பருவமழையை கணிக்க வேளாண் பல்கலைக்கழகம் பயன்படுத்தும் அதிநவீன தொழில்நுட்பம்

    • எழுதியவர், சேவியர் செல்வகுமார்
    • பதவி, பிபிசி தமிழ்

கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் காலநிலை ஆராய்ச்சி மையம், ஒவ்வோர் ஆண்டும் இரு பருவமழைகளையும் கணித்துச் சொல்கிறது.

இந்திய வானிலை ஆய்வு மையம் ரேடார் உள்ளிட்ட அதிநவீன வசதிகளுடன் காலநிலையைக் கணித்து வரும் நிலையில், வேளாண் பல்கலைக்கழகத்தின் காலநிலை ஆராய்ச்சி மையம், பசிபிக் கடலின் மேற்பரப்பு வெப்பத்தையும், காற்றழுத்த குறியீட்டையும் அடிப்படையாகக் கொண்டு ஆஸ்திரேலியன் ரெயின்மேன் V.4.3 என்ற மென்பொருளை வைத்து, மழையைக் கணித்து வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக, இந்தக் கணிப்பு 70–80 சதவிகிதம் அளவுக்கு சரியாக இருப்பதை கடந்த கால கணிப்புகளும், மழையளவு தொடர்பான புள்ளிவிவரங்களும் உறுதி செய்துள்ளன. இதை வைத்து மழை அளவுடன் பயிர் பாதுகாப்புக்கான அறிவுரைகளை விவசாயிகளுக்கு இந்த மையம் வழங்குகிறது.

தமிழ்நாட்டுக்கு ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாதங்களுக்கு தென்மேற்குப் பருவமழையும், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான 3 மாதங்களுக்கு, வடகிழக்குப் பருவமழையுமாக இரண்டு பருவ காலங்களில் மழை கிடைக்கிறது.

சமீபத்திய ஆண்டுகளில் பெய்துள்ள மழை அளவின் புள்ளிவிவரங்கள்படி, வடகிழக்குப் பருவமழையே தமிழகத்துக்கு அதிகளவு மழை கொடுத்து வருகிறது.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் காலநிலை ஆராய்ச்சி மையம் தரும் தரவுகளின்படி, தமிழகத்தில் பெய்யும் மழையில் 50–55 சதவிகிதம் வடகிழக்குப் பருவமழையில் இருந்து கிடைத்து வருகிறது.

''தமிழகத்துக்கு ஆண்டுக்கு 925–950 மி.மீ. வரை சராசரி மழை கிடைக்கிறது. மலைப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழையும், கடற்கரைப் பகுதிகளில், புயல் மற்றும் காற்றழுத்தத்தால் வடகிழக்குப் பருவமழையும் அதிகமாகப் பெய்யும். மலைப் பகுதிகளில் குறிப்பிட்ட சில பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை மிக அதிகமாகப் பெய்யும்.

வால்பாறையில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் (சின்கோனா) ஆண்டுக்கு 4 ஆயிரம் மி.மீ. மழை பெய்யும். மலையை ஒட்டிய அணைகளுக்கு தென்மேற்குப் பருவமழை மிக முக்கியம்,'' என்கிறார் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி மையத்தின் தலைவர் சத்தியமூர்த்தி.

தென்மேற்கு பருவமழை – மாவட்ட வாரியாக கணிப்பு

இந்த மையம், ஆண்டுதோறும் இரண்டு பருவமழைகளையும் கணித்து வருகிறது. இந்த ஆண்டுக்கு தென் மேற்குப் பருவமழை எந்த மாவட்டத்தில் எந்த அளவில் பெய்யும் என்ற கணிப்பை, இந்த மையம் தற்போது வெளியிட்டுள்ளது.

தமிழகத்தை 7 காலநிலை மண்டலங்களாக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் பிரித்து வைத்துள்ளது. அந்த 7 மண்டலங்களில், கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, நாமக்கல், கரூர், தென்காசி, திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில் சராசரிக்கு ஒட்டிய மழையும், மற்ற மாவட்டங்களில் சராசரி மழையும் எதிர்பார்க்கப்படுவதாகக் கூறியுள்ளது காலநிலை ஆராய்ச்சி மையம்.

இந்திய வானிலை ஆய்வு மையம், செயற்கைக் கோள், ரேடார் உதவிகளுடன் மழை அளவையும், வெப்பநிலையையும் கணித்து தகவல் வெளியிட்டு வருகிறது. தனியார் வானிலை ஆய்வாளர்களும் வெவ்வேறு விதமான உபகரணங்கள் மற்றும் மென்பொருள்களை வைத்து இவற்றைக் கணித்துச் சொல்கிறார்கள்.

இதில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் காலநிலை ஆராய்ச்சி மையம், ஆஸ்திரேலியாவில் இருந்து பெறப்பட்ட ரெயின்மேன் என்ற மென்பொருளை வைத்து (Australian Rainman International V.4.3 Software) மழையளவைக் கணித்து வருகிறது. தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் V.4.3. என்பது இந்த மென்பொருளின் லேட்டஸ்ட் வெர்ஷன் என்கிறார்கள் மையத்தின் விஞ்ஞானிகள்.

இந்த மென்பொருள் செயல்படுவது குறித்து பிபிசி தமிழிடம் விளக்கிய மையத்தின் தலைவரும், விஞ்ஞானியுமான சத்தியமூர்த்தி, ''பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள கடல் பகுதியின் மேற்பரப்பு நீரின் வெப்பநிலையையும், தென் மண்டலத்தில் உள்ள காற்றழுத்தத்தின் குறியீடுகளையும் ஒப்பிட்டு பருவமழை கணிக்கப்படுகிறது. கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் இவை இரண்டும் கணக்கிடப்பட்டு, அதன் அடிப்படையில் தென்மேற்குப் பருவமழை கணிக்கப்பட்டுள்ளது'' என்றார்.

இவ்விரு அளவீடுகளுடன் கடந்த 30–40 ஆண்டுகளில் ஆண்டுவாரியாகப் பெய்த மழை அளவு குறித்த தரவுகளும் இந்த மென்பொருளில் பதிவேற்றப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில், கடலின் மேற்பரப்பு நீரின் வெப்பநிலையும், காற்றழுத்ததின் குறியீடும் இந்த அளவில் இருந்தால் இவ்வளவு மழை பெய்யும் என்று ரெயின்மேன் மென்பொருள் கணித்துச் சொல்கிறது.

ஆஸ்திரேலியாவின் மழையளவை பெருமளவில் துல்லியமாகக் கணிக்கும் இந்த ரெயின்மேன் மென்பொருள், தமிழகத்தில் 60–70 சதவிகிதம் வரை சரியாகக் கணித்துச் சொல்வதையும் காலநிலை ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் விளக்கினர்.

உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட நாளில் கோவையில் சமவெளிப் பகுதியில் 210 மி.மீ. மழை பெய்யும் என்று கணித்த நிலையில், 185 மி.மீ. மழை பெய்துள்ளது. அதாவது கணிப்பைவிட 15 சதவிகிதம் மட்டுமே மழை குறைந்துள்ளது.

கத்தரி வெயிலுக்கு பதிலாக மழை

இந்த மென்பொருளை வைத்து மலைப்பகுதிகளைவிட சமவெளிப் பகுதிகளின் மழையளவை நன்கு கணிக்க முடியும் என்கிறார் சத்தியமூர்த்தி.

மேலும், ஒவ்வொரு 3 ஆயிரம் கி.மீ. அளவுக்கான வானிலையை வெவ்வேறு தொழில்நுட்பங்களில் ஆராய்ந்து பல விதமான வடிவங்களில் கணிக்கும் உலகளாவிய சில ஏஜென்சிகள், ஒவ்வொரு 150 கி.மீ. துாரத்துக்குமான வானிலை கணிப்புகளைக் கொடுப்பதாகக் கூறுகிறார்.

அவற்றை நம்மிடம் உள்ள தரவுகளை வைத்து உள்ளூருக்குத் தகுந்த அளவில் கணித்துச் சொல்லும் பணியையே காலநிலை ஆராய்ச்சி மையம் செய்து வருவதாகச் சொல்கிறார்.

''ஒவ்வொரு 5 அல்லது 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை கடற்கரைப் பகுதி கூடுதல் வெப்பமடையும். கடற்பரப்பின் வெப்பம் அதிகரிக்கும்போது, அந்த வெப்பம் காற்றழுத்தத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். உதாரணமாக தென் பசிபிக் கடற்கரைப் பகுதியை எல்நினோ 3.4 மண்டலம் என்று சொல்வோம். அங்கு சூடாகும்போது, ஒட்டுமொத்த காற்றழுத்தமும் (Trade Wind) மாறி, வழக்கத்திற்கு மாறாக மழைப்பொழிவு இருக்கும். அதன் அடிப்படையில், இந்த ஆண்டில் தமிழகத்தின் மழையளவில் பெரிய மாற்றம் இருக்காது'' என்றார் விஞ்ஞானி சத்தியமூர்த்தி.

மழை குறைந்து வறட்சி நிலவும் ஆண்டுகளைத்தான் எல்நினோ என்று சொல்வதாகக் கூறும் காலநிலை ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள், முன்பு ஆறில் இருந்து ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை வந்த எல்நினோ இப்போது 4–5 ஆண்டுகளுக்குள் வந்து விடுவதாகச் சொல்கிறார்கள். ஆனால், இந்த ஆண்டு எல்நினோ ஆண்டு இல்லை என்று கணிக்கப்பட்டு இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

மழை பெய்யும் நாட்கள் குறைந்து, ஒரே நாளில் அதிக மழை பெய்வதற்கும், மேகவெடிப்பு போன்ற நிகழ்வுகள் அதிகரிப்பதற்கும், சமீபத்தில் (மே 25) ஒரே நாளில் அவலாஞ்சியில் 353 மி.மீ. மழை பெய்ததற்கும், கடந்த ஆண்டில் கோடையில் 41 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கோவையில் வெப்பநிலை உயர்ந்ததற்கும் காலநிலை மாற்றமே காரணம் என்கின்றனர்.

இந்த ஆண்டில் கத்தரி வெயில் அடிக்கும் மே மாதத்தில், அதிகளவு மழை பெய்வதும் காலநிலை மாற்றத்தின் வெளிப்பாடுதான் என்று கூறும் விஞ்ஞானி சத்தியமூர்த்தி, காலநிலையில் எதையும் துல்லியமாகக் கணிக்க முடியாது என்கிறார்.

'இதனால்தான் இது வந்தது என்று எதையும் சொல்ல முடியாது' என்பதுதான், கடந்த கால ஆராய்ச்சி மற்றும் அனுபவங்கள் தந்துள்ள பாடம் என்கிறார்.

ஆனால் உலகளாவிய மற்றும் இந்திய அளவிலுள்ள தரவுகளின் அடிப்படையில் வைத்துப் பார்க்கும்போது, எல்நினோ ஆண்டுகளில் வடகிழக்குப் பருவமழை மிகவும் அதிகமாக இருந்ததையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். துல்லிய கணிப்பு சாத்தியமில்லை என்பதால் தான் சராசரி மழையளவு, சராசரியை ஒட்டிய மழையளவு, சராசரிக்கு அதிகம் என்ற 3 அளவில் இந்த மையத்தின் கணிப்புகள் உள்ளடக்கப்படுவதாகவும் விஞ்ஞானிகள் விளக்குகின்றனர்.

தேசிய அளவில் பருவமழை குறித்த முன்னறிவிப்பை வெளியிடுவதற்காக தேசிய பருவமழை திட்டம் (National Monsoon Mission) மத்திய அரசால் பெரும் பொருட்செலவில் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் மழையளவு மற்றும் காலநிலையைத் துல்லியமாகக் கணிப்பதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது.

வானிலை நிகழ்வுகளை முன்னறிவிப்பதற்கான கட்டமைப்புகளை உருவாக்குவதில் இந்தத் திட்டம் முக்கியப் பங்காற்றி வருகிறது. இந்தத் திட்டத்தில் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வரும் இந்திய வானிலை ஆய்வு மையம், மாநிலங்கள், மண்டலங்கள் வாரியாக முன்னறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

விவசாயிகளுக்கு உதவும் செயலி

ஆனால், குறுகிய வட்ட அளவில் வானிலையைக் கணித்து பயிர் பாதுகாப்புக்கான அறிவுரைகளையும் இணைத்துச் சொல்வதால் மட்டுமே, விவசாயிகளுக்கு உதவ முடியும் என்கிறார் காலநிலை ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி தீபாகரன்.

இப்போதும் இந்திய வானிலை ஆய்வு மையத்தால் மாவட்ட வாரியான மழையைக் கணிக்க முடியும் நிலையில், விவசாய நிலங்களைப் பொறுத்தவரை 2 கி.மீ. துாரத்துக்கு மழை அளவு மாறுபடும் என்பதால் இன்னும் குறுகிய அளவில் இதைக் கணிப்பது அவசியம் என்கிறார்.

மழை அளவைக் கணிப்பதற்கு ஆஸ்திரேலியாவின் ரெயின்மேன் மென்பொருளைப் பயன்படுத்தும் காலநிலை ஆராய்ச்சி மையம், ஒவ்வொரு 6 நாட்களுக்குமான வானிலையைக் கணிப்பதற்கு மற்றுமொரு வெளிநாட்டு மென்பொருளைப் (WRF-Weather Research and Forecast) பயன்படுத்துகிறது.

இந்திய வானிலை ஆய்வு மையம் ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைதோறும், அடுத்த 5 நாட்களுக்கான வானிலை கணிப்புகளை காலநிலை ஆராய்ச்சி மையத்திற்குப் பகிர்கிறது. அதை ஆதாரமாகக் கொண்டு, மென்பொருளின் உதவியுடன் ஒவ்வொரு 6 நாட்களுக்குமான வானிலை கணிப்புகளை வெளியிடுகிறது.

வேளாண் பல்கலைக்கழகத்தின் இணைய முகவரியில், மாவட்டம், வட்டாரம் மற்றும் கிராமத்தைத் தேர்வு செய்தால், கிராம வாரியாக எதிர்பார்க்கப்படும் மழையளவு, அதிகபட்சம், குறைந்தபட்ச வெப்பநிலை, காற்றின் வேகம் போன்ற விவரங்கள் தரப்படுகின்றன.

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு வரை, 9 கி.மீ. துாரத்துக்கு ஒரு கணிப்பு என்று இருந்ததை, தற்போது 3 கி.மீ. அளவில் கணித்துச் சொல்வதாகக் கூறுகிறார் தீபாகரன்.

அமெரிக்காவில் தானியங்கி வானிலை நிலையங்கள் (Automatic Weather Station) இருப்பதை, கடந்த 2007ஆம் ஆண்டில் சென்று பார்த்து வந்த காலநிலை ஆராய்ச்சி மைய விஞ்ஞானி ஜெகநாதன்தான், தேசிய வேளாண் மேம்பாட்டுத் திட்டத்தின் (NADP) கீழ், இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் இந்த நிலையங்களை உருவாக்கும் திட்டத்தைத் துவக்கி வைத்ததாக விஞ்ஞானிகள் நினைவுகூர்கின்றனர்.

அதன் அடிப்படையில், கடந்த 2008ஆம் ஆண்டில் துவங்கி, 2013ஆம் ஆண்டுக்குள் 385 தானியங்கி காலநிலை நிலையங்கள் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன.

இதன் பயனாக, அப்போது வட்டார அளவில் முன்னறிவிக்கப்பட்ட வானிலை கணிப்புளை இப்போது தமிழகத்தில் உள்ள 18,585 வருவாய் கிராமங்கள் அளவுக்குக் கணித்து, விவசாயிகளுக்குத் தகவல் பகிரப்படுவதாகவும் விஞ்ஞானி தீபாகரன் தெரிவித்தார்.

வெறும் மழை அளவு மற்றும் காலநிலையை மட்டும் விளக்குவதால் விவசாயிகளுக்குப் பயனில்லை என்பதால், பயிர் பாதுகாப்பு சார்ந்த தகவல்களையும் இதனுடன் இணைத்து, அதை விவசாயிகளிடம் பகிர்வதற்காக மொபைல் செயலியையும் காலநிலை ஆராய்ச்சி மையம் உருவாக்கியுள்ளது.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக தானியங்கி வானிலை அறிவுரை என்ற இந்தச் செயலி (Tamilnadu Automated Agrovet Advisory Service– TNAU ASS) கடந்த 2018ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆண்ட்ராய்டு ஃபோன்களில் இதைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

தமிழ்நாட்டில் 85 லட்சம் விவசாயிகள் இருப்பதாக வேளாண் பல்கலைக் கழகம் கணக்கிட்டுள்ளது. இந்தச் செயலியில் இதுவரை 6.15 லட்சம் விவசாயிகள் பதிவு செய்திருப்பதாகச் சொல்கிறார், இதை உருவாக்கியதில் முக்கியப் பங்காற்றிய விஞ்ஞானி தீபாகரன்.

இதை 20 லட்சம் விவசாயிகள் பயன்படுத்தும் வகையில் ஊக்குவிப்பதற்கான முயற்சிகளை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

''இதில் மழை அளவு மற்றும் காலநிலையைக் கணிப்பதுடன் அதற்கேற்ப பயிரைப் பாதுகாக்கும் வழிமுறையும் விளக்கப்படுகிறது. மொத்தம் 108 வகையான பயிர்களுக்கு இந்த அறிவுரை தரப்படுகிறது. நிலம் உழுவது, விதைப்பது, வளர் பருவம், பூக்கும் பருவம், காய்க்கும் பருவம், அறுவடை என 6 விதமான பருவங்களுக்கு 54 விதமான வானிலை அமைப்பின் அடிப்படையில் ஒவ்வொரு பயிருக்கும் எப்போது தண்ணீர் பாய்ச்ச வேண்டும், எந்த வகை உரமளிக்க வேண்டும் என்பன போன்ற அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன'' என்று இந்தச் செயலி செயல்படும் விதத்தை தீபாகரன் விளக்கினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு