You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரஷ்ய போர் விமானங்கள் மீது டிரோன் மூலம் திடீர் தாக்குதல் நடத்திய யுக்ரேன் - காணொளி
ஞாயிறன்று ரஷ்யாவின் விமான தளங்கள் மீது நடத்திய ட்ரோன் தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் அழிக்கப்பட்டதாக யுக்ரேன் கூறியுள்ளது.
யுக்ரேனின் எஸ்பியூ (SBU) பாதுகாப்பு அமைப்பால் நடத்தப்பட்ட "ஸ்பைடர்ஸ் வெப் (Spiders Web)" என்று அழைக்கப்படும் இந்த ஆபரேஷனில் 117 டிரோன்கள் பயன்படுத்தப்பட்டதாக யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி தெரிவித்தார்.
யுக்ரேனின் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ள ரஷ்யா, இதனை பயங்கரவாத செயல் என விமர்சித்துள்ளது. எனினும், பாதிப்பு குறித்த விவரத்தை ரஷ்யா வெளியிடவில்லை.
யுக்ரேனின் எஸ்பியூ (SBU) பாதுகாப்பு அமைப்பால் நடத்தப்பட்ட "ஸ்பைடர்ஸ் வெப் (Spiders Web)" என்று அழைக்கப்படும் இந்த ஆபரேஷனில் 117 டிரோன்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், ரஷ்யாவின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த, குரூயிஸ் ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தக் கூடிய 34% போர் விமானங்கள் குறிவைக்கப்பட்டதாக யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதல்களை ஒருங்கிணைக்க ஒன்றரை வருடங்கள் ஆனதாக எஸ்பியூ வட்டாரங்கள் பிபிசியிடம் தெரிவித்தன. இதில் டிரோன்கள் மரப்பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டு, லாரிகள் மீது தூரத்தில் இருந்தே இயக்கக்கூடிய கூரைகள் உடன் விமானப்படை தளங்கள் அருகே கொண்டு வரப்பட்டு சரியான நேரத்தில் பயன்படுத்தப்பட்டதாக அது கூறுகிறது.
யுக்ரேனில் இருந்து ஆயிரக்கணக்கான மைல் தொலைவில் உள்ள நான்கு ரஷ்ய விமானப்படை தளங்கள் தாக்கப்பட்டதாக பிபிசியிடம் ஞாயிற்றுக்கிழமை எஸ்பியூ தெரிவித்தது.
தாக்குதலுக்கு உள்ளானதாக யுக்ரேன் தெரிவித்துள்ள இடங்கள்
- இர்குட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள பெலாயா, சைபீரியா
- மர்மன்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள ஒலென்யா, ரஷ்யாவின் வட கிழக்கு எல்லை
- மத்திய ரியாசான் பிராந்தியத்தில் உள்ள தியாகிலெவோ
- மத்திய இவாநோவா பிராந்தியத்தில் உள்ள இவாநோவா
தாக்குதலுக்கு உள்ளான ரஷ்ய போர் விமானங்களில் அணு ஆயுதங்களைத் தாங்கிச் செல்லும் Tu-95, Tu-22M3 மற்றும் A-50 போர் விமானங்களும் அடங்கும் என எஸ்பியூ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஒட்டுமொத்த ஆபரேஷனும் "தளவாட ரீதியில் மிகவும் சவால் நிறைந்தது" என அவர்கள் விவரித்துள்ளனர்.
"எஸ்பியூ முதலில் எஃப்பிவி டிரோன்களை ரஷ்யாவுக்குள் கடத்திச் சென்றது, அதன் பின்னர் மரப்பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன. ரஷ்ய எல்லைக்குள் நுழைந்த பிறகு இந்த டிரோன்கள் இந்த மரப் பெட்டிகளின் கீழ் மறைத்து வைக்கப்பட்டன. அவை சரக்கு வாகனங்களில் வைக்கப்பட்டன" எனத் தெரிவிக்கப்பட்டது.
மேலும் "சரியான நேரத்தில் தொலைவில் இருந்தே இந்த மரப்பெட்டிகள் திறக்கப்பட்டு ரஷ்ய போர் விமானங்களைத் தாக்க டிரோன்கள் புறப்பட்டுச் சென்றன" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இர்குட்ஸ்க் கவர்னர் இகோர் கோப்சேவ் சைபீரியாவின் ஸ்ரெட்னியில் உள்ள பெலாயா ராணுவத் தளத்தை தாக்கிய டிரோன்கள் ஒரு லாரியில் இருந்து தான் ஏவப்பட்டன என்பதை உறுதி செய்தார்.
தாக்குதலுக்கு உள்ளான இடம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லையென்றும் கோப்சேவ் தனது டெலிகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
இதர தாக்குதல்களும் இதே போல லாரிகளில் இருந்து கிளம்பிய டிரோன்களில் இருந்து தான் நடந்தன என்று ரஷ்ய ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.
தாக்குதல் எப்படி நடந்தது என்பதை காணொளியில் பார்க்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு