நீங்கள் சாப்பிடும் முறைக்கும் உடல் பருமனுக்கும் என்ன தொடர்பு தெரியுமா?

உணவு, உணவுமுறை, ஆரோக்கியம், உடல்நலம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஜூலியா கிராஞ்சி
    • பதவி, பிபிசி உலக சேவை

தொலைக்காட்சி அல்லது மொபைல் போனில் அதிக கவனத்தைச் செலுத்தியவாறு, எதையும் யோசிக்காமல் உண்பது எளிதாக இருக்கலாம்.

ஆனால் மெதுவாகவும், முழு கவனத்தையும் உணவில் செலுத்தி உண்பதால் உண்மையான மாற்றம் ஏற்படும் என்கிறது அறிவியல்.

நாம் உணவை எவ்வளவு வேகமாகச் சாப்பிடுகிறோம் என்பது, செரிமானம் நடைபெறும் விதம், உணவில் திருப்தி அடைதல், எடையை சரியாகக் கட்டுப்படுத்துதல் மற்றும் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் என அனைத்திலும் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

செரிமானம்

"உணவை மெதுவாக மென்று உண்பதால், அது சிறிய துண்டுகளாக உடைந்து, செரிமானம் எளிதாக நடக்கிறது. அதாவது வயிற்றில் பற்கள் இல்லை. 'அதனால் உணவு பெரிய துண்டுகளாகச் செல்லும்போது, செரிமானம் மெதுவாகவும் குறைந்த செயல்திறனுடனும் நடைபெறும்' என்ற எளிய எடுத்துக்காட்டை நான் என் நோயாளிகளுக்குப் பொதுவாகக் கூறுவேன்" என்கிறார் பிரேசிலின் சாவோ பாலோ பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெற்ற ஊட்டச்சத்து நிபுணரான லிவியா ஹசேகாவா.

உணவு, உணவுமுறை, ஆரோக்கியம், உடல்நலம்

பட மூலாதாரம், Getty Images

"கூடுதலாக, மென்று உண்ணும்போது உமிழ்நீரில் செரிமானத்துக்கு உதவும் வேதியியல் கூறுகளின் உற்பத்தியைத் தூண்டுவதுடன், ஊட்டச்சத்துகள் உடலில் சிறப்பாக உறிஞ்சப்படவும் உதவுகிறது" என்றும் ஹசேகாவா கூறுகிறார்.

உணவைச் சரியாக மென்று உண்ணவில்லை என்றால், அதைச் செரிக்க வயிறு அதிகமாக உழைக்க வேண்டும். இதனால் வயிறு வீங்குதல், மற்றும் மந்தமான செரிமானம் ஏற்படலாம்.

"அதனால்தான் சிலர் உணவு உண்டு பல மணிநேரம் கழிந்த பின்னரும், வயிறு சற்று வீங்கியது போலவும், மந்தமாகவும் உணர்கிறார்கள்" என்கிறார் ஹசேகாவா.

எத்தனை முறை உணவை மெல்ல வேண்டும் என்பதற்குச் சரியான எண்ணிக்கை எதுவும் இல்லை. மேலும், எத்தனை முறை மெல்ல வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவதைவிட, நாம் உண்ணும் உணவை விழுங்குவதற்கு முன் அது மென்மையாகவும், உடலால் எளிதாக செரிமானம் செய்யக்கூடிய நிலையை அடைந்துவிட்டதையும் உறுதி செய்வதே முக்கியம் என்று அவர் அறிவுறுத்துகிறார்.

தொடர்ந்து பேசிய ஹசேகாவா, "கூடுதலாக தொலைக்காட்சி பார்ப்பது, தொலைபேசியைப் பயன்படுத்துவது அல்லது அதிகமாகப் பேசிக்கொண்டே சாப்பிடுவது போன்றவை நாம் உணவை மெல்லும் செயல்முறையைப் பாதிக்கக்கூடும். இதனால் நாம் வேகமாகச் சாப்பிட்டு அதிகமான காற்றையும் விழுங்க நேரிடும், இது வயிறு வீக்கத்துக்கான முக்கியக் காரணம்," என்கிறார்.

திருப்தி அடைவது மற்றும் உடல் எடை அதிகரிப்பது

உணவு, உணவுமுறை, ஆரோக்கியம், உடல்நலம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உணவைச் சரியாக மென்று உண்ணவில்லை என்றால், அதைச் செரிக்க, வயிறு அதிகமாக உழைக்க வேண்டும். இதனால் வயிறு வீக்கம் மற்றும் மந்தமான செரிமானம் ஏற்படலாம்

நாம் உணவை மெல்லும் வேகத்தால், செரிமானத்தில் ஏற்படும் விளைவுகளுடன், எடை அதிகரிப்பு தொடர்பான பிரச்னையும் ஏற்படலாம்.

"விரைவாக உணவை உட்கொள்வதால், உடலுக்குள் ஆற்றல் அதிக வேகத்தில் செல்லும். இதனால் ஒரு நிமிடத்திற்குள் நாம் அதிக கலோரிகளை உட்கொள்கிறோம். இந்தச் சூழ்நிலை, நாம் தேவைக்கு அதிகமாகச் சாப்பிடுவதை மேலும் எளிதாக்குகிறது" என ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிப்பதாகக் கூறுகிறார் நியூயார்க்கில் உள்ள கார்னெல் பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்து அறிவியல் பிரிவின் இயக்குநரும் ஸ்க்லீஃபர் குடும்பப் பேராசிரியருமான சாண்டர் கெர்ஸ்டன்.

மெதுவாகச் சாப்பிடுவதால், உணவு வாயில் இருக்கும் நேரம் நீடிக்கிறது. இது செரிமானத்தின் தொடக்க நிலைச் செயற்பாடுகளையும், ஹார்மோன் வெளியீட்டைத் தூண்டும் சமிக்ஞைகளையும் மேம்படுத்துவதாக அவர் கூறுகிறார்.

திருப்தியாகச் சாப்பிட்டு விட்டோம் என்ற மனநிறைவு பெறுவதற்குத் தேவையான ஹார்மோன்களை வெளியிட மூளைக்குச் சில நிமிடங்கள் தேவைப்படும். அதனால், மிக வேகமாக உண்பவர்கள், உண்மையாகத் தேவைப்படும் அளவைவிட அதிகமாக உண்ணத் தொடங்குவர்.

ஏனெனில், அவர்களது வயிறு நிறைந்துவிட்டதாக உடலுக்குத் தெரியப்படுத்தப் போதுமான நேரம் கிடைப்பதில்லை என்கிறார் சாண்டர்.

இதன் விளைவாக, அதிகமான கலோரிகள் உட்கொள்ளப்படுகின்றன. அவை இறுதியில் உடலில் சேமிக்கப்படும் கொழுப்பாக மாற்றப்படுகின்றன.

நீண்ட கால அபாயங்கள்

உணவு, உணவுமுறை, ஆரோக்கியம், உடல்நலம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மெதுவாகச் சாப்பிடுவதால், உணவு வாயில் இருக்கும் நேரம் நீடிக்கிறது.

வேகமாக உண்பது, அமிலப் பின்னோட்ட நோய் (அசிட் ரிஃப்ளக்ஸ்) மற்றும் இரைப்பை அழற்சி (காஸ்ட்ரைடிஸ்) போன்ற செரிமானப் பிரச்னைகளைத் தீவிரமாக்கும்.

மேலும், அமிலப் பின்னோட்ட நோயால் அடிக்கடி பாதிக்கப்படும் இவர்கள், அவசரமாகச் சாப்பிடும்போது அதன் அறிகுறிகள் இன்னும் மோசமாவதைக் காணலாம்.

"மற்றொரு முக்கியமான காரணி குடல் நுண்ணுயிரிகளின் மீதான தாக்கம். உணவு பெரிய துண்டுகளாக குடலை அடையும்போது, அது குடல் நுண்ணுயிரிகளின் (பாக்டீரியாவின்) சமநிலையைச் சீர்குலைத்து, ஒட்டுமொத்த செரிமான அமைப்பையும் பாதிக்கும்" என்கிறார் ஹசேகாவா.

இவ்வாறு வேகமாக உண்ணும் பழக்கத்துடன், மற்ற ஆரோக்கியமற்ற பழக்கங்களையும் தொடர்ச்சியாகக் கடைபிடித்தால், அது உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.

இது, டைப் 2 நீரிழிவு நோய், கல்லீரலில் கொழுப்பு படிவது, இதய நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற வளர்சிதை மாற்றச் சிக்கல்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.

மேலும், பெருங்குடல், மார்பகம் மற்றும் கணைய புற்றுநோய் போன்ற சில வகையான புற்றுநோய்களின் அபாயமும் முக்கியமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று ஹசேகாவா எச்சரிக்கிறார்.

உணவை மெதுவாக சாப்பிட உதவும் சில உதவிக் குறிப்புகள்

உணவு, உணவுமுறை, ஆரோக்கியம், உடல்நலம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வேகமாக உண்பது, இரைப்பை அழற்சி (காஸ்ட்ரைடிஸ்) போன்ற செரிமான பிரச்னைகளைத் தீவிரமாக்கும்.

ஒவ்வொரு முறை உணவை விழுங்கிய பின்னரும், தட்டை கீழே வைத்துவிட்டுச் சிறிது இடைவெளி எடுத்து உண்ண வேண்டும். இதுதான் சிறந்த உணவுப் பழக்கமாக வளர்த்துக் கொள்ள விரும்புவோருக்கு ஹசேகாவா பரிந்துரைக்கும் முதல் உதவிக்குறிப்பு.

"முட்கரண்டி அல்லது கரண்டியை முழு நேரமும் பிடித்துக் கொள்ளாதீர்கள். ஏனென்றால் அது உங்களை அறியாமலேயே உங்களை மிக வேகமாகச் சாப்பிட வைக்கும்," என்று தொடர்கிறார் ஹசேகாவா.

"உங்கள் உணவுத் தட்டை மேசையின் மீது வைத்து, பின்னர் மீண்டும் எடுத்து உண்ணும் எளிய செயல், மெதுவாகச் சாப்பிடுவதற்கு உங்களுக்கு உதவும். எனவே, ஒவ்வொரு முறை உணவை வாயில் போட்ட பின்னரும், சற்று இடைவெளி விட்டு உண்ணுங்கள்."

நீங்கள் உண்ட உணவு, உங்கள் வாய்க்குள் மென்மையான, கிட்டத்தட்ட மெல்லிய அமைப்பாக மாறும் வரை உணவை மெல்ல வேண்டும் என ஹசேகாவா பரிந்துரைக்கிறார்.

"அதுதான் நீங்கள் முழுமையாக மென்று சாப்பிடுவதைக் குறிக்கிறது. மேலும் அது இயற்கையாகவே நீங்கள் உண்ணும் வேகத்தையும் குறைக்கிறது."

அதோடு, உணவு உண்ணும்போது கவனச் சிதறல்களைத் தவிர்ப்பதும் அவசியம். தொலைக்காட்சி பார்த்துக் கொண்டே அல்லது செல்போனை உபயோகித்துக் கொண்டே சாப்பிட்டால், நீங்கள் எவ்வளவு வேகமாகச் சாப்பிடுகிறீர்கள் என்பதைக் கண்காணிக்க முடியாமல் போகலாம்.

உண்ணும் உணவில் கவனத்தைக் குவிப்பது உங்களுக்கு உதவியாக இருக்கும். "உண்ணும்போது அதிகமாகப் பேசாமல் இருக்க முயலுங்கள். உரையாடல்கள் உங்களைத் திசை திருப்பலாம், நீங்கள் அறியாமலே அதிகமாக உண்ண நேரிடலாம். எனவே அரட்டை அடித்துக்கொண்டே சாப்பிடுவதைக் குறைப்பது உங்கள் உணவில் கவனம் செலுத்த உதவும்," என்கிறார் ஹசேகாவா.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு