ஓய்வு பெற்ற பிறகு மகிழ்ச்சியாக இருக்க நீங்கள் செய்ய வேண்டிய முதலீடுகள்

    • எழுதியவர், IVB கார்த்திகேயா
    • பதவி, பிபிசிக்காக

தனிப்பட்ட நிதி மேலாண்மையில் அவசியம் கவனிக்க வேண்டியது ஓய்வூதிய திட்டமிடல் ஆகும்.

மக்கள்தொகை குறிப்பு முகமையின் கணக்கெடுப்பின் அடிப்படையில், தற்போதைய இந்திய மக்கள்தொகையில் 6 சதவீதம் பேர் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

2050ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை, 14 சதவீதத்தை எட்டும்.

மக்கள்தொகையின்படி, அடுத்த 30 ஆண்டுகளில் ஓய்வு பெறும் வயதை எட்டுபவர்களின் எண்ணிக்கை சுமார் 14 கோடி அதிகரிக்கும் என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அவர்களில் பெரும்பாலானோருக்கு ஓய்வூதிய வசதி ஏதுமில்லை. இப்போது பணியில் இருக்கும் தலைமுறைதான் ஓய்வூதியம் இல்லாத முதல் தலைமுறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புள்ளிவிவரங்கள் அனைத்தும் ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டமிடல் எவ்வளவு முக்கியம் என்பதைக் காட்டுகிறது.

ஓய்வூதிய திட்டமிடல் விஷயத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்:

  • சுகாதார காப்பீடு
  • குறைந்தபட்ச வருமானம்
  • பணவீக்கத்தை விட அதிக வருமானம் தரும் முதலீட்டு வழிகள்

1. மருத்துவக் காப்பீடு

தனிப்பட்ட நிதி மேலாண்மைக் கொள்கைகளில் காப்பீடுதான் முதல் படி என்று பல நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

ஏனெனில் மருத்துவச் செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

வேலை செய்யும் போது நிறுவனத்தால் வழங்கப்படும் சில மருத்துவக் காப்பீடு உள்ளது. அந்த வசதி கூட ஓய்வுக்குப் பிறகு கிடைக்காது.

மொத்த காப்பீட்டு பிரீமியம் வயதுக்கு ஏற்ப அதிகரிக்கிறது. ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு மருத்துவக் காப்பீடு பெறுவதும் கடினம். மேலும் சில நோய்கள் உள்ளவர்கள் மருத்துவ காப்பீடு பெற முடியாது.

இதுபோன்ற சூழ்நிலைகளில் மருத்துவக் காப்பீடு எடுப்பது மிகவும் அவசியமானது.

2. குறைந்தபட்ச வருமானம்

குறைந்தபட்ச வருமானம் என்பது நமது அன்றாடச் செலவுகளுக்குத் தேவைப்படும் தொகை. ஓய்வு பெற்ற பிறகு நமக்கு தேவைப்படும் இந்த வருமானம் அதிக ஆபத்து இல்லாத முதலீட்டில் இருந்து வர வேண்டும்.

நிலையான வைப்புத்தொகை (Fixed deposit) என்பது அத்தகைய தேவைகள் இருப்பவர்கள் தேர்வு செய்யும் பிரபலமான முதலீட்டு வடிவமாகும். நிரந்தர வட்டி விகிதத்தில் உங்களுக்கு குறிப்பிட்ட வருவாய் மாதந்தோறும் இந்த முதலீட்டின் மூலம் கிடைக்கும்.

இதனால் நிலையான வைப்புத்தொகையின் வருமானம் ஆபத்து இல்லாத தொகையாகும். ஆனால் அதற்குக் கிடைக்கும் வட்டி மிகக் குறைவு.

மேலும், நிலையான வைப்புத்தொகையில் ஈட்டப்படும் வருமானம் நமது வருமான வரி சட்டத்தின் கீழ் வருமானமாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு வரி பிடித்தம் செய்யப்படும். அரசாங்கப் பத்திரங்கள் (Government bonds) இந்தப் பிரச்னையை ஓரளவு தீர்க்கின்றன.

அரசாங்கப் பத்திரம் என்றால் என்ன?

தனது திட்டங்களை செயல்படுத்த தேவையான நிதியை திரட்ட சந்தையில் அரசு சார்பாக கடன் பத்திரங்கள் வெளியிடப்படும்.

உங்களின் பணத்தை பெற்றுக்கொள்ளும் அரசு, அதற்கு இணையாக ஒரு பத்திரத்தை உங்களுக்கு வழங்கும். இந்தப் பத்திரங்களில் முதலீடு செய்பவர்களுக்கு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை நிலையான வட்டி (fixed interest) கிடைக்கும்.

இது ஆபத்து இல்லாத முதலீட்டு முறையாகும். அரசு வழங்கும் பத்திரம் என்பதால், இதன்மீதான நம்பிக்கை அதிகமாக இருக்கும்.

மறுபுறம், உங்களிடமிருந்து பெறப்பட்ட தொகை வளர்ச்சித் திட்டங்களுக்காக இந்திய அரசு பயன்படுத்துகிறது.

ஆனால், அரசால் ஒவ்வொரு முறை தேவை ஏற்படும்போதும் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டுவது சாத்தியமில்லை.

உதாரணமாக, அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக கடன் பத்திரங்களை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை.

ஆனால், நெடுஞ்சாலை கட்டுமானம் அல்லது வீடு கட்டும் திட்டம் போன்ற சிறப்பு திட்டங்களுக்கு கடன் பத்திரங்கள் வழங்கப்படலாம்.

தற்போது கிடைக்கும் பல்வேறு பத்திரங்களைப் பார்ப்போம்.

தங்கப் பத்திரம்

இந்த வகையான பத்திரங்கள் முற்றிலும் தங்கத்தை அடிப்படையாகக் கொண்டவை. இதற்கான வட்டி தற்போதைய தங்கத்தின் விலையை விட 2.5% அதிகமாக இருக்கும்.

தங்கம் விலை அதிகரித்து வரும் இந்த நாட்களில் இது ஒரு நல்ல வாய்ப்பு. இந்திய ரிசர்வ் வங்கியால் வழங்கப்படும் இந்தப் பத்திரங்களின் வருவாய் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை முதலீட்டாளர்களின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது.

இந்த பத்திரங்கள் மூலம் கிடைக்கும் வருமானம், வருமான வரிக்கு உட்பட்டது. இவற்றை அனைத்து பொதுத்துறை வங்கிகளிலும் வாங்கலாம். ஓய்வு பெற்ற பிறகு நிலையான வருமானம் பெற விரும்புவோர் இதில் முதலீடு செய்யலாம்.

இந்திய ரிசர்வ் வங்கி, தங்கப் பத்திரங்களை அவ்வப்போது வெளியிடும். கடைசியாக இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த பத்திரங்களை ஆர்பிஐ வெளியிட்டது.

வருமான வரி விலக்கு பத்திரங்கள்

அதிக வருமான வரி செலுத்துவோருக்கு பயன் தரும் வகையில் இரண்டு வகையான பத்திரங்கள் உள்ளன.

நீங்கள் சில பத்திரங்களில் முதலீடு செய்தால், அதன்மூலமாக கிடைக்கும் வருமானத்திற்கு 80C பிரிவு மூலம் வரி விதிக்கப்படும்.

மறுபுறம், பூஜ்ஜிய வரிப் பத்திரங்கள் என்று பிரபலமாக அறியப்படும் பத்திரங்களின் மூலம் கிடைக்கும் வருமானம், வருமான வரிக்கு உட்பட்டது அல்ல. வருமான வரிக்கு உட்படாத இந்த பத்திரங்களுக்கு இயற்கையாகவே அதிக தேவை உள்ளது.

பணவீக்கத்தை வெல்லும் பத்திரங்கள்

இந்த வகையான பத்திரங்கள் பணவீக்கத்தையும் தாண்டி நிலையான சதவீதத்தில் வட்டி பெற்று தருகின்றன.

இத்தகைய பத்திரங்கள் எப்போதும் பணவீக்கத்தை விஞ்சும் ஆற்றலைக் கொண்டுள்ளன.

இதில், மொத்த பணவீக்கம் (wholesale inflation) அல்லது நுகர்வோர் பணவீக்கத்தை (consumer inflation) தரநிலையாக எடுத்துக்கொள்வதன் மூலம் வட்டி தீர்மானிக்கப்படுகிறது.

ஆனால் இந்த பத்திரங்களில் கிடைக்கும் வருமானம் வருமான வரிக்கு உட்பட்டது.

ஜீரோ கூப்பன் பத்திரம்

இதுவும் ஒரு கடன் பத்திரம் என்றாலும், இதன் செயல்பாடு சற்று வித்தியாசமானது.

முதலீட்டாளர்கள் இதை வாங்கும் போது பத்திரத்தின் முக மதிப்பை(face value) விட குறைவாக செலுத்துகின்றனர்.

செலுத்தப்பட்ட தொகைக்கும் பத்திரத்தின் மதிப்புக்கும் உள்ள வித்தியாசம் முதலீட்டாளர்களுக்கு வட்டியாக வழங்கப்படும்.

3. பணவீக்கத்தை விட அதிக வருமானம் தரும் முதலீட்டு வழிகள்

குறைந்தபட்ச வருமானம் மூலம் நமது தேவைகளைப் பூர்த்தி செய்த பிறகு, அவ்வப்போது அதிகரிக்கும் செலவுகளுக்கு ஏற்ற முதலீட்டு முறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

உதாரணமாக, 60 வயதில் ஒருவர் ஓய்வு பெற்றால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் அவருக்கு ஆகும் செலவுகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கும்.

எனவே இத்தகைய பணவீக்கத்தால் ஏற்படும் செலவுகள் குறித்து கவனமாக இருக்க வேண்டும்.

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் (Equity mutual funds) நீண்ட கால முதலீட்டின் மூலம் பணவீக்கத்தை வெல்ல ஒரு சிறந்த முதலீட்டு விருப்பமாகும்.

வங்கி மற்றும் அத்தியாவசியத் துறைகளில் முதலீடு செய்வதன் மூலமும் பணவீக்கத்தை சமாளிக்க முடியும்.

(குறிப்பு: இந்தக் கட்டுரை குறிப்பிட்ட தலைப்பைப் பற்றிய பொதுவான புரிதலுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. உங்கள் தனிப்பட்ட நிதி ஆலோசகர்களுடன் கலந்தாலோசித்து இறுதி முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.)

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: