You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"அதிமுக கூட்டணியில் சேர ஆதவ் அர்ஜுனா அழைத்தார்" - சீமான் கூறியது என்ன? இன்றைய முக்கியச் செய்தி
இன்று, ஜூன் 1, ஞாயிறு அன்று, தமிழ் நாளேடுகள் மற்றும் இணைய ஊடகங்களில் வெளியான முக்கியச் செய்திகளின் தொகுப்பைக் காணலாம்.
துணை முதல்வராக்குவதாகத் தெரிவித்து, அதிமுக கூட்டணிக்கு தவெக தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா அழைத்ததாக, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார் என்று இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
"சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் தவெக கல்வி விருது விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி, விழாவுக்கான முன்னேற்பாடுகளை தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் கடந்த 29-ம் தேதி ஆய்வு செய்தனர்.
அப்போது "2024 மக்களவைத் தேர்தலில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை 10 பேரை வைத்துக்கொண்டு, 20 சதவீத வாக்கு வாங்கியிருக்கிறார். ஆனால், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை நம்பி யாரும் கூட்டணி வைக்க முன்வரவில்லை." என்று பொதுச் செயலாளர் ஆனந்திடம், ஆதவ் அர்ஜுனா பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது," என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் மறைந்த நடிகர் ராஜேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமானிடம் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "ஆதவ் அர்ஜுனா புரளி பேசுவதற்கெல்லாம் நான் கருத்துச் சொல்ல முடியுமா? இதே ஆதவ் அர்ஜுனாதான் என்னை அதிமுக கூட்டணிக்கு வருமாறும், துணை முதல்வர் ஆக்குவதாகவும் கூறினார். அதற்கெல்லாம் என்ன செய்யமுடியும்? என்று கூறினார்," என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு நேரில் சந்தித்துக் கொண்ட சகோதரர்கள்
தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலினும், அவருடைய மூத்த சகோதரரும் முன்னாள் மத்திய அமைச்சருமான முக அழகிரியும் பல ஆண்டுகள் கழித்து மதுரை டிவிஎஸ் நகரில், சனிக்கிழமை இரவு சந்தித்துக் கொண்டனர் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மதுரையில் நடந்த பேரணிக்குப் இந்த சந்திப்பு நடைபெற்றது.
"ஸ்டாலினை தன்னுடைய வீட்டிற்கு அழகிரி அழைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அழைப்பை ஏற்ற முக ஸ்டாலின் சனிக்கிழமை இரவு 10 மணி அளவில் அழகிரி வீட்டிற்கு சென்றார். அழகிரி மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்களை நேரில் சந்தித்துப் பேசிய ஸ்டாலின், அவர்களுடன் இரவு உணவை உட்கொண்டார். அமைச்சர்கள் யாரும் ஸ்டாலினுடன் வராத காரணத்தால் இது குடும்ப உறவுகளுக்குள் நிகழும் சந்திப்பாக அமைந்தது."
"அழகிரியின் வீட்டுக்கு முன்னாள் குவிந்திருந்த அவரின் ஆதரவாளர்கள் ஸ்டாலினை வரவேற்றனர். அவருக்கு பொன்னாடை போர்த்தி, செங்கோல் கொடுத்து வரவேற்றனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்டாலின்-அழகிரியின் சந்திப்பு இரண்டாம் முறையாக நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக, வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த துரை தயாநிதியை சந்திக்கச் சென்ற போது சகோதரர்களின் சந்திப்பு நிகழ்ந்தது.
2014-ஆம் ஆண்டு, மறைந்த திமுக தலைவர் மு கருணாநிதி மற்றும் கட்சித் தலைவர்கள் குறித்து விமர்சனம் செய்த காரணத்திற்காக அழகிரியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டார்.
2024, டிசம்பர் மாதம், அழகிரியுடன் திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட அவரின் ஆதரவாளர்கள் 9 பேரும், அழகிரியும், மன்னிப்பு கோரியும், கட்சியில் மீண்டும் இணைத்துக் கொள்ளும்படியும், கட்சித் தலைவர் முக ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர்," என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு