ஆர்.எஸ்.எஸ். உறுப்பினராக இருந்த நரேந்திர மோதி இரண்டு முறை பிரதமரான கதை

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ரெஹான் ஃபசால்
- பதவி, பிபிசி செய்தியாளர்
அரசியலில் நுழைந்தது முதல், இரண்டாவது முறை பிரதமரானது வரை நரேந்திர மோதியின் பயணம் குறித்து பிபிசி செய்தியாளர் ரெஹான் ஃபசால் பதிவு செய்துள்ளார். இந்த கட்டுரை 2019இல் முதலில் வெளியானது.
இந்தச் சம்பவம் 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் நடந்தது. ஒரு தேர்தல் பிரசாரத்தில், முலாயம் சிங் யாதவ் நரேந்திர மோதியை கிண்டலடித்து, "உத்தரப் பிரதேசத்தை குஜராத் போல் மாற்றும் வலிமை மோதியிடம் இல்லை" என்றார்.
மறுநாள், மற்றொரு தேர்தல் பிரசாரத்தில், நரேந்திர மோதி அதே 'நடையில்' பதிலளித்தார், "நேதாஜி, உத்தர பிரதேசத்தை மற்றொரு குஜராத் போல் மாற்றும் வலிமை மோதியிடம் இல்லை என்று சொல்கிறார். மற்றொரு குஜராத்தை உருவாக்க மிக முக்கியமானது என்ன தெரியுமா? அதற்கு, 56 அங்குல மார்பு தேவை."
"56 இன்ச் மார்பு" என்ற ஒரு வார்த்தை, அந்தத் தேர்தலில் மோதியை ஆண்மைக்கான பண்புகள் கொண்ட ஒரு "macho man" ஆக்கியது. இதன் மூலம், இந்து ஆண்மையின் தாக்கத்தில் இருக்கும் வாக்காளர்களை அவர் ஈர்த்தார்.
ஆனால், ஆமதாபாத்தில் "ஜேட் ப்ளூ" என்ற கடையை வைத்திருக்கும் அவரது தையல்காரர் பிபின் சவுகானிடம், மோதியின் வாழ்க்கை வரலாற்று ஆசிரியர் நீலாஞ்சன் முகோபாத்யாய் அவரது மார்பின் உண்மையான அளவைக் கேட்டபோது, அவர் மௌனமாக இருந்துவிட்டு அது 56 அங்குலம் கிடையாது என்று மட்டும் கூறினார்.
பிறகு, பி.ஆர். அம்பேத்கர் பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு மோதியின் உடையை தைத்துக் கொடுக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டபோது, அவர்களின் தையல்காரருக்கு மோதியின் மார்பின் அளவு 50 அங்குலம் என்று கூறப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
சிறு வயதிலிருந்தே வாதம் செய்யும் பழக்கம்
மோதி பள்ளி நாட்களில் சராசரி மாணவராக இருந்தார்.
பி என் உயர்நிலைப் பள்ளியில் மோதியின் ஆசிரியராக இருந்த பிரஹலாத் பாய் படேல், Narendra Modi-The Man, The Times என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
அதில், “மோதி சிறு வயதிலிருந்தே வாதம் செய்வதில் வல்லவர். ஒருமுறை, அவரது ஆசிரியர் பிரஹலாத் பாய் படேல், மோதியிடம் தனது வீட்டுப் பாடத்தை வகுப்பு கண்காணிப்பாளராக இருக்கும் மாணவரிடம் காட்டுமாறு கூறினார். ஆனால், மோதி, "நான் என் வேலையை ஆசிரியரிடம் மட்டுமே காட்டுவேன், வேறு யாரிடமும் காட்ட மாட்டேன்" என்று கூறி திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
முதலைகள் நிறைந்த ஏரியை மோதி கடந்த போது...
மோதியின் மிகப் பெரிய எதிர்ப்பாளர்களே கூட அவருக்கு தன்னம்பிக்கை குறைவில்லை என்று நம்புகிறார்கள்.
மோதியின் மற்றொரு வாழ்க்கை வரலாற்றாசிரியர் ஆண்டி மரினோ ‘Narendra Modi- A Political Biography’ என்ற தனது புத்தகத்தில் "மோதியின் குழந்தைப் பருவத்தில், சர்மிஷ்தா ஏரியின் அருகே ஒரு கோயில் இருந்தது. அதன் மேல் உள்ள கொடியை பல புனித நாட்களில் மாற்ற வேண்டும்.
ஒருமுறை கனமழைக்குப் பிறகு கொடியை மாற்ற வேண்டியிருந்தது. அவர் அந்த ஏரியை நீந்திக் கடந்து கொடியை மாற்ற முடிவு செய்தார். ஏரியில் முதலைகள் நிறைந்திருந்தன, முதலைகள் பயந்து ஒதுங்க வேண்டும் என்பதற்காக கரையில் இருந்த மக்கள் மேளம் கொட்டிக்கொண்டே இருந்தனர். அவர் ஏரியைக் கடந்து கொடியை மாற்றிவிட்டு, வெற்றிகரமாக வெளியே வந்தார். அவரை மக்கள் தோள்களில் வைத்துக் கொண்டாடினர்,” என்று எழுதியுள்ளார்.
எனினும் இப்படி ஒரு சம்பவம் நடைபெறவே இல்லை என இதை ஒரு தரப்பினர் நம்ப மறுக்கின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
டீக்கடையில் வேலை
மோதி சிறு வயதில் இருந்தே தேநீர் கடையில் வேலை செய்து வந்தார். பள்ளி முடிந்ததும், அவர் உடனே வாத்நகர் ரயில் நிலையத்தில் உள்ள தனது தந்தையின் தேநீர் கடைக்கு ஓடிவிடுவார்.
மோதி எப்போதுமே இந்த விஷயத்தை மக்களிடம் பெருமையாகச் சொன்னார். ஒருமுறை அசாம் தேநீர் தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றும்போது, "உங்கள் அசாம் தேநீரை மக்களை குடிக்க வைத்துதான் நான் இவ்வளவு உயரத்துக்கு வந்தேன்" என்று கூறினார்.
மோதியின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்களில் பலர் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்துடன் ஒத்துபோகக் கூடியவர்கள். வாத்நகரிலும் ஆமதாபதிலும் மோதி தேநீர் விற்ற நாட்கள் குறித்து அவர்கள் விரிவாக எழுதியுள்ளனர்.
வாத்நகர் ரயில் நிலையத்தில் தேநீர் விற்ற பிறகு, மோதி ஆமதாபாத்தில் கீதா மந்திர் பேருந்து நிறுத்தம் அருகே தனது மாமாவின் கேண்டீனில் வேலை செய்தார் எனவும் சில செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.
அரசியல் அறிவியல் பாடத்தில் பட்டம்
நரேந்திர மோதிக்கு ஆரம்பப் பள்ளிக் கல்வியை முடித்த பிறகு ஜாம்நகர் சைனிக் பள்ளியில் சேர வலுவான ஆசை இருந்தது, ஆனால் அவரது குடும்பத்தின் நிதி நிலைமை காரணமாக அங்கு சேர முடியவில்லை.
மேலும், அவரது தந்தை அவர் வாத்நகர் விட்டு வெளியே செல்ல விரும்பவில்லை. அவர் ஒரு உள்ளூர் பட்டப்படிப்பு கல்லூரியில் சேர்ந்தார், ஆனால் குறைவான வருகைப் பதிவு காரணமாக அவர் கல்லூரிப் படிப்பை நிறுத்த வேண்டியிருந்தது.
பிறகு, தொலைதூரக் கல்வி மூலம், முதலில் டெல்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை பின்னர் குஜராத் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், சிலர் மோதியின் முதுகலைப் பட்டத்தின் விவரங்களை அறிய விரும்பியபோது, குஜராத் பல்கலைக்கழகம் 1983ஆம் ஆண்டில் முதல் வகுப்பில் முதுகலை தேர்வில் தேர்ச்சி பெற்றதாகக் கூறியது.
பிறகு, குஜராத் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜெயந்திபாய் படேல், மோதியின் பட்டப்படிப்பில் குறிப்பிடப்பட்ட பாடங்கள் அரசியல் அறிவியலில் முதுகலை பாடத்திட்டத்தில் ஒருபோதும் சேர்க்கப்படவில்லை என்று கூறி சர்ச்சையை உருவாக்கினர்.
குஜராத் பல்கலைக்கழகம் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்தது.

பட மூலாதாரம், AFP
யசோதாபென்னுடன் திருமணம்
மோதி 13 வயதாக இருந்தபோது, அவரது குடும்பத்தினர் அவரை 11 வயதான யசோதாபென் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். சில நாட்கள் அவர்களுடன் தங்கிய பிறகு, மோதி தனது வீட்டை விட்டு வெளியேறினார்.
2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான ஆவணத்தில் அவர் இதைப் பற்றிக் குறிப்பிட்டபோதுதான் உலகம் இதை முதன்முதலில் அறிந்தது, என்றாலும் குஜராத் அரசியல் வட்டாரங்களில் இது மறைமுகமாக விவாதிக்கப்பட்டு வந்ததே.
மோதி பிரதமராக பதவியேற்ற பிறகு, நடைமுறைப்படி யசோதாபென்னுக்கு அரசு பாதுகாப்பு வழங்கப்பட்டபோது, அவருக்கு அது விசித்திரமாக இருந்தது.
ஃபர்ஸ்ட் போஸ்டில் அவர் அளித்த பேட்டியில், தான் பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யும்போது, பாதுகாப்பு பணியாளர்கள் ஒரு காவல் வாகனத்தில் தனது பேருந்தைப் பின்தொடர்கிறார்கள் என்று கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
மோதியின் ஆசிரியரான ‘வக்கீல் அய்யா’
'வக்கீல் அய்யா' என்று அழைக்கப்பட்ட லக்ஷ்மணராவ் இனாம்தார் என்பவர்தான் மோதியை ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தில் சேர்த்து வைத்தவர்.
அப்போது ‘வக்கீல் அய்யா’ குஜராத் மாநில ஆர்.எஸ்.எஸ்-இன் மாகாண பிரசாரகராக இருந்தார்.
எம்.வி. காமத் மற்றும் காளிந்தி ரந்தேரி ஆகியோர் எழுதிய ‘நரேந்திர மோதி: ஒரு நவீன அரசின் கட்டமைப்பாளர்’ என்ற புத்தகத்தில், "ஒருமுறை தீபாவளி அன்று மோதியின் பெற்றோர்கள் அவர் வீட்டிற்கு வராததால் மிகவும் வருத்தமடைந்தனர். அன்று தான் வக்கீல் அய்யா அவரை ஆர்.எஸ்.எஸ். உறுப்பினராக சேர்த்து வைத்தார்" என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
வக்கீல் அய்யா 1984ஆம் ஆண்டில் இறந்து விட்டார். ஆனால் மோதி அவரை ஒருபோதும் மறக்கவில்லை. பின் நாட்களில், மோதி மற்றும் மற்றொரு ஆர்.எஸ்.எஸ். தொண்டர் ராஜாபாய் நீனே ஆகியோர் வக்கீல் அய்யா குறித்த "சேதுபந்து" என்ற புத்தகத்தை எழுதினார்கள்.

பட மூலாதாரம், SANSKAR DHAM
மோதியிடம் மற்றவர்களை ஈர்த்த மிக முக்கியமான குணம் ஒழுக்கம்தான்.
மூத்த பத்திரிகையாளர் ஜி. சம்பத், " மோதி சிறுவயதில் இருந்தே ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தில் சேர விரும்பினார் என்றும் அதற்கு காரணம் கிளைக்கு ஒருவர் மட்டுமே பொறுப்பேற்று அனைவருக்கும் உத்தரவுகளை வழங்குவார், அதை அனைவரும் கட்டுப்படுவர் என்பது தான் என்று மோதியின் மூத்த சகோதரர் சோமநாத்ஜி கூறியதாக சொல்லப்படுகிறது” என்று கூறினார்.
ஒரு காலத்தில் மோதியுடன் நெருக்கமாக இருந்து பின்னர் அவரது எதிர்ப்பாளராக மாறிய சங்கர் சிங் வாஜ்பாலா, "மோதி ஆரம்பத்திலிருந்தே வித்தியாசமாக சிந்திப்பதற்கு பழகிவிட்டார். நாங்கள் நீண்ட கை சட்டை அணிந்தால், மோதி குட்டை கை சட்டை அணிவார். நாங்கள் காக்கி நிற கால்சட்டை அணிந்தபோது, அவர் வெள்ளை நிற சட்டைகளில் மட்டுமே காணப்பட்டார்” என்று கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
வாஜ்பாயிடம் வந்த அழைப்பு
2001 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி, விமான விபத்தில் உயிரிழந்த தனது பத்திரிகையாளர் நண்பரின் இறுதிச்சடங்கில் மோதி கலந்துகொண்டார். அப்போது அவரது மொபைல் போன் ஒலித்தது.
மறுமுனையில் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் இருந்தார். அவர் கேட்டார், "நீ எங்கே இருக்கிறாய்?"
மாலையில் மோதி வாஜ்பாயை சந்திப்பது என முடிவு செய்யப்பட்டது.
மாலையில் நம்பர் 7, ரேஸ் கோர்ஸ் ரோடு முகவரிக்கு மோதி சென்றபோது, வாஜ்பாய் அவரிடம் நகைச்சுவையாகச் சொன்னார், "நீ மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறாய். நீ டெல்லியில் அதிகம் தங்கி விட்டாய். பஞ்சாபி உணவு சாப்பிடுவதால் உன் எடை அதிகரிக்கிறது. நீ குஜராத் சென்று அங்கு வேலை செய்" என்றார்.
ஆண்டி மரினோ தனது புத்தகத்தில், " ஒருவேளை அவர் கட்சிச் செயலாளராக குஜராத்தில் சில வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கும் என மோதி புரிந்துகொண்டார். அவர் மிகவும் அப்பாவியான முறையில் கேட்டார்.
“இதன் பொருள் நான் இனி நான் பொறுப்பாக இருந்த மாநிலங்களை இனி கவனித்துக் கொள்ள மாட்டேன் என்பதா?” என்றார். மோதி, கேசுபாய் படேலுக்குப் பிறகு குஜராத்தின் அடுத்த முதல்வராக இருப்பார் என்று தெரிவித்தபோது, மோதி அந்த பதவியை ஏற்க மறுத்துவிட்டார்”

பட மூலாதாரம், Getty Images
"அவர் குஜராத்தில் கட்சியை சீர்செய்ய ஒரு மாதத்தில் 10 நாட்கள் கொடுக்க முடியும், ஆனால் முதல்வராக மாட்டேன் என்று கூறினார். வாஜ்பாய் அவரை தொடர்ந்து வற்புறுத்தினார். ஆனால் மோதி ஒப்புக்கொள்ளவில்லை. பின்னர் அத்வானி அவரைத் தொலைபேசியில் அழைத்து, "உங்கள் பெயரை தான் அனைவரும் சொல்கிறார்கள். எல்லாம் முடிவு செய்யப்பட்டு விட்டது. போய், பதவி பிரமாணம் எடுத்துக் கொள்ளுங்கள்" என்றார்.
"வாஜ்பாயின் அழைத்து ஆறாவது நாளான அக்டோபர் 7 ஆம் தேதி, நரேந்திர மோதி குஜராத்தின் முதல்வராக பதவியேற்றார்."
குஜராத் கலவரங்களும் சர்ச்சைகளும்
பதவியேற்று நான்கு மாதங்களிலேயே, மோதியின் தலைமைக்கு முதல் சோதனை வந்தது.அயோத்தியாவிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த கர சேவகர்கள் பயணம் செய்த ரயில் பெட்டி கோத்ராவில் தீ வைக்கப்பட்டு 58 பேர் உயிரிழந்தனர் .
அடுத்த நாள் விஸ்வ இந்து பரிஷத் மாநிலம் முழுவதும் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்தனர். இந்து-முஸ்லிம் கலவரங்கள் வெடித்தன. 2000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
மோதி நிலைமையைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டார்.
மோதி செய்தியாளர் சந்திப்பில் மிகவும் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார், "ஒவ்வொரு செயலுக்கும் சமமான மற்றும் எதிரான எதிர்வினை உள்ளது" என்றார்.
மறுநாள், ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த மற்றொரு பேட்டியில், "செயல் மற்றும் எதிர்வினையின் ஒரு 'சங்கிலி' தொடராக நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. நாங்கள் எந்த செயலும் எதிர்வினையுமில்லாமல் இருக்க விரும்புகிறோம்." என அவர் மீண்டும் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
வாஜ்பாயின் கருத்து
சில நாட்களுக்குப் பிறகு, கலவரம் பாதிக்கப்பட்ட முகாம்களில் வசிக்கும் முஸ்லிம்கள் குறித்து மோதி மற்றொரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். "நாம் ஐந்து, நமக்கு இருபத்தி ஐந்து" என்று அவர் கூறினார்.
அவர் பின்னர் ஒரு பேட்டியில், நிவாரண முகாம்களில் வசிக்கும் மக்களை அவர் குறிப்பிடவில்லை, ஆனால் நாட்டின் மக்கள்தொகை பிரச்னையைச் சுட்டிக்காட்டியதாக தெளிவுபடுத்தினார்.
ஆண்டுகள் கழித்து, ஒரு பத்திரிகையாளர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிரதான செயலாளர் பிரஜேஷ் மிஷ்ராவிடம் வாஜ்பாய் குஜராத் கலவரங்களுக்காக மோதியை பதவி நீக்காதது ஏன் என்று கேட்டபோது, “மோதி பதவி விலக வாஜ்பாய் விரும்பினார், ஆனால் அவர் கட்சியின் தலைவர் அல்ல, அரசின் தலைமை. கட்சி மோதி விலகுவதை விரும்பவில்லை. வாஜ்பாய் கட்சியின் கருத்துக்கு ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது. பாஜக காங்கிரஸ் போல இல்லை, இன்றுமில்லை." என்று பதிலளித்தார்.
குல்லா அணிய மறுப்பு
ஒருநாள் மௌலானா சையத் இமாம் வலையினாலான குல்லாவை அணியுமாறு அவரிடம் கொடுத்தபோது, அவர் அதை அணிய மறுத்துவிட்டார். "குல்லா அணிவது ஒருவரை மதசார்பற்றவர் ஆக்குவதில்லை" என்று அவர் கூறினார். ஆனால் 2014 தேர்தல் பிரச்சாரத்தின்போது அவர் சீக்கிய தர்பன் உட்பட பல்வேறு குல்லா, தொப்பிகளை அணிந்துக் கொண்டார்.
குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, தேர்தல் பிரச்சாரங்களில் அவர் யாரை தாக்கி பேச வேண்டுமோ அவர்களின் பெயருக்கு முன்பு 'மியன் முஷாரஃப்' மற்றும் 'மியன் அகமது படேல்' போன்ற முஸ்லீம் அடைமொழிகளை அடிக்கடி பயன்படுத்தினார். 2014 தேர்தலில், ராகுல் காந்தியை கிண்டல் செய்யும்போது, அவர் 'ராஜகுமாரர்' என்ற வார்த்தையை எளிதாகப் பயன்படுத்தியிருக்கலாம், ஆனால் அவர் உருது வார்த்தையான 'ஷாஹஜாத்' என்று பயன்படுத்தினார்.
சுதந்திர இந்திய வரலாற்றில் நாடாளுமன்றத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முஸ்லிம் உறுப்பினர் கூட இல்லாமல் மத்திய அரசாங்கத்தை அமைத்த முதல் கட்சி நரேந்திர மோதியின் பாரதிய ஜனதா கட்சி.
பின்னர் மோதி அமைச்சரவையில் சேர்க்கப்பட்ட மூன்று முஸ்லிம் அமைச்சர்களில் ஒருவர் கூட மக்களவை உறுப்பினராக இல்லை.

பட மூலாதாரம், Getty Images
குஜராத் மாடல்
குஜராத் முதலமைச்சராக இருந்தபோது நரேந்திர மோதி, குஜராத்தில் பொருளாதார வளர்ச்சியை முன்னிலைப்படுத்தி குஜராத் கலவரங்களால் கறைபட்டிருக்கும் தனது பிம்பத்தை மீட்டெடுக்க முயன்றார். தனியார் துறை ஊக்குவிக்கப்பட்டது, பொதுத்துறை நிறுவனங்கள் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டன மற்றும் 10% என்ற கவர்ச்சிகரமான வளர்ச்சி விகிதம் அடைந்தது.
2008 ஆம் ஆண்டில், மேற்கு வங்கத்தில் சிங்கூரில் டாடா மோட்டார்ஸ் ஆலை அமைப்பதற்கு எதிர்ப்பு கிளம்பிய போது, மோதி உடனடியாக முன்வந்து நிறுவனத்தை குஜராத்தில் ஆலை அமைக்க அழைத்தார். மேலும் அவர்களுக்கு நிலம், வரி விலக்கு மற்றும் பிற வசதிகளையும் வழங்கினார். இதனால் ரத்தன் டாடா மிகவும் மகிழ்ச்சியடைந்து மோதியை பாராட்டினார்.
ஆனால் இந்த குஜராத் மாடல் பலராலும் விமர்சிக்கப்பட்டது. இந்து நாளிதழில் வெளியான ஒரு கட்டுரையில் பிரபல பத்திரிகையாளர் ரூதம் வோரா கூறுகையில், 'வைப்ரண்ட் குஜராத்'-ன் எட்டு பதிப்புகளிலும் 84 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின, ஆனால் அவற்றில் பெரும்பாலானவை நிறைவேற்றப்படவில்லை.
"மொத்த வருமான அடிப்படையில், குஜராத் இந்தியாவில் ஐந்தாவது இடத்தில் இருந்தது, ஆனால் நரேந்திர மோதியின் எழுச்சிக்கு முன்பே குஜராத் இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட வளர்ந்த மாநிலங்களில் ஒன்றாக கருதப்பட்டது."

பட மூலாதாரம், Getty Images
நரேந்திர மோதியே, பிராண்ட் மோதியை உருவாக்கினார்
இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவிலும் அதிகம் விமர்சிக்கப்பட்ட நரேந்திர மோதிக்கு பெரிய பொது ஆதரவு கிடைத்தது எப்படி?
மோதியின் மற்றொரு வாழ்க்கை வரலாற்றாளர் மற்றும் 'Centrestage - Inside Modi Model of Governance' என்ற புத்தகத்தின் ஆசிரியர் உதய் மஹூர்கர், "நரேந்திர தாமோதர் மோதியே பிராண்ட் மோதியை உருவாக்குவதற்கு கடினமாக உழைத்துள்ளார். ஒவ்வொரு உரையாடலிலும் தனது விரல்களால் V குறிகள் காண்பிப்பது, பேச்சு, நடை, அவரது சிறப்பு அரை கை குர்தா மற்றும் இறுக்கமான கால்சட்டை என அவரது ஒவ்வொரு அசைவும் நன்றாக சிந்திக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது” என கூறுகிறார்.
" உலகிற்கு வழங்கப்படும் மோதியின் படம் ஒரு நவீன மனிதனுடையது, அவர் லேப்டாப் பயன்படுத்துகிறார், அவரது கையில் ஒரு நிதி விவகாரங்கள் குறித்த செய்தித்தாள் மற்றும் ஒரு 'DSLR' கேமரா உள்ளது. சில நேரங்களில் அவர் ஒபாமாவின் சுயசரிதை படித்துக் கொண்டிருக்கிறார், சில நேரங்களில் அவர் ட்ராக் சூட் அணிந்துக் கொள்கிறார், சிலநேரங்களில் அவர் தலையில் ஒரு ' cow-boy' தொப்பி அணிந்துள்ளார்".
நரேந்திர மோதியின் வாழ்க்கை முறை
"மோதி மடிந்த கதர் அணியும் ஒரு 'சோசலிச' அரசியல்வாதியும் இல்லை. கையில் தடியுடன் காக்கி பேண்ட் அணிந்த ஆர்எஸ்எஸ் பிரச்சாரகரும் இல்லை. அவர் 'புல்கரி' பிராண்ட் விலையுயர்ந்த ரிம்லெஸ் கண்ணாடி அணிகிறார். அவர் தனது பாக்கெட்டில் 'மோன்-ப்ளான்' பேனாவை வைத்திருக்கிறார் மற்றும் தோல் பட்டையுடன் கூடிய ஆடம்பர 'மொவாடோ' கைக்கடிகாரம் அணிந்துள்ளார்" என்று உதய் மஹூர்கர் கூறுகிறார்.
"அவரது குரல் பாதிக்கப்படாதபடி அவர் ஒருபோதும் குளிர்ந்த தண்ணீர் குடிக்க மாட்டார். அவர் தனது பாக்கெட்டில் ஒரு சீப்பை எப்போதும் வைத்திருக்கிறார். இதுவரை, அவரது தலை முடி அங்கும் இங்கும் பறந்து கொண்டிருக்கும் படி ஒரு புகைப்படத்தில் கூட இல்லை. அவர் ஒவ்வொரு நாளும் காலை 4:30 மணிக்கு எழுகிறார். யோகா செய்து ஐ-பேட்-ல் செய்தித்தாள் படிப்பார். கடந்த இருபது ஆண்டுகளில் அவர் ஒரு நாள் கூட விடுமுறை எடுக்கவில்லை."
'Caravan' பத்திரிகையில் தனது கட்டுரையில் The Emperor Uncrowned: The Rise of Narendra Modi ' என்ற தலைப்பில் பிரபல பத்திரிகையாளர் வினோத் கே ஜோஸ் , "மோதிக்கு நாடகத்திறன் மீது முழுமையான ஆளுமை உள்ளது. அவர் குரல் வலிமை கொண்டவர், உறுதியானவர் மற்றும் நம்பிக்கை நிறைந்தவர். அவர் தனது ஆட்சிக் காலத்தில் எல்லாமே கட்டுக்குள் இருக்கும் என்று தனது ஆதரவாளர்களுக்கு உறுதியளிக்கக்கூடிய வகையான தலைவர் அவர்."
"அவர் காகித சீட்டுகள் இல்லாமல் மக்களின் கண்களைப் பார்த்து பேசுகிறார். அவரது உரை தொடங்கியவுடன், மக்கள் மத்தியில் அமைதி நிலவுகிறது. மக்கள் தங்கள் மொபைல் போன்களுடன் அலைபாயாமல் நிற்கிறார்கள் மற்றும் பலர் தங்கள் வாயைப் பிளந்துகொண்டு இருக்கிறார்கள். வாருங்கள்." என்று எழுதியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
சொந்தங்கள் இல்லை, ஊழல் இல்லை
புகழ்பெற்ற சமூகவியலாளர் பேராசிரியர் ஆஷிஷ் நந்தி, நரேந்திர மோதியின் ஆளுமையைப் பற்றி விவரிக்கும்போது, "அவர் எந்த திரைப்படத்தையும் பார்க்க மாட்டார். அவர் மது அருந்துவதோ, புகைப்பிடிப்பதோ இல்லை. காரமான உணவைத் தவிர்க்கிறார். தேவைப்படும்போது, கிச்சடி சாப்பிடுவார், அதுவும் தனியாக. சில நாட்களில் அவர் உபவாசம் செய்கிறார், குறிப்பாக நவராத்திரி அன்று, அவர் பகலில் எலுமிச்சை தண்ணீர் அல்லது ஒரு கப் தேநீர் மட்டுமே குடிக்கிறார்." என்று குறிப்பிடுகிறார்.
ஒருமுறை இமாச்சல பிரதேசத்தின் ஹமிர்பூரில் தேர்தல் கூட்டத்தில் பேசும்போது, "எனக்கு குடும்ப உறவுகள் இல்லை. நான் தனியாக இருக்கிறேன். யாருக்காக நான் நேர்மையற்றவனாக இருப்பேன்? என் மனமும் உடலும் முழுமையாக தேசத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது" என்றார்.

பட மூலாதாரம், Getty Images
ஹசீனாவுக்கு பாராட்டும் சர்ச்சையும்
மோதிபொதுவெளியில் பெண் சக்தியை பாராட்டி பேசுவதை காணமுடியும். ஆனால் ஒருமுறை அவர் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா வஜேத்தை பாராட்டி பேசினார், "பெண்ணாக இருந்தாலும், அவர் பயங்கரவாதத்தை எதிர்த்து கடுமையாக போராடியுள்ளார்" என்று கூறினார்.
சமூக வலைதளங்களில் "பெண்ணாக இருந்தாலும்" என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது. ஆனால் அது மோதி மீது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
"வாஷிங்டன் போஸ்ட்" செய்தித்தாள் "இந்தியாவின் மோதி உலகின் மோசமான பாராட்டை வழங்கினார்" என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டது.
வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை
நரேந்திர மோதி 2014 தேர்தலில் இரண்டு பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு வெற்றி பெற்றார். அவருக்கு எதிரான காங்கிரஸ் கட்சியின் நம்பகத்தன்மை சந்தேகத்திற்குரியதாக இருந்தது. மற்றொன்று அவர் நாட்டின் இளைஞர்களுக்கு ஒரு பெரிய வாக்குறுதியை அளித்தார், "ஒரு வருடத்தில் ஒரு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம், அல்லது வேறு வார்த்தைகளில் சொன்னால் ஒவ்வொரு மாதமும் 8 லட்சத்து 40 ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம்." என்றார்.
மோதியின் தீவிர ஆதரவாளர்கள் கூட அவர் அந்த வாக்குறுதியை நெருங்க கூட முடியவில்லை என்பதை ஒப்புக்கொள்வார்கள். 130 கோடி மக்கள்தொகை கொண்ட நாட்டில், கல்வி மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஒவ்வொரு மாதமும் குறைந்தது 5 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் தேவைப்படுகிறது. இந்த இலக்கை எட்டாதது மோதி அரசாங்கத்தின் மிக பெரிய தோல்வி என்று கூறலாம்.
பாலகோட் மோதியை உயிர்ப்பித்தது
இது மட்டும் அல்ல, நாட்டின் விவசாயிகள் மோதி அரசாங்கத்தின் மீது அதிருப்தியில் இருந்தனர். சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் மோதியின் தீவிர பிரச்சாரம் இருந்தபோதிலும், பாரதிய ஜனதா கட்சி மூன்று மாநிலங்களில் ஆட்சியை இழக்க வேண்டியிருந்தது, மேலும் முதல் முறையாக, மோதி தனது கட்சியை அடுத்து வரும் மக்களவை தேர்தலில் வெற்றிபெற வைக்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் காஷ்மீரில் ஒரு தீவிரவாத தாக்குதல் மற்றும் பாகிஸ்தானுடன் ஒரு வார கால மோதல் ஆகியவை மோதியின் ஆதரவு குறைவதை தடுத்து நிறுத்தியது.

பட மூலாதாரம், Getty Images
மோதியின் போர்க்குணம்
இந்திய விமானப்படை பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத இலக்குகளை தவறவிட்டிருக்கலாம், ஒரு இந்திய போர் விமானம் பாகிஸ்தானால் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம். ஆனால் இந்திய வாக்காளர்கள் அதில் அக்கறை கொள்ளவில்லை. அவருக்கு முக்கியமான விஷயம் என்னவென்றால், அவரது நாடு தாக்கப்பட்ட போது மோதி உடனடியாக பதிலடி கொடுத்தார்.
"ஏழு கடல்களுக்கு அடியில் சென்றாலும் நான் அவனை கண்டுபிடிப்பேன். பழிவாங்கும் தன்மை எனக்கு இயல்பானது" என்று அவர் கூறும்போது கைதட்டல்களால் கிடைத்தன.
சர்வதேச அமைதிக்கான கார்னீக் நிறுவனத்தின் இயக்குனர் மிலன் வைஷ்ணவ், "பாகிஸ்தான் நெருக்கடி நரேந்திர மோதிக்கு ஒரு தங்கமான வாய்ப்பை வழங்கியுள்ளது. தேசிய பாதுகாப்பை பொறுத்தவரை, மக்களுக்கு மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், விரைவாக முடிவுகளை எடுக்கும் திறனும், வழி நடத்தும் திறனும் கொண்ட தலைமை வேண்டும். சரியானதோ, தவறானதோ, இந்த குணங்கள் தனக்கு உண்டு என்பதை காண்பிப்பித்தல் மோதி வெற்றி பெற்றுள்ளார்."
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












