டெங்கு காய்ச்சல் - கொரோனா என்ன தொடர்பு? குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?

டெங்கு காய்ச்சல் பாதிப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆய்வுகளின்படி சராசரியாக ஒரு லட்சம் குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டால், அதில் 6% குழந்தைகள்தான் டெங்கு ஷாக் சின்ரோமால் பாதிக்கப்படுவர்.

தமிழ்நாட்டில் கொசுக்களால் ஏற்படும் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் கடந்த ஒன்பது மாதங்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு சுகாதாரத்துறையின் அறிக்கைப்படி 300 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த சனிக்கிழமை (செப்டம்ர் 9) அன்று மதுரவாயிலைச் சேர்ந்த நான்கு வயது சிறுவன் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்துள்ளார். இதனால், தமிழ்நாடு முழுவதும் மக்கள் நல்வாழ்வுத்துறையும், ஊரக உள்ளாட்சித்துறையும் இணைந்து பொது இடங்களில் தேவையற்ற வகையில் தேங்கிக் கொண்டிருக்கும் தண்ணீரை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

டெங்கு காய்ச்சலால் இறந்த நான்கு வயது சிறுவன் காய்ச்சல் ஏற்பட்ட நான்காவது நாள்தான் எழுப்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிறகு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

இதனால், முன்னதாகவே டெங்கு பாதிப்பை எப்படி அறிந்துகொள்வது, கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு குழந்தைகளை எப்படி டெங்கு பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் பல்நோக்கு மருத்துவர்களிடம் பிபிசி தமிழ் பேசியது.

டெங்கு காய்ச்சல் பாதிப்பை எப்படி தெரிந்துகொள்வது?

டெங்கு கொசு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, குழந்தைகளைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருந்தால்தான் டெங்கு நோய்க்கான அறிகுறிகளைக் கண்டுபிடிக்க முடியும்.

இதுகுறித்துப் பேசிய சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையின் இயக்குநர் ரமா சந்திரமோகன், “கடந்த வாரம் டெங்கு பாதிப்பால் இறந்த குழந்தை செப்டம்பர் 6ஆம் தேதி மருத்துவமனைக்கு வந்தார். அவர் அனுமதிக்கப்பட்டு சில மணிநேரத்திலேயே அவர் டெங்கு ஷாக் சின்ரோமால் பாதிக்கப்பட்டார்.

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போதே அவரது உடல்நிலை மோசமடையத் துவங்கியது. அவருக்கு அளித்த சிகிச்சைகள் எதுவும் பலனளிக்கவில்லை. இறுதியில் உறுப்புகள் ஒவ்வொன்றாகச் செயலிழக்கத் தொடங்கின, செப்டம்பர் 9ஆம் தேதி உயிரிழந்தார்,” என்றார் அவர்.

முதலில் குழந்தைகளை கொசு கடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனக் கூறும் மருத்துவர் ரமா, அப்படி இருந்தும் குழந்தைக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால், உடனடியாக மருத்துவமனையை நாட வேண்டும் என்கிறார்.

"எப்போதும் குழந்தையுடன் இருந்து, குழந்தை நீர் ஆகாரங்கள் அதிகம் எடுத்துக்கொள்கிறதா, குழந்தை சீரான இடைவெளியில் சிறுநீர் கழிக்கிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும்," என்றார்.

இவை இரண்டும்தான் குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு இருப்பதற்கான ஆரம்பக்கட்ட அறிகுறிகள் எனக் கூறும் ரமா, “குழந்தைகளைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருந்தால்தான் இந்த அறிகுறிகளைக் கண்டுபிடிக்க முடியும். அவர்கள் காய்ச்சலால் சாப்பிட மறுக்கிறார்கள் என நினைத்தால், அது விபரீதமாகிவிடும்,” என எச்சரித்தார்.

கொசு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 300 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதித்த குழந்தைகளை டெங்கு பாதிக்குமா?

கொரோனா தொற்றுக்குப் பிறகு அதைச் சுற்றிய யூகங்களும், போலி அறிவியல் தகவல்களும் பல்வேறு தளங்களில் பரப்பப்பட்டு வரும் நிலையில், அதுகுறித்து பிரசாந்த் மருத்துவமனையின் உள்மருத்துவ நிபுணர் மருத்துவர் அனந்த கிருஷ்ணனிடம் பேசினோம்.

அப்போது அவர் கொரோனா பாதிப்புக்கும் டெங்குவுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறினார்.

“கொரோனா பாதித்தவர்களுக்கு டெங்கு பாதிப்பு அவ்வளவு எளிதில் வராது என சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.

கொரோனாவுக்கும் டெங்குவுக்கும் பொதுவான ஆன்டிஜென் இருப்பதால், கொரோனாவில் இருந்து மீண்ட குழந்தைகளாக இருந்தாலும் சரி, பெரியவர்களாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு,” என்றார் அனந்த கிருஷ்ணன்.

டெங்குவால் குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருவது குறித்து விளக்கிய அனந்த கிருஷ்ணன், “டெங்கு காய்ச்சலில், டெங்கு ஷாக் சின்ரோம்(Dengue Shock Syndrome) மற்றும் டெங்கு ரத்தப்போக்கு (hemorrhage) ஆகியவைதான் பெரும்பாலும் உயிரிழப்புகளை ஏற்படுத்தக் கூடியவை. அவை பெரும்பாலும் குழந்தைகள் மத்தியில் தான் அதிகம் காணப்படும்,” என்றார்.

ஆனால், தற்போது ஏற்பட்டிருக்கும் உயிரிழப்புகளும் டெங்கு பாதிப்பும் சராசரியைவிட குறைவாக இருப்பதாகவும் அனந்த கிருஷ்ணன் கூறினார்.

டெங்கு பாதிப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மழைக்காலத்திற்கு முந்தைய மாதங்களில்தான் டெங்கு காய்ச்சல் காலம் தொடங்கும்.

“ஆய்வுகளின்படி சராசரியாக ஒரு லட்சம் குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டால், அதில் 6% குழந்தைகள்தான் டெங்கு ஷாக் சின்ரோமால் பாதிக்கப்படுவர்.

டெங்கு ஷாக் சின்ரோமால் பாதிக்கப்படுபவர்களில் 10-13 சதவீதமானோர் உயிரிழக்க வாய்ப்புகள் உள்ளது. அதனால், தற்போது ஏற்பட்டிருக்கும் உயிரிழப்புகள் அச்சப்பட வேண்டிய அளவில் இல்லை. ஆனால், முன்னெச்சரிக்கை மிகவும் அவசியம்,” என்றார் அனந்த கிருஷ்ணன்.

குழந்தைகளுக்கு டெங்கு இருப்பதை அறிவது எப்படி?

குழந்தைகளை மற்ற காய்ச்சலை விடவும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் எளிதில் கண்டுபிடிக்கலாம் என்கிறார் கோவை அரசு மருத்துவமனையின் முன்னாள் இருப்பிட மருத்துவ அதிகாரியும் பல்நோக்கு மருத்துவருமான சௌந்தரவேல்.

“முதலில் அவர்களுக்கு உணவுதான் தடைபடும். ஆனால், அதை எல்லாக் காய்ச்சலின்போதும் ஏற்படும் மாற்றம் என நினைத்தால், குழந்தைகள் வயிற்று வலி எனச் சொல்வார்கள், குறுகிப்படுப்பார்கள்.

இவை எல்லாம் அவர்களுக்கு டெங்கு பாதிப்பு தீவிரமாக இருப்பதற்கான ஆரம்பநிலை அறிகுறிகள். அதேபோல, சில குழந்தைகளுக்கு வாந்தி வரும், முகத்திலும், உடலின் தோலிலும் மாற்றங்கள் ஏற்படும், அவற்றை வைத்துக் கண்டுபிடிக்கலாம்,” என்றார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டெங்கு காய்ச்சல் குறித்து செப்டம்பர் 16ஆம் தேதி தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அரசு மருத்துவமனை முதல்வர்களுடன் ஆலோசனை நடக்கிறது.

தொடர் கண்காணிப்பின் மூலம் மட்டுமே டெங்கு பாதிப்பில் இருந்து குழந்தைகளைத் தற்காக்கவும் முடியும், பாதிப்பிற்குப் பிறகு அவர்களை விரைவில் குணப்படுத்தவும் முடியும் என்றார் சௌந்தரவேல்.

தொடர்ந்து பேசிய மருத்துவர் அவர், மழைக்காலத்திற்கு முந்தைய மாதங்களில்தான் டெங்கு காய்ச்சல் காலம் தொடங்கும் என்றும், அது தற்போதுதான் தொடங்கியுள்ளதால், அடுத்து வரும் நாட்களில் குழந்தைகளை எச்சரிக்கையுடன் கவனித்துக் கொள்ளவேண்டும் என்றும் கூறினார்.

தமிழ்நாடு அரசு என்ன சொல்கிறது?

தமிழ் நாட்டில் உள்ள டெங்கு பாதிப்பு குறித்தும், டெங்கு இல்லாத நிலையை உருவாக்குவது குறித்தும், டெங்குவை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் தமிழ் நாடு முழுவதிலம் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள 300க்கும் மேற்பட்ட மாவட்ட அளவிலான உயர் அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

இது தவிர, மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகங்கள் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: