களிடம் அதைப் பற்றிக் கேட்டதாகவோ 7 பேர் கூறியிருக்கின்றனர். அதில் இருவர் கரகோஸ் அறக்கட்டளையின் முன்னாள் ஊழியர்கள்.
"அவருடைய மேஜைக்குப் பின்னால் ஒரு சிறிய அறை இருக்கும். அங்குதான் நாங்கள் நிவாரணப் பொருள்களை வைத்திருப்போம். அந்த அறையில் அவர் பெண்களைத் துன்புறுத்துவதை நாங்கள் பலமுறை பார்த்திருக்கிறோம்." என்று சொல்கிறார் கரகோஸின் முன்னாள் ஊழியர் ஒருவர்.
27 வயது சிரிய அகதியான நாடா*, கரகோஸ் தனக்கு உதவி செய்ய முன்வந்தபோது "கடவுள் அனுப்பிய தேவதூதர் போலத் தெரிந்தார்" என்று கூறுகிறார்.
ஆனால், அவருடைய நிறுவனத்துக்கு நாடா முதல் முறை சென்றபோது, ஒரு தனியான வீட்டுக்கு தன்னோடு வந்தால் மட்டுமே நிவாரணம் கிடைக்கும் என்று சொல்லியிருக்கிறார். "நமக்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளாது. பத்தே நிமிடங்கள்... நீ வராவிட்டால் உனக்கு எதுவுமே கொடுக்கமாட்டேன்." என்றிருக்கிறார் கரகோஸ். தன்னுடைய நாத்தனாரோடு சென்றிருந்த நாடா, உடனடியாக அங்கிருந்து வெளியேறிவிட்டதாகச் சொல்கிறார்.

குளிர்சாதனப்பெட்டி போன்ற எந்த உபகரணங்களுமே இல்லாத ஒரு மோசமான இடத்தில் தான் தன் கணவர் மற்றும் குழந்தைகளோடு அங்காராவில் வாழ்ந்து வந்திருக்கிறார் நாடா. தன் குடும்பத்துக்கு உதவ வேறு எந்த வழியுமே இல்லாத நிலையில், வேறு எங்கு போவது என்று தெரியாத அவர், மறுபடியும் அந்த இடத்துக்கே சென்றிருக்கிறார்.
தன் குழந்தைகளுக்கு நாப்கின் எடுத்துத் தருவதாகச் சொல்லி திரைக்குப் பின்னால் இருந்த ஒரு இடத்துக்கு நாடாவை அழைத்துச் சென்றிருக்கிறார் கரகோஸ். "ஒரு கையில் நாப்கின்களை வைத்திருந்த அவர், சும்மா இருந்த இன்னொரு கையை வைத்து என் மார்புகளைத் தொட முயற்சி செய்தார்." என்றார் நாடா.
"பதற்றப்படாதே, இது வழக்கமானதுதான்," என்று கரகோஸ் சொன்னதையும் நினைவுகூர்ந்தார் அவர்.
அவர் அடுத்த முறை அங்கு சென்றபோது, "பின்னால் இருந்து வந்த அவர் என் கைகளைப் பற்றினார். அவருடைய ஆணுறுப்பைத் தொட வற்புறுத்தினார். என்னைத் தாக்க வந்த அரக்கனைப்போல் நடந்துகொண்டார்." என்று கூறுகிறார் நாடா.
"என் மொத்த உடலும் நடுங்கியது. நான் அழுதுகொண்டே இருந்தேன். அப்போது, 'அமைதியாக இரு. இது வழக்கம்தான். சீக்கிரம் முடிந்துவிடும்' என்று சொன்னார்." எனச் சொல்லும் நாடா, அவர் பிடியிலிருந்து தப்பித்து அறக்கட்டளையின் வெளியே இருந்த பெண்களையும் உஷார் படுத்தியிருக்கிறார்.
சதெத்தின் கரகோஸின் உதவியை நாடி நாடா சென்றது அதுவே கடைசி முறை.
பாலியல் துன்புறுத்தல்கள் மீது வெகுஜனத்தின் பார்வையாலும், எங்கு தன்னை குற்றம் சொல்வார்களோ என்ற பயத்தாலும், இந்த நிகழ்வைப் பற்றி நாடா யாரிடமும் எதுவும் பேசவில்லை. தன் கணவரிடம் கூட எதுவும் சொல்லவில்லை.

பிபிசியிடம் கரகோஸ் தன்னை தாக்கியதாகக் கூறிய மூன்றாவது நபரான பதோல், ஜெர்மனிக்குச் சென்றுவிட்டார்.
மூன்று குழந்தைகளைத் தனியாகப் பார்த்துக்கொள்ளும் அவர், உதவிக்காக கரகோஸிடம் சென்றிருக்கிறார். "நான் நிவாரணப் பொருள்களை எடுக்கத் திரும்பியபோது, என் பின்புறம் அவர் கைகளை வைத்தார்." என்று கூறுகிறார் பதோல்.
"எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அவர் மீது கோபம் வந்தது. அவரைத் தள்ளிவிட்டு, நிவாரணப் பொருள்களை அங்கேயே வைத்துவிட்டு நான் அந்த இடத்தை விட்டுச் சென்றுவிட்டேன்" என்றார்.
இந்தப் பிரச்னை பற்றி வெளிப்படையாகப் பேசுவது தன்னைப் போலவே பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று அவர் நம்புகிறார்.
கரகோஸுக்கு எதிராக சாட்சிகள் வெளியே வந்தது இது முதல் முறை அல்ல. ஏற்கெனவே இரண்டு முறை அவரை போலீஸ் விசாரித்திருக்கிறார்கள்.
2019-ஆம் ஆண்டில் கரகோஸ் பாலியல் துன்புறுத்தல் மற்றும் தாக்குதலில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டது. ஆனால், அவர்மீது வழக்கு தொடர போதிய ஆதாரங்கள் இல்லை என்று அப்போது துருக்கி சட்டம் ஒழுங்கு அதிகாரிகள் முடிவு செய்தனர்.
2022-ஆம் ஆண்டு கரகோஸ் பற்றிய குற்றச்சாட்டுகள் பற்றித் தெரியவந்தபோது ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் நிறுவனம் ரகசியமாக பேட்டிகள் எடுத்தது. 2025-இல் போலீஸ் அவரது அறக்கட்டளையை சோதித்து, செயல்பாடுகளை முடக்கினர். புதிய பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் பற்றி கரகோஸிடம் விசாரணை செய்தனர்.
கரகோஸுக்கு எதிராகப் போதுமான ஆதாரங்கள் இல்லாததால், அவர்மீது வழக்க தொடர வேண்டாம் என்று இந்த ஆண்டு ஜூன் மாதம் இருதரப்பும் முடிவு செய்திருக்கின்றன. இதுசார்ந்த அறிக்கையை அவர்கள் நம்மிடம் பகிர்ந்துகொண்டனர்.
அவர் மீதான குற்றச்சாட்டுகளைத் தாங்கள் தீவிரமாக எடுத்துக்கொண்டதாகவும், பாதிக்கப்பட்டவர்களும் சாட்சிகளும் அதிகாரபூர்வமாக வழக்கு பதிய முன்வராததால் தங்களால் அப்போதைய சூழலில் எதுவும் செய்ய முடியவில்லை என்றும் ஐக்கிய நாடுகள் சபையும் போலீஸ் தரப்பும் தெரிவித்தன.
தாங்கள் மீண்டும் துன்புறுத்தப்படவோ இல்லை நாடுகடத்தப்படவோ வாய்ப்பு இருப்பதால் சாட்சி சொல்ல பயப்படுவதாக சில பெண்கள் கூறுகின்றனர்.

ஆனால் பிபிசி விசாரணைக்குப் பிறகு, கரகோஸைப் பற்றி புகார் அளிக்க இரண்டு பெண்கள் முன்வந்தனர் என்பதும், அவர்களின் சாட்சியத்தின் விளைவாக அவர் மீது பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதும் தெரியவந்துள்ளது. அவர் இப்போது விசாரணைக்காக சிறையில் உள்ளார்.
அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பு, மதீனா, நாடா, பதோல் மற்றும் தொண்டு நிறுவன ஊழியர்களின் குற்றச்சாட்டுகளை திரு. கரகோஸிடம் முன்வைத்தோம். அவை அனைத்தையுமே மறுத்த அவர், இதெல்லாம் உண்மையெனில் இன்னும் பல பெண்கள் முன்வந்திருக்க வேண்டுமே என்று கேட்கிறார்.
"மூன்று, ஐந்து, பத்து பேர் வரை குற்றம் சாட்டலாம். இது நடப்பதுதான். ஒருவேளை 100, 200 பேர் என்மீது குற்றம் சொல்லியிருக்கிறார்கள் என்று நீங்கள் சொன்னால் பரவாயில்லை. அப்படியிருந்தால் ஒருவேளை நான் இதைச் செய்திருப்பேனோ என்று நீங்கள் சந்தேகப்படலாம்," என்று சொல்கிறார் அவர்.
தனக்கு நீரிழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் இருப்பதாகக் கூறும் அவர், 2016-ஆம் ஆண்டு அவரது இடது விதைப்பையை அகற்ற நடந்த அறுவை சிகிச்சையின் மருத்துவ அறிக்கையையும் காட்டுகிறார். அதனால், தன்னால் உடல் உறவு வைத்துக்கொள்ள முடியாது என்றும் சொல்கிறார்.
கரகோஸ் செய்துகொண்டிருக்கும் இந்த சிகிச்சை என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இஸ்தான்புல் பல்கலைக்கழகத்தில் சிறுநீரகவியல் பேராசிரியாரகவும், ஆண்கள் பாலியல் ஆரோக்கிய வல்லுநராகவும் இருக்கும் அதெஸ் கடியோக்லுவிடம் கேட்டோம். அதற்கு அவர், "ஒரு விதைப்பையை எடுத்துவிட்டாலும், டெஸ்டோஸ்டிரோன் (testosterone) அளவு 90% இருக்கும். அதனால் இது ஒருவரின் பாலியல் வாழ்க்கையைப் பாதிப்பதில்லை." என்று கூறினார்.
இதை கரகோஸிடம் கூறியபோது, "என்னால் அது முடியாது" என்று வலியுறுத்துகிறார்.
அதேசமயம் இந்த பாலியல் துன்புறுத்தலுக்கான உந்துதல் பாலியல் தேவையாக இருக்கவேண்டிய அவசியம் இல்லாமல், ஆதிக்கம் மற்றும் கட்டுப்படுத்துதலை மையமாகக் கொண்டதாகவும் இருக்கலாமே என்ற வாதத்தையும் அவர்முன் வைத்தோம். அதற்கு, "எனக்கு அப்படியான உந்துதல்கள் இல்லை. நாங்கள் செய்ததெல்லாம் நல்ல விஷயங்களே. ஆனால், அதற்குப் பலனாக எனக்கு இதுவே கிடைக்கிறது. மூன்று அல்லது ஐந்து பேரின் வார்த்தைகளுக்காக நாங்கள் எங்களையே சோர்ந்துபோக விடப்போவதில்லை." என்று கூறினார் கரகோஸ்.
தன்மீது குற்றம் சுமத்திய பெண்கள் மீது போதைப்பொருள்கள் விற்றதற்காகவும், வேறு சட்ட விரோத செயல்கள் செய்ததற்காகவும் தான் போலீஸில் புகார் செய்திருந்ததாகவும், அதற்குப் பழிவாங்கவே இவர்கள் தன்மீது குற்றம் சுமத்துவதாகவும் கரகோஸ் கூறுகிறார். தன்மீது போடப்பட்ட தவறான வழக்குகள் ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டுவிட்டதையும் அவர் குறிப்பிடுகிறார்.
ஆனால் இதில் சம்பந்தப்பட்ட பெண்கள் அனைவருமே சட்டவிரோத செயல்கள் செய்ததை மறுக்கிறார்கள். அவர் அப்படிச் செய்ததற்கான ஆதாரங்கள் எதையும் நம்மால் பார்க்க முடியவில்லை.
இந்த மார்ச் மாதம் தன் அறக்கட்டளையின் பெயரை மாற்றியிருக்கிறார் கரகோஸ். பிர் எவிம் அசேவி தெர்னெகி (என் வீட்டு உணவு சங்கம்) என்று பெயர் வைத்து அதை அதிகாரபூர்வமாக அறக்கட்டளையாக பதிவு செய்திருக்கிறார். இதற்கு முன் அவர் இப்படிச் செய்ததில்லை.
வேறோரு வீட்டுக்குப் போய்விட்ட மதினா அவருடைய தொலைபேசி எண்ணை மாற்றிவிட்டார். ஆனால், அவர் இன்னும் கரகோஸை ஒரு கெட்ட கனவாகப் பார்ப்பதாகவே சொல்கிறார். "என்னால் எந்த ஆணையும் நம்ப முடியவில்லை. நாம் மிகவும் விலகியிருக்கிறேன். மன அழுத்தத்தில் இருக்கிறேன். இறந்துவிடவேண்டும் என்ற எண்ணம் கூட இருந்தது. என் குழந்தைகள் தான் நான் உயிரோடு இருக்க ஒரே காரணம்" என்று கூறினார் அவர்.
தன் மகனின் வாழ்க்கையைக் காப்பற்றுவதில் கவனம் செலுத்தியகாக் கூறினார் மதினா. ஆனால், அந்தச் சிறுவன் 7 வயதில் இறந்துவிட்டான்.
துருக்கியில் 10 ஆண்டுகளாக வசித்து வரும் அவர் குடும்பம் வேறொரு நாட்டுக்குக் குடிபெயர ஒப்புதல் கிடைத்துவிட்டது.
*பாதுகாப்பு கருதி மதினா மற்றும் நாடாவின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு








