'2025 அல்ல 2026': ராஜ்யசபா சீட்டை முன்னிறுத்தி அதிமுக - தேமுதிக ஆடும் அரசியல் சதுரங்கம்

    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்

'தே.மு.தி.கவுக்கு அடுத்த ஆண்டு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்படும்' என அ.தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

'எல்லா கட்சிகளும் தேர்தலை நோக்கியே அரசியல் செய்கின்றன. எங்கள் நிலைப்பாடும் அதுவாகவே இருக்கும்' எனக் கூறுகிறார், தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். தே.மு.தி.கவுக்கு மாநிலங்களவை இடத்தை அ.தி.மு.க ஒதுக்காதது ஏன்? பின்னணியில் என்ன நடந்தது?

தமிழ்நாட்டில் ஜூன் 19 அன்று மாநிலங்களவை தேர்தல் நடைபெற உள்ளதாக, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தி.மு.கவில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான வைகோ, பி.வில்சன், எம்.எம்.அப்துல்லா, சண்முகம் ஆகியோரின் பதவிக் காலம் ஜூலை மாதம் நிறைவடைய உள்ளது.

அ.தி.மு.க சார்பாக மாநிலங்களவைக்கு தேர்வான அன்புமணி ராமதாஸ், சந்திரசேகர் ஆகியோரின் பதவிக்காலமும் முடிவடைகிறது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் தி.மு.கவுக்கு உள்ள உறுப்பினர்களின் அடிப்படையில் நான்கு மாநிலங்களவை இடங்களுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பி.வில்சன், கவிஞர் சல்மா, சேலம் எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் அக்கட்சியின் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதியின் அடிப்படையில் மக்கள் நீதி மய்யத்துக்கு ஓர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக, தி.மு.க தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அந்த இடத்தில் கமல்ஹாசன் போட்டியிட உள்ளார்.

அதேநேரம், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதியின்படி, தங்களுக்கு ஒரு மாநிலங்களவை இடத்தை அ.தி.மு.க ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா முன்வைத்து வருகிறார்.

"வார்த்தை தான் முக்கியம்" - பிரேமலதா

2024 நாடாளுமன்றத் தேர்தலில் தே.மு.தி.கவுக்கு ஐந்து இடங்கள் ஒதுக்கப்பட்டன. "அப்போது ராஜ்யசபா சீட் தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது" என செய்தியாளர் சந்திப்பில் பிரேமலதா கூறியிருந்தார்.

இதனை ஏற்க மறுத்த அ.தி.முக. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "தே.மு.தி.கவுக்கு அப்படி எந்த வாக்குறுதிகளும் வழங்கப்படவில்லை" எனக் கூறினார்.

இதற்குப் பதில் அளித்த பிரேமலதா, "ஜனவரி 9 அன்று கடலூரில் எங்கள் கட்சியின் மாநாடு நடைபெற உள்ளது. அப்போது எங்கள் நிலைப்பாட்டை அறிவிப்போம்" எனக் கூறியவர், "பொறுமை கடலினும் பெரிது. பொறுத்திருங்கள்" என்று மட்டும் பதில் அளித்தார்.

இதன்பிறகும் அ.தி.மு.க தரப்பில் இருந்து பதில் எதுவும் வரவில்லை. மே 30 அன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, "தி.மு.க கூறியபடி கமலுக்கு ராஜ்யசபா சீட் வழங்கியுள்ளனர். அரசியலில் நம்பிக்கை தான் முக்கியம். வார்த்தை தான் முக்கியம். அப்போது தான் மக்கள் அவர்களை நம்புவார்கள்" எனக் கூறினார்.

தே.மு.தி.கவுக்கு ஒருமுறை வரவிருந்த ராஜ்யசபா வாய்ப்பை அன்புமணிக்கு கொடுத்துவிட்டதாகக் கூறிய பிரேமலதா, "மற்றொரு முறை ஜி.கே.வாசனுக்கு அளித்தனர். அதை நாங்கள் ஏற்றுக் கொண்டோம். ஆகவே, முடிவு எடுத்தபடி ராஜ்யசபா சீட்டை தர வேண்டியது அ.தி.மு.கவின் கடமை" எனவும் தெரிவித்தார்.

மே 31 அன்று எடப்பாடி பழனிசாமியிடம் இதுதொடர்பாக செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியபோது, அவர் பதில் எதுவும் கூறவில்லை. இந்தநிலையில், தே.மு.தி.கவுக்கு அடுத்த ஆண்டு ராஜ்யசபா சீட் வழங்கப்பட உள்ளதாக அ.தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

"அது 2025 அல்ல... 2026"

ஞாயிற்றுக்கிழமையன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய கே.பி.முனுசாமி, "அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க தொடர்கிறது. இரண்டு ராஜ்யசபா இடங்களில் அ.தி.மு.கவே போட்டியிடுகிறது" எனக் கூறினார்.

செங்கல்பட்டு மாவட்ட அ.தி.மு.க அவைத் தலைவர் தனபால் மற்றும் வழக்கறிஞர் ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோர் போட்டியிட உள்ளதாகவும் அவர் அறிவித்தார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, "தே.மு.தி.கவுக்கு ராஜ்யசபா சீட் உறுதி செய்யப்பட்டது. அதுதொடர்பாக கடிதம் மூலமாக கையெழுத்துப் போட்டுக் கொடுத்துள்ளனர். தற்போது அது 2025 அல்ல, 2026 ஆம் ஆண்டு வழங்குவதாக அறிவித்துள்ளனர்" என்றார்.

"2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது ஒப்பந்தம் கையெழுத்தானபோது, வருடம் குறிப்பிடப்படவில்லை. அதைப் பற்றிக் கேட்டபோது, 'வருடம் எழுதித் தரும் வழக்கம் இல்லை. உங்களுக்குத் தருவோம்' என எடப்பாடி பழனிசாமி கூறினார். தற்போது எங்கள் நிலைப்பாட்டை கடலூர் மாநாட்டில் அறிவிப்போம்" எனவும் பிரேமலதா தெரிவித்தார்.

கூட்டணிக்கு பாதிப்பா?

"சீட் கொடுக்கும் அளவுக்கு தே.மு.தி.கவுக்கு முக்கியத்துவம் உள்ளதா என்பது வேறு விஷயம். ஆனால், அதை கௌரவப் பிரச்னையாக அவர்கள் பார்த்தால் கூட்டணியில் விளைவுகளை ஏற்படுத்தும்" என்கிறார், மூத்த பத்திரிகையாளர் சிகாமணி திருப்பதி.

"இரண்டு சதவீத வாக்குகள் உள்ள கட்சியாக இருந்தாலும் சட்டமன்றத் தேர்தலில் அதன் முக்கியத்துவம் தேவைப்படும்" எனக் கூறும் அவர், "2026 சட்டமன்றத் தேர்ரதலில் மிகப் பெரிய கூட்டணியை அமைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி விரும்பினால் இவையெல்லாம் சரிசெய்யப்பட வேண்டும்" எனவும் குறிப்பிட்டார்.

ராஜ்யசபா தேர்தல் தொடர்பாக கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினார்.

அன்புமணி, ஜி.கே.வாசனுக்கு கொடுத்து என்ன பயன்?

இதுதொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய அக்கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர், பெயர் குறிப்பிட விரும்பாமல் சில விவரங்களைத் தெரிவித்தார்.

" 2026 சட்டமன்றத் தேர்தலில் பா.ம.க, தே.மு.தி.க ஆகிய கட்சிகளுடனும் கூட்டணி அமைப்பது அ.தி.மு.கவுக்கு அவசியமானது. இதை நம்பியே கடந்த தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் பா.ம.க-வுக்கு தலா ஒரு ராஜ்யசபா இடத்தை அ.தி.மு.க ஒதுக்கியது. ஆனால், அவர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க பக்கம் நிற்கவில்லை" எனக் கூறினார்.

"அப்படியானால் கூட்டணிக் கட்சிகளுக்குக் கொடுப்பதால் என்ன பலன்?" என்ற கேள்வியை மூத்த நிர்வாகிகள் எழுப்பியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

"கூட்டணி அவசியம் என்ற நிலை இருக்கும்போது, அவர்களுக்கு இடங்களை ஒதுக்குவது சரியானது என்கிற கருத்தையும் சிலர் முன்வைத்தனர்" எனக் கூறிய அவர், "தற்போது கட்சியின் சின்னம் என்பது பெரிய பிரச்னையாக உள்ளது. அதுதொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன" எனக் கூறுகிறார்.

2 இடங்களிலும் அ.தி.மு.க போட்டி ஏன்?

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பெரும்பான்மையாக அவர் பக்கம் இருந்தது தான்" எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், "ராஜ்யசபாவில் அ.தி.மு.கவுக்கு தற்போது நான்கு ராஜ்யசபா உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக தர்மர் இருக்கிறார். அவர் இன்னமும் அ.தி.மு.கவில் இருந்து நீக்கப்படவில்லை.

மேட்டூர் சந்திரசேகரின் பதவிக்காலம் முடிந்துவிட்டால் அ.தி.மு.கவின் பலம் என்பது மூன்றாக சுருங்கிவிடும். தற்போது 2 பேர் மாநிலங்களவைக்குச் சென்றால் அ.தி.மு.கவின் பலம் ஐந்தாக மாறிவிடும்" எனவும் அவர் குறிப்பிட்டார்.

இரட்டை இலை தொடர்பாக, அ.தி.மு.க முன்னாள் நிர்வாகி புகழேந்தி உள்பட சிலர் தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்துள்ளதை சுட்டிக் காட்டிப் பேசிய அந்த நிர்வாகி, "சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இரட்டை இலைக்கு ஏதேனும் சிக்கல் வந்தால் அதிக இடங்களைக் கேட்பதற்கு பா.ஜ.க முன்வரலாம்.

சின்னத்தை ஒதுக்கீடு செய்யும்போது சட்டமன்ற, நாடாளுமன்றம், பொதுக்குழு உறுப்பினர்களின் பலத்தை தேர்தல் ஆணையம் கவனிக்கும். நாடாளுமன்றத்தில் அ.தி.மு.கவின் உறுப்பினர் பலம் சுருங்கிவிட்டால் அது கட்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என எடப்பாடி பழனிசாமி கருதுகிறார்" எனவும் குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக, மூத்த பத்திரிகையாளர் சிகாமணி திருப்பதியிடம் கேட்டபோது, "மாநிலங்களவையில் கூடுதல் இடங்கள் இருந்தால், மத்திய அரசு மசோதாக்களை தாக்கல் செய்யும்போது தங்கள் செல்வாக்கு கூடும் என்பது ஒரு காரணமாக உள்ளது. அந்த அடிப்படையில் அ.தி.மு.க போட்டியிடுகிறது" என்கிறார்.

தேர்தல் ஆணையத்திடம், நாடாளுமன்றத்தில் தங்கள் கட்சியின் பலம் என்ன என்பது குறித்துக் குறிப்பிடுவது முக்கியமானதாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அ.தி.மு.க வேட்பாளர்களின் பின்னணி

தற்போது அ.தி.மு.கவின் ராஜ்யசபா வேட்பாளர்களாக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க அவைத் தலைவர் தனபால் மற்றும் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோர் போட்டியிட உள்ளதாக அ.தி.மு.க அறிவித்துள்ளது.

பட்டியல் பிரிவு சமூகத்தைச் சேர்ந்த தனபால், 1991-96 அ.தி.மு.க ஆட்சியில் திருப்போரூர் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தார். 2001 முதல் 2006 வரை காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவராக இருந்தார்.

2006 ஆம் ஆண்டு மீண்டும் திருப்போரூர் தனித் தொகுதியில் போட்டியிட்டு, பா.ம.க வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். 2021 சட்டமன்றத் தேர்தலில் செய்யூர் தனித் தொகுதியில் போட்டியிடுவதற்கு மனு கொடுத்தார். ஆனால், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. தற்போது செங்கல்பட்டு, வாயலுர் ஒன்றிய கவுன்சிலராக தனபால் இருக்கிறார்.

ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஐ.எஸ்.இன்பதுரை, நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர். 2011-2016 அ.தி.மு.க ஆட்சியில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு பிளீடராக பணிபுரிந்தார்.

2016-2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்டார். இந்த தேர்தலில் 49 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் அப்பாவுவை அவர் தோற்கடித்தார்.

ஆனால், வாக்கு எண்ணிக்கையில் 203 தபால் வாக்குகள் எண்ணப்படவில்லை எனவும் சில சுற்றுகளில் பதிவான வாக்குகளில் முறைகேடு நடைபெற்றதாகவும் கூறி நீதிமன்றத்தில் அப்பாவு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

சாதிக் கணக்குகள் எதிரொலிக்குமா?

"வேட்பாளர் நியமனத்தில் பட்டியல் பிரிவு மற்றும் நாடார் சமூகத்துக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. காரணம், அ.தி.மு.க என்பது கவுண்டர், தேவர், வன்னியர் ஆகிய சமூகங்களை மையப்படுத்தி உள்ளதாக விமர்சனம் உள்ளது. அதை சரிசெய்யும் வகையில் சட்டமன்றத் தேர்தலை மையமாக வைத்து வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்" என்கிறார், பெயர் குறிப்பிட விரும்பாத அ.தி.மு.க நிர்வாகி ஒருவர்.

"ஆனால், சட்டமன்றத் தேர்தலில் இதுபோன்ற சாதிக் கணக்குகள் எதுவும் எதிரொலிப்பதற்கு வாய்ப்பில்லை" எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் சிகாமணி திருப்பதி.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை அந்தந்த பகுதிகளுக்கு வந்துள்ள திட்டங்கள், அரசின் செயல்பாடுகள் ஆகியவற்றைக் கணக்கிட்டு மக்கள் வாக்களிப்பார்கள்" எனவும் குறிப்பிட்டார்.

வேட்பாளர் தேர்வு, அ.தி.மு.கவின் ராஜ்யசபா கணக்கு ஆகியவை குறித்து அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வனிடம் பிபிசி தமிழ் பேசியது. "இந்த விவகாரம் குறித்து கருத்து எதையும் கூற விரும்பவில்லை" என்று மட்டும் அவர் பதில் அளித்தார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு